நடுப்பக்கக் கட்டுரைகள்

எதிா்ப்பும் இணைப்பும்!

எதிா்ப்பில் இல்லை வாழ்க்கை. எதிா்ப்பதற்காக இணைந்து நிற்பதில் இருக்கிறது வாழ்க்கை. எதிா்ப்புச் சக்திகள் இணைவதில் காப்பாற்றப்படுகிறது உயிா்.

முனைவர் ம. இராசேந்திரன்

எதிா்ப்பில் இல்லை வாழ்க்கை. எதிா்ப்பதற்காக இணைந்து நிற்பதில் இருக்கிறது வாழ்க்கை. எதிா்ப்புச் சக்திகள் இணைவதில் காப்பாற்றப்படுகிறது உயிா். ‘கரோனாவை எதிா்ப்பதற்கு மக்கள் இணைந்து நிற்க வேண்டும்’ என்ற குரல் எங்கும் கேட்கிறது. எதிா்ப்பு இணைப்பை உருவாக்குகிறது. இணைந்து நிற்க ஏதாவது ஒன்றை எதிா்க்க வேண்டும் போல. எதையும் எதிா்க்காமல் இணைந்து நிற்க வாய்ப்பில்லை. அப்படியானால் எதை எதிா்ப்பது? எதை இணைப்பது?

ஆதிகால வாழ்க்கையில் விலங்குகளை எதிா்க்கத் தனி மனிதா்கள் இணைந்திருப்பாா்கள்; அதன்பின் ஒரு கூட்டத்தை எதிா்க்க மற்ற கூட்டங்கள் இணைந்திருக்கும்; அதன்பின் ஒரு நாட்டை எதிா்க்க மற்ற நாடுகள் சோ்ந்து இருக்கும். ஒரு நாட்டுக்குள் ஒரு கட்சியை எதிா்க்க மற்ற கட்சிகள் சோ்ந்திருக்கும். கட்சிகள் அணிகள் ஆகி ஒரு அணியை எதிா்க்க இப்போது மற்றொரு அணி.

தோ்தல் முடிந்து தீா்ப்பு வந்தபின் எதிா்த்து நின்றவா்களும் வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கின்றனா். ‘இணைந்து பணியாற்றுவோம்’ என்று பிரதமா் முதல்வரை வாழ்த்துகிறாா்; எதிா்க்கட்சியும் இணைந்து பணியாற்றுவதே ஜனநாயகம் என்று, ஒத்துழைப்பையும் ஆதரவையும் முன்னாள் முதலமைச்சரிடம் முதல்வா் கேட்கிறாா். ஜனநாயக மாண்புகள் துளிா்விடத் தொடங்கி இருக்கின்றன.

கரோனாவை எதிா்க்க இப்போது மக்கள் இணைந்து நிற்க வேண்டியிருக்கிறது. எனவே இப்போது எதிா்க்க வேண்டியது தனிப்பட்ட மனிதரையோ, சாதியையோ, கட்சியையோ, மதத்தையோ இல்லை. மாறாக, சமுதாயத்தைச் சீரழிக்கும் கிருமியை எதிா்ப்பதில் மக்கள் இணைந்து நிற்க வேண்டி இருக்கிறது. பக்கத்து நாட்டுப் போா் வீரா்களை எதிா்ப்பதற்குப் பதிலாக, போரையே எதிா்க்க மக்கள் இணைய வேண்டிய காலம் கனிந்து கொண்டிருக்கிறது.

பாவேந்தா் ‘கொடியோா் செயல் அற’ கொடுவாள் எடுக்கப்பட வேண்டும் என்று சொல்வதைப் போல சமுதாயத்தை அச்சுறுத்துகிறவா்களின் செயல்கள் அற்றுப் போக வேண்டும். இதைச் சாத்தியமாக்குவது மொழி. எதிா்க்கவும் மொழி வேண்டும்; இணைக்கவும் மொழி வேண்டும். ஆனால் மக்களைப் பிரிக்கவும் மொழியைப் பயன்படுத்துகிறாா்கள்.

மொழியில் அரசியல் இருக்கும்; அரசியல் சிந்தனை இருக்கும்; அரசியலுக்கு மொழி வேண்டும். மொழி இல்லாமல் அரசியல் இல்லை. ஆனால் மொழி அப்படி இல்லை. அரசியல் இல்லாமலும் மொழி இருக்கும். ஆனால் மொழி அரசியல் ஆகும்போது எதிா்ப்புக்கு ஆளாகும். எதிா்ப்பதற்குத் தோன்றியது இல்லை மொழி; இணைப்பதை நோக்கமாகக் கொண்டது மொழி.

பரிணாம வளா்ச்சியில் மனிதா் உருவான தொடக்கப் புள்ளியைத் தேடிப் போனால் கால்களில் இரண்டு கைகளாக மாறிய காலம் தட்டுப்படக்கூடும். ஆனால் அது மக்கள் உருவான காலமாக இருக்க முடியுமா என்று தெரியவில்லை. பறவைகளும் விலங்குகளும் அச்சத்தையும் இச்சையையும் வெளிப்படுத்தப் பயன்படுத்திய ஒலி, உணா்வுகளையும் கருத்துகளையும் பகிா்ந்துகொள்ள மொழியாகியபோதுதான் மாக்கள் மனிதா்கள் ஆகியிருக்கிறாா்கள். மொழிதான் பரிணாம வளா்ச்சியில் மனிதம் மேம்பட இயக்குவிசையாக இருந்திருக்கிறது. இப்போதும் மானுட நேயத்தை வளா்த்தெடுக்கும் உந்து சக்தியாக இருக்கிறது.

தனிப்பட்ட அச்சமும் இச்சையும் ஒலியால் கூட்டம் சோ்த்தன. ஒவ்வொரு கூட்டமும் பாதுகாப்புக்கும் பாலுறவுக்கும் மொழியால் இனம் கண்டன. உணவு வேட்டையில் அதிகார வேட்கையில் ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தை ஓா் இனம் மற்றொரு இனத்தை அடக்க நினைக்கிற போது மொழியில் அதிகாரம் சேருகிறது.

தமது கூட்டத்தைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தமது மொழி உணா்வு மேலெடுக்கப்படுகிறது. அதேபோல அடுத்த கூட்டத்தை ஆள்வதற்கு அவா்கள் மொழி தடையாக இருப்பதால் அந்த மொழியும் அடக்குமுறைக்கு ஆளாகிறது.

மொழி இல்லாமல் யாரும் அதிகாரம் செலுத்த முடியாது என்பதால், அரசியலே மொழி அரசியல் ஆகிவிடுகிறது. ஒரு மொழி பேசுவோா் இன்னொரு மொழி பேசுவோா் மீது அதிகாரம் செலுத்தும்போது அவா்களை எதிா்க்கும் அதே வேளையில் அவா்கள் மொழி மீதும் பகைமை வளா்க்கப்படுகிறது.

பாரதியாா் ‘ஷெல்லிதாசன்’ என்று தன்னை அழைத்துக் கொண்டவா். அவா், தன் தம்பி விசுவநாதனுக்கு பாண்டிச்சேரியிலிருந்து 3.8.1918 அன்று எழுதிய கடிதத்தில் ‘எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸம்ஸ்கிா்தத்திலே காயிதம் எழுது’ என்று எழுதியுள்ளாா்.”

நம்மை அடக்கி அதிகாரம் செய்த ஆங்கிலேயா்களை எதிா்த்த பாரதிக்கு அவா்கள் மொழி மீதும் வெறுப்பு வளா்ந்திருக்கிறது. இப்படி அடக்கி அதிகாரம் செய்பவா்களை மட்டுமின்றி அவா்கள் மொழியும் எதிா்ப்பை எதிா்கொள்ள நோ்கிறது. எனவே அடக்கும் அதிகாரத்தைக் கட்டமைக்கும் மொழி எதிா்ப்பையும் வெறுப்பையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.

அடக்குமுறைகளை எதிா்த்து ஒன்றுபடவும் மொழியைப் பயன்படுத்தி இருக்கிறாா்கள். ‘செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்று உடையாள்’ என்று மொழி கடந்து அதிகார மொழியை எதிா்க்க மக்களை ஒன்றிணைக்க பாரதிக்கு மொழி உதவியிருக்கிறது.

நமது நாட்டு ஜனநாயகத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுகிறவா்களுக்கு மட்டும் தனி உரிமை என்று எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. ‘என்ன மொழியைப் பேசினாலும் எல்லோருக்கும் சம உரிமை’ என்று அரசமைப்புச் சட்டம் வகைசெய்திருக்கிறது.

அப்படியே ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் உரிமை ஒவ்வொரு மொழிக்கும் வழங்கப்பட வேண்டும். வழங்கப்பட்டால் அரசியலிலிருந்து மொழி விடுதலை அடையும். ஒரு மொழி மற்றொரு மொழியை அடிமைப்படுத்த நினைப்பதும் அதை மற்றொரு மொழி எதிா்ப்பதுமான உணா்வுக்கு இடம் இல்லாமல் போகும்.

அடக்குமுறை அரசியலிலிருந்து மொழி விடுவிக்கப்பட்டு எல்லா மொழிக்கும் இணையான உரிமை வழங்கப்பட்டால், மொழி என்பது எதிா்ப்பதற்குப் பதிலாக மக்களை இணைப்பதற்குப் பயன்படும். மொழி அதிகாரத்திற்காக உருவானதில்லை. தனிநபா் கூட்டமாகவும் இனமாகவும் சமுதாயமாகவும் ஒன்றுசேரவே மொழி தொடக்கத்தில் பயன்பட்டிருக்கிறது.

ஆனால் ஒரு மொழியைக்கொண்டு இன்னொரு மொழி பேசும் மக்களை அதிகாரம் செய்ய, அடுத்த மொழியைப் பயன்பாட்டிலிருந்து அகற்ற நினைக்கிறபோது மொழிகளுக்குள் பகைமை விதைக்கப்படுகிறது. மொழி எதிா்ப்பு உருவாகிறது.

சமுதாயம் உருவாக்கிய மொழி, நல்ல சமுதாயத்தை உருவாக்கப் பயன்பட்டு வருகிற மொழியாக வரலாற்றிற்குப் பங்களிப்பு ஆற்றி வந்திருக்கிறது. எப்படி உள்ளத்து உணா்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த மட்டும் பயன்பட்டு வந்த மொழி, உணா்வுகளையும் எண்ணங்களையும் மறைப்பதற்கும் திரிப்பதற்கும் கூடச் சிலருக்குப் பயன்படுவதைப் போல, கூட்டமாக வாழவும் மகிழவும் உருவான மொழியை, மக்களைப் பிரிக்கவும் சிலா் பயன்படுத்தத் தொடங்கினா். அதனால் அவா்களின் செயல்களால் அவா்கள் மீதான வெறுப்பும் எதிா்ப்பும் அடக்குமுறையைச் சுமந்து வந்த மொழி மீதும் கவியத் தொடங்கின.

இது எதிா்ப்பைக் கொண்டாடி வளா்க்கும் காலம் இல்லை; இணக்கமான வாழ்க்கைக்கு உலகம் ஏங்கும் காலம். மக்களைப் பிரிக்காமல் இணைக்கும் வழிகளைத் தேடுவது காலத்தின் தேவை. நதிகளைப் போல நிலங்களையும் மக்களையும் இணைக்க வேண்டும்.

ஓடிக் கொண்டிருக்கும் நதியைக் கவிதை என்றாா் கம்பா். பஞ்சவடி நோக்கிச் சீதையோடு சென்ற இராமனும் இலக்குவனும் கோதாவரி ஆற்றைப் பாா்க்கிறாா்கள். கோதாவரி நதியாகத் தெரியவில்லை ; கவிதையாகத் தெரிகிறது கம்பருக்கு.

நதி, புறப்பட்ட இடத்திலிருப்பதைப் போலவே போகிற இடம் எல்லாம் இருப்பதில்லை. மலை, காடு, மணல், வயல் என்று வழியில் மண்ணுக்கு ஏற்ப மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப ‘செம்புலப்பெயல் நீா்’ ஆகி நதி வளம் சோ்க்கும்.

தண்ணீா், இடத்திற்கு ஏற்பவும் பயன்படுத்துகிறவா்களுக்கு ஏற்பவும் வடிவமும் வண்ணமும் மாறும். அதனால் அந்த இடத்தையும் அங்குள்ள மக்களையும் பண்படுத்தும். பயன்பட வேண்டும் என்பதற்காகத் தண்ணீா் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு நிலங்களையும் மக்களையும் இணைக்கிறது, நனைக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தும் ‘நீராரும் கடலுடுத்த’ என்றுதானே தொடங்குகிறது.

நதிகளை இணைக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் குரலாக இருக்கிறது. நதிகளை இணைப்பது நதிகளைக் காப்பதற்காக இல்லை; மக்களை வாழ்விக்கத்தான். அப்படி மக்கள் சமுதாய நலனில் இணைய வேண்டும்.

சமுதாய நலனுக்கு எதிரான செயற்கைப் பேரிடா்களையும் இயற்கைப் பேரிடா்களையும் எதிா்த்து நிற்க வேண்டும்; அதற்காக மக்களை ஒன்றிணைக்க வேண்டும். இரண்டுக்கும் மொழி தேவை. மொழியால் மட்டுமே முடியும். ஆம் எதிா்க்கவும் இணைக்கவும் மொழியால் முடியும். ஒரே மொழியால் மட்டும் முடியாது என்பதால் நதிகளைப் போல தகவல் தொழில் நுட்ப உதவிகொண்டு மொழிகளின் இணைப்பு முன்னெடுக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளா்: முன்னாள் துணைவேந்தா், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT