மனித உடலில் நாக்கு மிக மிக முக்கியமான உறுப்பு. நாக்கு இல்லாவிட்டால் மனிதனால் பேச முடியாது. ஆனால் அந்த நாக்கு எப்படியெல்லாம் பேசுகிறது? அன்பாய், ஆறுதலாய், இனிமையாய், பணிவாய் பேசும். ஆங்காரமாய், அருவருப்பாய், அடக்கமில்லாமல் கொக்கரிக்கும். வெறுப்பை உமிழும், அனல் கங்குகளாய் வார்த்தைகளைக் கக்கும். மென்மையான மனங்களை சுடுசொற்கள் பேசி வதைக்கும். மெய்யை மறைத்து பொய் பேசும். வீண் அபவாதம் கூறி மலைகளை சாய்க்கும். மனங்களை உடைக்கும். மகான்களையும் இழிவு படுத்தும்.
சென்னையில் நடந்த ஒரு சம்பவம். சாலையில் கார்கள் முந்திச் செல்வதில் தகராறு வந்து விட்டது. தகராறில் ஈடுப்பட்டவர்கள் பெரும்புள்ளிகள் என்பதால் ஊடக வெளிச்சம் பட்டு விட்டது. இரு தரப்பினரும் சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்திருக்கிறது. போலீஸ் வந்து வழக்குப் பதிவு செய்து விட்டது. அற்ப காரணத்திற்காக கோபம். அந்தக் கோபம் இடம், பொருள், ஏவல் எல்லாவற்றையும் மறக்க வைத்துவிட்டது. "ஒருவர் பொறை இருவர் நட்பு' என்பதை இருவரும் எண்ணிப் பார்க்கவில்லை.
சிலருக்கு ஏனோ சண்டை போடப் பிடிக்கிறது. பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை; அலுவலகத்தில் உடன் பணிபுரிவோருடன் சண்டை; உறவினருடன் சண்டை; வெளியே எங்கு சென்றாலும் அங்கே ஒரு சண்டை இப்படி எங்கு சென்றாலும் சண்டை போடுகிறார்கள்.
நியாயமாகப் பேசுபவர்களுடம் வாதம் செய்யலாம். ஆனால் வீம்புக்கு என்றே விவாதம் செய்பவர்களிடம் பேச முடியாது. சிலருக்கு அப்படி ஒரு பேச்சு வன்மை இருக்கிறது. அவர்கள் அநியாயத்தை நியாயப்படுத்திப் பேசுவார்கள். எப்போதும் ஏதாவது குற்றம் கண்டுபிடித்து வம்பு வளர்ப்பார்கள்.
நாம் எந்த அர்த்தத்தில் சொன்னோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் திட்டுவார்கள். அவர்களுக்கு எந்த நியாயங்களும் இல்லை; தர்மங்களும் இல்லை. அவர்களிடம் வாயில்லாப் பூச்சிகளைப் போன்றவர்கள் மாட்டிக் கொண்டால் அவர்கள் மனதைக் கிழித்துக் குதறி விடுவார்கள். அவர்களுடன் ஒருவராலும் பேசி ஜெயிக்க முடியாது.
அப்படிப் பேசுபவர்களுக்குத் தெரியும் தாங்கள் கூறுவது அப்பட்டமான பொய் என்று. ஆனாலும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசுவார்கள். ஒரு பொய்யை மெய் போல சித்திரித்து உண்மை என்று சத்தியம் செய்வார்கள். பார்க்காததைப் பார்த்ததாகவும், நடக்காததை நடந்ததாகவும் கூறுவார்கள். எப்போதோ நடந்ததையெல்லாம் சொல்லி சண்டை போடுவார்கள். கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்து விழும். அவர்கள் கூறும் அபாண்டத்தைக் கேட்டு நாம் வாயடைத்துப் போய் நிற்போம்.
நன்கு படித்தவர்கள் கூட, சண்டை என்று வந்து விட்டால் தரம் தாழ்ந்துவிடுவார்கள். அநாகரிகமாகப் பேசுவார்கள். வெறுப்பை உமிழ்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் விலகிப் போய் விட வேண்டும். அவர்கள் பேசும் வார்த்தைகளை மனதில் வாங்கிக் கொள்ளாமல் புறம் தள்ளி விட வேண்டும்.
ஒருவன் புத்தரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டினான். புத்தரோ ஒன்றுமே பேசாமல், கோபம் கொள்ளாமல் புன்னகையுடனே இருந்தார். அந்த ஆள் சென்ற பின் அருகில் இருந்த சீடன் புத்தரிடம் கேட்டான் "அவன் இவ்வளவு மோசமாகப் பேசினான்; ஏன் நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை?' புன்னகை மாறாமல் புத்தர் கேட்டார், "உன்னிடம் ஒருவர் சில பொருள்களைக் கொடுக்கிறார் என வைத்துக் கொள்வோம். நீ அவற்றைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அப்பொருள்கள் யாரிடம் இருக்கும்?'
சீடன், "அந்த மனிதரிடம் தான் இருக்கும் குருவே' என்றான். புத்தர் "அது போல் தான் அவன் பேசிய வார்த்தைகளை நான் என் காதுகளில் வாங்கிக் கொள்ளவே இல்லை. நான் பெற்றுக் கொள்ளாததால் அவை அவனிடம்தான் இருக்கும்' என்றார். இதை நம் நினைவில் எப்போதும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சிலர் கோபத்தில் வார்த்தைகளை விட்டு விடுவார்கள். அந்த வார்த்தைகள் கேட்பவர் மனதில் வடுக்களாகத் தங்கிவிடும். அதற்குப் பின் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் சரியாகாது. உடந்த கண்ணாடிப் பாத்திரம் போல ஒட்டாமல் விரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
இன்னும் சிலர் நம்மிடம் அன்பாகப் பேசுவார்கள். அவர் மிகுந்த அக்கறையுடன் பேசுவதாக நமக்குத் தோன்றும். ஆனால் அத்தனையும் வேஷமாக இருக்கும். நம்மைப் பற்றி இவர்கள்தான் அதிகம் புரளி பேசுவார்கள்; குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
சிலர் நம்மிடம் குழைவாகப் பேசி "போட்டு வாங்குவார்கள்'. இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களை நம்பி யாரைப்பற்றியாவது வெளிப்படையாகப் பேசினால், இவர்கள் போய் அந்த நபரிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவார்கள்.
அடுத்து தொலைபேசியில் பேசுபவர்கள். தொலைபேசி என்பது முக்கியமான, அவசியமான செய்திப் பரிமாற்றத்திற்கான அறிவியல் சாதனம். வெட்டிக் கதை பேச அல்ல. சிலரோ மணிக்கணக்கில் பேசுகிறார்கள். தேவையில்லாமல் பேசுகிறார்கள். நமக்கு வேலை இருக்குமே என்று யோசிக்க மாட்டார்கள். அந்த சமயத்தில் பல அவசர அழைப்புகளை நாம் தவற விட்டிருப்போம். நேரம் பொன்னானது. அதை அறியாதவர்களால் தொலைபேசி "தொல்லைப் பேசி' ஆகி விடுகிறது.
ஆனால் எல்லாருமே இப்படியல்ல. தங்கள் பேச்சுத் திறத்தால் நம்மைக் கிறங்க வைத்தவர்கள் பலர். அவர்களுடைய அறிவார்ந்த பேச்சைக் கேட்பது சுகம். நாநயம் மிக்க அவர்களின் பேச்சில் உணர்வின் வீச்சும், உயிரின் கதகதப்பும், அறிவின் தெறிப்பும் சுடர் விடும்.
அரசியல் கூட்டங்களைப் பொறுத்தவரை, மாற்றுக் கட்சியினரை மதித்தது, எதிர்க்கட்சியினரை சாடும்போது தரம் தாழாதது போன்ற பண்புகள் இன்றைய அரசியல் கூட்டங்களில் பெரும்பாலும் இல்லை. வசை பாட ஒரு மேடை; வாய்க்கு வந்ததையெல்லாம் பேச சில பேர்.
மேடையும் ஒலிபெருக்கியும் கிடைத்து விட்டால் சிலர் லேசில் ஓய மாட்டார்கள். கூட்டம் சலிப்படைந்து நெளியும்; நிகழ்ச்சி அமைப்பாளர் இன்னும் பலர் பேச உள்ளார்களே என தவிப்பார். பேச்சை முடித்துக்கொள்ளுமாறு துண்டுச்சீட்டு கொடுத்தனுப்புவார். ஆனால் பேச்சாளரோ நிறுத்த மாட்டார்.
"இறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்' என்பார். கூட்டத்தில் நிம்மதிப் பெருமூச்சு எழும். ஆனால் அவர் முடிக்க மாட்டார். ஆனால், மற்றவர்கள் பேசும்போது இவர்கள் கடிகாரத்தைப் பார்ப்பார்கள் இதுதான் சிலரின் சுபாவம்.
அரசியல்வாதிகள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வாக்கு வன்மை முக்கியம். அதே போல் விற்பனை பிரதிநிதிகளுக்கும் கூட. தேர்ந்த விற்பனையார் கடற்கரை மணலைக்கூட விலைபேசி விற்கும் திறமை படைத்தவர்.
அரசியல்வாதிகளும் வழக்குரைஞர்களும் பேசும்போது அவர்கள் கூறுவதுதான் சரி, அதுவே நியாயம், அதுவே தருமம் என்று தோன்றும். அதனால்தான் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்து போகிறார்கள். நிரபராதி தண்டிக்கப்படுகிறான், குற்றம் இழைத்தவன் தப்பி விடுகிறான். பொய் பேசுவதற்கு அவர்களுக்கு நாம் பணம் தருகிறோம். அவர்கள் பேசுவதை "பேச்சுக் கலை' என்கிறோம்.
சண்டை வரும் போது நமக்கு கோபம் வருகிறது. கோபம் நம் அறிவிலும், உடலிலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. கோபத்தில் தன் நிலை மறந்து பேசுபவர்கள் உண்டு. அப்போது என்ன பேசுகிறோம், எவரிடம் பேசுகிறோம், அதன் பின்விளைவு என்ன என்று மனமும், மூளையும் சிந்திப்பது இல்லை.
புலியின் கூரிய நகங்களை விடவும், கழுகின் கூரிய அலகையும் விட, வெட்டுக்கத்தியின் கூர்மையை விடவும் இவர்கள் நாக்கு கூர்மையானது; அதிக காயத்தை உண்டாக்கக்கூடியது. பதிலுக்கு வாயாடத் தெரியாதவர்கள் சக்கரவியூகத்தின் உள்ளே மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாதவர்களாகி விடுவார்கள்.
பொதுவாக சண்டை என்று வந்து விட்டால் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை. இரு சாராரும் பிளந்து கட்டுகிறார்கள். சில வியாபாரிகளிடம், போய் விலை கேட்டு விட்டு "அதிகம்' என்று வாங்காமல் வந்து விட்டால் போச்சு. அவர்கள் வசை பாடுவார்கள். மிகவும் கேவலமாகத் திட்டுவார்கள். அவர்களிடம் வாயைக் கொடுக்காமல் வந்து விடுவதே உசிதம்.
எதற்கும் எதிர்வினை ஆற்றாமல், எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் மெளனம் காப்பதுதான் நல்லது. சீறும் பாம்பிடம் போய் அன்பை போதிக்க முடியுமா? சிலரின் இயல்பே அப்படித்தான் என உணர்ந்து, தெளிந்து அவர்களிடம் இருந்து விலகி இருப்பது மட்டுமே நமக்கான தீர்வு. காலம் அவர்களை மாற்றும் என்றோ கடவுள் நல்ல புத்தியைக் கொடுப்பார் என்றோ அவரவர் நம்பிக்கையில் அவரவர் வழி செல்வோம். சேற்றின் மீது கல் எறிந்தால் நாம் அழுக்காகி விடுவோம்.
வார்த்தைகள் பலம் மிக்கவை; சக்தி வாய்ந்தவை. நாவினால் ஒருவரையும் சுட வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். வாழ்க்கை என்பது நாம் மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் காலம் வரையே. ஆகவே குறுகிய வாழ்வில், நிலையில்லாத வாழ்வில் பிறர் மீது கசப்பும் வெறுப்பும் ஏன்? காழ்ப்புணர்ச்சி ஏன்? துவேஷம் ஏன்? கனி இருப்ப காயை ஏன் சுவைக்க வேண்டும்? ஒருவர் தன் நாவை அடக்கக் கற்றுக் கொண்டால் பல பூசல்கள் தடுக்கப்படும். அன்பு அரசாளும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.