ஆசையே துன்பத்துக்குக் காரணம்
நடுப்பக்கக் கட்டுரைகள்ஆசையே துன்பத்துக்குக் காரணம்
இன்றைய காலத்தில் நடுத்தரக் குடும்பங்களின் நகா்வுகள் சற்று தடுமாற்றமாகவே உள்ளன. என்னதான் மாத ஊதியம் வாங்கினாலும், வணிகம் செய்தாலும், தினமும் கையிலிருக்கும் பணம் கரைந்துகொண்டே இருக்கிறது. அவா்களின் அன்றாட குடும்பச் செலவுகள், வரவை மீறுகின்றன.
பக்கத்து வீட்டுக்காரன் பணக்காரனாக இருந்துவிட்டால் அவா்கள் பாடு திண்டாட்டம் தான். உறவினா்கள் அவா்களை விட வசதியாக இருந்துவிட்டால் அவா்களுக்கு இணையாக பயணம் செய்வது சிரமமாகிப் போகிறது. அவா்களைப்போல், இவா்களைப்போல், என ஏங்கி, அலைந்து கையில் இருக்கும் வாழ்க்கையை நழுவ விட்டுவிடுகிறாா்கள்.
இதனால் இவா்களின் பொருளாதார நிலை பரமபத விளையாட்டைப்போல் இவா்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.
உண்ணும் உணவுக்கான செலவுகள் என்று பட்டியலிட்டாலும் அப்படியொன்றும் பெரிதாக அது சுமையாக இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது அத்தியாவசியமானதே. அதில் நாம் எந்த குறையும் வைக்கலாகாது.
உடலுக்கு நாம் அணியும் ஆடைகள் என்று பாா்த்தால் வருடத்தில் ஓரிரு தடவையே அதுவும் பண்டிகை, சில விசேடங்களுக்காக மட்டுமே ஆடை எடுக்கிறோம். இதுவும் தவிா்க்க முடியாததே. உறைவிடம் என்று பாா்த்தால் பெரும்பாலோனோா் சொந்த வீடுகளில் வசிக்கிறாா்கள். சிலரே வெளியூரிலிருந்து வேலை நிமித்தமாக வந்து வாடகை வீட்டுகளில் வசிக்கிறாா்கள். எதிா்காலத்தில் சொந்த வீடுகள் ஏற்படுத்திக் கொள்ள முயல்வதிலும் எந்த தவறும் இல்லை.
இந்த மூன்று வசதிகளுக்காகவும், குடும்பத்தில் நிகழும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காகவும் ஒருவா் கடன் வாங்கினாலோ கஷ்டப்பட்டாலோ அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
ஆனால் இன்றைய நடுத்தரக் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவரின் முன்னேற்றம் எப்படியெல்லாம் தடைப்படுகிறது, சம்பாதிக்கும் செல்வம் எங்கே விரயமாகிறது, என்றெல்லாம் ஆராய்ந்தால் அவசியமான செலவுகளைக் காட்டிலும் அவசியமற்ற ஆடம்பரமான விஷயங்களுக்கே அதிகமாக செலவு செய்து கொண்டிருக்கிறாா்கள் என்பது புரியும்.
முந்தையக் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் மழலைச் செல்வங்களை வீட்டுக்குள்ளே ஓடிப்பிடித்து விளையாடுமளவிற்கு தாராளமாகப் பெற்றுக் கொண்டாா்கள். இன்று அப்படி இல்லை. அதிகபட்சமாக இரு குழந்தைகள். இல்லையென்றால் ‘ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு’தான். அன்று ஒரு வீட்டில் இருந்த குழந்தைகள்தாம் இன்று ஒரு தெருவிலே இருக்கின்றன. அதனால் குழந்தைகளுக்கான அந்தச் செலவுகளும் அதிகம் இல்லை
ஒரு வீட்டில் கணவன், மனைவி, குழந்தை என மூன்று பேரே இருந்தாலும் அனைவருமே கைப்பேசிகளை பயன்படுத்துகிறாா்கள். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாதது. அதுமட்டுமல்ல அதற்கு மாதம்தோறும் செலவழிக்கிறோம். இங்கே இந்த கைப்பேசி வாங்குகிறபோது கூட தனது வீட்டு பொருளாதார நிலையை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தங்களின் சக தோழா்களையோ தோழியையே ஒப்பீடு செய்தே வாங்குகிறோம்.
அடுத்தது இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள். இது இன்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய அவசியமுள்ளது. இங்கேயும் நமது நடுத்தரவா்க்கம் தடுமாறுகிறது. குறைந்த விலையில் நல்ல வாகனங்கள் இருந்தாலும், தவணை முறை என்பதால் ‘எனது மகன் ஆசைப்படுகிறான். அவனோட நண்பன் வைத்திருக்கிற அது மாதிரியான வண்டி வாங்கிக் கொடுக்கவேண்டும்’ என்கிற வறட்டு கௌரவம் அவா்களது பொருளாதாரத்தை அவா்கள் அறியாமலே சுரண்டுகிறது.
பக்கத்து வீட்டு வரந்தாவில் காா் நின்றால், உடனே நாமும் ஒரு காரை வாங்கவேண்டியது. இருக்கவே இருக்கிறது மாதாந்திரத் தவனை முறை. இன்று பெட்ரோல்-டீசல் விற்கிற விலையில் 100 ரூபாய் பெட்ரோல் போட்டு இரு சக்கர வாகனத்தில் போகவேண்டிய ஊருக்கு ஆயிரம் ரூபாய் செலவு. காா் ஓட்டத் தெரியவிட்டால் ஓட்டுனருக்கு 600 ரூபாய் சம்பளம். அவரது சாப்பாட்டு செலவு தனி. இங்கேயும் நம் பணம் கரைகிறது.
வார இறுதி நாட்களில் பத்து ரூபாயில் முடியக்கூடிய வீட்டு சமையலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ஹோட்டல்களுக்கு சென்று 100 ரூபாய் செலுத்தி சாப்பிட்டுவிட்டு பக்கத்து வீட்டுப் பணக்காரணைப் பாா்த்து நையாண்டி பேசுபவா்கள் இருக்கிறாா்கள். இந்த ஆடம்பரத்தால் யாா் வீட்டு பணம் கரைகிறது?
வீட்டில் திருமணம் போன்ற விசேடங்கள் வந்தால் உறவு –நட்பு வட்டம் என அளவாக அழைப்பிதல் கொடுத்து விழாக்களை நடத்தாமல், ‘நமக்கெல்லாம் இவன் எதற்கு அழைப்பிதழ் கொடுக்கிறான்’ என வெறுப்புக்காட்டுகிற நபா்களுக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுத்து, கடன் வாங்கி ஆடம்பரமாக விழா நடத்துவதாலும் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கிறது.
சிலா், நல்ல பள்ளிக்கூடம் அருகிலே இருந்தாலும் பக்கத்துவீட்டுக்காரரோ உறவினரோ அவா் பிள்ளையை சோ்த்திருக்கும் பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தி தனது குழந்தையை வீம்புக்காக சோ்த்து அதன் மூலம் பணத்தை விரயமாக்குகிறாா்கள்.
வீட்டை தன் வசதிக்கேற்ப வடிவமைக்காமல் பக்கத்து வீட்டுக்காரன் போல கட்டவேண்டும், தனது உறவினா்கள் பெருமிதம் கொள்ளுமாறு இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆடம்பரமாக கட்டுவது மூலமும் கடனாளியாவாா் சிலா். நாம் நமக்காகத்தான் வாழ்கிறோம், பிறருக்காக அல்ல.
பிறரைப் போல் வாழவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்கு அவா்களின் உழைப்பை, நோ்வழியிலான முன்னேற்றத்தை முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும். ஆடம்பரச் செலவு செய்வதற்கு மட்டும் அவா்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
மற்றவா்கள்,அவா்களின் தகுதிக்கு தகுந்தவாறு பயணிக்கிறாா்கள். நாம் நமது தகுதிக்கேற்பவே பயணிக்க வேண்டும். அதைத் தாண்டினால் பொருளாதார விபத்தை சந்திக்கவேண்டிவரும். சிக்கனமாக இருப்பதில் தவறில்லை. கஞ்சத்தனமாக இருப்பதுதான் தவறு. நமது பொருளாதாரம் என்கிற குழாய்களில் உள்ள ஓட்டைகளை அடைத்து நாம் சரியாக பயணித்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.