நடுப்பக்கக் கட்டுரைகள்

மனநிலையைக் காட்டும் கையெழுத்து

முனைவர் மலையமான்

குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கிய காலத்தில் எழுத்துப் பயிற்சியும் தரப்பட்டது. அந்தக் குழந்தைகளின் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. ஆகவே, மணலில் விரலால் எழுதுவதற்கு குழந்தைகளுக்குப் பயிற்சி தரப்பட்டது. இந்த முயற்சி இப்போது இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனின் கையெழுத்து அழகாக அமைய வேண்டும் என்ற நோக்கம் தோன்றியது.

மாணவனின் கையெழுத்து அழகாக இருக்குமானால் விடைத்தாள் திருத்துபவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சரியான விடையைக் கோணல் மாணல் எழுத்தில் எழுதினால் மதிப்பெண் குறைவாகவே கிட்டும். இந்தக் காரணத்தைச் சுட்டிக் காட்டிப் பிள்ளைகள் அழகான எழுத்து எழுதும்படி தூண்டப்படுவார்கள்.

மோசமான கையெழுத்து தீமைகளைத் தரும். அஞ்சலில் அனுப்பப்படும் கடிதங்களில் முகவரி கிறுக்கல் எழுத்தாக இருக்குமானால், அது உரியவருக்குக்  கிடைக்காது. கடிதத்தில் இருக்கும் முக்கியமான் செய்தி, உரியவருக்கு எட்டாது. அதனால் மோசமான விளைவும் எழக்கூடும். 
சிறுவர்கள் பல மணி நேரம் விளையாடுகின்ற விடியோ விளையாட்டு காரணமாக கையெழுத்து பாதிப்பு நிகழ்கிறது. தொலைக்காட்சியை நெடுநேரம் பார்க்கும் செயலால் உள்ளம் பாதிக்கப்படுகிறது. இதனால், அழகான கையெழுத்து ஒழுங்கற்றதாக மாறிவிடுகிறது என்று ஆய்வாளர் மோகன் போஸ் எடுத்துரைத்தார். இவர் கொல்கத்தா கையெழுத்து நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர். 

தாளின் நெடுக்கை நேர்கோட்டை ஒட்டியே வாக்கியத்தைத் தொடங்கி எழுத வேண்டும். அப்படிச் செய்யாமல் சற்றுத் தள்ளித் தள்ளிச் சிலர் எழுதத் தொடங்குவார்கள். இப்படி எழுதும் பழக்கம் அவசரப் புத்தி கொண்டவன் அவன் என்பதை வெளிப்படுத்தும். படுக்கைக் கோட்டின் மேல் எழுதுவதே முறை. அப்படி எழுதாமல், கோட்டிற்கு அப்பாலும் அதன் கீழேயும் சிலர் எழுதுவார்கள் இப்படி எழுதும் பழக்கம். அவன், கவனத்தை நிலை நிறுத்தும் தன்மையற்றவன் என்பதைப் புலப்படுத்தும். மேற்சொல்லப்பட்ட கருத்துகளையும் அந்த அறிஞர் மோகன் போஸ் அறிவித்தார்.
கையெழுத்து ஒருவனுடைய மனப்பாங்கை வெளிக்காட்டும் என்று பாலா ஜூன் ஸ்லைர் என்ற கையெழுத்தியல் அறிஞர் அறிவித்துள்ளார். இவர் அமெரிக்காவிலுள்ள "ஐடென்டிடி அசோசியேட்ஸ்' என்ற நிறுவனத்தின் தலைவர். இவர் கையெழுத்தியல் ஆய்வாளர் மட்டுமல்ல; உளவியல் அறிஞரும் ஆவார். கையெழுத்து உளவியலுடனும் தொடர்பு உடையது என்று அவர் தெரிவித்தார்.

வாரப்படும் தலைமுடி, அணியப்படும் மூக்குக் கண்ணாடி, உடுத்தப்படும் உடை முதலிய புறத்தோற்றம், ஒருவனுடைய மன நிலையைப் புலப்படுத்திவிடும். இவை புறநிலை அறிகுறிகள். அவன் பார்க்கும் பார்வை, பேசும் சொற்கள், நடக்கும் நடை, நிகழ்த்தும் செயல் ஆகியவையும் அவனுடைய மனநிலையை வெளிப்படுத்தும். இவை அகநிலை அறிகுறிகள். அவனுடைய கையெழுத்தும் அவனின் மனப்பான்மையைத் தெரிவிக்கும்.
ஏற்கெனவே அச்சான தொடர்மொழிகளைப் படிஎடுப்பது போல் எழுதப்படும் கையெழுத்து, மேற் சொல்லப்பட்ட மன இயல்புகளை வெளிப்படுத்தாது. ஒருவன் தானாக எண்ணி எழுதும் கையெழுத்துதான் அவனுடைய மனப்பான்மையை மறைமுகமாக வெளிப்படுத்தும். ஒரு சில சொற்கள் மட்டுமே இந்த ஆய்வுக்கு உதவாது. எழுதப்படும் நூறு சொற்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த ஆய்வு நடைமுறையை பாலா ஜூன் ஸ்லைர் கூறினார்.

"எழுத்தை லேசாக எழுதாமல் அழுத்தம் திருத்தமாக எழுதுபவர் மன அழுத்தம் உடையவர்; கோணல் மாணலாக எழுதுபவர் ஒழுங்கில்லாத மனிதர்; குண்டு குண்டாக எழுதுபவர் இரக்க குணமும் தாராள மனமும் கொண்டவர்; கூர்மைப் போக்கில் எழுதுபவர், பிடிவாதக்காரர்; இடப்பக்கம் சாய்வாக எழுதுபவர் பிறருடன் மனம் கலந்து பழகும் இயல்பு இல்லாதவர். எழுத்துகளை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுபவர் நட்புறவு மனம் கொண்டவர்' என்று கையெழுத்தியல் ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலும் பல துறைகளில் கையெழுத்து உதவி புரிகிறது. போலிக் கையெழுத்தைக் கண்டு பிடிப்பதற்கு அது துணை நிற்கிறது. ஒருவரின் உயில், ஒருவருக்கு வரும் மிரட்டல் கடிதம் ஆகியவற்றின் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்கும் அது உதவி புரிகிறது.  

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது, காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்கட்டிலும், சபர்மதி ஆசிரமத்திலும் அவர் தன் கருத்தை எழுதினார். தன் கையொப்பத்தையும் இட்டார். அவற்றை வி. கபில் என்ற அறிஞர் ஆய்வு செய்தார். அதன் மூலம் டிரம்ப்பின் பண்பியல்புகளை அறிவித்தார்.

"வழக்கமாக எழுதப்படும் ஆங்கில இணைப்பு எழுத்துகளை எழுதாமல் தனித்த தலைப்பெழுத்துகளையே (கேபிட்டல் லெட்டர்ஸ்) அவர் எழுதியிருந்தார். மற்றவரின் வழக்கமான போக்கைக் கொள்ளாமல், தன் விருப்பப்படியே தனிப்பட்ட போக்கில் நடப்பவர் டிரம்ப் என்பதை அவருடைய கையெழுத்து வெளிப்படுத்தியது. தன் புறத்தோற்றத்தில் கவனமாக இருப்பவர் என்பதையும் அது அறிவித்தது. 

அவருடைய எழுத்துகள் சாய்வாக இல்லாமல் நேராக இருந்தது, அவர் நடைமுறைச் செயல் சிந்தையர் என்பதையும், வணிக நோக்கம் உடையவர் என்பதையும் காட்டியது. மேலோட்டமாக எழுதாமல் அழுத்தமாக எழுதப்பட்டிருந்த எழுத்து, அவர் பொருத்தமான உடல் நலம் உடையவர்; தன் கொள்கையைத் திணிக்கும் போக்கினர் என்பதைத் தெரிவித்தது. தொடர் மொழியில் சரியான இடத்தில் இடப்பட்ட புள்ளிகள், அவர் நேரக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர் என்பதை உணர்த்தியது. 
வாக்கியத்தின் முடிவில், முற்றுப் புள்ளிக்கு பதிலாக வியப்புக்குறி (!) போட்டிருந்த நிலை, அவர் தன் கருத்தை வலியுறுத்தும் மனப்பான்மை கொண்டவர் என்பதை எடுத்துரைத்தது. வரிசையாக நின்று கொண்டிருக்கும் போர் வீரர்கள் போன்ற எழுத்துகள் ஒரு செயலை முடிப்பதற்கு அவர் வலிமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவார் என்பதை வெளிக்காட்டியது. இந்தியா என்ற சொல்லின் கீழ் அடிக்கோடு போட்டிருந்த அவருடைய முறை, இந்தியா மீது அவர் வைத்திருந்த உறவுநிலையை விளம்பரப்படுத்தியது' இவ்வாறு கூறினார். அறிஞர் கபில் அறிவித்த இந்தக் கருத்துகள் அனைத்தும் சரியாகவே இருக்கின்றதல்லவா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT