நடுப்பக்கக் கட்டுரைகள்

மழலைச் செல்வம் விற்பனைக்கு அல்ல!

கலைச்செல்வி சரவணன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அண்மையில் செவிலியர் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்வதற்காக பேரம் பேசிய உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்துக்காக மகத்துவம் மிக்க மருத்துவத் துறையில் உள்ளவர்களே இந்த முறையற்ற செயலில் ஈடுபட்டிருப்பது நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 உணவு முறை, கெட்ட பழக்கவழக்கம் போன்றவற்றால் தற்போது பெரும்பாலான தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் எழுகிறது. எனவே, குடும்பப் பிரச்னைகளைச் சமாளிக்க குழந்தையைத் தத்தெடுக்கும் முடிவுக்கு வருகிறார்கள். ஆனால், சட்டப்படி இதனைச் செய்யும்போது பலகட்ட நெறிமுறைகளுக்கும், ஆய்வுகளுக்கும் உள்ளாக நேரிடும். அதற்காக அலைய வேண்டியிருக்கும், கால அவகாசம் அதிகமாகும் என்பதால் அதிகப் பணம் கொடுத்து, பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், தவறானவர்களிடமிருந்து குழந்தையை வாங்கி விடுகிறார்கள்.
 இதனால், ஆயுள் முழுவதும் அவர்கள் அச்சத்துடன்தான் வாழ வேண்டி வரும். எதிர்காலத்தில், அவர்களின் சொத்துக்களுக்கோ, உடைமைகளுக்கோ, அந்தக் குழந்தைக்கோ, விற்றவர்கள் உரிமை கொண்டாட வரலாம். வாங்கிய பிறப்புச் சான்றிதழும் போலி என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களின் பணத்துக்குக்கும், வாங்கி வளர்த்த குழந்தையின் பாசத்துக்கும் உத்தரவாதமில்லை.
 எனவே, தத்தெடுக்க விரும்புவர்கள், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு குழந்தையைத் தத்தெடுத்தால் இறுதி வரை எந்தப் பிரச்னையும் வர வாய்ப்பில்லை. மாறாக, முறைகேடாக குழந்தையை வாங்க நினைத்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருக்கிறது.
 இப்படிப்பட்டவர்களின் தேவைகளைப் பயன்படுத்திக்கொண்டுதான், பல கும்பல்கள், இதை ஒரு தொழிலாகவே செய்கின்றன. குழந்தை பிறந்தவுடன் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள நலவாழ்வு மையங்களில் பணியாற்றுவோர், தொடர்புடைய செவிலியர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர் என ஒரு குழுவே செயல்படுகிறது. அவர்கள் இந்தச் செயல்களுக்காக, முதலில் குறிவைப்பது, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைத்தான்.
 கொல்லிமலை போன்ற மலைவாழ் கிராம மக்களையும், வறுமையில் வாடும் கூலித் தொழிலாளர்களையும், அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி பேரம் பேசுகிறார்கள். அவர்களிடம் குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள் பல லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்கின்றனர். இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கும் பெற்றோர்கள், செல்லும் இடத்தில் சீரும் சிறப்புடனும் தங்கள் குழந்தை வாழும் என்று நம்பி விற்று விடுகிறார்கள்.
 வேலையின்மை, வறுமை, அதிக குழந்தை பிறப்பு போன்றவற்றால் வளர்க்க முடியவில்லையெனில் அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தின்படி, குழந்தையை தொட்டிலில் போடலாம். அரசு அதற்கான இல்லத்தில் உரிய அங்கீகாரத்துடன் வளர்க்கும் என்ற போதுமான விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லாததே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, இந்தக் கும்பல்களால் வாங்கப்படும் குழந்தைகள், தத்து கொடுக்க மட்டுமே என்பதற்கு எவ்வித உறுதியும் பெற்றோர்களுக்குக் கொடுப்பதில்லை.
 மேலும், பிச்சையெடுக்க வைத்தல், குழந்தைத் தொழிலாளர்களாகவும், கொத்தடிமைகளாகவும் பயன்படுத்துதல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, உடலுறுப்புகளைத் திருடி விற்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கின்றன. தெரிந்து வாங்குவது மட்டுமல்லாமல், பெற்றோர் அறியாமல் குழந்தைகள் கடத்தப்படவும் செய்கின்றன.
 ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 5 குழந்தைகளாவது காணாமல் போகின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 15,200 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தைகள் கடத்தப்படும் விவகாரத்தில் இந்திய அளவில் தமிழகம் எட்டாவது இடத்தில் இருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. தொலைந்துபோகும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளை மட்டுமே காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடிகிறது.
 கடந்த 2014-ஆம் ஆண்டு 441 குழந்தைகளும், 2015-ஆம் ஆண்டு 656 குழந்தைகளும் திருடப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்படும் குழந்தைகளில் 10 முதல் 20 சதவீதம் மட்டுமே மீட்கப்படுகின்றனர். எனவே, குழந்தைகள் கடத்தலைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எங்கு சென்றாலும் குழந்தைகளின் மீது கவனமாய் இருக்க வேண்டும்.
 விவரம் தெரிந்த குழந்தைகளாக இருந்தால், அவர்கள் அசாதாரணமான சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டால் எப்படி நடந்து கொள்வது, குறிப்பிட்ட கடவுச்சொல்லை குழந்தைகளுக்கு முன்கூட்டியே சொல்லித் தருவது மற்றும் முன்பின் தெரியாதவர்கள் அழைக்கும் நிலையில் அதே கடவுச்சொல்லை அத்தகையோர் சரியாகக் கூறுகிறார்களா எனக் குழந்தை அறிந்து கொள்வதற்குப் பயிற்சி அளிப்பது அவசியம். மேலும், நமது முகவரி, பெற்றோரின் பெயர் ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 குழந்தை கடத்தல் கும்பலின் செயல்களைத் தடுக்க தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கென தனி அமைச்சகமும், மாவட்டவாரியாக கண்காணிப்புக் குழுவும் அமைக்க வேண்டும். சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.
 "குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
 மழலைச்சொல் கேளா தவர்'
 என்றார் திருவள்ளுவர்.
 ஏராளமாக பணமிருந்தும், இப்படி மழலைச் சொல்லைக் கேட்பதற்காக தவம் இருப்போர் ஒருபக்கம், காது குளிர அந்தச் சொற்களைக் கேட்க வாய்ப்பிருந்தும் வறுமையால் தவற விடுவோர் ஒருபக்கம், தங்களின் அஜாக்கிரதையால் குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு தவிப்போர் ஒருபக்கம் எனத் தடுமாறுகின்றனர். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டுதான் இப்படிப்பட்ட கும்பல்கள் பணம் பார்க்கின்றன. இதற்குள் சிக்காமல், நமக்கு கிடைத்திருக்கும் குழந்தைச் செல்வங்களைப் பொக்கிஷமாய் பாதுகாப்போம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT