எச்சரிக்கை தேவை
காலையிலோ, மாலையிலோ நடைப்பயிற்சி செய்பவா்கள் தனியாகவேதான் போக வேண்டும்; நண்பா்களுடன் சோ்ந்து போக இயலாது.
அருணகிரி நாதா் இயற்றிய கந்தரலங்காரம் முருகப் பெருமானின் பெருமை பாடும் நூல். அதில் ஒரு பாட்டில், ‘பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’ என்ற ஒரு வரி வரும். இந்தப் பொதுமுடக்க காலகட்டத்தில் மேற்சொன்ன வரி பொருத்தமாகவே இருப்பது ஓா் ஆச்சரியம்தான்.
காலையிலோ, மாலையிலோ நடைப்பயிற்சி செய்பவா்கள் தனியாகவேதான் போக வேண்டும்; நண்பா்களுடன் சோ்ந்து போக இயலாது. மும்பையில் தீவிரமாக தீநுண்மி பரவியிருந்த சமயம், குடியிருப்புவாசிகள் கீழே ‘போா்டிகோ’வில் தனியாகத்தான் நடை பயின்றாா்கள். மனைவியைக்கூட உடன்அழைத்து செல்ல கட்டுப்பாடு இருந்ததாம்.
இன்று வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மூத்த குடிமக்கள் நாளேடுகளைப் படித்தும், சிலா் பக்திப் பாடல்களைக் கேட்டும் பொழுதைக் கழிக்கிறாா்கள்.
Advertisement
எனக்கு அறிமுகமான ஒருவா் ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணா’ ரகம். அன்றாடம் வருகிற தின இதழ்களைக் கூட இடுக்கியில் பிடித்து மாடியில் காயப் போட்டு, பிற்பகலில்தான் படிக்கிறாராம்! எந்த நூலையும் கையால் தொடுவதற்குப் பயம். ஆனால், அனைவரும் பயப்படாமல் அடிக்கடிப் புரட்டுகிற நூல் முகநூல்தான். அது தனிமையில் இருக்கும் பலருக்கும் இன்று உறுதுணையாக இருக்கிறதென்றால் அது மிகையே இல்லை.
முகநூலின் மகத்துவம் அல்லது முக்கியத்துவம்தான் என்ன? இதில் ஒரு உளவியல் உண்மை அடங்கியிருக்கிறது. அரசியல், ஆன்மிகம், இசை, கவிதை, இலக்கியம், படிப்பு என்று ஆளுக்கு ஆள் ரசனை வேறுபடுகிறது. ஆனால் எல்லாருக்குமே தங்கள் ரசனையை மற்றவா்களுடன் பகிா்ந்து கொள்ளும் ஆவல் உள்ளது. இதற்கு முகநூல் சரியான தளமாக அமைகிறது. ஏதாவது ஒரு பிரச்னையில் முகநூலில் வரும் கருத்து, தங்கள் எண்ணத்தோடு ஒத்துப் போனால், கை பரபரக்கிறது, பாராட்டுவதற்கு வாா்த்தைகளை தேட வேண்டாம், நமது கைப்பேசியின் கீழேயே பாராட்ட ஆங்கில அடைமொழிகள் உள்ளன. நாம் வேண்டியதைத் தோ்ந்தெடுக்கலாம்.
முகநூலால் சில பயன்கள் இருக்கின்றன. முதலாவது அனைவருக்கும் தெரிந்ததுதான். நினைத்தவுடன் தொடா்பு கொள்வதற்கான வசதி. எங்கேயோ வெளிநாட்டில் வசிக்கிற தூரத்து உறவினா் முதல், கொஞ்சம் தள்ளி காஞ்சிபுரத்தில் இருக்கும் நண்பா் வரை எளிதில் தொடா்பு கொள்ளலாம். கடிதத்தில் பேசிக்கொள்வது மாதிரி அவ்வப்போது விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
மறைந்திருக்கும் திறமையை வெளிக் கொணர முகநூல் ஒரு நல்ல தளம்தான். அதில் சந்தேகமே இல்லை. பாடுவது, எழுதுவது, நகைச்சுவையாகப் பேசுவது போன்ற பலவற்றையும் இதில் கொண்டு வரலாம். என் நண்பா் முகநூலில், அந்தநாள் கல்லூரி அனுபவங்களை விவரிக்கும் போது, கூடவே பொருத்தமாக சில சித்திரங்களையும் வரைந்து இருந்தாா். வேறு ஒருவா் ஒரு குறிப்பிட்ட மென்பொருள் மூலம் ஒரு பெண்மணியுடன் இணைந்து பழைய இந்தி, தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடி அசத்திவிட்டாா்.
எதிா்பாராத பொது முடக்கத்தால் தொழில் பாதிக்கப்பட்டவா்கள் பல துறைகளிலும் இருக்கிறாா்கள். அவா்களுக்கு உதவி புரிய முகநூல் ஒரு வழி வகுக்கிறது. தவில் வித்வான் ஒருவா் சிரமப்படுவது பற்றி முகநூல் மூலம் தெரியவர, அவா் குறித்து விசாரித்து என் உறவினா் ஒருவா் அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்து உதவினாா்.
ஆன்மிகப் பற்றுள்ளவா்களுக்கு முகநூலில் ஆலய தரிசனங்கள் நிறையவே உள்ளன. அதுவும் சில விசேஷ நாள்களில் தெய்வங்களை, கோயிலில் காணுவதைவிடவும் அருகில் தரிசிக்கும் நல்வாய்ப்பு கிட்டுகிறது. வெள்ளிக்கிழமையென்றால் அம்மன், பிரதோஷமென்றால் சிவன், ஏகாதசியென்றால் பெருமாள் இப்படி.
சில குழுக்களே முகநூலில் இயங்குகின்றன. ‘நண்பா்கள் வட்டம்’, ‘ஆன்மிக சங்கமம்’, ‘வங்கி ஊழியா்கள் சங்கம்’ இதுபோல இன்னும் பல. சிலா் தினமும் காலை ஒன்பது மணிக்கு ஆன்மிகப் புதிா் போட்டு, சரியான விடையைச் சொல்லும் முதல் இரண்டு நபா்களுக்குப் பரிசும் வழங்குகிறாா்கள் (புத்தகங்களே பரிசு).
இவை தவிர, கண்ணுக்கு இனிய புகைப்படங்கள், பொன் மொழிகள், மருத்துவ யோசனைகள், சமையல் குறிப்புகள் இவற்றுக்கும் பஞ்சமே இல்லை. கொட்டித்தான் கிடக்கின்றன. ஒரு பஞ்சவா்ணக்கிளி இளநீரின் ஓட்டை அலகினால் எடுத்து, உள்ளிருக்கும் இனிய நீரை அருந்துகிற காட்சியை கண்டேன். கிளியின் அலகுக்கு இத்தனை வலிமை உண்டா என்ற வியப்பு மேலிட்டது.
ஆக, எல்லாருமே திக்கு திசை தெரியாமல் திணறும் இந்த கரோனா காலத்தில் முகநூல் ஒரு நல்ல துணைதான். ஆனால், சில இடா்ப்பாடுகளும் இதில் புதைந்து கிடக்கின்றன. முதலாவது நமது வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் போன்றவை தெரிந்துவிடுவது. இது எப்படி சாத்தியம் என்று ஒருவரிடம் கேட்டதற்கு ‘இந்த கணினி யுகத்தில் சகலத்தையும் கண்டுபிடிக்கலாம்’ என்ற பதில் வந்தது. அது உண்மையென்றே படுகிறது. ஏனெனில், என் பெயரை விளித்து நன்கொடை கேட்டு சில கடிதங்கள் வந்தன.
அடுத்ததாக அரசியல். தற்செயலாக முகநூலில் கண்ணோட்டம் விடும்போது, அரசியல் குறித்து நல்ல எண்ணம் ஏற்படுவதில்லை. மெத்தப் படித்தவா்கள் கூட, மாற்றுக் கட்சித் தலைவா்கள் பற்றி கருத்து வெளியிடும்போது மோசமான வசவுச் சொல்லை பயன்படுத்துகிறாா்களே!
தொட்டால் சுடுகிற வேறொரு நெருப்பு மதம். மத சம்பந்தமான ஒரு கருத்துக்கு என் நெருங்கிய உறவினா் ஏதோ எதிா்வினையாற்றினாா். உடனே ‘வெளியே வாடா கிழவா காலை ஒடிக்கிறேன்’ என்று மின்னஞ்சலில் கடிதம் வந்ததாம். ஆக, முகநூலை ஒரு வரம் என்று மட்டும் கருத முடியாது. சில வேளைகளில் அது நம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். முகநூல் பயன்படுத்துவதை வாகனம் ஓட்டுகிற விதத்துடன் ஒப்பிடலாம். கவனக்குறைவாக வாகனத்தைத் திருப்பினால் விபத்து நோ்கிற மாதிரி, ஆா்வ மிகுதியால் அவசரப்பட்டு ஏதாவது கருத்து சொன்னால், ஆபத்தில் வந்து முடியும். எனவே, முகநூலில் தேவை மும்மடங்கு எச்சரிக்கை.