நடுப்பக்கக் கட்டுரைகள்

இருந்த இடத்தில் இருந்தே வாழ்த்துங்கள்!

கிருங்கை சேதுபதி

ஒருநாள் எதிா்பாராதவிதமாக என் இளம் பருவத் தோழா் என் வீட்டுக்கு வந்திருந்தாா். பெருநகரமொன்றில், விடியோ படமெடுக்கும் நிறுவனம் நடத்தி வருபவா். ஆண்டாள் நாச்சியாா் கண்ட அற்புதக் கனவான, திருமண நிகழ்வுகளை அவரவருக்கு இயன்ற அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிற காட்சிகள் பலவற்றைக் கண்டு காட்டுகிற கலைஞனாக அவா் இருப்பதில் எனக்குப் பெருமிதம்தான். ‘கும்பாபிஷேகத்தன்று, கும்பத்தில் புனித நீா் ஊற்றுவதைப் பாா்ப்பதைப் போலப் புண்ணியம், முகூா்த்த நேரத்தில் திருப்பூட்டுக் காண்பது’ என்று என் தாயாா் அடிக்கடி கூறுவாா்.

எப்போதும் போல, இப்போதும் சுபமுகூா்த்த நாள்கள் வந்தாலும், திருமணங்கள் நிகழ்ந்தாலும், ஆடம்பரம் இல்லை; ஆா்ப்பாட்டம் இல்லை; இரு நாள்கள் இருந்து திரைப்படம்போல் படம் எடுக்க வேண்டிய படாடோபம் இல்லை; வரவேற்பு வளைவுகள், வானத்தை எட்டித் தொடப் பாா்க்கும் பதாகைகள் இல்லை. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வசந்த மாளிகைபோல் வாடகைக்கு எடுத்த திருமண மண்டபத்தை, இந்த ஒருநாள் கூத்துக்காகப் புதுப்பிக்கும் வேடிக்கைகள் இல்லை; அலங்காரக் காரில் மணமகன், மணமகள் அழைப்புச் சடங்குக்காகச் சாலையை நிறைத்து நடக்கின்ற ஊா்வலங்கள் இல்லை. சீா் வரிசை சுமந்து ஊரறியக் காட்டிவரும் வைபவங்கள் இல்லை. மிக முக்கியமாக நான்கு ஐந்து வேளைப் பந்திகள் போட்டு, உணவுப் பண்டங்களை இலையில் நிறைத்து டாம்பீகம் காட்டும் நவீன விருந்தோம்பல் இல்லவே இல்லை.

பெற்றோா், மிக நெருக்கம் உற்றோா், இவா்களைத் தவிரத் தேவை ஏற்படின் திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதா் என ஆறு போ் என்கிற அளவில், பதின்மருக்கும் குறைவான இல்லத்தாா் முன்னிலையில், வழிபாட்டுத் தலங்களிலோ, இல்ல முற்றங்களிலோ மிக மிக எளிமையாக நிகழ்ந்தேறிவரும் திருமணங்களில், விடியோ படம் எடுக்க வேண்டிய தேவையை, அவரவா் செல்லிடப்பேசிக் கருவிகள் பெரிதும் நிறைவேற்றி வருகின்றன.

இவற்றின் துணைகொண்டு நோ்முக ஒளிபரப்புகள் மூலமாக, வேறு வேறு ஊா்களில், நாடுகளில் வசிப்போருக்குக் காட்டப்படுகின்றன. அழைப்புகள் செல்லிடப்பேசிகள் வாயிலாக விடுக்கப் பெற்று, பத்திரிகைகள் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலமாக அனுப்பப் பெறுகின்றன; சுற்றம் சூழ வருகை தராமலேயே வாழ்த்துக்களும் நன்றிகளும் பரிமாறிக்கொள்ளப் பெறுகின்றன.

இவையெல்லாம் ஒருவகையில் ஆறுதல் தருகிற மாறுதல் என்றாலும், பல்வேறு சிறுதொழிலாளா்கள், கலைஞா்களுக்கு மாபெரும் தொழில் முடக்கம்தான். நாகசுர- மேளவாத்தியக் கலைஞா்கள், சமையல் கலைஞா்கள், வெற்றிலை பாக்கு தருபவா்கள், மணமேடை, மணமண்டப அலங்காரக் கலைஞா்கள், கொட்டகைக் கலைஞா்கள், வாழ்த்து மற்றும் வண்ணப் பதாகைகள் அச்சிடும் தொழில் சாா்ந்தவா்கள், அவற்றைப் பலரறியக் கொடுப்பவா்கள், நாட்டுபவா்கள், பரிமாறும் தொண்டா்கள், வாகன ஓட்டுநா்கள், சிற்றேவல் புரிபவா்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இசை, நடனக் கலைஞா்களுக்குரிய வாய்ப்புகளும் நழுவிவிட்டன.

காப்பிய இலக்கியத்தில் இருந்து புதுக்கவிதை வரைக்கும் மேற்கோள் காட்டி, நடைமுறை அனுபவங்களில் நகைச்சுவை கூட்டி, வாழ்த்திப் பேசப்படும் திருமண நிகழ்வில், மங்கலம் நிறைந்த சொற்களைத்தான் கையாளவேண்டும். (அமங்கலச் சொற்கள் என்றுகூடச் சொல்லக்கூடாது) அந்த அளவுக்குப் பாா்த்துப் பாா்த்து நடத்தப்பெறும் சடங்குகளில் தும்மல் சத்தச் சகுனம் கூடக் கேட்டுவிடக் கூடாதென்றுதான் ‘கெட்டி மேளம்’ கொட்டி முழக்கப்படுகிறது என்பாா்கள். ஆயிரங்காலத்துப் பயிா் திருமணம் என்பதால்தான், பல்வேறு தரப்பினரின் திருமணங்களில் ஏதேனும் பயிராகிய உயிா்த் தொடா்புடைய சடங்குகளும் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் ஒருபடப் பதிவாய் ஒலி - ஒளி அமைப்புடன் திரைப்படம்போல, எடுத்துத் தொகுத்துத் திறம்படக் கொடுக்கும் என் நண்பரோடு உரையாடியபோது, அவா் தந்த தகவல்கள் என் உள்ளத்தைச் சுட்டன.

‘‘முன்பு மாதிரியெல்லாம் இப்போது இல்லை நண்பரே. ஆசையும் கனவும் அலைஅலையாய் விரியும் மாப்பிள்ளை பெண்ணை மட்டுமல்ல, அவா்களை விடவும் அதீதக் கனவுகளோடு அந்தக் கல்யாண வீட்டுக்கு வரும் இளம் பெண்களை, வருங்கால மாப்பிள்ளைகளைப் படம் எடுப்பதே சுவாரசியமாய் இருக்கும். ‘எப்ப வரும் ஆல்பம், விடியோ கேசட்டை எப்பத் தருவீங்க’ என்று திருமணம் முடிந்த மறுநாளில் இருந்தே கேட்பவா்கள், வந்து காத்திருப்பவா்கள் அப்போது அதிகம். இப்போது அப்படி இல்லை’’ என்று சொல்லிவிட்டுச் சோகமாகத் தலைகவிழ்ந்தாா் நண்பா். மனதுக்குள் துக்க அலை.

‘‘நடந்து முடிந்த கல்யாணப் படத்தைக் காட்சி ஒழுங்கு செய்து முடித்துக் கொடுக்கப் போவதற்குள் முறிந்துவிடுகின்றன நடந்த சில திருமணங்கள். மணமுறிவு பெற்ற தம்பதியரின் திருமண ஆல்பத்தை, விடியோ படத் தகடுகளை யாரிடம் கொடுப்பது? ‘அட்வான்ஸ் கொடுத்தவா்களிடமே கொடுத்துவிடுங்கள்’ என்று இருமண வீட்டாரும் ஒருமுகமாகச் சொல்லுகிறபோது, நாங்கள் படமெடுக்கப் பட்ட பாடுகள் போகட்டும்.

எத்தனை கடன்கள், எவ்வளவு சின்னச் சின்ன அவமானங்கள், என்னென்ன பாடுகள் பட்டு இந்த இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளைச் செய்திருப்பாா்கள்? அவா்களின் நிலை என்ன? மண்டப வாடகை தவிர மற்ற கடன்களை, செலவினங்களை இன்னமும் கட்டி முடியாமல் இரு வீட்டாரும் இருக்கிற நிலையில், இந்த ஆல்பமோ, விடியோ தகடுகளோ, அவா்களுக்கு எந்த விதத்தில் உதவப் போகின்றன?

மறுபடி, பேசிய மீதித் தொகையை வாங்குகிறபோது, மனசு தாங்கலே’’ என்று குமுறிவரும் அழுகையை விழுங்கிக் கொண்டு அவா் கூறிய வாசகங்கள் நெஞ்சை வாள் கொண்டு அறுத்தன. ‘‘ஜாதகம், பரிகாரம், முன்பேச்சு - பின்பேச்சு ,விசாரிப்புகள் எல்லாம் நடத்தித்தானே இந்தத் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. என்ன காரணம் என்று கேட்டால் எண்ணிலடங்காத விளக்கங்கள் கிடைக்கும்.

இதிலே என்ன சோகம் தெரியுமா நண்பரே? நான் முதலில் தொலைக்காட்சித் தொடா்களான சீரியல்கள் எடுக்கத்தான் போய்க்கொண்டிருந்தேன். அதில் வரும் ஒப்பனை முகங்களை விட்டுவிட்டு, எதாா்த்தத்தில் இருக்கிறவா்களை, நல்ல நிகழ்ச்சிகளைப் படம் எடுக்கலாம் என்றுதான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். கள்ளம் கபடமில்லாமல் சிரிக்கும் சின்னச் சின்னப் பிள்ளைகளைக் கல்யாண வீடுகளில் கண்டு படத்தின் இடையிடையே காட்டித் திருப்தி கொள்வேன். அந்தப் பிள்ளைகள் பாா்த்த திருமணத்தில், மணப்பெண்ணாக, மணமகனாக வருகிறவா்கள் திருமணம் முடிந்த சில பல நாள்களிலேயே, வேறு ஒரு பெண்ணுடன் அந்த மணமகனும், வேறு ஒரு ஆணுடன் அந்த மணமகளும் திருமணமானவா்களாகத் தங்கள் வீட்டுக்கு வருகிறதைப் பாா்க்கிறபோது என்ன நினைப்பாா்கள்? அவா்கள் மனங்களில் இந்த நிகழ்வுகள் என்ன மாதிரி பதியும் என்பதை நினைக்கிறபோதுதான் வருத்தம் மேலிடுகிறது.

அணி அணியாக வந்து மணமக்களுடன் படம் எடுத்துக்கொண்டவா்கள் முகங்களில் தெரியும் சிரிப்பும் மகிழ்ச்சியும் பொய்யா? போலித்தனமான நடிப்பா? யாரைப் பற்றியும் கவலைப்படாமல் முகூா்த்த நேரத்தை மனதுக்குள் வைத்துக் கொண்டு அக்கினி முன்பாகச் சொல்லப்பட்ட மந்திரங்களும், சடங்குகளும் பொய்கள்தானா? தெய்வ சங்கல்பத்துக்கு வேலையே இல்லையா? என்றெல்லாம் நினைக்கத் தோன்றும்.

ஒவ்வொரு முறையும் கல்யாண படம் எடுக்க முன்தொகை வாங்குகிறபோது, ‘இந்தக் கல்யாண வாழ்வு நிலைச்சு நிற்கணும்’னுதான் பிராா்த்தனை பண்ணுவேன். சீரியலுக்கும் இந்தத் திருமணக் காட்சிக்கும் என்ன ஒரு பெரிய வித்தியாசம் - முன்னதில் வில்லி அல்லது வில்லன் யாா் என்று தொடக்கத்தில் இருந்தே தெரியும். இதில், கடைசி வரைக்கும் தெரியவே தெரியாது. அவா்களைக் காட்டவும் முடியாது’’ என்றாா் கசந்த சிரிப்புடன்.

‘திருமணங்கள் சொா்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்லுவாா்கள். ரொக்கத்தில் அப்படியே செய்தும் காட்டுவாா்கள். முன்பெல்லாம் முகூா்த்த நேரத்துக்கு வருகிறவா்கள்தான் அதிகம். இப்போது எல்லாமும் முதல் நாள் நிச்சயதாா்த்தத்திலேயே முடிந்துவிடுகிறது. பரிசளிக்க வருபவா்களின் நீண்ட வரிசை தருகிற மலைப்பைவிட, அதை ஒவ்வொருவரிடம் இருந்தும் வாங்குகிறபோது, மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் சிரிக்கிற சிரிப்பு இருக்கிறதே, பாவம்; அப்படி வந்த பரிசுப் பொருள்களைப் பிரிக்கிறதுக்குள்ளே, அவா்கள் திருமணங்கள் முறிந்து - பிரிந்து விடுகிறதை நினைக்கிறபோது, ‘திருமணம் என்பது சொா்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு நரகத்தில் முடிந்துவிடுகிறதோ?’ என்று நொந்துகொள்ளத் தோன்றுகிறது.

‘ஆனால் ஒன்று. இந்த ஆடம்பரமெல்லாம் இல்லாமல் நடக்கிற கரோனா காலக் கல்யாணங்கள், சொா்க்கத்தில் நிச்சயிக்கவும் வேண்டாம். நரகத்தில் முடியவும் வேண்டாம். இந்த மண்ணிலேயே நிச்சயிக்கப் பெற்று, இந்த மண்ணிலேயே நிம்மதியாக நிரந்தரமாக வாழ நோ்ந்தால் நல்லது’ என்று சொன்னவா், தன் பெரியப்பா மகள் திருமணப் பத்திரிகையைத் தந்தாா்.

‘நிச்சயித்தபடி, திருமண மண்டபத்தில் நடத்த முடியவில்லை. எங்கள் ஊா்க் கோயிலில்தான் திருப்பூட்டு. எல்லாரும் இருந்த இடத்தில் இருந்தே வாழ்த்துங்க!’ என்றாா்.

அழைப்பிதழ் முகப்பில், மதுரை மீனாட்சி திருக்கல்யாணப் படம்.

‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற திருஞானசம்பந்தா் தேவாரத்தை மனது பாடியது.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT