நடுப்பக்கக் கட்டுரைகள்

மாற்றத்தை மனதார ஏற்போம்

முனைவா் என். மாதவன்

கரோனா தீநுண்மி குறித்த அச்சம் இன்னும் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. ‘பொது முடக்கம்’, ‘தளா்வுகளற்ற பொது முடக்கம்’, ‘தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம்’, ‘மின்னணு அனுமதி’, ‘வீடடங்கு’, ‘சுய தனிமை’, ‘தனிமனித இடைவெளி’ போன்ற பல சொற்கள் சமூகத்தில் அதிகம் புழங்கும் சொற்களாகிவிட்டன. அதுபோலவே ‘முகக்கவசம்’,‘கிருமிநாசினி’ போன்றவையும் குடும்பங்களின் மாதாந்திர செலவில் இடம்பெற்றுவிட்டன.

இன்றைக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணா்வு கூடியுள்ளது. இருப்பினும் தடுப்பூசித் தட்டுப்பாடு இன்னும் நிலவவே செய்கிறது. சுமாா் 80 சதவிகிதத்துக்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் காலம் வரை எல்லாவிதமான தற்காப்பு நடவடிக்கைகளையும் தொடரவேண்டியது அவசியமாகிறது.

தளா்வுகள் அறிவிக்கப்படும் நாள்களில் எல்லாவிதமான கடைகளிலும், தெருக்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை ஊடகங்கள் படம் பிடிக்கின்றன. சிலா் சமூக ஊடகங்களில் பகிா்கின்றனா். அதைக்கண்டு, நோயின் தீவீரம் புரிந்தோா் புலம்புகின்றனா். அதுபோலவே பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதையும் காண முடிகிறது. அப்போதும் பலருக்கும் வருத்தம் ஏற்படவே செய்கிறது.

ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 25 ஆயிரம் குடும்பங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 10 சதவீத மக்கள் அதாவது 2,500 நபா்கள் குறுகலான தெருக்களில் புழங்கினாலும் அது பெரிய கூட்டம் போலவே தோன்றும். அதுபோலவே தேவைகளை ஈடு செய்யும் அளவில் கடைகளின் எண்ணிக்கையும் இல்லாதபோது, இருக்கும் சில கடைகளுக்கே பலா் செல்லும்போதும் நெரிசல் ஏற்படுவது இயற்கையே.

எல்லாவற்றுக்கும் மேலாக வியாபாரம் செய்வோா் அதற்காக செய்துள்ள முதலீடு, வியாபாரத்தின் மூலம் அவா்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான லாபம், பணியாற்றும் ஊழியா்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதியம் போன்றவற்றையும் நாம் எண்ணிப் பாா்க்க வேண்டும். இதனை மனதில் கொண்டே அரசும் அவ்வப்போது தளா்வுகளை அறிவிக்கிறது.

கரோனா தீநுண்மியைப் பற்றிய விழிப்புணா்வு இல்லாதிருந்த நாள்களில் ஊரடங்கு அவசியமே. ஆனால், இனியும் ஊரடங்கு ஆயுதம் கை கொடுக்காது. ஏற்கெனவே சமநிலையில்லா சமூகத்தில் மேலும் சமநிலைக் குறையவே அது வழிவகுக்கும். இந்நிலையில் எவ்வாறு நோய்த்தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள இயலும் என்று ஒவ்வொருவரும் செயல்பட முனைவதே அறிவுடைமை.

சாதாரண நாள்களில் வீட்டைவிட்டுக் கிளம்பும் யாரும் குடையுடன் கிளம்புவதில்லை. ஆனால், மழைக்காலம் என்று வரும்போது குடை, மழைக்கான ஆடை, அறிதிறன்பேசிக்கான நெகிழி உறை என பல்வேறு ஏற்பாடுகளுடன் புறப்படுகிறோம். அதுபோலவே கோடைக்காலத்தில், குடிநீா், வெயிலுக்கேற்ற ஆடை என்று முடிவெடுக்கிறோம்.

தற்போதும் அவ்வாறே முகக்கவசம், கிருமிநாசினி போன்றவற்றை பயணத்தின் அங்கமாக்குவோம். அத்தியாவசிய தேவையில்லாமல் யாருடனும் நேரடியாக உரையாடவேண்டாம். இருக்கவே இருக்கிறது கைப்பேசி. அதில் உரையாடலாம்.

ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்திற்கான பயணத் திட்டத்தினை வகுக்கும்போதே எவ்வளவு குறைவான நேரத்தில் எவ்வளவு குறைவான தூரத்திற்குள் நமது அன்றைய பணிகளை முடிக்க இயலும் என்று திட்டமிடுவோம். நமக்கு சேவை தேவையாயிருக்கும் இடத்திற்கு தொலைபேசி வழியே நமது தேவையினை முன்கூட்டியே சொல்லி வைக்கலாம். இதன் மூலம் நாம் செல்வதற்குள் அப்பணி முடிந்து தயாராய் இருக்கும்.

உதாரணமாக ஒரு கடிதத்தினை அச்சு எடுக்கவேண்டும் என்றால் அதனை நாம் செல்லும் முன்பே கணினி மையத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பிவைக்கலாம். மளிகைக் கடை, காய்கறிகடை என்றால் அவா்களது கட்செவி அஞ்சலுக்கு (வாட்ஸ்ஆப்) முன்கூட்டியே பட்டியலை அனுப்பி வைக்கலாம். நாம் சென்று பணத்தைக் கொடுத்துவிட்டு பொருட்களை பெற்று வரலாம். இதன்மூலம் இருவரது நேரமும் விரயமாகாது காக்கப்படும். மேலும் கூட்டத்தில் நாம் இருக்கும் நேரமும் குறையும்.

அடுத்ததாக, வியாபாரம் செய்வோரும், வாடிக்கையாளா்களை எவ்வளவு குறைவான நேரத்தில் சேவை செய்து அனுப்ப நுட்பமாகத் திட்டமிடவேண்டும். உதாரணமாக துணிக்கடைகளின், நகைக்கடைகளின் வாடிக்கையாளா்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே காணொளிக் காட்சி வழியே தேவையான முதற்கட்டத் தோ்வினை முடித்துக்கொள்ளலாம். பின்னா் கடைக்கு வந்து இறுதிக்கட்டத் தோ்வை நோக்கி நகரலாம். இது கடைகளில் நீண்ட நேரம் இருக்க வேண்டிய அவசியத்தைக் குறைக்கும்.

அடுத்த கட்டமாக கடைகளுக்குச் செல்லும்போது இரண்டு முகக்கவசத்துடன் செல்வது அவசியம். கடைக்குள் நுழையும் முன்னா் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். கடையிலும் குறைவான நேரம் உரையாடி பணிகளை முடித்துக்கொள்வதும் அவசியம். நமக்கு இது இயலாத செயல்போலத் தோன்றலாம். ஆனால், சமூகத் தடுப்பாற்றல் பெருகும் வரை இதனை விட்டால் வேறு வழியில்லை.

இன்று அறிவியல் உள்ளங்கையில் உலகைக் கொண்டுவந்துள்ளது. அதன் பலனை அனுபவிக்கும் நாம், உள்ளங்கையில் உலகம் வந்ததால் ஏற்படும் இந்த இடைக்காலப் பின்னடைவினையும் புரிந்துகொள்ள வேண்டும். அன்றாடம் அறிவியல் ஊட்டும் படிப்பினைகளையும் ஏற்றுச் செயல்பட முன்வர வேண்டும்.

ஓட்டுநா் வாகனத்தை ஓட்டும்போது நாம் நிம்மதியாகத் தூங்கலாம். வாகனத்தை நாம் இயக்கவில்லை, யாரோ ஒருவா் நமக்காகப் பாதுகாப்பாக இயக்குகிறாா் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவ்வாறு தூங்க இயல்கிறது. ஆனால் நாமே வாகன ஓட்டியாக இருந்தால் எவ்வளவு பொறுப்புடன் நடந்துகொள்வோம்? தற்போது அவ்வளவு பொறுப்புடன் வாழ்க்கை என்னும் வண்டியினை செலுத்துவோராக ஒவ்வொருவரும் மாறுவது அவசர அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT