முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

கோயில் குளங்களைக் காப்போம்

நாட்டு மக்களிடையே ஒற்றுமை மேலோங்கவும், சமுதாய அமைப்பை பலப்படுத்தவும்,  பக்தி உணர்வை பெருக்கவும் அக்கால மன்னர்கள் திருக்கோயில்களைக் கட்டி தெய்வ வழிபாட்டை ஊக்குவித்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:04 AM
பகிர்:

நாட்டு மக்களிடையே ஒற்றுமை மேலோங்கவும், சமுதாய அமைப்பை பலப்படுத்தவும்,  பக்தி உணர்வை பெருக்கவும் அக்கால மன்னர்கள் திருக்கோயில்களைக் கட்டி தெய்வ வழிபாட்டை ஊக்குவித்தனர். 

எங்கெல்லாம் மக்கள் வாழ்ந்தனரோ அங்கெல்லாம் இறை வழிபாட்டிற்காக திருக்கோயில்களைக் கட்டி மன மகிழ்வோடு வாழ்ந்துள்ளனர் என்பதை வரலாற்று ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.  

பொதுவாக, திருக்கோயில் என்று சொன்னாலே அங்கே மூன்று முக்கிய அம்சங்கள் இருக்கும். அவை ஸ்தலம், தீர்த்தம், விருட்சம் ஆகியவை.  ஸ்தலம் என்றால் ஊர். அதாவது கோயில் அமைந்துள்ள இடம். அடுத்ததாக, கோயிலுக்காக இருக்கக் கூடிய குளம். இதனை தீர்த்தம் என்று கூறுவார்கள். நிறம், மணம், குணம், வடிவம் அற்றது நீர். இறைவனுக்கும் இது பொருந்தும். விருட்சம்  எனப்படுவது ஒவ்வொரு கோயிலுக்கும் இருக்கக்கூடிய மரம். தெய்வங்களின் சக்தியை இந்த விருட்சங்களே தாங்கி நிற்கின்றன என்று அக்கால மக்கள் நம்பினர்.  இறைவன் நீரிலும் உறைகிறான் என்பதால் ஸ்தல விருட்சம் போல ஸ்தல தீர்த்தமும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

அக்கால மன்னர்கள், மக்கள் எத்திசையிலிருந்தும், எங்கிருந்தும் திருக்கோயில்களில் உறையும் இறைவனைக் கண்டு வணங்க வேண்டும் என்பதற்காக வானளாவிய கோபுரங்களுடன் திருக்கோவில்களைக் கட்டி வழிபட்டுள்ளனர். அவ்வாறு உயர்ந்த வகையில் திருக்கோயில்கள் அமைய வேண்டும் என்றால், நிறைய மண், தண்ணீர் ஆகியவை தேவை. அதை உணர்ந்துதான், கோயில்களைக் கட்டுவதற்கு முன் குளங்களை உருவாக்கினர் அக்கால மன்னர்கள்.  

குளத்தைத் தோண்ட தோண்ட கிடைக்கும் மண்ணைக் கொண்டே  சமவெளிப் பகுதிகளை மேடாக்கியும், அம்மண்ணைக் கொண்டே செங்கற்களை உருவாக்கியும் திருகோயிலை எழுப்பியுள்ளார்கள்.  மேலும், அம்மண்ணைக் கொண்டே அந்த திருக்கோயிலின் அஸ்திவாரத்தையும், சுவர்களையும் கட்டியுள்ளார்கள். எந்த பண்டைய கால திருக்கோயிலிலும் வெள்ளநீர் புகுந்ததாக வரலாறு இல்லை.  

பல திருக்கோயில்களுக்கு முன்புறம் திருக்குளம் இருப்பதை இன்றும் நாம் காண முடிகிறது. திருக்குளம் வெட்டியதால் கிடைத்த மண்ணைப் பயன்படுத்தியே, பெரும்பாலும் மண் சுவர் சூழ்ந்த  வீடுகளிலேயே அக்கால மக்கள் கோடைக்காலத்திலும் குளிர்ச்சியுடன் வாழ்ந்துள்ளனர்.

திருக்கோயில்களுக்கு தொலைதூரத்திலிருந்து வரும் இறையன்பர்கள் நீராடுவதற்கும் பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட திருக்குளங்கள் பயன்பட்டன. அக்குளங்கள் திருக்கோயில்களுக்கு அணிகலன்களாகவும், ஆரமாகவும் விளங்கியிருக்கிறன.  உலகில் வேறெங்கும் நம் நாட்டு திருக்குளங்கள் போன்ற அமைப்பைக் காண முடியாது. அக்கால மக்கள் திருக்கோயில் குளங்களை, கோயில்களைப் போன்றே பக்தியுடன் பாதுகாத்தனர்.  

குளங்களில், தாமரை, அல்லி போன்ற தெய்வீக மலர்களையும் வளர்த்து இறை வழிபாட்டிற்காக அவற்றைப் பயன்படுத்தினர். மேலும், அக்குளத்திலிருக்கும் நீரைக் கொண்டுதான் இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். திருக்கோயில் குளத்திலிருந்து கிடைக்கும் நீரை, அக்கால மக்கள் புனிதமாகப் போற்றினர். புகழ் பெற்ற கோயில் குளங்களில் உள்ள நீர் பிரம்ம தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.  

தமிழகத்தில் உள்ள பல்வேறு தலங்களின் திருக்குளங்கள் ஆன்மிக வரலாற்றுத் தொரர்புடையவை. சிதம்பரம் நடராஜர் கோயில் திருக்குளம்,  சீர்காழி கோயில் திருக்குளம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்குளம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஆனந்த புஷ்கரணி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கோயிலில் இருக்கும் பொற்றாமரைக்குளம் ஆகியவை பல அரிய வரலாற்று நிகழ்வுகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. 

திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற ஊர்களில் கோயிலின் அருகில் உள்ள கடலே அக்கோயிலின் தீர்த்தமாக இருக்கிறது. மழைக் காலத்தில் நீரை சேமித்து வைக்கும் குளத்தில் பசுக்களும், ஏனைய விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் தங்கள் தாகத்தை தணித்துக் கொள்வார்கள். 

அப்படிப்பட்ட குளத்தை வெட்டிய  மனிதன் ஒரு அஸ்வமேத யாகம் செய்த பயனை அடைவான் என்று கூறுகிறது மகாபாரதம். மண்ணில் வாழும் உயிரினங்களுக்கு உணவை அளிப்பது நீர்தான். "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என்கிறது புறநானூறு. உணவுப் பொருள்கள் உற்பத்திக்கும், உயிர்களின் சுழற்சிக்கும் நீரே ஆதாரம். 

அக்காலத்தில் நீர் மேலாண்மையை உணர்த்தும் பொருட்டே திருக்கோயில்களுக்கு அருகே குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. மழைக் காலத்தில் சாலையில் ஓடும் நீர் எல்லாம் திருக்குளத்தில் விழும்படியும், திருக்குளம் நிரம்பியவுடன் வேறு குளத்தில் சென்று சேரும்படியும் நம் முன்னோர்கள் வழிவகை செய்துள்ளனர். மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை கோயில் குளங்கள் மூலம் அக்கால மக்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.  

மழைநீர், குளங்களில் சேருவதால் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அங்கு வாழும் மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகும். அதனால்தான் நம் முன்னோர், "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றனர்.  எனவே, குளங்களைப் பாதுகாக்கப்பட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.  

எங்கெல்லாம் பழங்கால திருக்கோயில்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் குளங்கள் இருந்திருக்க வேண்டும் என்பது திண்ணம். எனவே, அக்குளங்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை சீராக்க வேண்டும்.  மழைநீர் சேரும் வகையிலும்,  திருக்கோயிலுக்கு மட்டுமல்ல, ஊருக்கே குளம் அழகு என்பதை நிரூபிக்கும் வகையிலும் திருக்கோயில் குளங்களை மீட்டெடுப்போம்.

முழு கட்டுரையைப் படிக்க →