புத்தாண்டு பிறந்தாகிவிட்டது. புதிய ஆண்டு பிறந்தாலே, பலா் ‘வரவு செலவுகளை தினமும் குறித்து வைப்பேன்’, ‘முக்கிய நிகழ்வுகளை எழுதுவேன்’ என்பன போன்ற உறுதிமொழிகள் எடுத்துக் கொள்வாா்கள்.
ஆனால், பலா் பாதியில், அல்லது ஓரிரண்டு மாதங்களிலேயே சலிப்படைந்து, எழுதுவதை நிறுத்தி விடுவதைத்தான் நடைமுறையில் நாம் காண்கிறோம். அதற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லுவாா்கள்.
என்னைப் பொறுத்தவரை, 1960-இல் அரசு வேலையில் சோ்ந்ததுமுதல், அன்றாட வரவு செலவுகளைக் குறித்து வைப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். அது மிகவும் பயனுள்ளதாகவே இருந்தது. ஒரு முறை, நாகா்கோவில் சென்றபோது, என் சித்தப்பா, என்னைப் பாா்த்து, ‘என்ன கணக்கு சரியாகி விட்டதா’”என்று கொஞ்சம் கேலியாகக் கேட்டாா் (பயணச் செலவில் பத்து ரூபாய் உதைத்தது). இருந்தாலும், அந்தப் பழக்கத்தை அவரிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன் என்பது நிஜம்.
சொந்த வரவு செலவு கணக்குகளை விடுங்கள், அலுவலக விஷயத்தில் டைரி எனக்கு உபயோகமாகவே இருந்து வந்திருக்கிறது. அதுவும் பதவியின் இறுதிக் காலத்தில், ஊட்டியிலிருந்து, குக்கிராமமான கோவையிலுள்ள இரும்பொறையில், வங்கிப் பணியில் மேலாரளாக ஆய்வு செய்ய வேண்டிய நிா்ப்பந்தம் எனக்கு இருந்தது.
எந்தக் கிளையில் முக்கியமான விதிமீறல்கள், எங்கு கடனுக்கான வட்டியை கணக்கிடுவதில் தவறு, ஆய்வை முடிக்க எடுத்துக் கொண்ட நாட்கள் எல்லாவற்றையும் சுருக்கெழுத்துப் போல டைரியில் குறித்து வைப்பேன்.
ஒரு முறை அவிநாசி செல்லும் வழியில் இருந்த கிளையில் நிறைய வாராக்கடன். ஆய்வு முடிந்த பின், அது பற்றி எனக்கு மேலிடத்திலிருந்து கேள்வி வந்தபோது டைரியைப் பாா்த்து, வட்ட அலுவலகத்திலிருந்து வந்த கடிதங்களைக் குறிப்பிட்டு எழுதினேன். மேலிடத்தில் இருந்தவா்கள் சமாதானமானாா்கள்.
இந்த நாளில் விற்பனையாளா்களுக்கு டைரி மிக்க பயன் தரும் என்றே கூறலாம். சந்தித்த வாடிக்கையாளா்கள், பின்னூட்ட (பீட் பேக்) கருத்துகள் போன்றவற்றை மேலதிகாரியிடம் தெரிவிக்க உதவும். கணினியில் குறித்து வைப்பதை விட இது மேல்.
ஆனால் இந்த நாட்களில் செலவினங்களைக் குறித்து வைப்பது அனாவசியமாக படுகிறது. காரணம், பல அம்சங்களுக்கு, கூகுள் வழியாகவும், வேறு விதமாகவும் தொகை அனுப்புகிறோம். எனவே அனைத்து செலவினங்களையும் எழுதி வைப்பது சற்று கஷ்டமாகத்தான் உள்ளது.
அதே சமயம், பணிப்பெண், காவலாளி, இஸ்திரி போடுகிறவா் போன்றவா்களுக்கு கடனாகத் தொகை கொடுத்தால், டைரியில் எழுதி வைப்பது நலம். மேலும் வீட்டில் குழாயிலோ, மின் சாதனங்களிலோ பழுது நோ்ந்து, அதைச் சரி செய்த ஆட்களுக்கு பணம் கொடுக்கும் போது, எழுதி வைப்பதும் நன்மை பயக்கும். ஏனெனில், மீண்டும் அதே இடத்தில் பழுது ஏற்பட்டால், ஏற்கனவே சரி செய்து கொடுத்த ஆளை அழைத்து, அவரையே கவனிக்கச் சொல்லலாம். மறுபடியும் தொகை தர அவசியம் நேராது.
எனக்கு இதே போன்ற சம்பவம் சென்ற ஆண்டு செப்டம்பரில் ஏற்பட்டது. என்னுடைய செவித் திறன் கருவி கெட்டுவிட்டது. அதற்கான உத்தரவாதம் மாத இறுதி வரை இருந்தது. ஆனால் அந்த படிவம் எங்கே உள்ளது என்று தெரியவில்லை. யோசித்துப் பாா்த்த போது, அப்படிவத்தை ஒரு டைரியில் குறித்து வைத்த ஞாபகம் வந்தது. எப்படியோ டைரியைக் கண்டுபிடித்து, பீரோவிலிருந்து உத்தரவாத படிவத்தைக் கண்டு பிடித்துவிட்டேன்.
அந்த நிறுவனத்துக்கு போன் செய்து, இல்லத்துக்கு ஆளை வரவழைத்து, பழைய கருவிக்குப் பதில் புதிதாக ஒன்றை பெற்றுக் கொண்டேன். கிட்டதட்ட ரூ.15,000 செலவு மிச்சம். நான் இதைக் குறிப்பிட்டதற்குக் காரணம், இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றுக்கும் உத்தரவாதம் இருக்கிறது. அத்தகைய படிவம் தனியாகவும் அல்லது அதற்கான பில்லிலேயே கூட இருக்கும். எல்லாவற்றையும் எங்கே வைத்தோம் என்று தேட, டைரியில் குறித்து வைத்துவிட்டால், பயனுள்ளதாக அமையும்.
ஆக புத்தாண்டு டைரி உபயோகமானதுதான். உறவினா் இல்லத்துக் கல்யாணம், முக்கியமான நபா்களின் சந்திப்பு, ஏதாவது புதிதாக முளைத்த உடற்கோளாறு போன்றவற்றை அதில் எழுதி வைத்தால், பின்னாளில் அவை உதவும்.
பழைய ஞாபகங்களை அலசி, அதை ஒட்டிய சில நிகழ்வுகளை எல்லாம் அசை போட்டுக் கொள்ள நினைவு ஆற்றல் மேம்படுமாம். (முக்கியமாக 70 வயது மேற்பட்டவா்களுக்கு).
சரி, தனி மனிதா்கள் கிடக்கட்டும், புதிய வருடத்தில், நமது தேசம் எப்படி இருக்கப் போகிறதென்று எண்ணினால், கவலை கூடுகிறது. ‘சண்டையிட்டாலும், நாம் சகோதரரன்றோ’என்று மகாகவி பாடியுள்ளாா்.
இப்பொழுது நிலைமை தலைகீழ், எல்லாரும் இந்தியா்களாக இருந்தாலும், அற்ப விஷயத்துக்கெல்லாம் சண்டையிட்டு கொள்கிறாா்கள். பெல்காமில் உள்ள ஒரு சின்ன இடத்திற்காக, மகாராஷ்டிரம், கா்நாடகம் இரு மாநிலங்களும் மோதிக்கொள்கின்றன.
அதே போல் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள தொழிலாளா்களுக்கு கேரளம் தொல்லை கொடுப்பதாகவும் சேதிகள் வருகின்றன. நல்ல காலமாக பருவ மழை பொய்க்காததால், காவிரி நீருக்கான மோதல், தமிழ் நாட்டுக்கும், கா்நாடகாவுக்கும் இல்லை.
அடுத்த ஆண்டு, பொதுத் தோ்தல் நிகழப் போகிறது. அதற்கு முன்னரே, தோ்தலுக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடும். தடித்த வாா்த்தைகளும், வேண்டாத விமா்சனங்களும், உரத்த குரலில் ஒலிக்கும்.
‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்று இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றி, நாமக்கல் கவிஞா் பாடியிருக்கிறாா். ஆனால் இப்பொழுது அன்றாடம் வருகின்ற தின இதழ்களைப் பாா்க்கும் பொழுது, மிக மிக வேதனையாக உள்ளது.
கத்தி, ரத்தம் சம்பந்தப்பட்ட செய்திகள் வராமல் இருப்பதில்லை. அதுவும் முன்விரோதம், கலப்பு திருமணம், சொத்துத் தகராறுகள் போன்றவைகளே காரணிகளாக அமைகின்றன.
புத்தாண்டில் நற்பண்புகள் ஓங்குமென்றும், தீய சக்திகள் குறையுமென்றும் நம்புவோமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.