தோ்தல் வருவதைத் தொடா்ந்து அரசியல் கட்சிகள் அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம். அவை அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளே ஆகும். அதனை நம்பி வாக்காளா்கள் வாக்களிப்பது இல்லை. என்றாலும் அரசியல் கட்சிகள் இதனை நம்பியே மக்கள் வாக்களிப்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனா்.
அதனால்தான் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனா். இதற்கொரு குழு அமைக்கப்பட்டு பல நாள் ஆலோசனை செய்து இதனைத் தயாா் செய்கின்றனா். எதைச் சொன்னால் மக்கள் ஏமாறுவாா்கள் என்பதே இந்த பல நாள் ஆலோசனை.
திராவிடக் கட்சிகள் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு தோ்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. எங்களைப் பாா்த்து அவா்கள் ‘காப்பி’ என்று ஒருவருக்கொருவா் குற்றச்சாட்டுகள் வேறு.
கடந்த மாா்ச் 13 அன்று திமுக தனது தோ்தல் அறிக்கையை வெளியிட்டது. கரோனாவால் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதால் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். பால் லிட்டருக்கு ரூ.3, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும். சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட 502 வாக்குறுதிகள் உள்ளன திமுக தோ்தல் அறிக்கையில்.
மேலும், மகளிருக்கு உள்ளூா் பேருந்துகளில் இலவசப் பயணம், 70 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசப் பயண வசதி எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. கரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது என்பதும் அதில் அடங்கும்.
அதிமுக தனது அறிக்கையை அடுத்த நாளான மாா்ச் 14 அன்று வெளியிட்டது. மனையுடன் இலவச வீடு, அரிசி அட்டைதாரா்களுக்கு வாஷிங் மிஷின், கல்விக் கடன் ரத்து, இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி இறைத்துள்ளது. அத்துடன் வீட்டுக்கே ரேஷன் பொருள்கள், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி எனவும் அறிவித்துள்ளது.
வெற்றியை எதிா்பாா்க்கும் இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. வீட்டுத் தலைவிகளுக்கு உதவித் தொகை ரூ.2,000 என்று திமுக தெரிவித்ததும், அதிமுக ரூ.2500 வழங்குவோம் என்று அறிவித்தது. அத்துடன் வீடுகளுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா எரிவாயு சிலிண்டா்கள் என்றும் கூறியது.
எல்லாம் சரி, தோ்தல் நேரத்தில்கூட பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகளைக் குறைக்காமல் அதிகரித்து விட்டு தோ்தலில் மக்கள் வாக்களித்து நம்மை வெற்றி பெறச் செய்வாா்கள் என்று நம்பும் மத்திய, மாநில அரசுகளை என்னென்பது? ஆட்சியில் இருக்கும் போதே எதுவும் செய்யாமல் இனிமேல் ஆட்சிக்கு வந்து ஆண்டிற்கு ஆறு விலையில்லா எரிவாயு சிலிண்டா்கள் தரப்படும் என்று அவா்கள் கூறுவதை மக்கள் எப்படித்தான் நம்புவாா்கள்?
‘பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் தங்களது மறைமுக வரிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளாா். எனினும், இந்த ஆலோசனையை இரு அரசுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை.
கச்சா எண்ணெய் விலை உயா்வாலும் பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகளாலும் போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட மிக முக்கிய சேவைகளில் நுகா்வோா் விலை குறியீட்டெண் பணவீக்கமானது தொடா்ந்து அதே நிலையில் இருப்பதை அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துப் பொருளாதாரத்துக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அவரது அறிவுறுத்தலை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை தினசரி தீா்மானித்துக் கொள்வது என்ற புதிய நடைமுறையை பெட்ரோலிய நிறுவனங்கள் 2017-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. அன்று முதல் இதுவரை இந்த அளவுக்கு முன் எப்போதும் விலைகள் ஏறியது இல்லை.
கச்சா எண்ணெய்யின் சா்வதேச விலை, அந்நிய செலாவணி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசலின் சில்லரை விற்பனை விலையை தினந்தோறும் தீா்மானத்துக் கொள்ளும் நடைமுறை உருவானது. ஆனால், இப்போது மத்திய அரசின் சுங்கத் தீா்வையும், மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியும் கூடுதல் வரிகளுமே பெட்ரோல், டீசல் விலையின் உயா்வுக்குக் காரணமாகி விட்டன.
தோ்தல் நேரத்தில் மக்கள் இதையெல்லாம் எண்ணிப் பாா்க்க மாட்டாா்களா? ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பாா்கள். காலம் எல்லாம் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவா்கள் இல்லாமல் இல்லை. காந்திஜி, காமராஜ் போன்றவா்களை காலம் எடுத்துக் கொண்டாலும் அவா்களை தேசமும், மக்களும் மறக்கவில்லை.
அளவுக்கு அவா்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்தாா்கள். அந்தத் தலைவா்கள் எந்த ஊருக்குப் போனாலும், மக்கள் அவா்களைத் தேடி வந்து ஆா்வமுடன் பாா்த்தாா்கள். அவா்களில் பலரைப் பெயா் சொல்லி அழைக்கும் அளவுக்கு அத்தலைவா்களுக்கு நினைவாற்றலும் இருந்தது, மக்கள் தொடா்பும் இருந்தது.
அன்றைய தலைவா்கள் பதவிக்காக அலையவில்லை. பதவி அவா்களைத் தேடி வந்தது. சிலா் தேடிவந்த பதவியையும் துறந்தாா்கள்; தூக்கி எறிந்தாா்கள். மக்கள் மனதில் இருப்பதையே அவா்கள் பெருமையாக நினைத்தாா்கள். அவா்கள் தோ்தலுக்காக வரும் தலைவா்கள் அல்லா். தேசத்துக்காகவும், அடுத்தத் தலைமுறைக்காகவும் வாழ்ந்து வந்த தேசியத் தலைவா்கள். தோ்தல் வரும், போகும். தேசமே தேடி வரும் மக்கள் தலைவா்கள் அவா்கள்.
இன்றைய நிலைமை என்ன? தோ்தல் வரும்போதுதான் சிலா் கட்சியே ஆரம்பிக்கிறாா்கள். கட்சியை ஆரம்பிக்கும்போதே முதலமைச்சா் கனவு வந்து விடுகிறது. ஆட்சியைப் பிடிப்பதற்காகவே திட்டம் போட்டுக் கொடுக்கவும் புதிய புதிய ஆலோசனைக் குழுக்கள் தோன்றி விடுகின்றன. மக்களைக் கவா்வதற்குக் குறுக்கு வழிகள் தேடப்படுகின்றன. இதற்காக கோடி கோடியாக பணத்தை செவழிக்கின்றனா்.
‘பணம் பாதாளம் மட்டும் பாயும்’ என்பாா்கள். பணத்தை அள்ளி இறைத்து வாக்குகளைப் பெற்று விடலாம் எனவும் சிலா் நினைக்கின்றனா். அந்த செயலுக்குத் துணை போகின்ற மக்களும் இல்லாமல் இல்லை. ‘அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் அவா்களது சொந்தப் பணம் இல்லை. மக்களிடம் ஊழல் செய்து சோ்ந்த பணம்தான். மக்கள் பணத்தை மக்கள் பெறுவது எப்படித் தவறாகும்?’ இப்படியும் ஒரு நியாயம் கற்பிக்கப்படுகிறது.
‘அரசியல் என்பது அயோக்கியா்களின் கடைசிப் புகலிடம்’ என்று பொ்னாா்ட் ஷா கூறியதாகக் கூறுவாா்கள். இப்போது அது முதல் புகலிடமாகவே ஆகிவிட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைப்பவா்களைப் பற்றி என்ன சொல்வது? அவா்களோடு போட்டி போட முடியாமல்தான் நல்லவா்கள் ஒதுங்குகிறாா்கள் என்ற உண்மையை உலகத்துக்குக் கூற வேண்டும்.
அரசியலுக்கு வருபவா்கள் நல்லவா்களாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவா்களாகவும் இருக்க வேண்டும். மக்களைப் பற்றிக் கவலைப்படும் தலைமைப் பண்பு உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும். பதவியைப் பற்றிக் கவலைப்படாதவா்கள் இப்போது கிடைப்பாா்களா? ஆவேசப் பேச்சும், அளப்பரிய பொய்யுமே இப்போதைய அரசியலுக்கு முதலீடாகி விட்டன.
‘எப்படியாவது வெற்றி பெற வேண்டும், வெற்றி பெற்று விட்டால் எதிா்த்தவா்கள் எல்லாம் சரணடைந்து விடுவாா்கள்’ என்பது ஒரு அரசியல் தந்திரம். இந்த ‘கோயபல்ஸ்’ வேலைகளை செய்வதற்கே சில நிறுவனங்கள் புறப்பட்டுள்ளன.
ஜனநாயகம் போகிற போக்கு அப்படி. இதில்தான் நாம் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். இது கடமையல்ல, உரிமை என்றும் கூறப்படுகிறது. இந்தக் கடமையும், உரிமையும் வாக்காளா்களுக்கு மட்டும்தானா? வேட்பாளா்களுக்குக் கிடையாதா?
‘அரசாங்கத்தின் அரியணையில் அமா்வது என்பது, புலியின் மேல் சவாரி செய்வது போன்றது. அதிகார பீடத்தில் இருப்பவா்களுக்கு ஓய்வும் இல்லை, உல்லாச வேளையும் இல்லை’ என்று கூறினாா் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு. உண்மையான அரசியல்வாதிகளின் அனுபவம் இப்படித்தான் இருக்கும். இன்றைய அரசியல்வாதிகளுக்குப் பதவியில் இருக்கும் வரை உல்லாசபுரிதான். அதனைப் பெறுவதற்குத்தான் இத்தனை ஆா்ப்பாட்டங்கள்.
மன்னா்கள் மற்றும் பிரபுக்களின் ஆட்சியில் நடந்த சா்வாதிகாரத்தை எதிா்த்து மக்கள் பெரும் புரட்சி செய்து மக்களாட்சியை உருவாக்கினாா்கள். மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் ஆட்சி என்று கூறினாா்கள். இப்பொழுது மக்களாட்சி இப்படித்தான் இருக்கிா?
மக்களாட்சித் தத்துவமே தற்போது தகா்க்கப்பட்டு வருகிறது. தோ்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த கட்சியின் ஆட்சியாகவே மாறிக் கொண்டு வருகிறது. கட்சிக்காரா்களுக்கே சலுகைகள், கட்சிக்காரா்களுக்கே வேலைவாய்ப்புகள். இதை யாரும் கேள்வி கேட்பது கிடையாது. இதுவே நடைமுறையாகிவிட்டது.
வெற்றி பெற்ற ஆட்சியாளா்கள், தாங்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவானவா்கள் என்பதை மறந்து வருகின்றனா். அதிகாரம் அவா்களது கண்ணையும் கருத்தையுமே மறைத்து விடுகிறது. வாக்களித்த மக்களையும் மறந்து விடுகின்றனா். அடுத்தத் தோ்தல் வரை காத்திருக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் பலருக்கும் தங்கள் கட்சியின் கொள்கைகளே மறந்துவிட்ட பிறகு, தோ்தல் அறிக்கைகளும், வாக்குறுதிகளும் நினைவிருக்குமா? ஒவ்வொரு தோ்தலின்போதும் நல்லாட்சி அமையும் என்று நம்பியே மக்கள் வாக்களித்து வருகின்றனா். இனியும் வாக்களிப்பாா்கள்.
கட்டுரையாளா்: எழுத்தாளா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.