கோப்புப் படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

முதியோர் நலன் - புதிய உத்தி

வெ. இன்சுவை

 என் கட்செவி அஞ்சலில் ஒரு செய்தி வந்தது. ஓர் அம்மையார் தனது 66 வயதில் மறுமணம் செய்து கொண்ட செய்தி. அவர் சொன்னது "கணவர் இறந்த பின்னர் முதியோர் இல்லத்தில் இருந்த நான், 66 வயது குடும்ப நண்பரை மறுமணம் செய்து கொண்டேன். இந்த வயதில் கல்யாணம் தேவையா என்று சொல்லுபவர்களை நான் மனதில் போட்டு குழப்பிக்கலை. குழந்தை, உறவினர்னு யாரும் இல்லை. மீதமுள்ள சொச்ச ஆயுளை பிடிச்சவருடன் வாழ்வோம் என்ற என் நியாயமான விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்தேன்"
 இப்பதிவு சிலரது வரவேற்பையும், சிலரது கேலியையும் பெற்றது. 66 வயதில் திருமணம் தேவையா என்ற கேள்வி வருகிறது. இதையெல்லாம் நாம் ஆராயத்தேவையில்லை. இதெல்லாம் அவரவர் சொந்த விருப்பம். எந்த சூழலில் அந்த அம்மா இந்த முடிவை எடுத்தாரோ? நமக்குத் தெரியாது.
 உறவுகள் எதுவும் இல்லாமல் தனிமை வாழ்வு நரகம். ஒருவருக்கு முதுமையில்தான் அன்பும், அரவணைப்பும் தேவை. பகிர்தல் தேவை. மனசு தோழமையை நாடுகிறது. ஒரு பரிவான, ஆறுதலான ஒற்றைச் சொல்லுக்காக ஏங்குகிறது. 'சாப்பிட்டாயா?' என்று கேட்க ஓர் ஆன்மா வேண்டும். அன்பான பிள்ளைகள் அமைந்து விட்டால் வாழ்க்கை வரமாகிடும்.
 இன்றைய பரபரப்பான சமுதாயத்தில் முதியோர் பராமரிப்பு பெரும் சவால்களைக் கொண்டதாக உள்ளது. கூட்டுக் குடும்ப அமைப்பு இருந்தபோது எந்தப் பிரச்னையும் இல்லை. அக்கால முதியவர்கள் எப்படி இருந்தார்கள்? பொழுதுபோக்கு சாதனம் ஏதும் இல்லாமல், வாசிப்பும் இல்லாமல் இருந்தாலும், வீடு முழுக்க உறவுகள் இருந்த காரணத்தால் அவருக்குக் கவனிப்பு இருந்து கொண்டே இருக்கும். முதியோரும் அனுசரித்துப் போவார்கள். மிகவும் தளர்ந்து போய் படுக்கையில் கிடக்கும் நிலை வந்தாலோ, சுய நினைவு அற்ற நிலை வந்தாலோ கூட அவர்களை கவனிக்க முடிந்தது.
 இன்றைய நிலையில் இதெல்லாம் மாறிப் போய் விட்டது. முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. பிள்ளைகள் பெற்றோர்களைக் கைவிட்டு விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. விதிவிலக்குகள் எப்போதும் எதிலும் இருக்கும். பெற்றவர்களை ஒதுக்கி விடும் பிள்ளைகள் ஒரு சிறு விழுக்காடு மட்டுமே.
 சிலர் தாங்களாகவே முதியோர் இல்லங்களில் இருக்க விரும்புகிறார்கள். அங்கே சகலவசதிகளும் உண்டு. நல்ல கவனிப்பு, அருமையான உணவு, பொழுது போக்குகள், மருத்துவ உதவி எல்லாம் கிடைக்கின்றன. கட்டணம் கூடக்கூட வசதிகளும் கூடுகின்றன. ஒரே பிள்ளை அயல் நாட்டில் வாசம், இங்கோ தனிமை. எனவே, அவர்களாக விரும்பி முதியோர் இல்லங்களுக்குப் போய் விடுகிறார்கள்.
 60 வயது என்றால் ஊடகங்களின் பார்வையில் முதியவர்கள். உண்மையில் 60 முதல் 70 வயதில் உள்ளவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்கள். ஏதாவது ஒரு வேலையில், பொழுது போக்கில், சேவையில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். நவீன அறிவியல் சாதனங்களை உபயோகிக்கப் பழகிக் கொள்கிறார்கள். அத்தகையவர்களுக்கு முதுமை இல்லை.
 அதுவும் கணவர், மனைவி இருவரும் சேர்ந்து இருந்தால் அது அவர்களது இரண்டாவது வசந்தம். சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வயது வெறும் எண். அவ்வளவே.
 70 வயதுக்குப் பின் முதுமை தன் கோலங்களை அவர்கள் மீது வரையத் தொடங்குகிறது. 80-க்குப் பின் சிலருக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது. கேட்கும் திறனும், பார்க்கும் திறனும் குறைந்து போய் விடுகிறது. அதிக மறதி ஏற்படுகிறது.
 "இல்லாள்' இல்லாமல் போனால் ஆணுக்கு அத்தனிமை மிகக் கொடியது. மூதாட்டிகள் எப்படியோ தனிமையை ஒட்டிக் கொள்வார்கள். ஆண்கள் அளவுக்கு அவர்கள் தவித்துப் போவதில்லை. சமைக்க இயலும் வரை, கை கால்கள் இயங்கும் வரை அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள்.
 இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தில், பெற்றவர்களுக்கென நேரத்தை ஒதுக்குவது இயலாத காரியம். அப்பாவுக்கு வயது 85 என்றால் அவர் மகன் 60-களில் இருப்பார். அவருக்கே உதவி செய்ய ஓர் ஆள் தேவைப்படும் நிலையில், எப்படி தந்தையை / தாயை ஓடிஓடி கவனிக்க முடியும்? வயதான பெற்றோரோ, பிள்ளை தன்னைக் கவனிக்க வேண்டியது அவன் கடமை என்று எண்ணுகிறார்கள்.
 காலத்திற்கேற்றவாறு, சூழ்நிலைக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. அவர்களின் வறட்டுப் பிடிவாதமும், "நாட்டாண்மை' குணமும் இங்கே பிரச்னை ஆகிறது.
 இன்னும் சிலர் தங்கள் சொந்த வீட்டில், அதனுடன் பின்னிப்பிணைந்த நினைவுகளுடன் வாழ்வதையே விரும்புகிறார்கள். யார் வீட்டிலும் இருக்க மறுக்கிறார்கள். ஊரில் அவர்கள் தனியாக சிரமப்படுவதைப் பிள்ளைகளால் ஜீரணிக்க முடியவில்லை. ஆகவே அவர்களைப் பார்த்துக் கொள்ள ஆள் தேடுகிறார்கள். உறவு வட்டத்தில் ஒருவரும் உதவ முன்வருவதில்லை. ஆகவே முதியோர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு ஆட்களைத் தருவிக்கிறார்கள்.
 இதில் என்ன பிரச்னை என்றால், நம் எதிர்பார்ப்பின் படியும், தேவையின் படியும் ஆள் அமைவது சிரமம். ஒரு 40 வயது பெண்மணியால் ஒரு முதியவரைப் பராமரிக்க முடியும். ஆனால் இணையவழி மூலம், அறிதிறன் பேசி மூலம் அவர்களுக்கு எதுவும் செய்யத் தெரியாது. அம்முதியவருக்கு சுகவீனம் ஏற்பட்டாலோ, கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டாலோ என்ன செய்வது என்று தெரியாது. முதியவர்களின் முழு நேரப் பாதுகாவலராக அவர்களால் தனியாக இயங்க முடியாது.
 அடுத்து நம்முடன் இருக்கும் முதியவருக்கு ஏதாவது அறுவை சிகிச்சை நடந்து அவர் வீடு திரும்பினால் அவரை ஒரு சில மாதங்களுக்கு உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து கவனிக்க முடியுமா? ஓரிரு மாதங்களுக்கென எவரை அமர்த்துவது?
 வெளிநாடுகளில் மருத்துவமனையில் இருந்து "கேர் ஹோம்' என்னும் மையத்திற்கு அவர்களை அனுப்பி விடுவார்கள். தொடர் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, உணவு, கவனிப்பு எல்லாம் அங்கு கிடைக்கும். அவர்கள் குணமான பின்னர் வீட்டுக்குத் திரும்பி தன் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். அதேபோல் இங்கே நம் நாட்டில் இருந்தால் பலரின் தவிப்புகளும், சிரமங்களும் தவிர்க்கப்படும்.
 முதியோர்களை நாம் உடன் வைத்துக் கொள்ளும்போது இன்னொரு பிரச்னையும் ஏற்படுகிறது. அவரைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு ஓரிரு நாட்கள் கூட ஓர் ஊருக்கோ, ஒரு சின்ன சுற்றுலாவுக்கோ, ஒரு திருமணத்திற்கோ போக முடியாது. இந்தப் புலம்பல் நாளடைவில் பெரிதாகும். சலிப்பும், மனக் கசப்பும் இங்கேதான் பிள்ளையார் சுழி போடும்.
 சிலருக்கு ஓரிரண்டு மாதங்கள் வெளிநாடு போக வேண்டிய நிலை வரும். முதியவர் அப்போது பாரமாகத் தெரிவார். வாய்ப்பை விடுவது மட்டுமே விடையாக இருக்கும். இத்தகைய சூழலில் சில தினங்கள் அவர்களை எங்காவது பாதுகாப்பாக விட்டுச் செல்ல நல்ல காப்பகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். பெரியவர்கள் உற்சாகமாகத் தங்கள் பொழுதைத் கழிக்க முதியோர் மையங்கள் முளைக்க ஆரம்பித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று.
 பல்வேறு துறைகளில் பட்டயப்படிப்பு இருப்பது போல "முதியோர் நலன் மற்றும் பராமரிப்பு சேவை' என்று ஒரு படிப்பைத் துவக்கலாம். முதியவர்களின் பிரச்னைகள் என்ன? அவர்களின் உளவியல், அவர்கள் உபாதை பற்றிய அறிவு, அலுவலக நிர்வாகம், திட்ட உணவு வல்லுநர், நிர்வாகத் திறன் மேம்பாடு போல முதியோர் பராமரிப்பை ஒரு துறையாக அங்கீகாரம் செய்து, மாணவ மாணவியரைத் தெரிவு செய்து அவர்களுக்கு முழு பயிற்சி அளிக்க வேண்டும். நேரடி பயிற்சி, செய்முறை பயிற்சி, தேர்வு எல்லாம் இருக்க வேண்டும். ஒற்றை ஆளாக அந்த முதியவரைப் பார்த்துக் கொள்ளும் முழு பயிற்சியும் தரப்படல் வேண்டும்.
 சமையல் உட்பட எல்லா வேலையையும் அவர்கள் செய்ய வேண்டும். வீட்டு நிர்வாகம் முழுமையையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் அந்த வீட்டின் ஓர் அங்கமாகவே மாறி உண்மையாக இருந்தால் முதியவரின் குடும்பமும் அவரை ஏற்றுக் கொள்ளும்.
 பயிற்சி பெற்று பணிக்கு வருபவர்கள் முதியோர்களைத் திறம்படக் கையாள்வார்கள். அவசரத்திற்கு முதலுதவி செய்து அவர்களைக் காப்பாற்றி விடுவார்கள். உள்ளார்ந்த அன்போடும், அக்கறையோடும் அவர்கள் பெரியவர்களைக் கவனித்துக் கொள்வார்கள். தங்களின் தாய் / தந்தை ஊரில் தனியாக இருக்கிறாரே என்ற கவலையில் இருந்து பிள்ளைகள் விடுபடுவார்கள். தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறோமோ என்ற மன உறுத்தலோ, குற்ற உணர்ச்சியோ இருக்காது. மன நிறைவுக்கு முன், பணம் பெரிதாகப் படாது.
 பொறியியல் படிப்பு முடித்து விட்டு, இருசக்கர வாகனங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் ஊழியர்களாக, சொற்ப சம்பளத்தில் பல தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பிள்ளைகள் என இப்போது பலருக்கும் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. பலருக்கு வேலையே இல்லை. முதியோர் பாதுகாப்பு படிப்பு கொணரப்பட்டால் நிறைய பேருக்கு அங்கீகாரத்தோடு கூடிய நல்ல வேலை கிடைக்கும்.
 நம் நாட்டின் முதியோர் மக்கள்தொகையில் முதல் இடத்தில் கேரளமும், இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது, தெரியுமா? சமுதாய மாற்றத்திற்கேற்ப புதிய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதன் மூலம் வேலைவாய்ப்புக்கான ஆயிரம் வாயில்கள் திறக்கும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT