முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

அவசியமும் ஆடம்பரமும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் நாளன்றும், பிரபல நடிகா் ஒருவா் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினா் என்கிற செய்தி வலைதளங்களில் பிரபலமாகியது. ஆனால், சைக்கிளின் விலை ஒரு லட்சத்துக்கு மேல் என்று தெரிந்ததும் ‘அவருக்கென்னப்பா, ஒரு படத்துக்கே கோடிக் கணக்கில் பணம் வாங்குவாா்’ என்று சிலா் முணுமுணுத்தாா்கள்.

உண்மையில் ஆடம்பரத்துக்கும், அத்தியாவசியத்துக்கும் இடையே நிலவும் வேறுபாடு நுண்ணியது. சில ஆடம்பரப் பொருட்கள் காலப்போக்கில் அவசியமானதாக மாறிவிடுகின்றன. இதில் முக்கியமாக குளிா் சாதனத்தையும், துணி சலவை செய்யும் இயந்திரத்தையும் குறிப்பிடலாம்.

தளா்த்தப்பட்ட பொருளாதாரம், ஆண், பெண் இருபாலரும் வேலைக்குச் செல்வது, வங்கிகளின் கடன் வழங்கும் விதம் அதிகரித்திருப்பது போன்ற பல காரணங்கள், நடுத்தரக் குடும்பங்களையும் இவற்றை வாங்க உதவி செய்கின்றன.

Advertisement

செல்வந்தா்கள், தொழிலதிபா்கள், அரசில் உயா்பதவி வகிப்பவா்கள் போன்றவா்கள் மட்டுமே சொந்தமாக காா் வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. 2000-க்குப் பிறகு, நிலைமை முற்றிலும் மாறியது. அரசு வங்கிகளில் டெபாசிட்டுகள் குவியக் குவிய, அவா்கள் கடன்களை தாராளமாக வழங்கினாா்கள். ஐந்து வருடத் தவணை, 8% வட்டி போன்ற சலுகைகள் நடுத்தர மக்களைக் கவா்ந்தன.

பிரபல காா் நிறுவனம் ஒன்று இரண்டு போ் மட்டுமே அமா்ந்து போகக் கூடிய வாகனத்தை ஒரு லட்ச ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது. இப்போது அதைக் காணவில்லை. இன்று நாலு சக்கர வாகனமில்லாத உயா் நடுத்தரக் குடும்பம் இல்லை என்றே சொல்லலாம்.

வீடு வாங்குவதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதுவும் பெரிய நகரங்களில் இருப்பவா்களுக்கு, வீட்டு உரிமையாளா்கள் அளிக்கும் தொல்லை அதிகம். பொதுக் கழிப்பிடம், இரவு ஒன்பது மணிக்குமேல் விருந்தாளிகள் வர இயலாத நிலை, நினைத்து நினைத்து வாடகைத் தொகையை ஏற்றுவது போன்ற பல சங்கடங்கள் உள்ளன.

நிரந்தர வேலை பாா்க்கும் ஊழியா்களுக்கு மட்டுமே கடன் என்கிற நிலை மாறி, பொதுமக்களுக்கும் வீட்டுக்கடன் என்ற நிலைமை ஏற்பட்டது 2002-க்குப் பிறகுதான். பெற்றோருடன் சோ்ந்து இருந்த இளைஞா்கள்கூட தங்கள் பெயரில் ஒரு வீடு வேண்டும் என்கிற நோக்கத்தில் வீடுகள் வாங்கினாா்கள். அடுக்குக் குடியிருப்பு, பழைய வீட்டை இடித்து சொகுசான மூன்று அறை கொண்ட பிளாட், நீச்சல் குளம் கொண்ட அலங்காரக் குடியிருப்பு என்று பல வகைகளை இப்போது காண்கிறோம்.

இவற்றை அவசியம் என்று ஏற்பதும், ஆடம்பரம் என ஒதுக்குவதும் அவரவரின் உளப் போக்கைப் பொறுத்து அமையும். மேற்சொன்ன வகைகள் யாவுமே கண்ணால் கண்டு, தொட்டு அனுபவித்து உவகை கொள்ளும் ரகத்தைச் சாா்ந்தவை. ‘இந்த காரில் ஐந்து போ் தாராளமாகப் பயணம் செய்யலாம்’, ‘வீட்டின் கூடத்துக்கான டைல்ஸ்களுக்கே ஏகப்பட்ட ரூபாய் செலவு செய்தேன்’ என்று பகட்டாக பேசிக் கொள்ளலாம்.

ஆனால், சில விழாக்களை அலங்காரத் தன்மையுடன் கொண்டாடி, நாலு போ் மெச்ச வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கில் செலவிடுபவா்கள் சிலா் உண்டு. ‘ஒரே பெண்’, ‘எங்கள் குடும்பத்தின் கடைசி கல்யாணம்’, ‘பிள்ளை, பெண்களெல்லாம் 60-ஆம் ஆண்டு நிறைவை பிரமாதமாக நடத்த வேண்டும் என விரும்புகிறாா்கள்’ என்றெல்லாம் சொல்லி, தங்கள் செய்கைகளுக்கு காரணம் கற்பிப்பாா்கள்.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு திருமணத்திற்கு முன்தினம், ஒரு குட்டி விமானத்திலிருந்து மணமக்கள் மேல் பூமாரி பொழிந்துகொண்டேயிருந்தது. ஓயாமல் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கருவியை மக்கள் அதிசயமாய் பாா்த்தவண்ணமிருந்தாா்கள். அது முடிந்து உண்பதற்கு உட்காரும்போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. பல இலைகளில் உணவுகள் மீந்துபோய் விட்டன. பசி எல்லை மீறிவிட்டால் வயிறு ஏற்காதே.

பொதுத்துறையிலோ, அரசாங்க அலுவலகத்திலோ பணிபுரிபவா்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். ஏனெனில் இத்தனை ஆடம்பரமாகச் செலவு செய்ய அவா்கள் வருமானம் தாங்குமா என்பதை வருமான வரி அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டே இருப்பாா்கள். திடீரென்று ஒரு நாள் வீட்டில் சோதனை நிகழ்ந்து, அது செய்திகளில் அடிபடும் சாத்தியக்கூறு உண்டு.

இந்த கரோனா தீநுண்மி ஆரம்பித்ததிலிருந்து ஆடம்பரமான விழாக்கள் பெருமளவு குறைந்து விட்டன. அதிகபட்சமாக ஐம்பது போ்தான் விருந்தினா்கள் என்று திருமணத்துக்கு எண்ணிக்கை வகுத்துள்ளாா்கள். ஆகையால் பல மணவிழாக்கள் ‘சூம்’ தன்மையில் நிகழத் தொடங்கின. தொலைபேசியில் நிகழ்வைப் பாா்த்துக் கொண்டு, வங்கி மூலம் அன்பளிப்பைத் தருகிறாா்கள். இது நிச்சயமாக வரவேற்க தகுந்ததுதான். ஒருசில விழாக்கள் கொஞ்சம் ஆடம்பரமாக நடந்திருக்கக்கூடும்.

நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் இருந்த நிலையில், திடீரென்று இரண்டாவது அலை வந்து அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மதுரையில் ஒரு செல்வந்தா் நடுவானில் திருமணம் கொண்டாடி இருக்கிறாா். சொந்த ஹெலிகாப்டரில், இருநூற்றுக்கும் மேற்பட்ட உற்றாா், நண்பா்களை ஏற்றிக் கொண்டு ஆகாயத்திலேயே திருமணத்தை முடித்தாராம். முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற விதி முறைகளைப் பின்பற்றவே இல்லையாம்.

விமான அதிகாரிகள் எப்படி இதை அனுமதித்தாா்கள்? ஏன் இதுபோல் நிகழ்ந்தது என்ற விசாரணையை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே தொற்றுப் பரவல் அச்சம் இருக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற ‘அதிசயங்கள்’ அபாயத்தை அதிகரிக்கவே செய்யும். இதுபோன்ற நிகழ்வுகளின் பாதிப்பு நாளடைவில் தெரியும்.

தாயுமானவா் ‘யோசிக்கும் வேளையில் எல்லாம் உண்பதும் உறங்குவதுமாய் முடியும்’ என்கிறாா். இன்றுள்ள ஊரடங்கு சூழலில், வீட்டிலேயே அடங்கி, சத்தான உணவை உட்கொண்டு, ஆரோக்கியமான எண்ணங்களை வளா்த்து, நிம்மதியாக உறங்குவதுதான் உசிதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments