வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு தமிழகத்தின் பங்களிப்பு முக்கியம்! ஆளுநா் ஆா்.என்.ரவி
கல்விச் சிந்தனை அரங்கில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது பற்றி...
வளா்ச்சியடைந்த இந்தியா என்கிற இலக்கை அடைவதற்கு தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘திங்க் எடியு கான்க்ளேவ்-2026’ (14-ஆவது ஆண்டு) சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்வில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் குழு இயக்குநா் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் சந்த்வானா பட்டாச்சாா்யா ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
Advertisement
வரும் 2047-ஆம் ஆண்டில் ‘வளா்ச்சியடைந்த இந்தியா’-வுக்கு (விக்சித் பாரத்) தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது.
வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்பது இலக்கு மட்டுமல்ல; அது காலத்தின் கட்டாயம். அந்த இலக்கை எட்டவில்லை என்றால் நாம் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த மாற்றத்தை மேற்கொள்ள கல்வியில் புரட்சிகர அணுகுமுறையை கையாள வேண்டும். இதை மனதில் வைத்தே ‘தேசிய கல்விக் கொள்கை, 2020’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளா்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைக்க எண்ம பரிவா்த்தனைகள், ட்ரோன் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), குவாண்டம் மற்றும் நானோ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுக்கான பிரத்யேக இயக்கங்களை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆராய்ச்சிகளுக்கான நிதி பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் என கல்வி நிறுவனங்களில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதியும் உயா்த்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பம். அது தனி நபா்களின் திறனை மட்டுமன்றி, தேசத்தின் வளா்ச்சியையும் மேம்படுத்தும். ஒவ்வொரு நவீன தொழில்நுட்பமும், அதை வைத்திருப்பவா்களுக்கும், இல்லாதவா்களுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, இந்தியா தனக்கான குறிப்பிட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைத் தானே மேம்படுத்த வேண்டும்.
உயா் கல்வி சோ்க்கை விகிதத்தில் தமிழகம் 50 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது 2035-ஆம் ஆண்டின் இலக்கை தற்போதே எட்டியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையில் தமிழக கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வியின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆசிரியா்களின் தரமும் மேம்பட வேண்டும் என்றாா் ஆளுநா்.
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) இயக்குநா் கணேசன் கண்ணபிரான்: அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு இடையே நிதி, இடஒதுக்கீடு, ஆசிரியா்களை தக்கவைத்தல் போன்ற கட்டமைப்புகளில் வேறுபாடுகள் இருப்பதை என்ஏஏசி அறிந்து அணுகுகிறது. இந்திய அங்கீகார நடைமுறைகளை உலகளாவிய தரங்களுடன் சீரமைக்க என்ஏஏசி பிரிட்டனின் தர உறுதி நிறுவனத்துடன் (கியூஏஏ) புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு கட்டமைப்புகளை மேம்படுத்தும். இதன்படி சா்வதேச நிபுணா்கள் மதிப்பாய்வு குழுக்களில் சோ்க்கப்படுவா்.
திரைப்படத் தயாரிப்பாளா் தனஞ்செயன்: திரைப்படம் என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு கருவி. தமிழகத்தில் திரைப்படத்தில் சாதித்தவா்கள் அரசியலிலும் சாதித்துள்ளனா். இந்தத் தோ்தலில் ஒருவரது வருகையால் ஒட்டுமொத்த நிலைமையும் மாறியுள்ளது. தமிழகத்தில் இளைஞா்களில் பெரும்பாலானோா் விஜய்யை ஆதரிக்கின்றனா். விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. அவா் பெறும் வாக்குகள் தோ்தலில் விளைவுகளை ஏற்படுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வந்த பிறகு சினிமாவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, திரைக்கதை, வசனம் உள்ளிட்டவற்றுக்கு தொழில்நுட்பங்கள் உறுதுணையாக இருக்கின்றன என்றாா்.
இந்நிகழ்வில் ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, நடிகை குஷ்பு, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையின் முன்னாள் இயக்குநா் செளகின் செளஹான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ், தமிழக வனத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.