நடுப்பக்கக் கட்டுரைகள்

வேடந்தாங்கலுக்கு வந்த வேதனை!

ஜெயபாஸ்கரன்


பறவையினங்களும் விலங்கினங்களும் பல்வேறு வகையான உயிரினங்களுமே பூமிக் கோளத்தின் சூழல்நலக் காவலாக விளங்குகின்றன என்பது எல்லாரும் ஒப்புக்கொண்ட உண்மையாக இருந்தாலும், அவற்றின் மீதான நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

அவ்வகையில், கணக்கிட முடியாத கால வரலாற்றைக் கொண்ட, 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த, உலகப் புகழ் பெற்ற நமது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் நலன்களுக்கு முற்றிலும் எதிரான புதிய கருத்துரு ஒன்றை, கடந்த மார்ச் மாதம், தேசிய விலங்குகள் நல வாரியத்திற்கு அனுப்பி இருக்கிறார், தமிழக  வனத்துறையின் அப்போதைய முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர்.

பல்வேறு காலகட்டங்களில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, 1998-ஆம் ஆண்டு, வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட பசுமைப் பகுதியாக அரசு அறிவித்தது. 

பறவைகளின், வன உயிரினங்களின் சரணாலயம் என்பது, அவை வாழுகின்ற மையப் பகுதியைச்சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதுதான் என்பதால், இத்தகைய அறிவிப்பு மிகவும் சரியானதே! இப்போது அந்த ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை, மூன்று கிலோமீட்டராகச் சுருக்கிவிட்டு, புறப்பகுதியாக விளங்குகின்ற இரண்டு கிலோமீட்டர் தூரத்தை, சாதாரண பகுதியாகக் கருதலாம் என்பதே தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட கருத்துருவின் சாரமாகும்.

73 ஏக்கர் பரப்பளவில், நடுநாயகமாகவும் பறவைகளின் உறைவிடப் பகுதியாகவும் விளங்குகின்ற வேடந்தாங்கல் ஏரியைச்சுற்றி அறிவிக்கப்பட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம்தான், பறவைகளுக்கான உண்மையான பாதுகாப்புப் பகுதியாகும்.

அந்தப் பகுதியில், இரண்டு கிலோமீட்டர் தூரத்தை, அருகில் இயங்கி வருகின்ற மருந்துத் தொழிற்சாலை ஒன்றின் கட்டட  விரிவாக்கத் திட்டங்களுக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடன்தான் இப்படி ஒரு கருத்துரு அனுப்பப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. 

"அந்தத் தொழிற்சாலையின் நச்சுக் கழிவு நீர், ஏற்கெனவே அப்பகுதியின் மண் வளத்தையும், நீர் நலத்தையும் கெடுத்து, பறவைகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படி ஒரு கருத்துரு முன்வைக்கப்பட்டிருப்பது தவறு. 

இதற்குத் தடை விதிக்கவேண்டும்' என்று, சூழலியல் ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,”"மனுதாரர் தேசிய விலங்குகள் நல வாரியத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்' என உத்தரவிட்டுள்ளனர்.

அந்த மருந்துத் தொழிற்சாலையின் விரிவாக்க நடவடிக்கைகளுக்காகத் தேவைப்படுகின்ற சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பில், ஏறக்குறைய ஏழு ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையல்ல என்றால், இப்படியொரு கருத்துருவுக்கு என்ன தேவை இருக்கிறது?  

"அப்படியொரு கருத்துரு அனுப்பப்பட்டது உண்மைதான். ஆனால், அதற்கு தேசிய விலங்குகள் நல வாரியத்தில் இருந்து பதில் எதுவும் வரவில்லை' என்றே அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆக, இச்சிக்கலில் எப்படிச் சாய்த்துப் படுக்கவைத்தாலும் எழுந்துநின்று விடுகின்ற தஞ்சாவூர் பொம்மையைப் போல உண்மை மீண்டும் மீண்டும் எழுந்து நின்றுவிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில், திருவள்ளூர்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஈரோடு, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம்ஆகிய பத்து மாவட்டங்களில் ஆங்காங்கே உள்ள ஊர்களின் நீராதாரங்களில் பறவைகளின் சரணாலயங்கள் மொத்தம் பதிமூன்று உள்ளன.

இந்தச் சரணாலயங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கோடிக்கரை தவிர, ஏனைய அனைத்தும், பறவைகள் பறந்து திரியவும் இரைதேடவும் ஏதுவான மருதநிலப் பரப்புகளில் அமைந்தவையாகும். மேலும், கூடுதலாக மேல்மருவத்தூர், ஒசூர் போன்ற சில இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர்நிலைகளிலும் வெளிநாட்டுப் பறவைகள் உள்பட பல்வேறு பறவையினங்கள் வந்து தங்கிச் செல்கின்றன.

தமிழகத்தின் பறவைகள் சரணாலயங்களில் தனிச்சிறப்பு பெற்றவை வேடந்தாங்கல் சரணாலயமும் அதன் அருகிலேயே அமைந்துள்ள கரிக்கிலி சரணாலயமும்ஆகும். அவ்விரு இடங்களிலுமுள்ள ஏரிகளில் அடர்ந்துள்ள நீர்க்கடம்ப மரங்கள் பறவைகள் கூடமைத்துத் தங்குவதற்கும் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளைவளர்ப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ளன. 

இருந்தாலும் கூட, சுற்றுவட்டாரத்தில் உள்ள மதுராந்தகம், உத்திர மேரூர், மாமண்டூர், செம்பரம்பாக்கம், புழல் போன்ற பெரிய பெரிய ஏரிகள், பூண்டிநீர்த்தேக்கம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊர்தோறும் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான சிறுசிறு ஏரிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற நீர்ப்பகுதிகள்தான், வேடந்தாங்கல் பறவைகளின் இரைதேடலுக்கும் பறத்தலுக்குமான வாழ்வாதாரக் களங்களாக அமைந்துள்ளன. ஆனால், அப்பறவைகளுக்கு வாழ்வாதாரப் பகுதிகளாக இருப்பது என்னவோ ஏரியைச் சுற்றி அமைந்துள்ள அந்த ஐந்து கிலோமீட்டர் பரப்பளவுதான். அந்தப் பரப்பிலிருந்துதான் இப்போது இரண்டு கிலோ மீட்டர் தூரத்தைக் குறைக்க முனைந்திருக்கிறார்கள்.

தமிழகத்தை வாழ்விடமாகக் கொண்டுள்ள பல்வேறு பறவையினங்கள், பருவ காலங்களில் இடம் பெயர்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கோ பிற நாடுகளின் நீர்வீழ்ச்சிப் பகுதிக்கோ பறந்து செல்வதாகத் தெரியவில்லை. ஆனால்,பிற நாடுகளையும் வெவ்வேறு கண்டங்களையும் சேர்ந்த பறவையினங்கள், பருவ காலங்களில் தமிழ்நாட்டின் பதிமூன்று சரணாலயங்களுக்கும் வந்து செல்கின்றன. 

ஏறக்குறைய 25- க்கும் மேற்பட்ட இந்திய, வெளிநாட்டுப் பறவையினங்கள் ஒன்று கூடிக் குரலெழுப்புகின்ற கண்கொள்ளாக் காட்சியை நமது தமிழகத்தின் சரணாலயங்களில் அடிக்கடிக் காணமுடியும். சிற்றூர்களில் 17,000, பேரூர்களில் 20,000 என, மொத்தம் 37,000 ஏரிகளைக் கொண்ட நமது தமிழ்நாட்டிற்கும் உலக அளவிலான பறவையினங்களுக்கும் இப்படியொரு உணர்வுபூர்வத் தொடர்பு இருப்பது  நாம் பெற்ற பேறுதான்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டின் முதன்மை சரணாலயங்களான வேடந்தாங்கல், கரிக்கிலி ஆகிய சரணாலயங்களின்மீது கூடுதல் கவனம் செலுத்தி, சுற்றியுள்ள பிற ஏரிகளிலும் நீர்க்கடம்ப மரங்களை வளர்த்து, ஒரு நந்நீர்ச் சூழலை ஏற்படுத்த முனைந்திருந்தால் தற்போதைய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மேலும் ஒருசில பறவைகள் சரணாலயங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கக்கூடும்.

சுற்றுலா வளர்ச்சிக்கும் கூடுதலான வேளாண்மை உற்பத்தி மேம்பாட்டிற்கும் இயற்கைச்சூழல் நல விரிவாக்கங்களுக்கும் இதைவிட நல்ல வாய்ப்பு எதுவுமில்லை. ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக மதுராந்தகம் ஏரியைத் தூர்வாரக்கூட இயலாமல்போன நமது நிர்வாகங்களுக்கு, ஏரிகளைக் கடம்பமர நீர்ச்சோலைகளாக மாற்றுவதென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாததொன்றுதான்.

இந்நிலையில்,  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் விளிம்பிலேயே கைவைத்து நிலப்பரப்பினைக் குறைப்பதென்பது நமது சூழல் நல அக்கறையின் போதாமைகளையே காட்டுகிறது. கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி, நமது ஊரிலுள்ள ஏரியை நம்பிப் பறந்து வருகின்ற பறவைகளின் வாழ்வாதாரப் பகுதியில் கைவைத்து வகைப்படுத்த நினைப்பது, பறவையியலுக்கும் இயற்கையின் நலன்களுக்கும் எதிரான செயலல்லாமல் வேறென்ன?

இனியாவது, தேசிய வனவிலங்குகள் நல வாரியமும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் நீதிமன்றங்களும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை இதுபோன்ற பின்னிழுப்பு வேலைகளில் இருந்து பாதுகாக்கும் என்றும், மேலும், சுற்று வட்டார ஏரிகளையும் பறவைகளின் சூழல் நல நோக்கில் மேம்படுத்திப் பாதுகாக்கும் என்றும் நம்புவோம். 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை, அரசுத் துறைகளுடன் சேர்ந்து உள்ளூர் மக்களும் காலங்காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் ஆட்சியராகப் பொறுப்பேற்ற லயனல் பிளேஸ் என்பவர், பன்னெடுங்காலமாகப் பறவைகள் வந்து தங்கும் வேடந்தாங்கல் ஏரியை, 1798-ஆம் ஆண்டு பறவைகள் காப்பிடமாக அங்கீகரித்து, அப்பறவைகளைக் காக்கும் பொறுப்பையும் உள்ளூர் மக்களுக்கு வழங்கியிருந்தார். ஆனாலும்கூட, காலப்போக்கில், ஆங்கிலேய அதிகாரிகளும் வேட்டைக்காரர்களும் பறவைகளைச் சுட்டு வீழ்த்தியும், பிடித்துச் சென்றும் அராஜகம் செய்த காரணத்தால் அதற்கு எதிராக உள்ளூர் மக்கள் ஒன்றுபட்டுப் போராடியுள்ளனர்.

அந்நிலையில், அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தின் துணை நீதிபதியாக இருந்த ஜி.பி. டாட் என்பவர், லயனல் பிளேஸ் அளித்த உத்தரவுக்கு உயிர் கொடுக்கும் வகையில், "உங்கள் கிராமமாகிய வேடந்தாங்கல் ஏரியில் இருக்கிற கடப்ப மரங்களில், நானாவித பக்ஷிகள்அனாதியாய் வந்து வாசஞ்செய்வதாலும் அவைகளை ஒருவரும் சுடாமலும் பிடியாமலும் இருக்கும் பொருட்டு, முன்னாலேயே மேஸ்தா பிளேஸ் துரையவர்கள் "கெüல்' கொடுத்ததாயும், அது கைசோர்ந்து போனதாயும், அதற்கு பதில் வேறு "கெüல்' கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நம்மைக் கேட்டுக்கொண்டபடியால், அந்தப்படி இதை உமக்குக் கொடுக்கலாயிற்று. 

யாராவது, துரைகளாவது, வேட்டைக்காரர்கள் முதலியவர்களாவது மேற்குறித்த உத்தரவுக்கு விரோதமாய் மேற்குறித்த ஏரிக்கு வந்து மேற்குறித்த பக்ஷிகளைச் சுட அல்லது பிடிக்க எத்தனப்படுவார்களேயானால், அவர்களுக்கு இதைக் காண்பித்து அப்படிச் செய்யவொட்டாமல் தடுத்துப் போட வேண்டியது; அறியவும்!'  என்று உத்தரவு கொடுத்த வரலாற்று ஆவண விவரங்களையெல்லாம் "வேடந்தாங்கல்' என்னும் தனது நூலில் மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார், அம் மண்ணின் மைந்தரான எழுத்தாளர் "இலக்கியவீதி' இனியவன். 

அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் வேடந்தாங்கல் ஏரியின் பறவைகளைப் பாதுகாக்கப் போராடிய மக்கள், விடுதலை பெற்ற இந்தியாவில் அப்பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கப் போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்!

கட்டுரையாளர்:கவிஞர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT