முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

தகுதி தடையாகக் கூடாது!

இந்திய நாடாளுமன்றத்துக்கு 16 முறை தேர்தல் நடைபெற்று ஜனநாயகம் வேழமென வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகள்

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:19 AM
பகிர்:

இந்திய நாடாளுமன்றத்துக்கு 16 முறை தேர்தல் நடைபெற்று ஜனநாயகம் வேழமென வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்று, மத்திய ஆட்சிக் கட்டிலில் நரேந்திர மோடி அமர்ந்து இந்தியாவின் 130 கோடி மக்களை ஆட்சி பரிபாலனம் செய்திருக்கிறார். 
2010 முதல் 2016 வரை மாநிலங்களவையில் நான் பணியாற்றியபோது 31 மசோதாக்களில் என் கருத்தைப் பதிவு செய்துள்ளேன். 1996-இல் மக்களவையில் என்ன கொள்கையின் அடிப்படையில் என் வாதம் இருந்ததோ, அதே அடிப்படையில்தான் 14 ஆண்டுகள் கழித்து மாநிலங்களவையிலும் தொடர்ந்தது என்பதால், இந்தக் கட்டுரையை என்னால் பதிவு செய்யமுடிகிறது. 
கடந்து போன மக்களவையில் 180 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதில் அவசரச் சட்டங்கள் 45. கடந்த ஐந்தாண்டுக் காலத்தில், 1,615 மணி நேரம் செயல்பட்ட மக்களவை, 15-ஆவது மக்களவையைவிட 20% அதிக நேரம் செயல்பட்டிருக்கிறது. ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியது, திடீர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் ஆளுங்கட்சியினர் நடத்திய அச்சுறுத்தல், காவிரிப் பிரச்னை, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்திய ஓரவஞ்சனை, ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மாற்றம், நீதிமன்றங்களில் தலையீடு... இப்படி நாட்டையே குலுக்கிய பிரச்னைகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம் அதிகம்.
16% அவை நேரம் அமளிக்கும் துமளிக்கும் ஆளானது. 15-ஆவது மக்களவையில் இந்த அமளி பாதிப்பு 37%-ஆக இருந்தது. மாநிலங்களவையில் 329 அமர்வுகள் நடைபெற்றன. இதில் 154 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 13% நேரம் மக்களவையில் கேள்வி நேரமாகப் பயன்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையிலான நாள்களில் மக்களவையில் 10 அமர்வுகள் நடைபெற்றன. 32 சதவீத மசோதாக்கள் மீது 3 மணி நேரத்துக்கும் அதிகமாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது; இது முந்தைய மக்களவைத் தொடரைவிட அதிகம். இந்த மக்களவையின்போது 25% மசோதாக்கள் நிலைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றைத் தவிர 543 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட அவையில் எத்தனை எத்தனை உறுப்பினர்கள், எந்தெந்தப் பிரச்னையில் மக்களுக்காக வாதாடி இருக்கிறார்கள், போராடி இருக்கிறார்கள் என்பதெல்லாம் வேதனையான உண்மைகள். 
5 ஆண்டு காலத்திற்கு நம்முடைய குறைகளை, தேவைகளை நாடாளுமன்ற மக்களவையில் சுட்டிக் காட்டவும், தட்டிக் கேட்கவும், மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட எம்.பி.க்களில் மேஜையைத் தட்டிவிட்டும், குறட்டை விட்டும், கூடிக் குலாவிக் கும்மாளமடித்து விட்டும் கலைந்தவர்கள்தான் அதிகம். 
16-ஆவது மக்களவைத் தொடரின் இறுதி நாளில் உரையாற்றிய இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, இந்த 16வது மக்களவையில் உறுப்பினராக இருந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் கூடிய நிலையான ஆட்சி கொடுக்கப்பட்டது. அதிக பெண் உறுப்பினர்களைக் கொண்ட அவையாகவும் இது திகழ்ந்தது. நாட்டின் முக்கியத் துறைகளான வெளியுறவு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பெண்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்குதான் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி.எஸ்.டி., ஊழல் தடுப்பு, கருப்புப் பணத்துக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்றெல்லாம் பெருமைப்பட்டார்.
உள்நாட்டு வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அயல் நாடுகள் மத்தியில் இந்தியத் தலைவர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் மிகுந்த மதிப்பு, மரியாதை கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஐ.நா. சபை இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது; இடர்ப்பாடு, துன்பங்களில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடுகளுக்கு உதவி செய்துள்ளோம். டிஜிட்டல் உலகில் தனக்கென ஒரு இடத்தை இந்தியா பிடித்துள்ளது. உலக வெப்பமயமாகுதல் பற்றி தற்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா சர்வதேச சூரிய சக்தி திட்டத்தின் மூலம் தீர்வு கண்டுள்ளது என்றெல்லாம் மக்களவையில் பெருமைப்பட்ட பிரதமர் மோடி மனநிறைவுடன் விடைபெறுவதாகக் கூறியிருக்கிறார்.
16-ஆவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தேசத்தையே அதிர வைத்தன. தணிக்கை (சி.ஏ.ஜி.) அறிக்கையை நிதித் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், காங்கிரஸ் அரசு செய்த ரஃபேல் ஒப்பந்தத்தைவிட தற்போது  2.86 சதவீதம் குறைவான விலைக்குத்தான் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் புது தில்லியிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக மோடி செய்துள்ள ஒப்பந்தம்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 விமானங்களை கொள்முதல் செய்வதற்காக செய்த ஒப்பந்தத்தைவிட சிறந்ததல்ல என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குறைந்தவிலை விமானங்கள், விரைவான விநியோகம் ஆகிய காரணங்களுக்காக ரஃபேல் ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 16-ஆவது மக்களவை ரஃபேல் ஒப்பந்தப் பிரச்னைக்காக நினைவுகூரப்படும். போபர்ஸ் பீரங்கிகள் போலவே, ஒருவேளை ரஃபேல் போர் விமானங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்கி இந்திய விமானப்படைக்கு வலுசேர்ப்பதாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
2009 முதல் 2019-ஆம் ஆண்டு வரை கடந்த 10 ஆண்டுகளில் மிக முக்கியத் தூண்களான நாடாளுமன்றம் -நீதித் துறை -நிர்வாகத் துறை - பத்திரிக்கை துறை ஆகிய ஜனநாயகத்தின் முக்கியமான நான்கு தூண்களும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பது வேதனையான போக்கு. இந்த நான்கு அமைப்பின் மீதும் தங்கள் அரசியல் வியாபாரத்திற்காக எதிர்மறை கருத்துகளை உருவாக்கியவர்கள் நேரடியாகப் பயன்பெறும் அரசியல் பதவி போட்டியாளர்கள்தான். 
அவர்கள் நம் மக்கள்தொகையில் வெறும் 8%தான். அதனால், மீதியுள்ள 92% மக்கள் இந்திய ஜனநாயக அமைப்பின் பாதுகாப்பு அரணாகக் கருதப்படும் நாடாளுமன்ற-நீதிமன்ற-நிர்வாக-பத்திரிக்கைத் துறைகளின் மீதான நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிடவில்லை.
நேற்றைய குற்றவாளியை இன்றைய நேர்மையாளனாகவும் மேதாவிகளாகவும் ஊடகங்கள் காட்டுவதும், இன்றைக்கு பொறுப்பில் உள்ளவர்களை அடுத்து பதவிக்கு வரத் திட்டமிடுகிறவர்கள் பூதாகரமான முறையில் குற்றவாளியாகச் சித்தரிப்பதும் இந்திய ஜனநாயகத்தில் வேடிக்கையான வாடிக்கை ஆகிவிட்டது.  இதற்கு ஊடகத் துறை வசதிக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது என்ற வருத்தம் மக்களுக்கு உண்டு. ஆனாலும், பத்திரிகையாளர்கள் மீதுள்ள நம்பகத்தன்மையை முழுவதுமாக இந்திய மக்கள் இழந்து விடவில்லை. 
அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் 17-ஆவது மக்களவையிலாவது, கூச்சல் குழப்பத்தில் அவையின் நேரம் வீணடிக்கப்படாமல், மக்கள் பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் அலுவல்கள் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படாமல் செயல்படும் நிலைமை உருவாக வேண்டும். நிறைவேற்றப்படாமல்  காலாவதியாகிப் போகும் மசோதாக்களும், அறிமுகப்படுத்தப்பட்டு ஒப்புதல் பெற முடியாமல் கைவிடப்பட்ட மசோதாக்களும் நாடாளுமன்ற செயல்பாட்டுக்குப் பெருமை சேர்க்காது.
தமிழகத்தில் இருந்து 16-ஆவது மக்களவைக்கு 39 உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற்றார். இன்னொருவர் மக்களவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனைய 37 உறுப்பினர்களில் ஒருவர்கூட, தமிழகத்தின் பிரச்னையை முன்வைத்துத் தனிநபர் மசோதா ஒன்றுகூடக் கொண்டுவரவில்லை என்கிற கசப்பான உண்மை வேதனை அளிக்கிறது. 
ஏழரைக் கோடி தமிழர்களின் பிரதிநிதிகளாக இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று கட்சித் தலைமைகள் உணர்ந்தால் மட்டுமே, 
17-ஆவது மக்களவையில் தமிழகத்தின் உரிமைகளும், தேவைகளும் பாதுகாக்கப்படும். 

கட்டுரையாளர்:
தலைவர், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.