மானிலந்தனுக்கோர் மணிவிளக்கு
இவ்வுலகில் தோன்றிய அற்புதங்களில் ஒன்று மனிதரை மனிதரே திருத்தி வழிநடத்தும் இறைத்தூதுத்துவம்தான். வாழும் உயிரினங்களில் ஒன்றை இன்னொன்று வழிநடத்தும் உயரிய வழிகாட்டும் தன்மை மனிதர்களுக்கு மட்டும் வாய்த்த பெருவரம்பாகும். இறைவன் சாதாரண ஒரு மனிதரை இறைத்தூதராக வழங்கவில்லை.
மனிதனுக்குத் தேவையான,கட்டாயமாக இருக்கவேண்டிய அற்புத குணநலங்களைக் கொண்டுள்ள ஒரு புனிதரைத்தான் இறைத்தூதராக வழங்கினான். அவர்தான் முகம்மது என்ற பெயருடைய நபிகள் நாயகம்.
நபிகள் பெருமானாரை உமறுபுலவர் "மாநிலந்தனுக்கோர் மணிவிளக்கு' என்று புகழ்கிறார். அன்றைய அரபுலகம், நபிகள் நாயகத்திற்கு முன், நபிகள் நாயகத்திற்குப் பின் என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு பண்பு நலங்கள், நாகரிகம், பகுத்தாராயும் அறிவு ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் இருந்தது. நபி இபுராகிம் புனரமைத்த காபா எனும் இறையில்லம் பல்வேறு மூடநம்பிக்கைகளை விதைக்கும் இடமாக, வணிக வியாபாரிகளின் பொய்ப் பிரசாரத்தை ஊக்குவிக்கும் இடமாக இருந்தது.
அதனைத் தன்னுடைய உறுதியான மனத்திட்பத்தால் மாற்றினார் மாநபி. பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனின் துணையைத் தேடுங்கள் என்ற திருமறை வசனத்தைத் தன் வாழ்வனுபவத்தின் மூலம் காட்டினார். இறைவனை நம்பிக்கை கொள்வதற்குத் தன்னையே நற்சான்றாய் காட்டியவர். தன்னை இறைத்தூதரென நம்பியவர்களின் நம்பிக்கையை அதிநம்பிக்கையாய் இரட்டிப்பாக்கியவர் மாநபி.
அழகிய பண்பாளர் என்ற அடைமொழி அவருக்கு உண்டு. அல் அமீன் என்றழைக்கப்பட்ட நம்பிக்கையாளராகத் திகழ்ந்தார். அழகிய பண்பாளராக, வெட்கமுடையவராக, அழகான முறையில் உரையாடுபவர்களாக, உறவுகளைப் பேணி நடத்தியவராக, அண்டை அயலாரை நேசிக்க கற்றுக் கொடுத்தவராக, அநாதைகளை நேசித்தவராக, பெண்மையைப் போற்றியவராக, துன்பங்களைத் தாங்குபவராக வாழ்ந்து நிறைந்தவர் நபிகள் நாயகம்.
ஒருமுறை நபிகள் நாயகம் தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது ஓரிறை மறுப்பாளன் அபூஜஹீல் என்பவன் அவருடைய இறைவணக்கத்தைக் கெடுக்கும்பொருட்டு ஒட்டகத்தின் கனமான குடலை அவரின்மேல் போட்டான். தொழுகை முடியும்வரை அமைதி குலையாது வணக்கத்தில் ஈடுபட்டிருந்த நபிகள் நாயகத்தின் மேனி, களங்கப்பட்டிருப்பதைக் கண்ட மகளார் பாத்திமா, அதனைத் துடைத்தெறிந்தார்கள். ஓரிறை மறுப்பாளர்களின் அழுகிய மனங்கள் இதனைக் கண்டு திருந்தின.
இனிப்பு அதிகம் சாப்பிடுவதாகக் கூறித் தன் மகனைக் கண்டிக்க நபிகள் நாயகத்திடம் அழைத்து வந்த ஒரு தாயிடம் ஒரு வாரம் கழித்து அழைத்து வரச் சொல்கிறார் நபிகள் நாயகம். ஒரு வாரம் கழித்து அழைத்து வரப்பட்ட அந்த சிறுவனிடம் அறிவுரை கூறுகிறார் கருணை நபி.
குழம்பிப்போய் நின்ற தாயிடம் "அம்மா, நானும் இனிப்பை விரும்பி உண்பவன்தான்; என்னை முதலில் திருத்திக்கொண்டபின்தானே உங்கள் மகனுக்கு அறிவுரை கூற நான் தகுதியுடையவன் ஆக முடியும்?அதனால்தான் இந்த ஒரு வார காலம் எடுத்துக்கொண்டேன்' என நபிகள் நாயகம் கூறினார்.
அவர் வாழ்ந்து மறைந்த அறுபத்து மூன்று ஆண்டு கால வாழ்க்கையில் அவர் சந்திக்காத தோல்விகள் இல்லை. எதிர்கொள்ளாத அவமானங்கள் இல்லை. கண்ட போர்க்களங்களிலெல்லாம் வேகத்தைவிட விவேகமே அதிகம் இருந்தன.பிற நாடுகளுடனான உடன்படிக்கைகள் வாளால் ஏற்படவில்லை. வாய்மையாலேயே ஏற்பட்டன.
தன் உருவத்தை எந்தவொரு பதிவாக வரையவோ செதுக்கவோ கூடாது.காரணம் பின்னாட்களில் தான் வலியுறுத்தும் ஓரிறைக் கொள்கைக்கும் தனிமனித துதிபாடுகளுக்கும் காரணியாக அமைந்துவிடும் என்பதால் தன் அடியார்களுக்கு அவ்வாறு கட்டளையிட்டார்.
அண்ணல் நபியவர்கள் குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தார். குழந்தைகளை மலர்த்துணுக்குகள் என்று அழைத்த மாநபி தன் பேரக்குழந்தைகளின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருந்தார்.
வெளியூர்களுக்குச் சென்று திரும்பும்போது தெருக்களில் விளையாடும் குழந்தைகளைக் கண்டால் முந்திக்கொண்டு அவர்களுக்கு சலாமெனும் முகமன் கூறி குழந்தைகளைக் கைகளால் தூக்கி வைத்துக் கொள்வார்கள். தம்முடன் வரும் மற்ற தோழர்களையும் அவ்வாறே செய்ய அறிவுறுத்துவார்கள். "குழந்தைகளை நேசிக்காதவரும் முதியவர்களை மதிக்காதவர்களும் என்னைச் சார்ந்தவர் அல்லர்' என்று பொன்மொழிந்தவர் அண்ணல் நபி.
நோயாளிகளைக் கண்டால் நேரில் சென்று அவர்களின் தலைமீது கைகளை வைத்து வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து அவர்களின் நோய் தீர அன்பாய்ப் பேசி ஆறுதல் கூறுவார். இவரைக் கண்டாலே நோயாளிகள் தோய்தீரும். புத்துணர்வு பெற்றெழுவர். புறம் பேசுவதையும் பழி தூற்றுவதையும் அவதூறு, பொய், வதந்தி பரப்புபவர்களையும் வெறுத்துக் கண்டித்தார்கள்.
ஊழியர்களிடம் அன்பு செலுத்திய உத்தமர். தனது உதவியாளர்களை அடிமைகள் போல நடத்திய அன்றைய அரபுநாட்டில் அன்பு செலுத்தி அடிமைத்தளையை நீக்கியவர். அனாதைகளுக்கு ஆதரவு செலுத்தியவர். விடுதலை அளித்தவர். நபியவர்களால் மதினாவில் கட்டப்பட்ட முதல் ஆலயத்தில் கருப்பின பிலால் ஒருவரை வைத்து இஸ்லாத்தின் அழைப்பொலியை ஒலிக்க வைத்தவர். அவரின் ஒவ்வொரு செயல்பாடும் மற்றவரால் பின்பற்றக்கூடியதாக இருந்தது.
அவர் விலக்குவது, மறுப்பது மற்றவர்களால் புறக்கணிக்கத்தக்கதாகவும் இருந்தது.
சுவாமி விவேகானந்தர் நபிகள் நாயகத்தைப் பற்றிக் கூறும்போது, "பூரணமான சமத்துவமும் சகோதர மனப்பான்மையும் முகம்மதியர்களிடையே திகழ வேண்டும் என்ற உண்மையைத் தமது வாழ்க்கை வாயிலாக முகம்மது மெய்ப்பித்துவிட்டார். அங்கே வேறுபாடு இல்லை; சாதி வேற்றுமை, கொள்கை வேற்றுமை இல்லை, வர்ண வேறுபாடு இல்லை' என்றார்.
அவர் புதிதாக ஒரு மதத்தை உருவாக்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த மதங்களின் பாதைகளில் கிடந்த சாதி, சமய, வேற்றுமை, மூடநம்பிக்கை சழக்குகளை நீக்கி புதிய மார்க்கத்தை, நேரான துன்பமற்ற வழியை ஏற்படுத்தினார். அதனால்தான் இஸ்லாம் மதமல்ல, அது மார்க்கம் என்கிறோம்.
இன்று மீலாது நபி.