நடுப்பக்கக் கட்டுரைகள்

காவிரி நீரை முழுமையாகப் பயன்படுத்துவோம்!

கி. சிவசுப்பிரமணியன்

 கொள்ளை நோய்த்தொற்றின் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று உலகமே கவலையில் மூழ்கி இருந்தாலும் மனித வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் மழைநீரை குறிப்பிட்ட பருவ காலத்தில் தருவதற்கு இயற்கை தவறுவதில்லை. இதன் காரணமாகவே, கரோனா தீநுண்மி காலத்திலும் இந்திய வேளாண்மைத் துறையில் எவ்வித உற்பத்தி பாதிப்பும் ஏற்படவில்லை.
 இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, 2019-20-இல் 29.75 கோடி டன்னாக இருந்தது, 2020-21-இல் 2.66 சதவிகிதம் உயர்ந்து 30.54 கோடி டன்னாக அதிகரித்துள்ளதே அதற்கு சான்று.
 இந்தியாவைப் பொருத்தவரை, ஜூன் முதல் மே வரையான வேளாண் ஆண்டின் மூன்று பருவமழைக் காலங்களான தென்மேற்கு (ஜூன் முதல் செப்டம்பர் வரை), வடகிழக்கு (அக்டோபர் முதல் டிசம்பர் வரை), கோடை (மார்ச் முதல் மே வரை) பருவமழைக் காலங்களில், தென்மேற்குப் பருவமழை மிகவும் முக்கியமானது. இப்பருவத்தில் தமிழகம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் அதிக அளவு மழையாக ஓர் ஆண்டில் கிடைக்கக் கூடிய மொத்த மழையளவில் சராசரியாக 80 முதல் 90 சதவிகிதம் வரை கிடைத்துவிடுகிறது.
 தமிழகத்திற்கு தென்மேற்குப் பருவமழை மூலம் ஆண்டின் சராசரி மழையளவான 960 மி.மீ-இல், 34 சதவிகிதம் மட்டுமே கிடைக்கிறது. மாறாக, வடகிழக்குப் பருவமழை மூலம் மற்ற எல்லா மாநிலங்களையும் விட, தமிழகம் 49 சதவிகிதம் மழையளவு பெறுகிறது. அத்துடன், காவிரி, பெரியாறு போன்ற ஆறுகள் மூலம் அண்டை மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையும் தமிழக விவசாயத்திற்குப் பயன்பட்டு வருகிறது.
 தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட கால்வாய் பாசனப்பரப்பு ஏறத்தாழ 10 லட்சம் ஹெக்டேர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இக்கால்வாய்ப் பாசனத்தில் அதிகபட்சமாக 8.9 லட்சம் ஹெக்டேர் நிலம் 1970-களில் பதிவாகியுள்ளது.
 1950-1980 வரையான 30 ஆண்டுகால சராசரியளவாக 8.6 லட்சம் ஹெக்டேர் கால்வாய்ப் பாசனப்பரப்பும், 1980-2010 வரையான அடுத்த 30 ஆண்டுகால சராசரி அளவாக 7.9 லட்சம் ஹெக்டேரும் இக்கால்வாய்ப் பாசனத்தால் தமிழகம் பயன் பெற்றுள்ளது. ஆனால், இந்த இரு கால அளவிற்குள் தமிழகத்தில் 70,000 ஹெக்டேர் கால்வாய்ப் பாசனப்பரப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 மேலும், 2010-க்கு பிந்தைய ஏழு ஆண்டுகளில், அதாவது 2010-11 முதல் 2016-17 வரையான காலத்தில் தமிழக கால்வாய்ப் பாசனத்தின் சராசரி பரப்பு 6.6 லட்சம் ஹெக்டேராக மேலும் குறைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள குறைவு அதற்கு முந்தய 30 ஆண்டுகளின் கால்வாய்ப் பாசனப் பரப்போடு ஒப்பிட்டால் 1,30,000 ஹெக்டேராகும்.
 இக்கால்வாய்ப் பாசனத்தில், 74.4 சதவிகித பாசனப்பரப்பு காவிரிப்படுகையின் எட்டு மாவட்டங்களில் (நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, கடலூர்) அடங்கியுள்ளது. இருப்பினும், இந்த எட்டு காவிரிப்பாசன மாவட்டங்களும், காவிரிப்படுகையில் அமைந்திருந்தாலும், அனைத்து மாவட்டங்களும் காவிரிப் பாசனத்தால் முழுமையாகப் பயன் பெறவில்லை என்பதே உண்மையாகும்.
 உதாரணமாக, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரிப் பாசனப்பரப்பு, அம்மாவட்டங்களின் நிகர பாசனப்பரப்பில் 78 சதவிகிதம் முதல் 100 சதவிகிதமாக உள்ளது. ஆனால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற ஐந்து மாவட்டங்களில் காவிரிப் பாசனப்பரப்பு 2010-11 முதல் 2016-17 வரையான ஏழு ஆண்டுகளில் 4.7 சதவிகிதம் (நாமக்கல்) முதல் 39.9 சதவிகிதமாக (திருச்சிராப்பள்ளி) மட்டுமே உள்ளது.
 உதாரணமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் காவிரிப் பாசனப்பரப்பு மொத்த பாசனப்பரப்பில் 39.9 சதவிகிதம். இம்மாவட்டத்தின் அனைத்து பாசன ஆதாரங்களின் (கால்வாய், ஏரி, கிணறு, மற்றவை) ஒட்டுமொத்த பாசனப்பரப்பு நிகர சாகுபடிப்பரப்பில் 53 சதவிகிதம் மட்டுமே.
 அதாவது, இம்மாவட்டத்தில் இன்னும் 47 சதவிகித நிலம் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இதைவிட அதிக அளவு வானம் பார்த்த பூமி மற்ற நான்கு காவிரிப் பாசன மாவட்டங்களிலும் உள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
 காவிரி டெல்டா பாசனத்தால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் தொன்றுதொட்டு பயன் பெறுகின்றன. இம்மூன்று மாவட்டங்களைப் போல மற்ற சில காவிரி பாயும் மாவட்டங்களையும் நீர்ப்பாசனத்தில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணும் மாவட்டங்களாக மாற்றலாம்.
 தமிழகத்தின் காவிரிப் பாசனப்பரப்பை இரு பிரிவுகளாகப் பிரித்து அவற்றை ஆண்டிற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் பெறும் வகையில் மாற்றி அமைத்தால் காவிரிப் பாசனப்பரப்பு மேலும் ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 இதன் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் காவிரிநீர் பெற்று குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்பதோடு அக்கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து, வானம் பார்த்த பூமியாக உள்ள நிலங்களில் குறைந்தபட்சம் புஞ்சை சாகுபடியாவது செய்து விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு உள்ளது.
 காவிரிப் பாசனப்பரப்பில் மொத்தமுள்ள எட்டு மாவட்டங்களில் நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களின் நிகர கால்வாய்ப் பாசனப்பரப்பு ஏறத்தாழ 2 லட்சத்து 69 ஆயிரம் ஹெக்டேர். மீதமுள்ள ஆறு மாவட்டங்களின் நிகர காவிரிப் பாசனப்பரப்பு (தஞ்சாவூரையும் சேர்த்து) 2 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர்.
 எனவே, இந்த ஆறு மாவட்டங்களில், குறிப்பாக திருச்சிராப்பள்ளி, அரியலூர் மாவட்டங்களில் மேலும் ஒரு லட்சம் ஹெக்டேர் அளவு காவிரிப் பாசனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் காவிரி நீர்ப்பாசனப்பரப்பு தற்போது பாசனம் பெற்றுவரும் 4.9 லட்சம் ஹெக்டேரிலிருந்து 5.9 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும்.
 எட்டு மாவட்டங்கள் கொண்ட தற்போதைய காவிரிப்பாசனத்தில் காவிரி கடைமடையின் முக்கிய இரு மாவட்டங்களான நாகப்பட்டினத்துக்கும் திருவாரூருக்கும் ஓர் ஆண்டு காவிரிப் பாசனமும், மற்ற ஆறு மாவட்டங்களுக்கு மறு ஆண்டு காவிரிப் பாசனமும் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதே முறை எல்லா ஆண்டுகளிலும் தொடர வேண்டும்.
 மேலும், இரண்டாவதான ஆறு மாவட்டங்களில், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலம், வானம் பார்த்த கிணற்றுப்பாசன நிலம் இக்காவிரிப் பாசனத்தின்கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். இதற்காக மேட்டூரிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ. நீளமுள்ள காவிரியாற்றின் இருபுறங்களிலும் 20-30 கி.மீ. நீளத்திற்கு காவிரியின் ஒவ்வொரு 40 அல்லது 50 கி.மீ. தூரத்தில் மூன்று கால்வாய்கள் (இருபுறங்களிலுமாக ஆறு கால்வாய்கள்) அமைக்க வேண்டும்.
 இப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றினால் காவிரியின் அபரிமிதமான நீர் முழுமையாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்கள் வளம் பெறும். கிராம விவசாயம் காவிரிப்பாசனத்தால் மேன்மையுறும்.
 தமிழகத்தில், கால்வாய்ப் பாசனப்பரப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால், கர்நாடகத்தின் கால்வாய்ப் பாசனப்பரப்பு 1960-களில் 2.4 லட்சம் ஹெக்டேராக இருந்தது, 2010-களில் ஏறத்தாழ 14 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
 மேலும் காவிரியில் மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடகம் புதிய அணையைக் கட்ட தொடர்ந்து முயல்கிறது. எனவே, தமிழகம் தனக்கு உரித்தான காவிரிநீரை வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 சிறப்பாக சிந்தித்து செயல்பட்டால் தமிழகத்தின் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தைப் போல், இக்காவிரி பாயும் மாவட்டங்களில் முழுமையடையாத பேரளவு மானாவாரி விளைநிலம் நீர்ப்பாசன நிலமாக மாற்றப்பட்டு தமிழக கால்வாய்ப்பாசனம் இக்காவிரி நதியின்மூலம் மேலும் வளம் பெறும் என்பதில் ஐயமில்லை.
 தமிழகத்தில் காவிரிநீர் பெறும் எட்டு மாவட்டங்களை இரு பிரிவுகளாகப் பிரிப்பதால் புதிதாக தண்ணீர் தட்டுப்பாடோ அல்லது தற்போது காவிரியில் உச்சநீதிமன்றத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு நீராண்டின் (ஜூன் முதல் மே வரை) 177.25 டி.எம்.சி. அளவு கிடைக்கும் நீரில் எவ்வித மாற்றமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
 மாறாக, வடகிழக்குப் பருவமழையின்போது அதிக மழை பெய்து, டெல்டா மாவட்டங்களின் நெல் சாகுபடி, மழைநீரால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நட்டமடையும் சூழ்நிலையும் இதனால் முழுமையாகத் தவிர்க்கப்படும். ஓராண்டு விட்டு ஓராண்டிற்கு ஆண்டின் முக்கிய சாகுபடிப் பருவமாகிய குறுவை அல்லது சம்பா சாகுபடிக்கு பாசனதாரர்கள் விரும்பும் வகையில் காவிரிநீர் தட்டுப்பாடின்றி வழங்க முடியும்.
 அதே நேரத்தில் கிணறு வைத்திருக்கும் விவசாயிகள் எப்பொழுதும்போல் காவிரிநீர் இல்லாத காலங்களிலும் தாங்கள் விரும்பிய சாகுபடிப் பயிர்களை பயிரிட எவ்வித தடையும் இல்லை. காவிரி நீர் பாயும் மாவட்டங்கள் அனைத்தும் முடிந்தவரை சிறப்பாக காவிரி நீரைப்பெற வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
 இத்திட்டத்தினை செயல்படுத்த, தற்போது குளித்தலை அருகேயுள்ள மாயனூரில் ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கதவணை அமைக்கப்பட்டுள்ளது போல் மேலும் ஓரிரு முக்கிய இடங்களில் கதவணைகளை அமைக்கலாம். இதன்மூலம், புதிய கால்வாய்களில் சிறப்பாக நீர்ப் பங்கீட்டு முறையை செயல்படுத்த முடியும்.
 சில ஆண்டுகளில், கட்டுப்படுத்த இயலாத அபரிமிதமான காவிரியாற்றுநீர் தமிழகத்திற்கு கிடைக்கும் பொழுது, இக்கதவணைகள் மூலம் சிறந்த பாசன முறையை கையாள்வதோடு, இரண்டாகப் பிரிக்கப்படும் முழுஅளவு பாசனப்பரப்பும் அந்த ஆண்டில் காவிரிநீர் பெற மிகுந்த வாய்ப்புகள் உண்டு.
 காவிரியில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதை முழுமையாக சிறிதும் விரயமாகாமல் வேளாண்மைக்குப் பயன்படுத்திக்கொள்ள ஏற்றதொரு முழுமையான திட்டமாக இது அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழக அரசு நீரியல் வல்லுநர்களைக் கலந்தாலோசித்து இத்திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர்,
 சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT