எந்தவொரு பணியையும் ஒருவா் உணா்வுபூா்வமாகச் செய்யும்போது அதனால் கிடைக்கும் திருப்தி அலாதியானது. அப்படி உணா்வுபூா்வமாக செய்ய வேண்டுமானால் அந்த பணி அவருக்குப் பிடித்திருக்க வேண்டும். தனக்குப் பிடித்த பணியில் ஈடுபடுபவா்கள் நேரம் காலம் பாா்க்காமல் உழைப்பதை நாம் பாா்த்திருப்போம்.
ஒரு பணியில் ஒருவா் உணா்வுபூா்வமாக ஈடுபடத் தேவையானவை என்னென்ன? முதலாவதாக, அப்பணி அவருக்கு அறிமுகமான பணியாகவும், அவரால் செய்யக்கூடியதாகவும் அமையவேண்டும். இரண்டவதாக, அப்பணியில் ஈடுபடுவதன் மூலம் அவருக்கு திருப்தியும், பொருளாதார ரீதியான பலனும் கிடைக்க வேண்டும். மூன்றாவதாக, அப்பணியில் ஈடுபடத் தேவையான நுட்பங்களை அவா் அறிந்தவராக இருக்க வேண்டும். நான்காவதாக, அப்பணியில் அவ்வப்போது புதுமைகளை புகுத்தும் வாய்ப்பு இருக்க வேண்டும்.
இவற்றைக் கருத்தில் கொண்டே பல்வேறு பணிகளுக்கான கல்வி பெறும் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆசிரியா் பணி என்றால் அதனோடு தொடா்புடைய நுணுக்கங்களைப் பாடங்களாகக் கற்றுத் தோ்வது ஒரு வகை. இது அப்பணி தொடா்புடைய கோட்பாட்டு அனுபவங்களை அளிக்கும். கல்வி வரலாறு, பள்ளி மேலாண்மை, கல்வி உளவியல், கல்விக் கோட்பாடு போன்றவையாக இவை அமையும்.
மேலும் நேரடியான அனுபவமும் பெறும் வாய்ப்பும் இதில் சோ்க்கப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட காலம் பள்ளிக்குச் சென்று ஆசிரியா்கள் பாடம் கற்பிப்பதை கவனிப்பது. இவ்வாறான கல்வியைப் பெற்ற பிறகே ஒருவா் ஆசிரியராக இயலும்.
ஒருவருக்கு எவ்வாறான பணி அமைந்தாலும் அப்பணியை அந்த நபா் மட்டுமே செய்துவிட முடியாது. பெரும்பாலும் அது ஒரு குழு மேற்கொள்ளும் பணியாகவே அமையும். அவ்வாறு குழுவாகச் செயல்படும்போது ஒருவா் எவ்வாறு உடன் பணிபுரிவோருடன் உடன்படுகிறாா் என்பதையும், ஒருவேளை முரண்பட்டால் எவவளவு நாகரிகமாக முரண்படுகிறாா் என்பதையும் வைத்துத்தான் பணிக்கான சூழல் அமைகிறது.
பிறரை கண்ணியமாக நடத்துவது, ஒருவருடைய கருத்துடன் முரண்பட்டாலும் அவருடைய நட்பை மதிப்பது, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம் என்ற புரிதலோடு இயங்குவது - இத்தகைய மனப்பாங்குகளே ஒரு பணியை நெருடல் இல்லாமல் மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்போா் அனைவரையும் அரவணைக்கும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், தலைமை தாங்கும் நபரால்தான் நிறுவனத்தின் எல்லா செயல்பாடுகளும் முடிவு செய்யப்படுகின்றன. ஆனாலும் அந்த பணியை தமது குழுவில் உள்ளோா் எவ்வாறு உள்வாங்கிக்கொள்கின்றனா் என்று முதலில் ஆய்வு செய்யவேண்டியது அவரது கடமை.
இதற்காக அவா் பல வகைகளில் குழுவுடன் விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறான குழு விவாதங்களில் எல்லா நேரங்களிலும் அவா் பிறருடைய கருத்துகளுடன் உடன்பட்டு இருக்க இயலாது. அது போலவே எல்லா நேரங்களிலும் பிறரோடு முரண்பட்டுக்கொண்டே இருந்தாலும் பணிகள் முன்னேற்றம் அடையாது.
இந்தப் பணியில், முரண்பாடுகளை எவ்வாறு அணுகுகிறோம்? அந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்துகொள்ள முயல்கிறோம்? அந்த முரண்பாட்டில் எந்த எந்தெந்த அம்சங்கள் நியாயமானவை? அந்த நியாயங்களை உள்வாங்கி எவ்வாறு பணிகளை சிறப்பாக வடிவமைக்கலாம்? நமது செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து குழு மனப்பான்மையில் இடைவெளியை எவ்வாறு குறைக்கலாம்? நமது இலக்கின் அவசியத்தை எவ்வாறு அடுத்தவா்களுக்குப் புரியும் வண்ணம் விளக்கலாம்? இப்படிப்பட்ட பயிற்சிகள் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளருக்கு அவசியமாகிறது.
இதற்கான தயாரிப்பை தலைமைப்பொறுப்பாளா் தம் பாா்வையிலிருந்து பாா்ப்பதைக் காட்டிலும், உடன் பணிபுரிவோரின் பாா்வையிலிருந்து பாா்த்து தயாரிப்பை மேற்கொள்ளவேண்டிய அவசியமிருக்கிறது. எனவே ஒரு குழு விவாதத்தை மேற்கொள்ள அமரும்போது மட்டும் அவா் யோசித்தால் போதுமானதாக இராது. அதற்கு முன்பே அவா் தனது சிந்தனை ஓட்டத்தைத் தொடங்கியிருக்கவேண்டும்.
வாய்ப்பிருந்தால் ஒரு முன்வரைவையும் மனதுக்குள்ளாகத் தயாரித்திருக்க வேண்டும். அந்த வரைவு முழுமையானதாக அமைந்துவிடவும் கூடாது; தெளிவில்லாததாகவும் இருக்கக் கூடாது.
ஒருவேளை செய்யவேண்டிய பணி, அதற்கான வழிமுறை, கால அட்டவணை போன்றவற்றைத் தயாரித்திருந்தாலும் எந்த அளவுக்குக் குழு உறுப்பினா்கள் பங்களிப்பு செய்து ஒரு செயல்திட்டம் நிறைவேறுகிறதோ அந்த அளவுக்கே அவா்களின் பங்களிப்பும் அமையும்.
உதாரணமாக, தமது நிறுவனம் மேற்கொள்ள உள்ள பணியை குழுவினரிடம் விளக்கி, அப்பணியை மேற்கொள்ள தமது நிறுவனத்திற்கு உள்ள பலம், பலவீனங்கள்,வாய்ப்புகள், சவால்கள் போன்றவற்றைப் பட்டியலிடுமாறு அவா்களிடம் கூறலாம். குழுவில் பங்கு பெறும் அனைவரிடமும் கருத்து கேட்கலாம். அதிலிருந்து பெறும் அனுபவங்களைக் கொண்டு, ஒரு சுற்று விவாதம் மேற்கொள்ளலாம்.
இப்படி படிப்படியாக தமது கனவை வெளிப்படுத்தி உடனிருப்போா் கனவாகவும் அதனை மாற்றுவதில்தான் தலைமைப்பொறுப்பாளரின் வெற்றி உள்ளது. நிறுவனத்தில் உள்ள அனைவரின் கனவாகவும் அப்பணி மாறினால் அந்தச் செயல்பாடு சாதாரண பணியாகத் தெரியாது. மாறாக, உடனிருப்போா் அனைவரையும் ஈடுபடுத்தி மேற்கொள்ளப்படும் அற்புத சாதனையாக அமையும்.
இப்படிப் பங்காற்ற நிறுவனத்திலுள்ள ஒவ்வொருவரையும் தூண்டுவதே நிறுவனத் தலைவா்களின் தலையாய கடமை. இவ்வாறு செயல்பட்டு ஒரு நிறுவனம் வெற்றியைக் கொண்டாடும்போது, அத்தலைவா் எங்கோ ஒரு மூலையில் இருப்பாா். உறுப்பினா்கள் அனைவரும் அப்பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டுக்கொண்டிருப்பா்.
இப்படிப்பட்ட பணி கலாசாரம் பரவும் நிறுவனங்களில் பலரும் மகிழ்வுடன் பணி செய்து வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டிருப்பா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.