நடுப்பக்கக் கட்டுரைகள்

குற்றமும் தண்டனையும்

இரா. மகாதேவன்

அண்மையில் (ஆகஸ்ட் 1) தமிழகத்தின் இருவேறு நீதிமன்றங்களில், இருவேறு வழக்குகளில் ஒரே மாதிரியான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது நம் சிந்தனையைக் கிளறுகிறது.

மாற்றுத்திறனாளியான தனது மகனை கொலை செய்ததற்காக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்ததற்காக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

அதே போல, தனது நான்கு வயது மகளை விஷம் கொடுத்து கொன்றதற்காக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயதான கூலித் தொழிலாளி பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கொலைகளுக்கான பின்னணியை நாம் புரிந்துகொள்வது அவசியம். திருச்சியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 20 வயது மகன் ஒரு விபத்தில் சிக்கி படுத்தபடுக்கையாகி விட்டார். சக்கர நாற்காலியும், படுக்கையுமே அவரது வாழ்க்கையாக இருந்திருக்கிறது. 

பெற்றோர் அவரைப் பராமரித்துள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், மனைவி தாய் வீட்டுக்கு சென்றுவிட, மகனை கவனித்துக்கொள்ள முடியாமல் அந்தத் தொழிலாளி தவித்துள்ளார். இதையடுத்து, மகனின் நிலையை காணமுடியாமல், அவனை கருணை கொலை செய்ய முடிவெடுத்து அதனை நிறைவேற்றியும் விட்டார். 

மகனின் உடலை அங்குள்ள கழிவுநீர்த் தொட்டியில் மறைத்துவிட்டு சென்றுவிடுகிறார். இப்போது அவருக்கு கொலைக்காக ஆயுள்தண்டனையும், தடய மறைப்புக்காக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

காங்கயம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெண்ணின் நிலையும் இதேபோன்றதுதான். தனது கணவர், மகன், மகள் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார். விதிவசத்தால், கடந்த 2015-இல் கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட, மற்றொரு விபத்தில் மகனும் இறந்துவிடுகிறார். நான்கு வயது பெண் குழந்தையுடன் நிராதரவாக நின்ற அந்தப் பெண் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துவிடுகிறார். 

இதனால், குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை உட்கொண்டார். ஆனால், குழந்தை இறந்துவிட, அந்தப் பெண் காப்பாற்றப்படுகிறார். சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவருக்கு மகளைக் கொன்றதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு குற்ற வழக்குகளிலும் அளிக்கப்பட்டுள்ள தண்டனை பொதுமக்களின் பார்வையிலும், சட்டத்தின் பார்வையிலும் சரியானதுதான். ஆனால், சட்டத்துக்கு அப்பாற்பட்டு சில பார்வைகளை நாம் செலுத்துவது தவறாக இருக்காது. 

இந்தப் பெற்றோர் இருவரும் தங்களின் பிள்ளைகளை மிகவும் நேசித்தவர்கள். அவர்களின் பசியையும் துன்பத்தையும் பார்க்கமுடியாமல் தவித்தவர்கள். தங்களாலேயே கவனித்துக்கொள்ள முடியாத அவர்களை வேறு யார்தான் பார்த்துக்கொள்வார்கள் என தங்களது சுற்றத்தின் மீதும் இந்த சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை இழந்தவர்கள். 

தங்கள் குழந்தைகளைக் கொல்வதன் மூலம் எந்த ஆதாயத்தையும் அடைய நினைக்காதவர்கள் அவர்கள். மேலும், அவர்களின் கடந்தகால வாழ்க்கையில் இந்த சமுதாயத்திற்கு எந்தத் தீங்கும் செய்யாதவர்கள். அதோடு, பிள்ளைகளைக் கொன்ற குற்ற உணர்வில் நடைப்பிணமாக வாழும் நிலையில் உள்ளவர்கள்.

இதனால், அவர்களுக்கான சிறைத்தண்டனை, அவர்கள் மனதால் அனுபவிக்கும் தண்டனையைவிட பெரிதாக இருந்துவிடும் என்று தோன்றவில்லை. அவர்களுக்கு தண்டனையே அளிக்கக்கூடாது என்பது நம் வாதமல்ல. அந்த தண்டனை உளவியல் ரீதியாக அவர்களைப் பண்படுத்தி, இந்த சமுதாயத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்துவதாக இருந்திருக்கலாம் என்பதுதான் நம் ஆதங்கம். 

பொதுவாக, பெற்றோர் சம்பாதித்த சொத்தை தங்களின் ஆடம்பர செலவுக்காக பிரித்துத் தராத தாய், தந்தையரைக் கொன்ற பிள்ளைகள் ஏராளம். அதே நேரத்தில், சொத்து கேட்டார்கள் என்று, எந்தப் பெற்றோரும் பிள்ளைகளைக் கொன்றதில்லை. 

இன்னும் சொல்லப்போனால், தங்களிடம் உள்ள கடைசி பைசா வரை பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு, தங்களின் அந்திம காலத்தில் சாப்பாட்டுக்காக பிள்ளைகளிடம் கையேந்தி நிற்கும் பெற்றோரே அதிகம். அதனால்தான், 'பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' என்ற சொலவடையே ஏற்பட்டது. 

முறைதவறிய உறவுக்கு தடையாக இருந்த தங்கள் பிள்ளைகளைக் கொன்ற சில தாய், தந்தையரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இந்த சமுதாயத்தின் புரையோடிப்போன புண் போன்றவர்கள். அவர்களுக்கு தண்டனை இல்லாவிட்டால், புரையோடிய புண் உறுப்புகளை அழித்துவிடுவதுபோல, இந்த சமுதாயத்தை சிறிது சிறிதாக அழித்துவிடுவார்கள். 

அதேநேரத்தில், இவர்களுக்கும், தங்களால் சமுதாயத்திற்கு ஏதேனும் ஆதாயம் இல்லாத நிலையில் அல்லது தொந்தரவு ஏற்படுவதாக கருதும் நிலையில், அதிலிருந்து தாமாக ஒதுங்கிவிடத் துணியும் மேற்கண்ட இரண்டு பெற்றோர் போன்றவர்களுக்கும் ஒரே மாதிரியான தண்டனை என்பது சரியானதுதானா என்பதை பொதுமக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள் ஆராய வேண்டும்.

வாழ்வில் நம்பிக்கை இழந்த இது போன்ற பெற்றோருக்கு இந்த சமுதாயம் நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். எஞ்சிய அவர்கள் வாழ்நாளை குற்ற உணர்வோடு சிறையில் கழிக்கச் செய்யாமல், இந்த சமுதாயத்திற்கு பயனுள்ளதாக மடைமாற்றம் செய்யவேண்டும்.

ஆதரவற்று அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கும், ஏதேனுமொரு சூழலில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கும் பாதுகாவலராக மாற்ற வேண்டும். அரசு சேவை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பெரிய நூலகங்கள், காந்தி ஆசிரமம் போன்ற இடங்களைப் பராமரிக்கும் பணிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். 

இது போன்ற அரிதினும் அரிதான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சமுதாயமும், நீதிமன்றங்களும் நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையூட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT