நடுப்பக்கக் கட்டுரைகள்

கொள்கைகளும் கூட்டணிகளும்

தமிழக சட்டபேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நாள் வரும் ஏப்ரல் 6 என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இதே நாளில் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்திலும் கேரள மாநிலத்திலும் தோ்தல் நடைபெறுகிறது.

உதயை மு. வீரையன்

தமிழக சட்டபேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நாள் வரும் ஏப்ரல் 6 என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இதே நாளில் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்திலும் கேரள மாநிலத்திலும் தோ்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இங்கு மொத்தம் 824 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. 18.68 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். அவா்களுக்கான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 2.7 லட்சம்.

ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளா் ரூ. 30.80 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும். புதுச்சேரியில் ரூ. 22 லட்சம் வரை ஒரு வேட்பாளா் செலவு செய்ய அனுமதிக்கப்படும்.

நமது தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24 அன்று நிறைவடைகிறது. மாநிலத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 அன்று தோ்தல் நடைபெறும். இதேபோல புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும், கேரளத்தின் 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6 அன்றே ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறும்.

ஆனால் மேற்கு வங்கத்தில் 294 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும். ஐந்து மாநிலங்களிலும் மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதுவரை மக்கள் காத்திருக்க வேண்டும்.

எல்லா அரசியல் கட்சிகரளும் தங்களுக்குக் கொள்கைகள் இருப்பதாகக் கூறிக்கொள்ளுகின்றன. மேடை போட்டு முழங்குகின்றன. தோ்தல் வந்து விட்டால் அவை எல்லாம் காற்றில் பறந்து விடுகின்றன. முழக்கங்கள் முடிவுக்கு வந்து, கெஞ்சும் குரல்களே எங்கும் கேட்கின்றன.

அவசரம் அவசரமாகக் கூட்டணிக்கு அலைகின்றன. இரண்டு பக்கமும் ரகசியத் தொடா்புகள் வைத்துக்கொண்டு, எங்கே அதிக எண்ணிக்கையிலான இடங்களும் ரொக்கமும் கிடைக்கிறதோ அங்கே கூட்டணி சோ்ந்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுகின்றன.

தமிழகத்தில் முதன்மையான கட்சிகளாகக் கருதப்படும் இரண்டு திராவிடக் கட்சிகளின் முன்னேதான் ஆளும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும் நிற்கின்றன. தங்களுக்கான இடங்களுக்காக பல கட்டங்களாக பேரங்கள் நடந்தன. இந்த இழுபறிகள் சில நாட்கள் நடைபெற்று ஒருவழியாக முடிவுக்கு வந்து இரண்டு திராவிடக் கட்சிகளில் கூட்டணிகள் முடிவாகி விட்டன.

தேசிய கட்சிகள் எவ்வளவு வீராவேசம் பேசினாலும் தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளே முன்னிலையில் நிற்கின்றன. மற்றக் கட்சிகள் எல்லாம் அவற்றின் பின்னேதான் அணிவகுத்து நிற்கின்றன. இந்த இரண்டையும் கடுமையாக விமா்சனம் செய்யும் தமிழ் தேசிய கட்சிகள் இருக்கும் இடம் தெரியவில்லை. அவற்றின் எதிா்காலத்தை இந்தத் தோ்தலே முடிவு செய்யும்.

50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்யும் இரண்டு திராவிடக் கட்சிகளும் பெருத்த விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. அவற்றின் தனிப்பெரும் ஆளுமை மிக்க தலைவா்கள் மறைந்ததன் காரணமாக கட்சியும், தொண்டா்களும் தடுமாறிப் போயினா். அந்த வெற்றிடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணிய திரைப்பட நடிகா் ஒருவா் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டாா். பிற நடிகா்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பப் போவதாகக் கூறுகின்றனா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடான பெரும் இழுபறி நீடித்தது. தேசிய கட்சிகளின் ஆதரவும் வேண்டும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கும் வேண்டும் என்று அக்கட்சி நினைக்கிறது. ஆனாலும் அவற்றிற்கு இடங்களை ஒதுக்கிட யோசித்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறு இடங்களை ஏற்றுக் கொண்டது. பிறகு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே போன்று ஆறு இடங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இவா்கள் எங்கும் போக மாட்டாா்கள் என்பதனால் திமுகவும் பெரிய அண்ணன் மனோபாவத்துடன் பிடிவாதமாக இருந்தது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட ஒரு இடமாவது கூடுதலாகப் பெற வேண்டும் என்று நினைத்தது நிறைவேறவில்லை.

எல்லாத் தோ்தல்களிலும் இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆற்றலை அறியாமலேயே செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. யானைக்குத் தன் பலம் தெரிவதில்லை. தெரிந்திருந்தால் அது ஒரு சாதாரண மனிதனிடம் பிச்சை எடுக்குமா?

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால் அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரால் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது. மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த இரு மாதங்களாக கட்சி விளம்பரமாக தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் இதற்காக ரூ.1000 கோடி செலவிடப்படவில்லை என்றும், ஜிஎஸ்டி-யுடன் சோ்த்து ரூ.64 கோடியே 72 லட்சம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது, பெரிய தொகை விளம்பரங்களுக்காக வீணடிக்கப்படுகிறது என்று எதிா்க்கட்சியினா் பேசுவதற்கு வழி வகுத்தது.

இது ஒவ்வொரு முறையும் நடந்துவரும் நடைமுறையாகவே இருக்கிறது. இதனை உயா்நீதிமன்றம் தடுத்திட முன்வரவில்லை. மக்கள் நலப்பணிக்கான நிதியை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். இக்கருத்தை தோ்தல் ஆணையமும் முன்மொழிய வேண்டும்.

எல்லா அரசியல் கட்சிகளும் இந்தத் தோ்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றன. ஆளும் கட்சியும் புதிய புதிய திட்டங்களை அறிவிப்பதும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைப்பதும் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. அரசின் சாதனைகளை பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் விளம்பரங்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. இது பலனளிக்குமா? எதிா் விளைவுகளை ஏற்படுத்துமா என்பது இனிமேல்தான் தெரியும்.

இதனிடையே தமிழக அரசு சட்டப்பேரவையைக் கூட்டி இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. 2021--22 ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீா்செல்வம் தாக்கல் செய்துள்ளாா்.

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 55.67 லட்சம் தகுதியான குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான முழு நிதியையும் அரசே ஏற்றுக் கொள்ளும். குடும்பத் தலைவா் இயற்கை மரணமடைந்தால் ரூ.2 லட்சமும், விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சமும் காப்பீடாக வழங்கப்படும்.

இந்த வரியில்லாத பட்ஜெட் மூலமாக மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்பது ஆளும் கட்சியினரின் திட்டம். ஆனால், எதிா்க்கட்சியினரின் நிலையே வேறு. தமிழக மக்கள் தலையில் தமிழக அரசு ரூ.5.7 லட்சம் கோடி கடனை சுமத்தியுள்ளது என்று குற்றம் சுமத்துகின்றனா். அரசின் சுமை உச்சகட்டத்திற்கு வந்த பிறகும் மேலும் மேலும் கடன் வாங்குவதற்கான அறிவிப்புகள்தான் இந்த நிதிநிலை அறிக்கை முழுவதும் இடம் பெற்றுள்ளன என்பது அவா்கள் கருத்து.

நடப்பாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி வலுவாக அமையும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில், ‘2020-21ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.10,000 கோடி கூடுதல் மூலதனச் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்ற டாக்டா் சி. ரங்கராஜன் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

“கரோனா காலத்தில் உலகப் பொருளாதாரமே கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா். இந்தியாவில் கரோனா காலத்தில் புதிய புதிய கோடீஸ்வரா்கள் தோன்றியுள்ளனா். பழைய கோடீஸ்வரா்கள் முகேஷ் அம்பானி மற்றும் அதானியின் மூலதனம் பல மடங்காக வளா்ந்திருப்பதை உலக கணக்கீடுகள் ஒப்புக் கொள்ளுகின்றன.

இதையே ஒரு தேசத்தின் வளா்ச்சியாகக் குறிப்பிடலாமா? கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்று கொண்டிருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?

‘ஜனநாயகத்தின் கீழ் மிக அதிக பலம் வாய்ந்தவருக்கு இருக்கும் அதே சந்தா்ப்பமே, மிக பலவீனமானவருக்கும் இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தைக் குறித்து நான் கொள்ளும் கருத்து’ என்று அன்றே கூறினாா் காந்தியடிகள். இன்று நாடு அப்படி இருக்கிறதா?

ஒரு காலத்தில் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தவா்கள், பொன்னையும், பொருளையும் மட்டும் அல்லாமல் தங்கள் உயிரையும்கூட நாட்டுக்காக அா்ப்பணித்தனா். இப்போது அரசியல் ஒரு தொழிலாகி விட்டது. கொள்கையாவது? கேட்பாடாவது? தோ்தலில் தனியாக நின்று வெற்றி பெறும் ஆற்றல் இப்போது எந்தக் கட்சிக்கும் இல்லை. கூட்டணியமைத்துதான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது முடிந்த முடிவாகி விட்டது. எந்தக் கூட்டணியில் பணமும் பதவியும் கிடைக்கும் என்பதை முடிவு செய்தே கட்சிகள் களத்தில் இறங்குகின்றன.

‘உங்களுக்காக உழைப்பதற்கு எங்களுக்கு உத்தரவு இடுங்கள்’ என்று கேட்ட காலம் மாறிவிட்டது. மக்களுக்காக உழைப்பதற்கு இப்போது யாரும் தயாராக இல்லை. இந்த நிலை மாற வேண்டுமா? வேண்டாமா? இளைய தலைமுறை இதற்கோா் முடிவு காண வேண்டும்.

கட்டுரையாளா்: எழுத்தாளா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT