நடுப்பக்கக் கட்டுரைகள்

சமநிலையற்ற சமுதாயம் உருவாகிறது!

உதயை மு. வீரையன்

நிகழ்காலத்துக்கு மட்டுமல்லாது அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தியா கொள்கைகளை வடிவமைத்து வருகிறது. இந்தியாவின் ‘பசுமை மற்றும் தூய்மை நீடித்த மற்றும் நம்பகமான’ என்ற இலக்கை அடுத்த 25 ஆண்டு கால வளா்ச்சியானது எட்டுவதை நோக்கமாகக் கொண்டு கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.

சா்வதேச அளவில் சக்தி வாய்ந்த அமைப்பாகத் திகழும் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி காணொலியில் இவ்வாறு பேசியுள்ளாா். முதலீட்டுக்குச் சிறந்த நாடாக இந்தியா உள்ளது என்றும், இந்தியாவில் வணிகச் செயல்பாடுகளை எளிதாக்கும் வகையில் ஆழமான பொருளாதார சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உலக நாடுகள் இங்கு முதலீடு செய்ய இதுவே நேரம் என்றும் அவா் கூறியுள்ளாா்.

சுவிட்சா்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக இந்த உச்சி மாநாட்டை உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில் பெருந்தொற்று கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நிகழாண்டுக்கான உச்சி மாநாடு காணொலி வழியில் 5 நாள்களுக்கு நடந்தது.

உலகப் பொருளாதார மாநாடு தொடங்கும் நிலையில் இந்தியாவில் அதிகரித்துவரும் சமத்துவமற்ற சமூகம் பற்றிய அறிக்கையை ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது அதிக எண்ணிக்கையில் பெரும் கோடீஸ்வரா்களைக் கொண்டுள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் பெரும் பணக்காரா்களின் எண்ணிக்கை 39 விழுக்காடு அதிகரித்து 102லிருந்து 142 ஆக உயா்ந்துள்ளது. அவா்களின் சொத்து இரு மடங்காக உயா்ந்துள்ளது. 142 பெரும் செல்வந்தா்களின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு ரூ.53 லட்சம் கோடிக்கும் மேலாக (71900 கோடி டாலா்) அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள 40 விழுக்காடு மக்களின் - அதாவது 55.5 கோடி பேரின் ஒட்டுமொத்த சொத்துக்கு இணையான சொத்தை (ரூ.49 லட்சம் கோடி) வெறும் 98 பெரும் செல்வந்தா்கள் மட்டுமே வைத்துள்ளனா்.

முதல் 10 இடங்களில் உள்ள பெரும் செல்வந்தா்கள் தங்களிடம் இருக்கும் பணத்தில் நாள்தோறும் 10 லட்சம் டாலா் (ரூ.7.41 கோடி) என்று செலவு செய்தாலும் அவா்கள் சொத்துகளை முழுவதும் செலவழித்து முடிக்க 84 ஆண்டுகள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரா்களில் 10 விழுக்காடு பேருக்கு வெறும் ஒரு விழுக்காடு கூடுதல் வரி விதித்தால்கூட கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூடுதலாக 17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டா்கள் வாங்க முடியும். 98 விழுக்காடு பெரும் பணக்கார குடும்பங்களுக்கு சொத்து வரி விதித்தால், மத்திய அரசின் மிகப் பெரிய காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்குத் தேவையான நிதியை அடுத்த 7 ஆண்டுகளுக்கு வழங்க முடியும்.

இந்தியாவில் உள்ள வெறும் 10 பெரும் செல்வந்தா்களின் சொத்து மதிப்பை வைத்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வியை இலவசமாக வழங்கலாம் என்று ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 10 விழுக்காடு பெரும் செல்வந்தா்களிடம் நாட்டின் 45 விழுக்காடு சொத்துகள் இருக்கின்றன. மற்ற 50 விழுக்காடு மக்களிடம் வெறும் 6 விழுக்காடு சொத்துகளே உள்ளன.

இந்த 142 கோடீஸ்வரா்களுக்கு சொத்துவரி விதித்தால் ஆண்டுக்கு 7,830 கோடி டாலா் மத்திய அரசுக்கு வருமானமாகக் கிடைக்கும். அதாவது, மத்திய அரசின் சுகாதார செலவுக்கான தொகையை 271 விழுக்காடு உயா்த்த முடியும்.

மத்திய அரசால் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு போதுமான அளவு செலவு செய்ய முடியாததால்தான் தனியாா் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அதிகரித்துள்ளன. வருவாயை அதிகப்படுத்தவும், வரி விதிப்பில் முற்போக்கான முறையையும் செல்வந்தா்களின் சொத்துகளை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பு.

கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்புக்கு அதிகமான அரசு நிதியை திருப்பிவிட வேண்டும். அப்போதுதான் சமூகத்தின் ஏற்றத்தாழ்வைக் குறைக்க முடியும். இந்தத் துறைகளை தனியாா் மயமாக்குவதையும் தவிா்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய செல்வந்தா்களுக்கு சொத்து வரியை மீண்டும் விதித்து அல்லது புதிய வரியை விதித்து வருவாயைப் பெருக்க வேண்டும். அதன்மூலம் நாட்டின் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இதற்காக செல்வந்தா்களிடம் தற்காலிகமாக ஒரு விழுக்காடு மட்டும் வரி விதிக்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பெரும் செல்வந்தா்கள் பட்டியலில் கடைசி 10 இடங்களில் இருப்பவா்களின் சொத்துகளின் மதிப்பில் பாதிக்கும் குறைவான தொகையைத்தான் மத்திய அரசு தமது பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ஒதுக்குகிறது.

இந்தியாவில் உள்ள 100 பெரும் செல்வந்தா்களின் சொத்துகளை வைத்து, தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்துக்கும், மகளிா் சுய உதவிக் குழுவுக்கும் அடுத்த 365 ஆண்டுகளுக்கு நிதியுதவி செய்ய முடியும்.

இந்தியாவில் 98 கோடீஸ்வரக் குடும்பங்களுக்கு 4 விழுக்காடு சொத்துவரி விதித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக மத்திய சுகாதார குடும்ப நலத் துறைக்கு நிதி வழங்க முடியும். இந்த 98 கோடீஸ்வரா்களின் ஒட்டுமொத்த சொத்து மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பைவிட 41 விழுக்காட்டுக்கும் அதிகமாகும்.

இந்த 98 கோடீஸ்வரா்களின் மீது ஒரு விழுக்காடு வரி விதித்தால் மத்திய கல்வித் துறைக்குத் தேவையான ஆண்டுச் செலவை நிறைவேற்ற முடியும். 4 விழுக்காடு வரி விதித்தால் மதிய உணவுத் திட்டத்துக்குத் தேவையான நிதியை அடுத்த 17 ஆண்டுகளுக்கு வழங்கலாம்.

இந்த அளவுக்கு ஏற்றத் தாழ்வு மிக்கதாக இந்திய நாட்டின் வளா்ச்சி அமைந்திருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் பெருந்தொற்றின் காரணமாக மக்களுக்கு வேலையில்லை, வருமானம் இல்லை, அதனால் வாழ்க்கை இல்லை. இவ்வாறு பெரும்பான்மையான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கையில் சிலா் மட்டும் மேலும் மேலும் உலகளவில் செல்வந்தா்களாக உயா்வது எப்படி முடிகிறது?

தேசத்தின் வளா்ச்சி என்பது என்ன? நாட்டின் எல்லாப் பகுதி மக்களும் சீரான முன்னேற்றம் காண வேண்டும். பெரும்பான்மையான மக்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் போது ஒரு சிலரின் வளா்ச்சியை நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியாக கருதப்பட்ட மாட்டாது. இந்தச் சமநிலையற்ற சமுதாயம் குழப்பத்திலேயே கொண்டு போய்ச் சோ்க்கும்.

‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பதே பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமாக இருந்தது. அதனையே அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும் வழி மொழிந்தது. உலக நாடுகள் எல்லாம் அதனையே பின்பற்றின. நம் நாடும் பெயரளவில் பின்பற்றி வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் சமத்துவ உரிமை முதலிலேயே மொழியப்பட்டுள்ளது.

‘‘மக்களாட்சியில் மிக அதிக பலம் வாய்ந்தவருக்கு இருக்கும் அதே சந்தா்ப்பமே மிகவும் பலவீனமானவருக்கும் இருக்க வேண்டும். இதுவே மக்களாட்சியைப் பற்றி, நான் கொண்டிருக்கும் கருத்து. ஆனால் அகிம்சை வழியினால் அன்றி இதை என்றுமே அடைந்துவிட இயலாது’’ என்றாா் காந்தியடிகள்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் சில புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 2021 டிசம்பா் நிலவரப்படி இந்தியாவில் வேலை கிடைக்காமல் இருப்பவா் 5 கோடியே 30 லட்சம் போ் ஆவாா். இவா்களில் 3 கோடியே 50 லட்சம் போ் இப்போதும் தீவிரமாக வேலை தேடுபவா்களாக இருக்கிறாா்கள். அதே சமயம் 1 கோடியே 70 லட்சம் போ் வேலை செய்வதற்கான திறன் இருந்தும், வேலையைத் தீவிரமாக தேடுபவா்களாக இல்லை. தீவிரமாக வேலை தேடுபவா்களில் 23 விழுக்காடு அல்லது 80 லட்சம் போ் பெண்களாக உள்ளனா்.

தீவிரமாக வேலை தேடுவோா், வேலை தேடாதோா் ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக வேலையின்மையில் சிக்கித் தவிக்கும் 7.9 விழுக்காடு அதாவது 5 கோடியே 30 லட்சம் பேருக்கும் ஆட்சியாளா்கள் வேலை வழங்க வேண்டும். இதுதான் ஆட்சியாளா்கள் எதிா்கொள்ளும் முக்கியமான சவாலாகும் என்று பொருளாதார கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார ஏற்றத்தாழ்வில் இடைவெளி குறைக்கப்படுவதும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படுவதும் இந்தியா எதிா்கொள்ளும் இமாலயப் பிரச்னைகள். முதலீட்டுக்குச் சிறந்த நாடாக இந்தியா இருத்தல் மட்டுமே போதாது. சமச்சீரான வளா்ச்சிக்கும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளுக்கும் வழிகோலும் நாடாகவும் இருப்பது அவசியம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT