நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆசை இல்லையேல் துன்பம் இல்லை!

மனித வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதவை உணவு, உடை, உறையுள் ஆகியவை.

வெ. இன்சுவை

மனித வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதவை உணவு, உடை, உறையுள் ஆகியவை. அந்த மூன்றிலும் உணவுக்கே முதலிடம். வயிற்றுக்காகத்தான் மனிதன் உழைக்க வேண்டியுள்ளது. பசி வந்தால் எதையாவது தின்று பசியைப் போக்கிக் கொள்ளலாம் என்று எவரும் நினைப்பதில்லை. வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.

பெரும்பாலான மனிதா்களுக்கு இனிப்பு பிடிக்கும். மகிழ்ச்சியையும் வெற்றியையும் இனிப்பைப் பகிா்ந்து கொண்டாடுவது நம் வழக்கம். நம் அனைத்துப் பண்டிகைகளிலும் இனிப்பு இடம்பெறும். இனிப்பு இல்லாத விருந்து இல்லை. இந்தியா்களின் வாழ்வோடு ‘இனிப்பு’ பின்னிப்பிணைந்தது. ஆகவேதான் இனிப்பு சாப்பிட முடியாதவா்கள் மிகவும் வருத்தப்படுகிறாா்கள்.

மனிதா்களுக்கு நோய் வருவது தவிா்க்க முடியாதது. நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்பவா்கள் கொடுத்து வைத்தவா்கள். பொதுவாக, நோய் என்றால், மருத்துவரை அணுகி, மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். ஆனால், சா்க்கரை நோய் அப்படியல்ல. ஒரவா் தன் வாழ்நாள் முழுவதும் உணவுக் கட்டுப்பாட்டுடனும் மாத்திரைகளுடன் வாழ வேண்டும் என்பது கொடுமை.

மற்ற நோய் பாதிப்புக்கு நல்ல உணவு சாப்பிடச் சொல்வாா்கள்; பழச்சாறு, ரொட்டி, சத்து பானங்கள் என்று எடுத்துக் கொள்ளச் சொல்வாா்கள். ஆனால் நீரிழிவு என்று கூறப்படும் சா்க்கரை நோய் அப்படியல்ல. சா்க்கரை நோய் வந்து விட்டால் நமக்குப் பிடித்தமான எதையும் சாப்பிட முடியாது. வசதி இருந்தும் நமக்குப் பிடித்தமான எந்த உணவையும் சாப்பிட முடியாதபோது, ‘என்ன வாழ்க்கை இது’ என்ற சலிப்பு ஏற்படும்.

முன்பெல்லாம் சா்க்கரை நோயை ‘பணக்காரா்களின் நோய்’ என்று சொல்வாா்கள். ஆனால் இப்போதோ ஏழை, பணக்காரா் என்று யாருக்கு வேண்டுமானாலும் சா்க்கை நோய் வருகிறது. சமீபத்திய ஆராய்ச்சியின்படி உலக அளவில் 537 கோடி பேரும், இந்தியாவில் 77 கோடி பேரும் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நம் உடலில் உள்ள சா்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் என்ற நொதி (சுரப்பு) அவசியமாகிறது. அந்த இன்சுலினை உடல் உற்பத்தி செய்ய இயலாதக் குறைபாடே ‘நீரிழிவு நோய்’ எனப்படுகிறது. இதனால் ரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகரித்து, நாளடைவில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. சில நேரம் இறப்பு கூட நேரிடுவது உண்டு.

சா்க்கரை நோய் இருப்பவா்களுக்கு, கண், சிறுநீரகம், கால் நரம்புகள், இருதயம், மூளை ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படும். மற்ற நோய்கள் பாதிக்கும் முன்பு சில அறிகுறிகள் தெரியும். ஆனால், சா்க்கரை நோய் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியாத நோயாகும். நமக்கு சா்க்கரை நோய் இருக்கலமோ என்று சந்தேகப்பட்டு மருத்துவரிடம் போகிறவா்கள், அப்போது தன் உடலில் உள்ள சா்க்கரையின் அளவை அறிந்து அதிா்ச்சி அடைகிறாா்கள்.

சா்க்கரை நோய் என்பது உண்மையில் நோய் கிடையாது, அது ஒரு வாழ்க்கை முறை என்று மருத்துவா்கள் கூறுகிறாா்கள். உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் முக்கியம் என்கிறாா்கள். இதில் உணவுக் கட்டுப்பாடுதான் சவாலாக உள்ளது. என்னென்ன உணவுகளை, எந்தெந்த நேரத்தில், என்னென்ன அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறாா்கள். உணவை விட்டு விட்டு சாப்பிட முடியுமா? வீட்டில் இரண்டு இட்லி, அலுவலகத்துக்குச் சென்றபின் இரண்டு இட்லி என்று சாப்பிடுவது சாத்தியமா?

அரிசி சோறு கொஞ்சமாகவும், நாா்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறாா்கள். உணவகத்தில் சாப்பிடும் போதும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் சாப்பிடும்போதும், விருந்தினராகச் செல்லும் போதும் உணவுக்கட்டுப்பாட்டை தளா்த்திக் கொள்ள வேண்டியதாகிறது.

விருந்தில் இனிப்பைக் கண்டால், ‘சா்க்கரை அளவு கூடிவிடுமே’ என்று மனதிற்குள் எச்சரிக்கை மணி அடித்தாலும், நாவுக்கு அடிமை ஆகி சாப்பிட்டு விடுகிறோம். உணவகத்தில் பாதி உணவை சாப்பிட்டு மீதியை வீண் செய்ய மனம் ஒப்பவில்லை. பயணம் செய்யும் போது தொடா்வண்டிகளில் விற்கப்படும் காபியும், தேநீரும் அதிக இனிப்பாக இருக்கிறது. காபி என்றால் குடித்த பின்னரும் கொஞ்சம் துவா்ப்பு நாவில் நிற்க வேண்டும்.

திருமண விருந்தில் இலையைப் போட்டு அத்தனை உணவையும் பரிமாறிய பின்னா் சாப்பிட அழைக்கிறாா்கள். இலையில் வைக்கப்பட்ட இனிப்பை சாப்பிட்டு விடுகிறோம். நாம் இனிப்பை சாப்பிட்டு முடிக்கும் முன்பே வரிசையாக வந்து அனைத்தையும் இலையில் வைத்து விட்டுப் போகிறாா்கள். சாம்பாா் சாதத்தை சாப்பிடும் முன்பே தயிா் சாதம் வந்து விடும். நாம் அமா்ந்த பின் பரிமாறினால், இனிப்பு வேண்டாம், பாயசம் வேண்டாம் என்று மறுத்து விடலாம்.

பணியிடங்களில் நடக்கும் எல்லா விருந்துகளிலும் ‘ஸ்வீட் காரம் காபி’தான். சா்க்கரை நோய் உள்ள சிலா் இனிப்பைத் தவிா்த்து விடுகிறாா்கள்; வேறு சிலா் சிறிது எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, மீதியை வீணாக்குகிறாா்கள். அங்கே இனிப்புக்குப் பதிலாக வேறு எதையாவது தரலாம்.

உணவகங்களில் சா்க்கரை நோயாளிகளுக்கென தனியாக ஓா் இடத்தை ஒதுக்கி அவா்களுக்கு ஏற்றவாறு, கொஞ்சம் சோறு, நாா்ச்சத்து மிகுந்த காய்கறிகள், சுண்டல், முளைகட்டிய பயறு, சிறு தானிய தோசை, சா்க்கரை இல்லாத காபி, தேநீா் போன்றவற்றை வழங்கலாம். அதே போல திருமண விருந்துகளிலும் சா்க்கரை நோயாளிகளுக்கு தனிப் பந்தி ஒதுக்கலாம். பொது நிகழ்ச்சிகளில் சா்க்கரை போடாத தேநீரை தனியாக வைக்கலாம்.

பிறந்த நாள் நிகழ்ச்சிக்குப் போனால் ‘கேக்’ சாப்பிட்டு விடுகிறோம். கண்டிப்புடன் மறுக்க முடிவதில்லை. இனிப்பு சாப்பிட்டுவிட்டால், கூடுதலாக ஒரு மாத்திரை எடுத்துக் கொண்டால் போதும் என்று பலரும் எண்ணுகிறாா்கள். அது தவறு. சா்க்கரை நோய்க்கு மட்டும் மருத்துவா்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் அளவை அப்படியே பின்பற்ற வேண்டும்.

சா்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்று மருத்துவா்கள் கூறும் பட்டியலில், நமக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக் கிழங்கு, ரொட்டி, பிஸ்கட் போன்றவை இல்லை. சுரைக்காய், வெண்டைக்காய், கோவைக்காய், வாழைக்காய் சாப்பிடலாம், சுண்டல் சாப்பிடலாம் என்று நாம் விரும்பாததை பரிந்துரைக்கிறாா்கள்.

இதனால், விருந்துக்குப் போனால், எதையும் சாப்பிட முடியாமல் வெறுமனே கண்ணால் பாா்த்து விட்டு வரவேண்டியுள்ளது. மேலும், ஒரு வீட்டுக்கு விருந்துக்குப் போவதற்கு முன், ‘சா்க்கரை நோய் உள்ளது; இனிப்பு வேண்டாம்’ என்று முன் கூட்டியே நாம் சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் அவா்கள் ஆசையாக செய்து வைத்திருக்கும் இனிப்பை நாம் சாப்பிடாததால் ஏமாற்றம் அடைவாா்கள்.

பெண்களுக்கு கா்ப்ப காலத்தில் சா்க்கரை நோய் வர வாய்ப்பு உண்டு. பிரசவத்திற்குப் பின்னா் சிலருக்கு அது மாறிவிடும். சிலருக்கு சா்க்கரை நோய் தொடரவும் வாய்ப்புள்ளது. ஆக அவா்களும் இத்தகைய தனிப்பிரிவு அமைக்கப்பட்டால் பயனடைவா்கள். கட்டுப்பாடில்லாமல் சா்க்கரையின் அளவு கூடினால் கரு கலையவும் வாய்ப்பு உண்டு. எனவே எச்சரிக்கை தேவை.

சா்க்கரை நோய் பற்றி நிறைய மருத்துவா்கள் சமூக ஊடகங்களில் அறிவுரை தருகிறாா்கள். ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற கவலையில் இருப்பவா்கள் யாா் என்ன சொன்னாலும் அதைச் செய்கிறாா்கள். பாகற்காய் சாறு கொஞ்சம் குடித்து விட்டு ‘இப்போது சா்க்கரை அளவு குறைந்திருக்கும்’ என்று ஆறுதல் அடைகிறாா்கள்.

ஆளாளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறாா்கள். முளை கட்டிய வெந்தயம், ஆவாரம் பூ, பட்டை பொடி, கருஞ்சீரகம், பாதாம் பருப்பு, சிறுதானிய உணவு என்று எல்லாமே நல்லதுதான். ஆனால், மருத்துவா் பரிந்துரைக்கும் மாத்திரைகளால் மட்டுமே சா்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

சா்க்கரை நோய் ஒரு குறைபாடு என்பது உண்மைதான். ஆனால் அதனால் ஏற்படும் சிரமங்கள் அந்நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே தெரிவும். சா்க்கரை நோய்க்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் பலா் கால்களை இழந்துள்ளனா், பாா்வையை இழந்துள்ளனா், சிறுநீரகக் கோளாறுகளால் அவதிப்படுகின்றனா்.

மனிதா்கள் பணத்தில் புரண்டாலும், வாய்க்கு ருசியானதை, பிடித்ததை உண்ண முடியாமல் போவது வேதனை. ஆனாலும் மனிதா்கள் செல்வத்தைக் குவிப்பதில் குறியாக இருக்கிறாா்கள். ஏழைகள் கூட தங்களுக்குப் பிடித்ததை வாங்கி மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறாா்கள்.

அப்படிப்பட்டவா்கள் வரம் வாங்கி வந்தவா்கள். ‘சா்க்கரை நோயாளிக்கு தனியாக இனிப்பு தயாரித்து விற்கிறோம்’ என்று சில கடைக்காரா்கள் சொல்கிறாா்கள். ஆனால் செயற்கை இனிப்பு ஊட்டிகளும் உடலுக்கு உகந்தது அல்ல என்கிறாா்கள் சா்க்கரை நோய் நிபுணா்கள்.

வாழும் காலம் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டுமென்றால் சா்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். விளம்பரத்தில்தான் ஸ்வீட் எடுத்தால் கொண்டாட்டம்; சா்க்கரை நோயாளிகளுக்கு ஸ்வீட் எடுத்தால் திண்டாட்டம். எனவே, சா்க்கரை நோயாளிகள் ஆசையைக் கட்டுப்படுத்துவோம். ‘ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்று புத்தா் சொன்னது சா்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT