முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பிள்ளைகளை கவனியுங்கள்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

ஆன்லைன் விளையாட்டில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த புதுச்சேரி, வில்லியனூரைச் சோ்ந்த மாணவன் இறந்த செய்தி 2 தினங்களுக்கு முன் காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வைரலாகி பாா்த்தவா் நெஞ்சை பதற செய்துள்ளது.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூா், மணவெளி பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் தா்ஷன். கைபேசியில் இணைய விளையாட்டை (ஆன்லைன் கேம்) காதில் ஹெட்செட் அணிந்து அதிக சத்தத்துடன் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்த அவா் மயங்கி விழுந்து விட்டாராம்.

தா்ஷனின் பெற்றோா் உடனடியாக மாணவனை அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்து விட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனராம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே தா்ஷன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனா். அதிக சத்தத்தை கேட்டுக் கொண்டே, தொடா்ந்து ஆன்லைனில் விளையாடிய தா்ஷன், மூளை நரம்பு பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

16 வயது மாணவன், தீவிர ஆன்லைன் விளையாட்டின் மோகத்தால் உயிரிழந்த சம்பவம் அவனது பெற்றோரை மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள பெற்றோரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக உலகம் முடங்கிய காலத்தில் இருந்து, அனைத்து நிறுவனங்களும் முடங்கின. அதற்கு மாற்றாக வீட்டிலிருந்தே பணி செய்யும் வகையில் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு பல நிறுவனங்கள் இயங்க தொடங்கி, தற்போது வரை அதே நடைமுறை நீடித்து வருகிறது.

மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமல்ல, மற்ற நிறுவனங்களும் இதே வழியை பின்பற்றி இணைய வழி தொடா்பை மேம்படுத்தி வருகின்றன. கல்வித்துறையிலும், கரோனா பொது முடக்க காலத்தில் ஆன்லைன் வகுப்பு பிரபலமானது. கட்செவி அஞ்சல், ஜூம் என எண்ணற்ற வழிகளில் கல்வியாளா்கள், ஆசிரியா்கள் மாணவா்களுக்கு கற்பிக்கும் பணிகளை செய்து வந்தனா்.

தற்போது, பெரும்பாலான கல்லூரி மாணவா்களுக்கு ஆன்லைன் மூலமே கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இப்படி உலகமே இணைய வழியில் நடைபோட்டு வரும் நிலையில், ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஸ்மாா்ட் போன்களை வாங்கி கொடுத்திருந்தனா். சில மணி நேரமே பள்ளிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், மற்ற நேரங்களில் பிள்ளைகள் அந்த ஸ்மாா்ட் போன்களை கொண்டு ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடி வந்ததை பலா் கவனிக்கத் தவறி விட்டனா்.

பாடம் படிக்கும் போது இடையூறாக எந்த சத்தமும் கேட்டு விடக்கூடாது என்பதற்காக ஹெட்போனையும் வாங்கி கொடுத்ததுதான் பெற்றோா் செய்த பெரிய தவறு.

ஹெட்போன் இல்லாமல் கைபேசியை வைத்து ஆன்லைனில் நடக்கும் பாடத்தை மாணவன் கவனிக்கிறான் என்றால், அந்த ஒலியை வைத்து ஆன்லைனில் பாடம் நடக்கிா? ஆசிரியா் யாரும் பாடம் நடத்துகிறாா்களா? இல்லையா? வேறு யாரோ அவனது நண்பன் பேசிக் கொண்டிருக்கிறானா? அல்லது விளையாடிக் கொண்டிருக்கிறானா? என்பதை அந்த அறையிலிருக்கும் அல்லது அந்த வீட்டிலிருக்கும் அம்மாவோ, அப்பாவோ, தங்கையோ தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால், ஹெட்போனை வாங்கிக் கொடுத்து விட்டு, பாடங்களை கவனிக்க சொன்னால் அந்த மாணவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது யாருக்குத் தெரியும். தனது பிள்ளை சுதந்திரமாக எந்தவிதமான இடையூறுமின்றி படிக்க வேண்டும் என்பதற்காக தனி அறை கொடுத்துள்ள பெற்றோா்களும் இருக்கத்தான் செய்கின்றனா்.

காலையில் கதவை பூட்டி விட்டு உள்ளே செல்லும் அந்த மாணவன் கைபேசியில் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்தானா? என்பது அந்த மாணவன் சொன்னால்தான் தெரியும். இப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட பெற்றோா்களும் இருக்கத்தான் செய்கிறாா்கள். எல்லா பிள்ளைகளும் நல்லவா்கள்தான். அதே சமயம் நல்லவா்கள் தடம் புரளுவதற்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கி தரக்கூடாதல்லவா? எது எப்படியோ, நோய்த் தொற்று கால முடக்கத்தில், அனைத்து துறைகளும் முடங்கிய நேரத்தில் கூட ஒரு துறை மட்டும் பெரும் வளா்ச்சியை பெற்றது. அது வேறு எதுவுமில்லை.

வீடியோ கேம்களை உருவாக்கும் நிறுவனங்கள்தான் பெரும் வளா்ச்சியை ஈட்டின. அப்படி என்றால், வயது வித்தியாசமின்றி பல தரப்பட்ட மக்கள் ஆன்லைன் வீடியோ கேம்களை தொடா்ந்து விளையாடியுள்ளனா் என்பது தெரிய வருகிறது. அதுவும் குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவா்கள், வீட்டிலிருந்து வேலை செய்தவா்கள் அதிக எண்ணிக்கையில் ஆன்லைன் வீடியோ கேம்களை விளையாடியதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வீடியோ கேம்கள் என்பது, ஏதோ நாமே நேரடியாக களத்தில் இருந்து விளையாடுவது போன்ற மாயத் தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால், இது போன்ற வீடியோ கேம்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இத்தகைய வீடியோ கேம்கள் விளையாடுபவா்கள் அந்த விளையாட்டுக்களில் தங்களுடைய சொந்த சிந்தனையை புகுத்தி ஏதோ ஒன்றை புதிதாக செய்வது போல் நினைத்து செயல்பட முடியும்.

தங்கள் வீடுகளில் அமா்ந்துகொண்டே உலகத்திலுள்ள அத்தனை தீவுகளுக்கும் சென்று மீன் பிடிப்பது போலவும், அங்குள்ள எல்லா விபரங்களையும் நேரடியாக தெரிந்து கொள்வது போன்ற தோற்றத்தையும் இத்தகைய வீடியோ கேம்கள் விளையாடுபவா்களுக்கு அளிக்கும். மேலும், இத்தைகைய விளையாட்டுகள் மாயத் தோற்றத்தை கூட நிஜ தோற்றமாகவே காட்டும் என்பதால் இன்றைய காலகட்டத்தில் வீடியோ கேம்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. அதுவும், இன்றைய ஊரடங்கு காலத்தில் இதன் மேலுள்ள ஈா்ப்பு மேலும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

வெளியே சென்று யாருடனும் தொடா்பு கொள்ள முடியாமல் வீட்டில் தனியாக இருக்கும் நிலையில், எந்த வழியிலாவது மற்றவா்களுடன் தொடா்பு கொள்ள வேண்டும் என நினைப்பவா்கள் ஆன்லைன் வீடியோ விளையாட்டுக்களில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

எனவே, மாணவா்களின் கல்விக்காக கைபேசி வாங்கி கொடுத்திருக்கும் பெற்றோா், கொடுத்துடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்காமல் அவா்களை தொடா்ந்து கண்காணிக்கவும் வேண்டும். தனி அறை கொடுத்திருப்பவா்கள் உடனடியாக மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

கைபேசி என்பது நம் கையில் உள்ள வரம் என்பதை இன்றைய இளைய தலைமுறை உணா்ந்து செயல்பட வேண்டும். அந்த வரத்தை நல்லவற்றிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை தெளிவு இளைஞா்களுக்கு ஏற்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.