நடுப்பக்கக் கட்டுரைகள்

வாங்கும் சக்தி அதிகரிக்க...

பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து இந்தியா விடுபட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

க. பழனித்துரை

பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து இந்தியா விடுபட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று, கிராமப்புற மக்களின் நுகர்வினைக் காட்ட ஊரக வேலைவாய்ப்பு ஊதியத்தை நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணுடன் இணைத்து வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது பலரால் வரவேற்கப்படுகிறது.
இந்தத் திட்டம் குறித்து சற்று அறிவுப்பூர்வமாக ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் விவாதிப்பது அவசியம். 100 நாள் வேலை என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த சொல். இது குறித்துப் பல விவாதங்கள் இந்தத் திட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை உள்ளூரிலிருந்து உலக வங்கி வரை நடந்து கொண்டிருக்கின்றன.  ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்தும் விவாதங்கள் முழுவதும் அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையில் நடைபெறுகின்றன; மற்றவையெல்லாம் அபிப்பிராயங்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துகள்; அவற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. 
இந்த விவாதங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்துக்கொள்வதில்லை. உலகத்தில் மிகப் பெரிய ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிக அளவில் பணம் செலவிட்டு 100 நாள் வேலைத் திட்டத்தை ஆராய்ச்சி செய்துள்ளன.  இந்தத் திட்டம் குறித்த புரிதல் படித்தவர்கள் மத்தியிலேயே குறைவாக இருப்பதால், மீண்டும் மீண்டும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஐ.நா. நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. நம் நாட்டில்தான் படித்தவர்களே ஆதாரங்களின்றிப் பேசப் பழகியிருக்கிறார்கள்.
அடிப்படையில் இந்தத் திட்டம் சட்டப்பூர்வமானது. சட்டத்தின் மூலம் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்போது, அந்தத் திட்டத்தின் பலன் பயனாளிகளுக்குக்  கிடைக்கவில்லையென்றால், நீதிமன்றத்தின் மூலம் தங்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றைப் பெற்றுவிடலாம். வேலை என்பதை உரிமையாக ஏழைகளுக்கு மத்திய அரசு அளித்த திட்டம் இந்த 100 நாள் வேலை உறுதித் திட்டம். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பெரிய திட்டம் இவ்வளவு அதிகத் தொகையுடன் இந்தியாபோல் செயல்படுத்தப்படவில்லை. உலகத்திலேயே ஏழைகளுக்கான மிகப் பெரிய திட்டம் என்றால், அது இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம். 
இந்தத் திட்டம் தொடங்கிய ஆண்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது. இன்று ரூ.61,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வலதுசாரிச் சிந்தனையாளர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட திட்டம், விமர்சிக்கப்பட்ட திட்டம்; பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம்  நீர்த்துப் போகும் எனப் பலர் வாதிட்டனர். இந்தத் திட்டத்தை நிறுத்தினால் மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை நன்கு அறிந்துதான் இந்தத் திட்டத்தைத் தொடர்கிறது மத்திய அரசு. அது மட்டுமல்ல, இந்தத் திட்டத்துக்கான செலவு அதிகரித்து உச்சகட்டமாக ஆண்டுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்க வேண்டிய சூழலுக்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டம் ஏழைகளுக்கான திட்டம் என உலகளவில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றதாகும்.  ஒட்டுமொத்தமாக கடந்த 15 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 75 சதவீதம், இந்தத் திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு ஊதியமாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள்; 21 சதவீதம் பேர் தலித்துகள். சராசரியாக ஆண்டுக்கு ஒருவருக்கு 46 நாள்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் மூன்று. ஒன்று, வேலை வாய்ப்பை உறுதி செய்வது; இரண்டு, ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது; மூன்று, பஞ்சாயத்தை வலுப்படுத்துவது. இந்தத் திட்டத்தில் 50 சதவீத வேலை கிராமப் பஞ்சாயத்தின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்துக்கான பணிகளும் பணிகளை நிறைவேற்றும் பணியாளர்களைக் கொண்ட பணியாளர் அறிக்கையும் கிராம சபையின் உறுப்பினர்களால் 
அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.
இந்தத் திட்டத்தைச் சமூகத் தணிக்கை செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் இயற்கை வள மேம்பாடு அடைய செயல்பட வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி ஏழைகளுக்கான அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் பணி என்பது 5 கி.மீ. தொலைவுக்குள்தான் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் கிராமங்களை புனரமைக்க வேண்டும். இதில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாமல் பெண்களுக்கு பணி அளிக்க வேண்டும். அதிகபட்ச பணிகள் தலித்துகளுக்கு ஒதுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. 
இந்தத் திட்டத்தில் வேலை உரிமையாக்கப்படுகிறது. அதேபோல் குறைந்தபட்ச ஊதியத்துக்கும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம் என்ற உரிமையும் இதில் உள்ளது. அதேபோல் சரியான நேரத்தில் ஊதியம் என்பதும் உத்தரவாதமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, ஒரு மரியாதையுடைய ஊதியமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேள்வி கேட்பதையும் உரிமையாக்கித் தந்துள்ளது.
அதே நேரத்தில் இந்தத் திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்தும்போது, அனைவரையும் கடமைப்படுத்துதலையும் உரிமையாக்கித் தந்துள்ளது. இவ்வளவு உரிமைகள் அடங்கியதுதான் இந்த 100 நாள் வேலை உறுதியளிப்புச் சட்டம். ஆனால், இந்த உரிமைகளெல்லாம் இந்தச் சட்டத்தில் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தில் இடைத்தரகர்கள் இல்லாது பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு தொழிலதிபர்கள் பலர் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டனர். ஆனால், இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகள் தொய்வடைந்த நேரத்தில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து கிராமப்புற பொருளாதாரம் தேக்கமடைந்தது. அதன் விளைவு, தாக்கம் தேசியப் பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தவுடன் இந்தத் திட்டத்தைத் தவிர்க்க எந்த நிறுவனத்தினர் கோரிக்கை வைத்தார்களோ, இந்தத் திட்டத்தை வலுப்படுத்த அவர்களே மத்திய அரசிடம்  கோரிக்கை வைத்தனர். 
இதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தின் மூலம் பணம் செலவு செய்யும்போது, கிராமப்புற சந்தை வீரியம் பெற்று எழுந்ததை பல்வேறு ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டின. கிராமங்களில் ஏழைத் தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு கிடைத்தது இந்தத் திட்டத்தால்தான். அத்துடன், சுயமரியாதை உயர்வதாக ஏழைகளுக்கு ஓர் உணர்வு பிறந்தது. 
பல்லுயிர்ப் பெருக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டன. லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தால் கிராமங்களில் பாலின சமத்துவம் ஏழைகள் வீட்டில் ஏற்றம் பெற ஆரம்பித்தன. இந்தத் திட்டத்தால் ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைத்தது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் இடம்பெயர்வது நிறுத்தப்பட்டது. பட்டினிச் சாவு இல்லாமல் பாதுகாக்கப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டுக்கான திட்டங்களிலேயே மிகக் குறைந்த ஊழல் உள்ள திட்டம்இந்தத் திட்டம்தான்.
ஆனால், இந்தத் திட்டத்தில் ஒருசில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்று, இந்தத் திட்டத்தின் பணிகள் மூலம் உருவாக்க வேண்டிய சொத்துகள் உருவாக்கப்படவில்லை. இந்தத் திட்டம் அதிக ஏழ்மை நிலை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிகார் போன்றவற்றுக்கு மிக உதவிகரமாக இருக்கும். ஆனால், இந்தத் திட்டத்தை அந்த மாநிலங்கள் சிறப்பாக நிறைவேற்ற முன்வரவில்லை. குறைந்த ஏழைகளைக் கொண்ட கேரளம்தான் இந்தத் திட்டத்துக்காக அதிகத் தொகையைப்  பெற்று செலவழித்திருக்கிறது. 
இந்தத் திட்டத்தில் அதிகமாகப் பயன் அடைந்தவர்கள் பெண்கள். ஏழை மாநிலங்களான பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான நிதிதான் இந்தத் திட்டத்துக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். சமூகப் பணியாற்ற இந்தத் திட்டத்தின் மூலம் சமூக சேவகர்களை உருவாக்கியிருக்க வேண்டும். மேற்கூறியவையெல்லாம் உருவாக்கப்படவில்லை. 
இவ்வளவு குறைபாடுகள் உள்ளபோதும், இந்தத் திட்டம் ஏழைகளுக்கான ஓர் அற்புதமான திட்டம். அதைப் புரிந்து கொண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் ஏழைகளின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்தத் திட்டத்தை வலுப்படுத்த நாம் செய்ய வேண்டிய பணி சமூகத் தணிக்கை செய்வது; இந்தப் பணியை ராஜஸ்தான், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் செய்து வருகின்றன.  பிற மாநிலங்களும் அதைப் பின்பற்றி இந்தத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT