நடுப்பக்கக் கட்டுரைகள்

பகைமையை அன்பால் வெல்வோம்

கே.ஏ. ராஜபாண்டியன்

இந்தியாவின் வட பகுதியில் பழங்காலத்தில் தோன்றிய சமண சமயம் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பரவியிருந்தது. மானுட இனம், அறம் சார்ந்த வாழ்க்கையைக் கடைப்பிடித்தொழுக அகிம்சை என்னும் கருத்தாக்கம் கொண்ட சமண சமயக் கொள்கைகளை இவ்வுலகில் முதன் முதலில் பரப்பியவர் விருஷபதேவர். 

இவர் "ஆதிபகவன்' என்றும் அழைக்கப்பெறுகிறார். விருஷபதேவர் முதல் வர்த்தமான மகாவீரர் வரை இருபத்து நான்கு மகான்கள் சமண சமயக் கொள்கைகளை நாட்டில் போதித்தனர். இம்மகான்கள் "தீர்த்தங்கரர்கள்' என சமணர்களால் போற்றப்படுகின்றனர். 

வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் சரித்திர காலத்திற்குட்பட்டவர்களாகத் கருதப்படும் கடைசி ஐவருள், இருபத்து நான்காம் தீர்த்தங்கரரான மகாவீரரைப் போற்றும் வகையில் சமணர்கள், அவர் பிறந்த தினமான மகாவீர் ஜெயந்தியை வெகு சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர்.

மகாவீரர், இந்திரபுரத்தைத் தலைநகராகக் கொண்டு விதேக நாட்டை ஆண்டு வந்த சித்தார்த்த மகாராஜாவுக்கும் பிரியகாரிணி (திரிசலாதேவி) என்னும் மகாராணிக்கும் கி.மு.599 சித்திரைத் திங்கள் வளர்பிறையில் புதல்வராகப் பிறந்தார். தெய்வத் தன்மையோடு பிறந்த இவருக்கு "ஸ்ரீவர்த்தமானன்' என்றும் "வீர சுவாமி' என்றும் பெயரிடப்பட்டு நாடு விழாக்கோலம் பூண்டது. 

சிறு வயதிலேயே மகாவீரர் புலன் அறிவு (மதிஞானம்), நுசில் அறிவு (சுருதஞானம்) பிறர் மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் (மனப்பரியை ஞானம்) ஆகிய மூவகை ஞானங்களைப் பெற்றுத் திகழ்ந்தார். தந்தை அடியற்றி ஆட்சியில் அமர்ந்து நீதிநெறி தவறா மன்னராகவும் விளங்கினார்.

இவரது ஆட்சியின் மாட்சிமையால் நாடு வளம் உடையதாக விளங்கிற்று. ஆனால் மக்கள் ஒற்றுமை இன்றி சாதிமதப் பாகுபாடுகளாலும், இனம், மொழி, நிறம் ஆகிய வேறுபாடுகளாலும் அந்நியப்பட்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தனர். எளியோரை வலியோர் ஆதிக்கம் செலுத்தினர். அறம் சார்ந்த பண்புநலன் அற்று மக்கள் அநீதியான செயல்களில் ஈடுபட்டனர். 

இத்தகைய அவலங்களைக் கண்ணுற்ற மகாவீரர், மனம் வருந்தி, மக்களின் சிந்தனையைச் செப்பனிட வேண்டும் என்று உறுதிபூண்டார். எனவே, ஆட்சிப் பீடத்தை விட்டு அகன்று அறத் தொண்டாற்றுவதற்காக துறவு பூண்டார்.

"மனத்தாலும் வாக்காலும் உடலாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை என்னும் அகிம்சை கொள்கையை மக்கள் பின்பற்றி அன்பு நெறியில் வாழ வேண்டும். மக்கள் செய்யும் தொழில்கள் அனைத்துமே சிறப்புடையவைதான். தொழிலை முன்வைத்து உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு மக்கள் மனங்களிலே நிலவக்கூடாது. 

பிறப்பால் மனிதர் எல்லோரும் சமம் என்னும் உணர்வினைப் பெற்று மனிதநேயமாண்பு செழிக்க வேண்டும். மனித இனம் அர்த்தமுள்ள வாழ்வை மேற்கொள்ள வேண்டும்' இவ்வாறு மகாவீரர் அருளுரை வழங்கினார்.

"கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, பிறன்மனை விரும்பாமை, மிகுபொருள் விரும்பாமை ஆகிய நல்லறங்களை மக்கள் தங்கள் உயிரினும் மேலானதாகக் கருதி இல்லற  வாழ்வை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினார். 

இல்லறத்தார்க்கு வகுத்தளித்த இக்கொள்கைக்கு ஒரு பதச்சோறாக சமண இலக்கியங்களுள் ஒன்றான மேருமந்திர புராணத்தில், "பெரிய கொலை பொய் களவு பிறர் மனையி லொருவல், பொருள் வரைதல் மத்தம்மது புலை சுணலின் நீங்கல், பெரியதிசை தண்டமிரு போகம் வரைந் தாடல், மரீஇயசிக்கை நான்குமிவை மனையறத்தார் சீலம் (பத்திரமித்திரன் அறங்கேள்வி சருக்கம்) என்னும் பாடல் அமைந்துள்ளது.

"ஒவ்வொரு உயிரினமும் அதனதன் ஊழ்வினைக்கேற்ப மனிதர், தேவர், விலங்கு, செடி, கொடி என ஏதோவொரு பிறவி எடுக்கிறது. இவ்வினைப் பயனை வெல்லும் ஆற்றல் மனிதப் பிறவிக்கு உண்டென்பதால், மனிதர்கள் வீடு பேறு அடையவேண்டும் என்ற குறிக்கோளோடு நல்லற நெறியைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்' என்றார். 

உயிர்களுக்கு அப்பாற்பட்டு தனியாக கடவுள் இல்லை என்று சமணம் போதிப்பதால், தனி மனிதனின் உயர்வுக்கும் சிறப்புக்கும் அவனது முயற்சியும் அவன் பின்பற்றி ஒழுகும் ஒழுக்க நெறியுமே காரணமாக அமைகிறது என்று மகாவீரர் ஒழுக்க நெறியின் விழுப்பத்தை மக்களிடையே பரப்பினார். 

மனிதர்கள் தங்களைப் பகைப்போர் மீது கோபம் கொள்ளாமல் அவர்கள் மீது அன்பைப் பொழிந்து பகைமையை வென்று மனிதநேய பண்பு நலனை வளர்க்கவேண்டும் என்ற கூறி அகிம்சை நெறியை மக்கள் மனங்களில் படரச் செய்தார். மனிதப் பிறவி தனித்துவ மிக்க அறிவாற்றல் கொண்டது.  அவ்வறிவின் துணைகொண்டு நன்மை தீமைகளைப் பகுத்தாய்ந்து, தீமைகளைப் புறந்தள்ளி நன்மைகளை மட்டுமே மானிடர் கடைப்பிடித்தொழுக வேண்டும் என மகாவீரர் உபதேசித்தார்.

மேலும், தேவைக்கதிகமாக செல்வம் வைத்திருப்போர் தன்னலங் கருதாமல், எழை எளியோரின் துயர் துடைக்கும் வண்ணம் மிகையான செல்வத்தை அவர்களுக்குப் பகிர்ந்தளித்துப் பிறர்க்கென வாழும் பெற்றிமை பெற்றவர்களாக வேண்டும் எனப் புகன்றார். 

சமூக நலனையும் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு இல்லறத்தார் அன்னதானம், அபயதானம், மருந்து தானம், கல்வி தானம் ஆகிய நால்வகை தானங்களை மனமுவந்து செய்தல் வேண்டுமென உரைத்தார்.

சமண சமய தத்துவமான நுசிற்பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்தறிவது (நற்சாட்சி), அவ்வாறு ஆராய்ந்தறிந்த நுசிற்பொருளின் உண்மைத் தன்மையில் அறிவைச் செலுத்துதல் (நல்ஞானம்), அத்தகைய நுசிற்பொருளின் வழிகாட்டுதலோடு அறம் சார்ந்து வாழ்தல் (நல்லொழுக்கம்) ஆகிய மும்மணிகள் வாழ்வியலின் இலக்கணம் என்பதை மனத்தில் கொண்டு மக்கள் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும் என மகாவீரர் போதித்தார். 

இவ்வுலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் பிறந்து இறந்து உழலும் தன்மையுடையவை. ஆனால் உலகம் என்றும் அழியாதது. எனவே யாக்கை நிலையாமை என்னும் பேருண்மையை மானுடம் உணர்ந்து நல்லறப் பாதையில் நடைபோட வேண்டும் என்று கூறினார் மகாவீரர். 

மனித வாழ்வியல் சிறக்க அகிம்சை எனும் அறவொளி பாய்ச்சிய மகாவீரரைப் போற்றி, அவர் பிறந்த இத்திருநாளில் மனித நேயம் உலகெங்கும் மலரட்டும் என உரக்க குரல் கொடுப்போம்.
 
இன்று (ஏப். 14) மகாவீரர் பிறந்தநாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT