நடுப்பக்கக் கட்டுரைகள்

மனக்கோட்டம் தீர்க்கும் நூல்

ஊரடங்கு கால இடைவெளிக்குப் பின்னர் பேராசிரியர் ஒருவரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது.

கிருங்கை சேதுபதி

ஊரடங்கு கால இடைவெளிக்குப் பின்னர் பேராசிரியர் ஒருவரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. வழக்கம்போல், என்னிடம் உள்ள குழந்தை இலக்கிய நூல்களை அவர்தம் மகளுக்காகக் கொடுக்க முனைந்தபோது, அவர் சொன்ன செய்தி வியப்போடு கூடிய வேதனையை ஏற்படுத்தியது.

"இணைய வழிக் கற்றல் வகுப்புகள் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து படிப்படியாகப் புத்தகங்களைக் கையிலெடுத்து வாசிக்கிற ஆர்வம் குழந்தைகளிடம் குறைந்து வருகிறது. வாங்கிய புத்தகங்களே வாசிக்கப்படாமல் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன' என்றார் அவர்.

"இதற்கு மாறான அனுபவம் பெரியவர்களிடத்தில் நிகழ்ந்திருக்கிறது. கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட இணைய சாதனங்களின் வழியாக நல்ல நூல்களின் அறிமுகம் பெற்று வாங்குகிறவர்களாகப் பலர் மாறியிருக்கிறார்கள்' என்றேன் நான்.

"உண்மைதான். ஆனால், இளைய உள்ளங்களை, இணைய வழியிலான காட்சி ஊடகங்களின்முன் கொண்டுபோய் நிறுத்திய பிறகு, அச்சுஊடகப் புத்தகங்களின்பால் அவர்களுக்கு இருக்கிற ஆர்வம் குறைந்துதான் இருக்கிறது' என்றார்.

"அறிவியல் சாதனங்களின் வளர்ச்சியில் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. காலப்போக்கில், காகிதப் பயன்பாடு குறைந்து, புத்தகங்கள் யாவும் இத்தகு ஊடகங்களில் உறைந்து போகலாம்; தேவைப்பட்டுத் தேடுவோர் முயற்சியில் அவை மீண்டும் தோன்றலாம். விட்டு விலகுபவர்களுக்கு மேலாகத் தொட்டுத் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் அல்லவா?' என்று நான் சொன்ன கருத்தை அவர் மறுக்கவில்லை.

மாறாக, "குழந்தைகளின் தொலைநோக்குப் பார்வை சற்றே குறைந்து வருவதாகவும் உணர்கிறேன். தொலைநோக்கு என்கிற சொல்லுக்கு, அவர்களின் எதிர்காலம் குறித்த பார்வை என்பதாக மட்டும் பொருள் கொண்டுவிட வேண்டாம். அவர்களின் பார்வைத் திறத்தையும் உள்ளடக்கித்தான் சொல்கிறேன்' என்று கூறிய அவர்தம் குரலில் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை தொக்கி நிற்பதை உணர்ந்தேன்.

கண்ணுக்கு மிக அருகில் காட்டும் கைப்பேசித் திரையும் கணினித் திரையும், சற்றே இடைவெளி கொண்டு வீட்டில் இருக்கும் தொலைக்காட்சித் திரையை மறுதலிக்கச் செய்துவிட்டன. கிட்டப்பார்வைக்கு மட்டுமே அதிக அளவில் கண்கள் பழகத் தொடங்கியிருக்கின்றன. தூரப் பார்வை மெல்ல மெல்லத் தொலைந்துகொண்டிருக்கிறது.

உயிர்ப்புடன் கூடிய வெளியுலகம் ஒன்று இருப்பதை அறிந்தும் அவர்களால், இந்தத் திரையின் பிடிபாட்டில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிற அவஸ்தையையும் புரிந்துகொள்ள முடிகிறது. வலுக்கட்டாயமாக, அவர்களின் கரங்களில் இருந்து கைப்பேசியைப் பறித்துக்கொள்ளும்போது எழும் எதிர்ப்பு உணர்வும், ஏமாற்றம் கலந்த கோபமும் எந்த அளவிற்கு அவர்களின் கண்களில் தெரிகிறதோ, அதில் கொஞ்சமும் குறையாது அதிகப்பயன்பாட்டின் அழற்சியும் தெரிகிறது. அதன் ஆபத்தை நாம் இன்னமும் முற்றாக உணரவில்லையோ என்கிற அக்கறையில்தான் அவர் அப்படிச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

எதையும் இலகுவாக, இணையவெளியில் கண்டுகொள்ள முடியும், கற்றுக் கொள்ள முடியும் என்கிற உறுதிப்பாடு இளந்தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது. அதன் மறுதலைப்பயனாக, மனித ஆளுமைகளிடம் கற்றுக் கொள்ளவேண்டியவற்றிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளுதலும் மிகுந்து வருகிறது. "புத்தகங்களைப் படிப்பதுபோல, மக்களையும் படிக்க வேண்டும் என்கிற மாண்பு மங்கிவருகிறது.

உடன் வாழும் மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் இருந்தும், அவற்றுக்கு மதிப்பளிக்கிற மாண்புகளில் இருந்தும் படிப்படியாக விலகிச் செல்கிற எந்திரத்தன்மை இவர்களின் உள்ளங்களில் குடியேறி வருகிறது. ஒரு கருத்துருவாக்கத்திற்குப் பின்னர் மனத்திரையில் துலக்கமாகும் மனித முகங்களை எந்த இணையவெளிச் சாதனத்தால் சித்திரப்படுத்த இயலும்?

இணைய வெளியில் இடம்பெறும் ஒரு கதையில் வருகிற தாத்தாவும் பாட்டியும் அனுபவவெளியில் இல்லாதபோது, அதன் நம்பகத்தன்மை எந்த அளவிற்கு இருக்கும்? அன்றாட அனுபவங்களில் துலக்கமாகும் ஒரு காட்சி, சித்திரிக்கப்பட்ட காட்சியாக ஒலி - ஒளி பிம்பங்களோடு உலா வருவதைக் காணுகிறபோது, அது நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்துவிடுகிறது.

அதற்கு மாறாக, சித்திரிக்கப்பட்ட ஒரு காட்சியைக் கண்டு, மனக்கண்ணில் நிறுத்தி, அதுதான் நடைமுறையிலும் இருக்கிறது என்று நம்புவது எந்த அளவிற்குப் பாதுகாப்பானது?

அதிலும் குறிப்பாக, திரைத்துறைசார் சித்திரங்கள் யாவும் யதார்த்தப் பாங்கோடு தொடர்புடையதாக இருக்கிறதா? அந்தச் சித்திரச் சலனங்களுக்கு ஆட்பட்டு, இன்னமும் மீளமுடியாத நிலையில் பெரியவர்களே இருக்கும்போது, இளைய தலைமுறையினர் என்ன ஆவர்?

மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள், வகைப்படுத்த இயலாத பதிவுகள், இடையிடையே முளைக்கும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் யாவும் சூழ வலம்வரும் ஊடகச் சித்திரங்களுக்கு மத்தியில், கோட்டுச் சித்திரங்களாகவும், எழுத்தோவியங்களாகவும் அச்சில் காணத்தக்க பல அற்புத நூல்களின் வாசிப்பனுபவம் தரும் மனவுறுதியை இளந்தலைமுறையினர் பெறவேண்டுமே என்கிற கவலை எங்களைத் தொற்றிக் கொண்டது.

நன்னூல் சொல்லும், "ஆசாற் சார்ந்து அமைவரக் கேட்கிற' அனுபவத்தை, என்னதான் பல்வேறு புலப்பாட்டு முறைகளுடன் இணையப் பயன்பாடு சொல்லிக் கொடுத்தாலும் பெறமுடிகிறதா?

கற்பனைக் கண்களைத் திறக்க ஏதுவாய்ச் சொற்களை விரித்து, இடையில் சின்னஞ்சிறு மெளனவரிகளை மெய்ப்பாட்டாக நிகழ்த்திக் காட்டும் ஆசிரியப் பாங்கை நேருறத் தரிசிக்கும்போது எழுகிற உணர்வுகளை, இந்தக் காணொளி விளக்கக் காட்சிகளால் காட்டவே முடியாது.

நாம் தேடுகிற ஒரு சொல் அல்லது ஒரு பாடல் வரி, எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மிக எளிதாகத் தொகுத்தும் பகுத்தும் கொடுக்கிற வல்லமையை இணைய சாதனங்கள் கொண்டிருப்பது மறுக்க இயலாத உண்மை. அதே வேளையில், அவை உண்மைதானா என்று சோதித்தறியாமல் ஏற்றுக்கொள்கிறபோது எழுகிற பிழைபாடுகள் ஆபத்தானவை.

விரல்கள் நோக, ஒவ்வொரு எழுத்தாக எடுத்துக் கோத்து, அச்சிட்ட பக்கங்களைப் பலமுறை மெய்ப்புப் பார்த்து, திருத்தம் போட்டு வெளியிடப் பெற்றவை பழைய நூல்கள். அவற்றை மீளவும் கணினி அச்சாக்கம் செய்கிறபோது மலிகிற பிழைகளையே திருத்த இயலவில்லை. 

அவற்றைக் கண்டு, பயன் கொண்டு பதிவிடுவதோடு, நினைவுப்புலத்தில் பதிவான ஒரு தகவலைப் பேச்சுத் தளத்தில் விரித்துரைப்பதை அப்படியே நம்பி, எழுத்தில் பதிவிடும் இணையப் பக்கங்களில் எந்த அளவிற்கு மெய்ம்மைத்தன்மை இருக்க முடியும்?

அது மட்டுமா? ஒரு காப்பியத்தில் இடம்பெறும் புகழ் பெற்ற ஒற்றைத் தொடர், எந்தப் பின்புலத்தில் உருவானது என்பதை, அந்தக் காப்பியத்தின் மூலபாடத்தை முழுதாக உள்வாங்கிக்கொண்டு பயில்கிறபோதுதான் புரிந்துகொள்ள முடியும். அதைவிடுத்து, அந்தப் பாடலைக் கொண்டு மட்டும் பார்ப்பதால் புரிந்துகொள்ள முடியாது.

கதைப்போக்கில் எழும் தர்க்க நியாயங்களுக்குட்பட்டு வளரும் சிந்தனையின் விளைச்சல்கள்தாம், பல்வேறு முத்திரைத் தொடர்கள். அவற்றின் மூலம் உணராமல் முடிவை மட்டும் பெற்றுக்கொள்வதால் ஆழக் கற்றல் சாத்தியம் ஆகாது போகும்.

"கைப்பேசிக்கும் கணினிக்கும் அப்பால், உயிரினங்கள் மிகுந்த உலகம் இருக்கிறது; அவற்றோடு உறவாடவும் உணர்வால் ஒன்றி உயிர்ப்புறவும் உதவுகிற மொழி கொண்டு எழுந்த புத்தகங்கள் இருக்கின்றன' என்பதை மீளவும் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிற சூழல் வேண்டும்.

எளிதாகக் கையாளும் சாதனங்களைத் துணைகொள்ளும் வாய்ப்பு இந்தத் தலைமுறைக்கு வாய்த்திருப்பது வரம்தான். ஆனால், இயற்கையின் நுட்பமும் பாங்கும் அவ்வாறு இல்லையே.

பத்து நிமிடத்தில் விதை நட்டு மரமாக்கிப் பழம் பறித்துண்ணும் ஊடகச் சித்திரம் வேறு; வித்திட்டுப் பல ஆண்டுகள் கழித்து கனிபறித்து உண்ணுகிற யதார்த்தம் வேறு என்பதை இவர்கள் உணர்ந்தே ஆக வேண்டும். மெய்ப்பட அனுபவிக்கும் மேன்மை மிக்க ரசனை இல்லாமல் இப்பொய்ச்சித்திரங்களையே மெய்யென்று நம்பிவிடாமல் இருக்கவும் இவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மேலும், எதையும் இலேசாக எடுத்துக் கொள்கிற மனப்போக்கு, காலப்போக்கில்  மெல்ல மெல்ல சோம்பலை வளர்த்து, சுயசிந்தனை அற்றவர்களாக அவர்களை ஆக்கிவிடும் என்கிற அக்கறையால்தான் இவற்றையெல்லாம் சிந்திக்க நேர்கிறது என்பதையும் நாங்கள் உணர்ந்துகொண்டோம்.

திரைகளை விலக்கித் தெரிந்துகொள்ள வேண்டிய உலகம் ஒன்று இருப்பதை இவர்கள் உணர்ந்துகொள்வது இன்றியமையாதது. அதற்கு, "மனக்கோட்டம் தீர்க்கும் மாண்புடைய நூல்களை' மீளவும் வாசிக்கிற கலையை இவர்கள் வசப்படுத்த வேண்டும். 

அதற்கு நிகராக, உயிருள்ள புத்தகங்களாக உலாவரும் மனிதர்களை வாசிக்கவும், தம்மைப்போல் பிற உயிர்களை நேசிக்கவும் கூடியவர்களாக, இவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டை, அந்தச் சந்திப்பு எங்களுக்குத் தந்தது.

கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT