நடுப்பக்கக் கட்டுரைகள்

டெபாசிட் காப்பீடு - தவறான வடிவமைப்பு

எஸ் கல்யாணசுந்தரம்

டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) என்பது இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழுச் சொந்தமான துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள வங்கிகளின் வைப்புத் தொகையை காப்பீடு செய்கிறது.
 1948-ஆம் ஆண்டில் வங்காளத்தில் ஏற்பட்ட வங்கி நெருக்கடிக்குப் பிறகு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்புத் தொகையை காப்பீடு செய்யும் கருத்து முதல் முறையாக கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், 1960-ஆம் ஆண்டு பாலை சென்ட்ரல் பேங்க் லிமிடெட் மற்றும் லக்ஷ்மி பேங்க் லிமிடெட் ஆகியவற்றின் தோல்விக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசால் டெபாசிட்களை காப்பீடு செய்வது பற்றி தீவிர சிந்தனை செய்யப்பட்டது. டெபாசிட் இன்சூரன்ஸ் சட்டம், 1961 ஜனவரி 1, 1962 முதல் நடைமுறைக்கு வந்தது.
 1962-இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது வைப்புத் தொகை ரூ.1,500 வரையில் காப்பீடு வழங்கப்பட்டது. பின்னர் 1 மே 1993 முதல் வரம்பு ரூ.1,00,000-ஆக இருந்தது. மக்களின் கோரிக்கையின் காரணமாக, பிப்ரவரி 4, 2020 முதல், வைப்புத் தொகை காப்பீடு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
 எந்தவொரு வங்கி திவாலானாலும் அதன் பாதகமான விளைவுகளில் இருந்து வைப்புத் தொகையாளர்களைப் பாதுகாப்பதே டெபாசிட் காப்பீடு திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டாலும், இந்தத் திட்டம் பல்வேறு குறிப்பிடப்படாத விளைவுகளையும் உள்ளடக்கியதே. குறிப்பாக இந்த திட்டம் (1) வணிக வங்கிகளின் செலவில் கூட்டுறவு வங்கிகளை பாதுகாத்துள்ளது. (2) அரசுக்கு வருமான வரி மூலம் அதிக நிதியை திருப்பி விட்டுள்ளது. (3) எந்தப் பயனும் இல்லாமல் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு இது அபராதம் ஆகிறது. (4) கணிசமான வைப்பு நிதி டிஐசிஜிசிக்கு நிதியாக மடைமாற்றி விடப்பட்டுள்ளது.
 2020-21ஆம் ஆண்டு வசூலித்த மொத்த பிரீமியம் தொகையான ரூ.17,517 கோடியில், கூட்டுறவு வங்கிகளின் பங்கு வெறும் ரூ.1,176 கோடி மட்டுமே. எனவே கூட்டுறவு வங்கிகள் பிரீமியத்தில் வெறும் 7.19 சதவீதத்தை மட்டுமே செலுத்தியுள்ளன. அதேபோல், 2019-20இல், மொத்த பிரீமியத்தில் 7.49 சதவீதமும், 2018-19இல், 7.60 சதவீதமும் செலுத்தியுள்ளன.
 2020-21ஆம் ஆண்டிற்கான கோரிக்கைகளை (கிளெய்ம்) பார்க்கும்போது, 9 கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் ரூ.563.86 கோடிக்கு டிஐசிஜிசி கிளெய்ம் செட்டில் செய்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இதேபோல் வணிக வங்கிகளில் பிரீமியம் வசூல் செய்து அதை கூட்டுறவு வங்கிகள் திவாலாவதை ஈடுகட்ட செலவு செய்யப்படுகிறது.
 டெபாசிட் காப்பீடு தொடங்கப்பட்டதில் இருந்து மார்ச் 31, 2021 வரை, 27 வணிக வங்கிகளின் கிளெய்ம்களுக்கு ரூ.295.9 கோடி செலுத்தப்பட்டது. இதில் புதிய வங்கிகளிடமிருந்து திரும்பப் பெறப்பட்டது ரூ.153 கோடியாக இருந்தது. ஆனால் தொடக்கத்தில் இருந்து 365 கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தப்பட்ட/வழங்கப்பட்ட கிளெய்ம்களின் மொத்தத் தொகை ரூ.5,466.9 கோடியாகவும், திரும்ப வசூலித்த தொகை ரூ.3,282.1 கோடியாகவும் இருந்தது.
 டிஐசிஜிசி 1987-88 நிதியாண்டிலிருந்து வருமான வரி செலுத்துகிறது. மேலும் அக்டோபர் 1, 2011 முதல் சேவை வரியும் செலுத்துகிறது. ஜூலை 1, 2017 முதல் இதற்கு ஜிஎஸ்டியும் உண்டு. டிஐசிஜிசி 2016-17 முதல் 2020-21 வரை பின்வருமாறு வருமான வரி செலுத்தியுள்ளது: முறையே ரூ.6,005 கோடி, ரூ.6,950 கோடி, ரூ.7,216கோடி, ரூ.5,184 கோடி, ரூ.7,223 கோடி.
 டிஐசிஜிசி, ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமாக டெபாசிட் செய்பவர்களின் நலனைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது. இதற்கு வருமான வரியின் வரம்பில் இருந்து விலக்கு அளிப்பதே பொருத்தமாகும். மேலும் பெறப்பட்ட பிரீமியம் எதிர்காலத்தில் வங்கிகள் திவாலானால் அதை எதிர்கொள்வதற்குத் தேவையான நிதியை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே பெறப்பட்ட பிரீமியத்தை வருமானமாகக் கருதி அதற்கு வரி விதிப்பது சரியல்ல.
 இறையாண்மை உள்ள எந்த அரசும் தனது அரசுடைமையாக்கப்பட்ட வங்கியை திவால் நிலைமைக்கு அனுமதிக்க முடியாது. அவ்வாறு இருக்க, அரசு வங்கிகளில் உள்ள டெபாசிட்களுக்கு எதற்காக காப்பீடு? அரசு வங்கிகள் செலுத்தும் காப்பீட்டினால் அரசு வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி குறைகிறது. இது தேவையில்லாத சுமை.
 31.3.2021 நிலவரப்படி, டிஐசிஜிசி ரூ.50 கோடி மூலதனத்தைப் பெற்றுள்ளது. ஆனால் அது ரூ.1,29,900 கோடி டெபாசிட் காப்பீட்டு நிதியை பராமரிக்கிறது. இந்திய அரசின் தேதியிட்ட பத்திரங்களில் டிஐசிஜிசி ரூ.1,32,222 கோடி முதலீடு செய்துள்ளதால், அந்த நிதி அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது.
 பல ஆண்டுகளாக, பிரீமியம் விகிதம் மற்றும் கவரேஜ் தொகையை மாற்றியமைப்பதைத் தவிர, டெபாசிட் காப்பீட்டுத் திட்டத்தில் வேறு எந்த பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. இடர் உணர்வின் அடிப்படையில் வேறுபட்ட பிரீமியத்தை வசூலிப்பது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டாலும், எதுவும் செய்யப்படவில்லை. பொதுத்துறை வங்கிகள் மற்றும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு அதன் வடிவைமைப்பின் காரணமாக நஷ்டம் ஏற்படுகிறது.
 இந்த திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது. வைப்புத்தொகை காப்பீடு தனியார் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும்; பிரீமியம் ஒவ்வொரு வங்கியின் ஆபத்து காரணிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இத்திட்டம் அரசுக்கு வரி மற்றும் நிதியை உருவாக்குவதற்காக இருக்கக் கூடாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

பிகாரில் கார்-லாரி மோதல்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT