நடுப்பக்கக் கட்டுரைகள்

தண்ணீர்ப் பஞ்சம் தவிர்க்கப்படுமா?

உதயை மு. வீரையன்

பஞ்சபூதங்களில் தண்ணீர் ஒன்றாகும். தண்ணீர் இல்லாவிட்டால் பூமியே பாலைவனமாக மாறிப் போகும். அதனால்தான் நீரின்றி அமையாது உலகு என்றார் திருவள்ளுவர். கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரும் குடங்களைத் தூக்கிக் கொண்டு அலைவதைக் காணமுடிகிறது.
தவித்த வாய்க்குத் தண்ணீர் என்பது இதுவரை தர்மமாக இருந்தது. இப்போது தண்ணீர் விற்பனைப் பொருளாகி விட்டது. உலக வணிக மையங்கள் எல்லாம் ஈவு இரக்கம் இல்லாமல் தண்ணீரைக் குறிவைத்து கொள்ளை லாபத்துக்கு அலைகின்றன.
மணல் கொள்ளை, மலைகள் கொள்ளை, வனங்கள் கொள்ளை...இப்படி இயற்கையின்மீது கை வைத்துவிட்டார்கள். மழை எப்படி பெய்யும்? கடலில் புயல்  உருவானால் மட்டுமே மழை என்ற நிலை உருவாகிவிட்டது. மாதம் மும்மாரி மழை பொழிந்ததெல்லாம் அக்கால புராண நாடக வசனமாகி விட்டது. மழை பெய்தாலும் அவற்றைச் சேமித்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. வீணே கடலில் மழை நீர் சென்று  கலப்பதைப் பலகாலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை நகரமே மிதந்தது. கடந்த ஆண்டு கேரள மாநிலமே வெள்ளத்தில் தவித்தது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதுதான் நிலை. இதற்குத் தகுந்த நீர் மேலாண்மைத் திட்டங்கள் ஏதும் இல்லை. மழைநீர் உயிர்நீர், மழை நீரைச் சேமிப்போம் என்பதெல்லாம் அரசாங்கத்தின் விளம்பரமாகப் போய்விட்டது. எந்த இடத்திலும் நடைமுறைக்கு வரவில்லை.
மனிதனின் பேராசையால் இயற்கைக்கு எதிரான அவனது செயல்பாடுகளால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுவிட்டது.  மழை வளமும் குறைந்து வருகிறது. இயற்கையும் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி விட்டது.
 பருவம் தவறிய மழை, வறட்சி, வெள்ளம் ஆகியவற்றால் வேளாண்மை ஆண்டுக்கு ஆண்டு பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். 
மழை பெய்யும் காலங்களில் கிடைக்கும் நீரைச் சேமித்து வைத்துக் கொண்டால்தான் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும். குடிநீர்ப் பஞ்சத்தையும் தடுக்க முடியும். ஆனால், இதற்குத் தனிமனித முயற்சியைவிட அரசின் நடவடிக்கையே தேவை.
நீர் மேலாண்மையில் தமிழகம் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை பொறியியல் வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும், இனிவரும் காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும் அவர்கள் அடிக்கடி எச்சரிக்கை செய்கின்றனர்.
இந்த எச்சரிக்கையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு நீர் மேலாண்மை வல்லுநர்களுடன் அரசு அதிகாரிகள் கலந்து பேச வேண்டும். ஆனால், இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கின்றனர். இனியும் அனுபவிப்பார்கள்.
தமிழக மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் நீர்வள மேலாண்மை நிகரற்று விளங்கியது. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், தடாகங்கள், பொய்கைகள், வாவிகள், கேணிகள் என்று தேக்கும் நீரின் அளவுக்குத் தக்கபடி பெயரிடப்பட்டு வழங்கப்பட்டன. வாழும் இடத்துக்கு ஏற்பவும் பெயர்கள் மாறுபட்டன என்றாலும் இவை காரணப் பெயர்களாகவே விளங்கின. மழைக் காலங்களில் இவற்றில் தண்ணீர் முறையாக வந்துவிழும் வகையில் இடத்தேர்வையும் அவர்கள் துல்லியமாகச் செய்திருந்தனர். அதிக மழைப் பொழிவுக் காலங்களில் ஓர் ஊரின் குளத்திலோ, ஏரியிலோ நிறையும் தண்ணீர் அடுத்தடுத்த ஊர்களுக்கு தொடர்ச்சியாகச் செல்லும் வகையில் நீர் மேலாண்மை கவனமாகச் செய்யப்பட்டிருந்தது.
இந்நாளில் அறிவியல் வளர்ச்சியும், நுகர்வு வெறி கலாசாரமும், சுயநலமும் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது. நமது பொதுநலன் சார்ந்த அறிவையும், உணர்வையும் இழந்து கொண்டே வருகிறோம். அந்தக்கால அரசர்களுக்கு குடிமக்கள் மீது இருந்த அக்கறை இந்தக்கால மக்களாட்சியில் குறைந்து, மறைந்து போனது ஏன்?
நாட்டில் மக்கள்தொகை நாள்தோறும் பெருகிக் கொண்டே போகிறது. ஆனால், தண்ணீர் வளமோ குறைந்து கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணம் தமிழ்நாட்டின் ஆற்றுப் படுகைகளில் சூறையாடப்படும் மண்வளம்தான். 
தமிழகத்தில் உள்ள 34 ஆற்றுப் படுகைகளும் இன்று பள்ளத்தாக்குகளாக மாறி வருகின்றன.
ஆற்றோர மணல் படுகைகள் எல்லாம் தண்ணீர் சேமிக்கும் வங்கிகளாகச் செயல்பட்டு வந்தன. இதுவரை அள்ளப்பட்டுள்ள மணல் இழப்பால் நமக்குக் கிடைக்கும் நீரில் சுமார் 15 முதல் 20 சதவீதத்தைத் தேக்க வழியின்றி இழந்து வருவதாக நீரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் முதல் இருபது ஆண்டுகளில் சிறுவாணி, ஆழியாறு, பரம்பிக்குளம், மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, வைகை, சாத்தனூர் ஆகிய அணைகள் கட்டப்பட்டன. அதன் பிறகு பெரிய அணைகள் கட்டப்படவேயில்லை. சிறிய அளவில் நீர்த்தேக்கங்கள், அணைகள் போன்றவை கட்டப்பட்டன என்றாலும் அவை பெருகிவரும் தண்ணீர்த் தேவைக்குப் போதுமானதாக இல்லை. மேட்டூர் அணை இல்லாவிட்டால் காவிரி டெல்டா எப்போதோ பாலைவனமாகப் போயிருக்கும். அது ஆங்கிலேயர் ஆட்சியில் நமக்குக் கிடைத்த பெருங்கொடையாகும். ஆனால், அதற்குப் பிறகு இதுபோன்ற எந்த அணையும் கட்டப்படவில்லை என்பதுதான் வேதனை.
ஆனால், கர்நாடகம் தொடர்ந்து அணைகள் கட்டியபடியே உள்ளது. கர்நாடகத்தில் 320 கிலோமீட்டர் தொலைவுதான் காவிரி பாய்கிறது. ஆனால், அங்கு 58 அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் 416 கிலோமீட்டர் காவிரி பயணித்தாலும் 39 அணைகள்தான் கட்டியுள்ளோம். கர்நாடகத்தை எதிர்த்துப் போராடும் நமக்கு இவை படிப்பினைகள்.
காவிரியில் கர்நாடகம் தொடர்ந்து அணைகள் கட்டி நீரைத் தடுத்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்குக் கேரளம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஆந்திர மாநிலமோ பாலாற்றைப் படிப்படியாகச் சிறைபிடித்து வருகிறது. நாம் இதற்காகச் சட்டப் போராட்டங்களைப் பலகாலமாக நடத்தி வருகிறோம். விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தெருமுனைப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
ஆனால், இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் மழைநீரைச் சேமிக்கத் தவறி வருகிறோம். தமிழ்நாட்டில் ஆண்டுக்குச் சராசரியாக சுமார் 925 மி.மீ. மழை பொழிந்து வருவது நமக்கு ஒரு வரமாகும். ஆனால், நாம் இதனை ஒரு சாபமாக மாற்றி வருகிறோம்.
கனமழைக் காலங்களில் சுமார் 260 டி.எம்.சி.க்கும் அதிகமான தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. கடைசித் தீர்ப்பின்படி கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரின் அளவு 177.25 டி.எம்.சி.தான். ஆனால், நாம் ஆண்டுதோறும் காவிரியில் சுமார் 90 முதல் 100 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வழியின்றி கடலுக்குப் போகிறது. சென்ற ஆண்டு மிகுந்த மழையின்போது மட்டும் சுமார் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.
அத்துடன் தமிழ்நாட்டில் நீர்வள மேலாண்மைக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில்  நீர் மேலாண்மைக்கு கர்நாடக அரசு ரூ.30,000 கோடி செலவழித்துள்ளது. மேலும், இப்போது மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ரூ. 5,700 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழ்நாடு ரூ.6,000 கோடி மட்டுமே செலவழித்துள்ளது. தமிழ்நாட்டில் வற்றாத ஆறு என்று சொல்லும்படியாக ஆறுகளோ, நதிகளோ கிடையாது. ஆகவே, நாம்தான் மற்ற அண்டை மாநிலங்களைவிட அதிக விழிப்புணர்வுடன் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் விழிப்புணர்வு இதுவரை ஏற்படாததற்குக் காரணம் என்ன?
தமிழகத்தில் காவிரிப் படுகை சாகுபடி பரப்பளவு 23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவாகும். ஆனால், இந்த பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. இப்போது சாகுபடிப் பரப்பளவு 2018-2019-ஆம் ஆண்டில் 8.61 இலட்சம் ஹெக்டேராகச் சுருங்கி விட்டது.
சம்பா, குறுவை, தாளடி என்று முப்போகம் விளைச்சல் கண்டுவந்த தமிழகம், இப்போது ஒரு போகம் சாகுபடி செய்வதற்கே படாதபாடுபடுகிறது. சாகுபடி பொய்த்து வருவதால் விவசாயிகள் விரக்தியடைந்து விவசாயம் செய்யாமல் தரிசாகப் போடும் நிலை தொடர்கிறது.
இந்த உலகம் இனியது. தீ இனிது, நீர் இனிது, மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது, கடல் இனிது, மலை இனிது, காடு இனிது, இளமை இனிது, முதுமை நன்று என்று பாரதியார் கூறுகிறார். இயற்கையே இனியது என்பதை இவ்வாறு கூறுகிறார்.
மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழவேண்டும். எதிர்த்து வாழ நினைப்பது அழிவை நோக்கிப் பயணமாகும். இது தவிர்க்கப்படவேண்டும். தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களும் நமக்கானவை. அவற்றைச் சிறைப்படுத்த நினைப்பது அறியாமை. அறியாமையை அறிவதே அறிவுடைமை. இதை அறிவியல் உலகம் எப்போது அறியப் போகிறது? 

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

SCROLL FOR NEXT