நடுப்பக்கக் கட்டுரைகள்

மீனவர்கள் விடுதலை எப்போது?

உதயை மு. வீரையன்

 இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் பேசி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
 இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் டிசம்பரில் கைது செய்யப்பட்டனர்.
 அடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த டிசம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
 இந்த விவகாரம் குறித்து தமிழக எம்.பி.-க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்பினர். மீனவர்கள் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருந்தார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அறிக்கை வெளியிட்டார்.
 கடந்த டிசம்பர் 18 முதல் 20 வரையிலும் தமிழகத்தைச் சேர்ந்த 68 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது பற்றி இந்திய அரசு கவலை கொண்டுள்ளது.
 யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உடைகள், முகக் கவசங்கள், குளியலறைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.
 மேலும், உறவினர்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கான தொலைபேசி வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. தடுப்புக் காவலில் உள்ள மீனவர்களுக்கு சட்டபூர்வ வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக பேசி வருகின்றனர்.
 தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
 "இதுபோன்ற அச்சமூட்டும் தாக்குதல்கள் தொடர்வதைத் தடுத்திட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாக். நீரிணையில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதும், மீனவர்களின் உயிர்-உடைமைகளைக் காப்பதும் நமது கடமையாகும்' என்று தமிழக முதல்வர் மத்திய வெளியுறவு அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை பொங்கல் பண்டிகைக்குள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
 இலங்கைக் கடற்படையினர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் சிறைபிடித்துச் சென்றனர். மொத்தம் 68 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகள் 1974-ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது. எனவே, தமிழக மீனவர்கள் 68 பேரையும் இலங்கையிலிருந்து மீட்டு ஒப்படைக்கும்படி மத்திய, மாநில அரசுகளை மீனவ அமைப்புகள் கேட்டுக் கொண்டன.
 இதனால் எந்தப் பயனும் இல்லாமையால் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இம்மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 68 பேரையும் மீட்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு இட்டிருந்தது.
 மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களில் சிறுவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை விடுவிப்பதற்கான எல்லா முயற்சிகளும் மத்திய அரசு எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
 தமிழக அரசுத் தரப்பில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்பவர்களே தவிர, தீவிரவாதிகள் இல்லை. அவர்கள் துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.
 இதையடுத்து நீதிபதிகள், 'மீனவர்களின் உடலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மனித உரிமை மீறல் இல்லையா' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பில், கரோனா நோய்த்தொற்று காரணமாக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
 "கரோனா தொற்றைக் கண்டுபிடிக்க ஆர்டி பிசிஆர் சோதனைகள் செய்வார்களே தவிர, இவ்வாறு உடல் முழுதும் கிருமிநாசினி தெளிக்கமாட்டார்கள். மீனவர்கள் கண்ணியத்துடனும், மனித நேயத்துடனும் நடத்தப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் அனைவரும் பொங்கலுக்கு முன்னதாக விடுவிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்' என்று நீதிபதிகள் கூறினர்.
 தமிழக மீனவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட வந்து விடுவார்கள் என்று நீதிமன்றம் நம்புகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மீனவர்கள் நம்ப வேண்டுமே!
 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன தமிழக மீனவர்களை இலங்கை மீன்பிடித் துறை அமைச்சரும், வடக்கு மாகாண மீனவர்கள் சங்கத்தினரும் சந்தித்து உலர் உணவுப் பொருள்களை வழங்கியுள்ளனர். அப்போது இந்திய மீனவர்களிடம் யாழ்ப்பாணம் மீனவர் சங்கத் தலைவர் பேசியுள்ளார். இலங்கைக் கடற்பரப்பில் இலங்கையின் வடபகுதி மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபடுவதால் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை அவர்களிடம் தெரிவித்தார்.
 அதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சிறையில் உள்ள மீனவர்கள் எங்கள் துன்பத்தைப் புரிந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் சக்தி வாய்ந்த நபர்களுக்குச் சொந்தமான இழுவைப் படகுகளில் தினக்கூலிகளாக வேலை செய்கின்றனர். அவர்களின் விடுதலைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல' என்று கூறியுள்ளனர்.
 இவ்வாறு தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விடுவிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகி விட்டன. இப்படியே இது தொடர்ந்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆவது? அவர்களுடைய குடும்பம் எப்படி பிழைக்கும்?
 2021-இல் மட்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் 19 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். பல்வேறு நிகழ்வுகளில் பல படகுகள் அழிக்கப்பட்டு 5 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 73 படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
 2021 நவம்பர் மாதம் குஜராத் கடற்கரை அருகே பாகிஸ்தான் கடற்படையால் இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டபோது, பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து சம்மன் அனுப்பியது. ஆனால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது மத்திய அரசு மெளனம் காக்கிறது. இது நியாயமா?
 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இலங்கைக் கடற்படையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக் கோரியும் இராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
 மீனவர் பிரச்னை தலைதூக்கும்போதெல்லாம் கச்சத்தீவு பிரச்னையும் தலையெடுக்கும். அந்த அளவுக்கு அவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதை இரு நாடுகளும் கவனத்தில் கொள்வது நல்லது.
 கச்சத்தீவு ஆண்டாண்டு காலமாக தமிழகத்துக்குச் சொந்தமாக இருந்து வந்தது. அதுவே தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு எல்லையாகவும் இருந்து வந்தது. அதனை இந்திய அரசு, 1974-ஆம் ஆண்டு இலங்கைக்குக் கொடுத்து விட்டது. அப்போது முதலே தமிழக மீனவர்களின் பிரச்னை தொடங்கி விட்டது.
 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது. 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தம், கச்சத்தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் போகவும் கூடாது, மீன் பிடிக்கவும் கூடாது, அங்குள்ள அந்தோணியார் திருவிழாவுக்கும் மக்கள் போகக்கூடாது என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
 1991-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கச்சத் தீவை மீட்கப்போவதாக சபதம் செய்தார். தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சத் தீவை மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். 1991 அக்டோபரில் தமிழக சட்டப்பேரவையில் இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 இப்போது கச்சத்தீவை மீட்க முடியவில்லை என்றாலும், அங்கு தமிழக மீனவருக்கு மீன்பிடி உரிமை வேண்டும். இதனை 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யலாம். இந்திய வெளியுறவுத் துறை இதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை உணர வேண்டும்.
 புதிய ஆண்டு பிறந்தபோது நமது மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் இருந்தனர். இப்போது தமிழர்களின் தேசிய விழாவான பொங்கல் திருநாள் வரப் போகிறது. அப்போதாவது அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்பது தமிழக மக்கள் அனைவரின் விருப்பமாகும்.
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT