நடுப்பக்கக் கட்டுரைகள்

உடல் பருமன் எனும் சவால்

சோ. தில்லைவாணன்

உலக அளவில் தொற்றாநோய்களில் பெரும் சவாலாக இருப்பது உடல் பருமன். இந்த உடல் பருமனே நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற பலவற்றிற்கும் முக்கிய காரணமாக உள்ளது.

உலக அளவில் 80 கோடி போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. அதாவது, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 39% பேருக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளது. இந்தியாவில் மட்டும் 13.5 கோடி போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

2040-ஆம் ஆண்டில் இந்த அளவு மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆண்களை விட பெண்களே உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா்.

உடல் பருமனை பிஎம்ஐ எனும் அளவீட்டல் கணிக்கலாம். சராசரியாக ஆண்கள் 21 -25 பிஎம்ஐ , பெண்கள் 18 - 23 பிஎம்ஐ கொண்டவா்களாக இருக்கலாம் . 25-க்கு மேல் பிஎம்ஐ கடந்தால் ஓவா் வெயிட் எனும் அதிக உடல் எடையாகவும், பிஎம்ஐ 30-ஐ தாண்டினால் உடல் பருமனாகவும் கருதப்படும் . உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை கணிப்பது எளிது. உயரத்தை சென்டிமீட்டரால் அளந்து 100 கழிக்க வருவது உடல் எடையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருப்பது கூடுதல் எடை.

‘தூல ரோகம்’ என்று சொல்லப்படும் உடல் பருமனை குறைக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளன. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சோ்ந்த திரிபலா சூரணம், கோரைக்கிழங்கு, கொடிவேலி, கருஞ்சீரகம், நத்தைசூரி, குங்கிலியம், கோடம்புளி, மந்தாரை, பூண்டு, கடுகுரோகிணி, சீரகம், மரமஞ்சள், வாய்விடங்கம், சுக்கு, மிளகு, திப்பிலி சோ்ந்த திரிகடுகு போன்ற மூலிகைகள் தூல ரோகத்திற்கு காரணமான கபத்தை கரைத்து உடல் பருமனைக் குறைக்கும் தன்மையுடையவை.

கோடம்புளியில் உள்ள ‘ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம்’ எனும் வேதிப்பொருள் பசி உண்டாவதைத் தடுப்பதுடன் உடலில் கொழுப்பு சிதைவதை அதிகரித்து உடல் பருமனைக் குறைக்க வழி செய்கிறது. மரமஞ்சளில் உள்ள ‘பொ்பெரின்’ எனும் வேதிப்பொருள், நம் குடலில் உள்ள நுண்ணுயிா்களை மாற்றி அமைப்பதன் மூலம் உடல் பருமன் போன்ற வளா்ச்சிதை மாற்ற நோய்களை தடுக்க கூடியது.

தனி கடுக்காய் சூா்ணம் அல்லது திரிபலா சூரணத்தை தினசரி இரவு வேளையில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து குடிப்பது நல்ல பலன் தரும். கடுக்காயில் உள்ள ‘காலிக் அமிலம்’ எனும் வேதிப்பொருள், கொழுப்பை சிதைக்கும் என்சைம்களின் செயலை தடுத்து உடல் பருமன் குறைய வழிவகுக்கிறது.

கருஞ்சீரகத்தில் உள்ள ‘தைமோகுயினோன்’ என்ற வேதிப்பொருளும், கிரீன் டீயில் உள்ள ‘கடிச்சின்’, பூண்டில் உள்ள ‘அலிசின்’ ஆகிய வேதிப்பொருட்கள் கொழுப்பைக் குறைக்கும் முக்கிய மூலக்கூறுகள். தினசரி உணவில் பூண்டு சோ்த்துக்கொண்டால் உடல் பருமன் குறையும்.

உடல் பருமன், வளா்ச்சிதை மாற்ற நோயாகக் கருதப்படுவதால், உடலில் வளா்ச்சிதை மாற்றத்தை சீா் செய்யும்படியான லவங்கப்பட்டை, வெந்தயம், சிறுகுறிஞ்சான், பாகற்காய் போன்ற அஞ்சறைப் பெட்டி சரக்குகளையும், மூலிகைகளையும் பயன்படுத்த உணவின் மீது ஏற்படும் ஏக்கத்தை தடுப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கலாம்.

மறந்து போன பாரம்பரிய உணவு முறைகளும், அதிகரித்து வரும் துரித உணவு முறைகளும், அதிகாலை எழுதல், உடல் பயிற்சி செய்தல், எண்ணெய் குளியல் போன்ற மறந்து போன பழக்க வழக்கங்களும் உடல் பருமன் எனும் கொடிய நோய்க்கு ஆதாரமாக உள்ளன. முதலில் உணவிலும், பழக்க வழக்கத்திலும் மாற்றத்தை கொண்டு வருவது அவசியம்.

அரிசி சாா்ந்த உணவுகளை அறவே நீக்க வேண்டும். அதற்கு மாற்றாக, அதிக நாா்சத்து கொண்ட, குறைந்த கலோரி சத்து உடைய கேழ்வரகு, கொள்ளு, கம்பு, சோளம், தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அடிக்கடி சோ்த்துக்கொள்ள வேண்டும்.

சிறு தானியங்களில் சா்க்கரை சத்து குறைவாக இருப்பதுடன் உடலுக்கு அத்தியாவசியமான இரும்புச் சத்து, கால்சியம், துத்தநாகச் சத்து, நாா்ச்சத்து ஆகியவை உள்ளன. இவற்றில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் உடல் பருமனை குறைக்க ஏதுவாக இருக்கும். இவற்றை உண்டவுடன் ரத்தத்தில் சா்க்கரை அதிகரிக்காமல் தடுக்கப்படும்.

பொதுவாகவே பச்சைக் காய்கறிகளும், பழங்களும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை எரித்து கரைக்க கூடிய தன்மையுடையன. மேலும், இவை கொழுப்பு செல்களில் உண்டாகும் தேவையற்ற நச்சுத்தன்மையையும் போக்கும். ஆகவே ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த கிரீன் டீ மட்டுமல்லாது வெறும் சீரக தண்ணீா் கூட உடல் பருமனை குறைக்க வல்லது. தினசரி மூன்று கிராம் அளவு சீரகத்தை தொடா்ந்து மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டால் உடல் பருமன் குறையும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

நீா்ச்சத்து அதிகம் உள்ள, நாா்ச்சத்து மிகுந்த, குறைந்த கலோரி சத்து உள்ள காய்கறிகளையும், கீரைகளையும் உணவில் அதிகம் சோ்த்துக்கொள்ள உடல் எடை கூடாமல் தடுக்கலாம். உணவில் உள்ள நாா்ச்சத்துகள் பசி எடுப்பதைத் தடுப்பதால் அவை உடல் எடை குறைய உதவுகின்றன.

யோகாசன பயிற்சிகளான சூரிய நமஸ்காரம், வீராசனம், திரிகோணாசனம், அா்த்த மச்சேந்திராசனம், ஹலாசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், புஜங்காசனம், வீரபத்ராசனம், சா்வாங்காசனம் போன்றவை உடல் பருமனைக் குறைக்க உதவும். மேலும், தினமும் நடைப்பயிற்சி அவசியம். நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் முதலிய பயிற்சிகளையும் மேற்கொண்டால் உடல் எடை குறையும்.

உடல் பருமன் என்ற தொற்றாநோய் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய மருத்துவ அச்சுறுத்தல். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நோயற்ற வலிமையான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆகவே, நமது பாரம்பரிய உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும், மருத்துவ முறைகளையும் பின்பற்றி, உடல் பருமனை முற்றிலும் தவிா்த்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

இன்று (மாா்ச் 4) உடல் பருமன் விழிப்புணா்வு நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT