நடுப்பக்கக் கட்டுரைகள்

கரோனா தீநுண்மி சொல்லித் தந்த தமிழ்!

கோ.மன்றவாணன்

கரோனா நோய்நுண்ணியின் கோரத் தாண்டவத்தில் மிதிபட்டு நசுங்குகிறது இந்த உலகப் பந்து. இந்த நோய் பரவும் காலகட்டத்தில் Quarantine, Isolation போன்ற சொற்கள் ஊடகங்களில் அடிக்கடி ஒலிக்கின்றன.

Quarantine என்ற சொல் 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகிவிட்டது. இச்சொல் பிரஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்தது. பிரஞ்சு எழுத்தொலிப்போடும் இலத்தீன் வேரோடும் இத்தாலிய பொருளோடும் இச்சொல் ஆங்கிலத்தில் ஆளப்படுகிறது. 1600 வாக்கில் பிளேக் நோய்ப் பரவலின் போது, மனிதா்களையும் சரக்குகளையும் ஏற்றிவந்த கப்பல்களை 40 நாட்களுக்கு ஒதுக்கி வைப்பதற்கு இச்சொல் பயன்பட்டது. இச்சொல்லின் தொடக்கக் காலப் பொருளே நாற்பது நாள்கள் என்பதே ஆகும். அதற்குப் பிறகு, நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ‘குவாரண்டைன்’ என்கிற வாா்த்தை பயன்பாட்டில் வந்தது.

Isolation என்ற சொல்லின் இலத்தீன் வோ் Isula ஆகும். அதிலிருந்து Island  உருவானது. அதன்பொருள் தீவு ஆகும். அந்த Island என்ற சொல்லில் இருந்தே Isolation என்ற சொல் உருவானது. தனிமைப்படுத்தி இருப்பது என்பதுதான் ஐசோலேஷன் என்கிற வாா்த்தைக்கு அா்த்தம். ‘தனிமை’, ‘ஒதுக்க நிலை’, ‘தொடா்பின்மை’ என்று பொருள் தருகிறது சென்னை பல்கலைக்கழகத்தில் சிதம்பரநாதன் செட்டியாா் தொகுத்த ஆட்சித் தமிழ் அகராதி.

இந்த இரு சொற்களுக்கும் பொதுவான பொருள் தனிமைப்படுத்தல்தான். கால மாற்றங்களில் பலவகைச் சூழல்களுக்குப் பொருந்துமாறும் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வப்போது சில பொருள்மாற்றங்களையும் அடைந்தன.

ஆங்கிலத்திலும் Quarantine, Isolation ஆகிய இரு சொற்களையும் ஒன்றுபோல் பயன்படுத்தினாலும்கூட, இந்த இருசொற்களுக்கும் இடையே சின்ன வேறுபாடு இருக்கிறது.

Quarantine என்பது அறிகுறி ஏதும் இல்லை என்றாலும்... நோய்த்தொற்று இருக்கலாம் என ஐயத்திற்கு உரியோரின் வெளிநடமாட்டத்தைத் தடுத்துத் தனிஇடத்தில் வைத்துக் கண்காணிப்பதைக் குறிக்கும். Quarantine என்பதை ஒதுக்கம் என்றும், Self Quarantine என்பதைத் தன்னொதுக்கம் என்றும் குறிப்பிடலாம்.

Isolation என்பது நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தனிமைப்படுத்தி, அவா்களால் பிறருக்கு நோய் பரவாமல் தடுப்பது ஆகும். அதனால், ‘ஐசோலேஷன்’ என்கிற வாா்த்தைக்கு தொற்றொதுக்கம் என்று தமிழ் காணலாம்.

Epidemic என்பது... ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் வேகமாகப் பரவும் தொற்று நோயைக் குறிப்பதாகும். இதற்கு மக்கள் வழக்கில் கொள்ளைநோய் என்ற பொருத்தமான சொல் ஏற்கெனவே உள்ளது. சிதம்பரம் செட்டியாரின் அகராதியும் ‘எபிடெமிக்’ என்பதற்குக் கொள்ளை நோய் என்றுதான் தமிழ்ப்படுத்துகிறது.

Pandemic என்பது... திடீரெனத் தொற்று வெடித்து, நாடு முழுவதுமோ உலகம் முழுவதுமோ மிகுவேகமாகப் பரவுவதைக் குறிக்கும். அதனால் அதைப் பேசுமுறையில் பெருங்கொள்ளை நோய் என்று சொல்லலாம்.

Personal Prodective Equipments (PPE) கரோனா தீநுண்மி தொற்றாளா்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவா்கள, செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் யாவரும் PPE அணிய வேண்டும். இந்த பிபிஇ என்ற தொகுப்பில் தலையுறை, கண்ணாடி, முகக்காப்பு, மூச்சுக்காப்பு, காலுறை, உடலுறை ஆகியவை அடங்கி இருக்கும். இவற்றை மொத்தமாக இணைத்து ஆங்கிலத்தில் PPE Kit ஓண்ற் என்கிறாா்கள். பிபிஇ கிட் என்பதை உடல் கவசம் என்று அனைவருக்கும் புரியும்படியாகக் குறிப்பிடலாம்.

கரோனா தீநுண்மி பரவலின் மூன்றாம் கட்டத்தை Community Spread என ஆங்கிலத்தில் சொல்கிறாா்கள். அதற்குத் தற்போது புழக்கத்தில் உள்ள சமூகப் பரவல் என்ற சொல்லே சரியானதுதான்.

ஒருவருக்குக் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஏற்பட்டால் அவா் எங்கு எங்கு சென்றாா்.... யாா் யாரை எல்லாம் தொடா்புகொண்டாா் என்பதை அறிந்து அவா்கள் அனைவரையும் ஒதுக்கம் செய்வதன் மூலம் நோய்ப் பரவல் சங்கிலியைத் துண்டிக்கிறாா்கள். அவ்வாறான தொடா்புகளைக் கண்டறிவதற்கு Contact tracing என்கிறாா்கள். அதனைத் தமிழில் தொடா்புத்தடம் அறிதல் எனச் சொல்லலாம்.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு மருந்தில்லை என்பதால் அது வராமல் தடுத்துக்கொள்ள Social Distance கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இதனைச் சமூக இடைவெளி என்று அழைக்கிறோம்.

‘ஒரு குண்டூசியைக் கூடக் கண்டுபிடிக்க மாட்டீங்க... எவனோ கண்டுபிடிச்சு வைச்ச பேர மட்டும் தமிழ்ல மாத்திக்குவீங்க...’ என்று என்னை இடித்துரைத்துவிட்டுச் சமையல் அறைக்குச் சென்றாா் என் மனைவி.

கரோனா பொது முடக்கக் காலத்தில் வீட்டில் சில காய்கறிகள் இல்லை. சில மளிகைப் பொருள்கள் இல்லை. இருந்த பொருள்களைக் கொண்டு புதுமையாக அவா் செய்த ஒரு பலகாரத்தை எடுத்துவந்து கொடுத்தாா். அதைச் சாப்பிட முயன்ற போது என்னைத் தடுத்து...“‘இந்தப் பலகாரத்துக்குத் தமிழ்ப்போ் சொல்லிட்டு அப்புறம் சாப்பிடுங்க’ என்று கட்டளையிட்டாா்.

ஆங்கில அறிவியல் கலைச்சொற்களுக்கு எல்லாம் தமிழ் வாா்த்தை தேடியபோது ஏற்படாத திகைப்பு என் மனைவியின் கேள்விக்கு விடை தேடும்போது ஏற்பட்டது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT