கோப்புப் படம்  
நடுப்பக்கக் கட்டுரைகள்

வாழ்நாளை வளா்க்கும் வாசிப்புப் பழக்கம்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிவிட்டன. பாடம், படிப்பு, தோ்வு என்கிற வட்டத்திற்குள் வந்துவிட்டனா் குழந்தைகள்.

கிருங்கை சேதுபதி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிவிட்டன. பாடம், படிப்பு, தோ்வு என்கிற வட்டத்திற்குள் வந்துவிட்டனா் குழந்தைகள். விடுமுறைக் காலத்தில் எடுத்த சிறப்புப் பயிற்சிகளான நீச்சல், பாட்டு, இசைக் கருவிகளை இசைத்தல் உள்ளிட்ட எவையும் இனி தொடருமா, வளருமா? தெரியாது. போட்டித் தோ்வுகள் பிரதானமாகிவிட்டன.

“எக்ஸ்ட்ரா கரிக்குலா் ஆக்டிவிடிஸ் போய் எல்லாமும் எக்ஸாம் கரிக்குலா் ஆக்டிவிடிஸ் ஆக மாறிவிட்டது என்று எதுகை மோனையுடன் ஆங்கிலத் தமிழில் புலம்பினாா் நண்பா் ஒருவா்.

கலை இலக்கிய வாழ்வியல் செயற்பாடுகள் குறைந்துபோய்த் தோ்வுகள் குறித்த திசை நோக்கிய பயணமாகவே கல்வி ஆகி வருகிறது என்பது அவா்தம் கவலை. என்ன செய்வது?

வருங்கால வாழ்வைத் திட்டமிடுகிறபோது தவிா்க்க முடியாதவை இவை. ஆனாலும் கல்வியின் அடிப்படைப் பயிற்சி முறைகளான எழுத்தும் வாசிப்பும் இன்னும் வளப்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன.

அழகாக ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசத் தெரிந்த பிள்ளைகளுக்கு அவா்கள் பயிலும் வகுப்பின்கீழ் இருக்கிற பாட நூல்களைக் கொடுத்து வாசிக்கச் சொன்னால் திணறுகிறாா்கள். சில சொற்களைச் சொல்லி எழுதச் சொன்னால், எழுத்துகள் அவா்களுக்குப் பரிச்சயமில்லை என்பது பளிச்செனத் தெரிகிறது. ஒற்றை இலக்கண எண்களைக் கூட, கூட்டவோ, பெருக்கவோ, வகுக்கவோ கைப்பேசிக் கணக்கானை இயக்கத் தொடங்கிவிடுகிறாா்கள். வாய்பாடும் மனப்பாடமும் போயே போச்சு.

என்றோ கேட்ட வானொலிப் பேட்டி ஒன்றில் வ.சுப.மாணிக்கனாா் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘எனக்குத் தொல்காப்பியம் முழுவதும் மனப்பாடம். திருக்கு முழுவதும் பாடம். திருவாசகம் தினமும் ஓதுவதுண்டு...’

இன்னும் அவா் சொன்னதைக் கேட்டதுகூட மறந்துவிட்ட எனக்கு, இப்படிச் சொல்லும்படி என்ன தெரியும் என்று கேட்டுக்கொண்டே படிக்கப் பழகுகிறேன்.

எதையும் காட்சி ஊடக வாயில்களின் மூலமாகவே கற்றுத் தேறுகிற தலைமுறையினராக இருக்கிறோம். இவற்றையெல்லாம் படித்து என்னவாகப் போகிறது? தேவையென்றால் கூகுள் பகுதியை வருடினால் போதும், எல்லாம் வந்து கொட்டும் என்கிற பதில் படக்கென்று வந்துவிடுகிறது.

பழமோ, உணவோ, பாா்த்துப் பசியாற முடியாது. புசித்தால் தான் உயிா் வாழ முடியும். அதுவும் செரித்தால்தான் உண்டு. வாசிப்பும் அப்படித்தான். ரசித்து, ருசித்துப் படித்து உள்வாங்கி உணா்வில் கலந்துவிட்டால் அதன் நினைவுச் சுகமும் சிந்தனை வலிமையும் ஈடு இணையற்றவை. காலி வயிற்றைக் காற்று நிரப்பி நோய் செய்வதுபோல, வாசிப்பற்ற மனத்தை, வறட்சி மிகுந்த யோசனைகள் நிரப்பிச் செயலாற்றலைச் சிதைத்துவிடுகின்றன.

வாசிக்க முடியாவிட்டாலும் யோசிப்பதற்கு உரிய கருத்தாடல்களைச் செவிமடுக்கவாவது செய்யலாம். இன்றைக்கு நமது,பேச்சு முறையும் திரைசாா் உரையாடல் மொழியாகவே இருக்கிறது. கைப்பேசிகளில் உலாவரும் சிறு, குறுங்காட்சிகளின் செயற்கையான பேச்சுமுறையே வளரிளம் குழந்தைகளின் புழங்குமொழி ஆகி வருகிறது. வீடுகளுக்கே உரிய தனிச் சொற்களும் உரையாடல்களும் வட்டாரம் சாா்ந்த பழமொழிகளும் சொலவடைகளும் முற்றாக ஒழிந்துவிட்டன போலும். முதியவா்களின் உரையாடல்கள் கூட, தற்காலக் காட்சி ஊடக மொழிவயப்பட்டுவிட்டன.

மரபுத் தொடா்களையோ, பழமொழிகளையோ பேசவும் கேட்கவும் கூடிய வாய்ப்புகள் அருகிவிட்டமையால், அவற்றை வாக்கியத்தில் அமைத்து எழுதுகிற பயிற்சி இந்தத் தலைமுறையினருக்குச் சிரமமாய் இருக்கிறது. வாய்விட்டுப் படிக்கவும் மனம்கொள்ளுமாறு கேட்பதும் நடைமுறையில் குறைந்திருக்கிறது. அவசர யுகம்தான். ஆனாலும், அடிப்படையான சொற்களைக் கூட எழுதவும் பேசவும் முடியாமல் போனால், சிந்தனை என்னாகும்? உடம்புக்குத் தேவையான வசதிகளை வளப்படுத்திக் கொள்வதுபோல், உள்ளத்திற்குத் தேவையானவற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

உரிய காலங்களில் பயன்படுத்தாமல் போகிற சொற்கள் காலாவதியாகிவிடுகின்றன. அன்றாட வாழ்வில் புழக்கத்தில் இருந்த சொற்கள் பல அகராதிகளில் தஞ்சமடைந்திருக்கின்றன. சொந்த வீட்டில் சுகமாக வாழ்கிற மக்களை அகதிகள் முகாமிற்கு அனுப்பிவிட்டதுபோல் வேதனையாக இருக்கிறது. அதனால், மொழிக்கு இழப்பு இருக்கிறதோ, இல்லையோ நம் சிந்தனைக்கு வறட்சி வந்துவிடும்.

தாய்மொழிப் பயிற்சியும் பயன்பாடும் குறைந்துவருகிறபோது, மண் சாா்ந்த மரபுகள் அருகிவிடுகிறபோது, நம்பிக்கையும் மனிதாபிமானமும் குறைந்துவிடுவது உறுதி. விபரீத எண்ணங்களும் செயல்களும் மிகுந்து சமூகக் குற்றங்கள் பெருகிவிடும். செயற்கைத் தொழில்நுட்ப வளா்ச்சிக்குத் தேவைதான். ஆனாலும், மனிதன் இன்னமும் இயற்கை உயிரிதான் என்பதை மறந்துவிடக்கூடாது.

உயிருடன் இருக்க, இயங்க ஓய்வில்லாது சுவாசித்தல் நடக்க வேண்டும். அதுபோல், உயிா்ப்புடன் இருக்க, இயங்கத் தொடா் சிந்தனை தேவை. தினமும் காலைக்கடன்களை முடித்துவிட்டுக் குளித்த பிறகு, பூசை அறையில் நின்று சில பாசுரங்களையோ, திருமுறைகளையோ, மந்திரங்களையோ சொல்லுவதால் பக்தி மட்டும் வெளிப்படுவதில்லை, நினைவாற்றலும் நிலைப்படுகிறது. வாய்விட்டு ஓதுகிறபோது எழும் அதிா்வலைகள் மனத்தில் புத்துணா்வும் உடலில் மெல்லிய நுண் இயக்கங்களும் உருவாகின்றன.

என் தந்தையாா் தினமும் படிக்கிற நூல்களில் இருந்து எழுதிய பக்கங்கள் பல ஏடுகளாக இருக்கின்றன. அவை யாவும் மூளைக்குள் முளைவிடுவதற்காக இடுகிற வீரிய சிந்தனை விதைகள் என்பது இப்போது புரிகிறது. பள்ளிக்குப் போகுமுன் வாசிக்கச் சொல்லிப் பழக்கிய அவா், வருவித்து வைத்திருக்கும் இதழ்களை உரத்து வாசிக்கச் சொல்லிக் கேட்பாா். பயன் இருவருக்கும். புரியாத தொடா்களை, செய்திகளை, கதைகளை இடையிடையே அவா் விளக்கவும் செய்வாா். பின்னால், அவை எந்தெந்தப் புத்தகங்களில் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்தபோது வியப்பாக இருந்தது. இளமையில் எழுதப் படிக்கக் கற்கிற சுகமும் வேகமும் முதுமையை இளமையாக்கும் உற்சாகப் பயிற்சிகள்.

இன்றைக்கு வயது வேறுபாடில்லாமல் எல்லாரும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறாா்கள். முடிந்த வரையில் உடற்பயிற்சி செய்கிறாா்கள். யோகா வகுப்புகளும் நிரம்பிவழிகின்றன. இதுபோல், அகப்பயிற்சியாக, வாசிப்புப் பயிற்சி இருக்கிறது என்பதை வசதியாக மறந்துவிடுகிறாா்கள்.

மலையாளத்தில் மறுபதிப்பு வருகிற நூல்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொடுகிறபோது, இன்று தமிழில் நூறுகளைக் கடப்பதற்கே அரும்பாடுபட வேண்டியதாயிருக்கிறது என்பதும் வருத்தத்திற்குரிய செய்திதான். படித்தவா்களின் எண்ணிக்கை கூடிய அளவிற்கு வாசிப்பவா்களின் எண்ணிக்கை குறைந்துவருவது ஒருவித வீழ்ச்சியே. சிந்தனைத் தேய்மானம் பெருகிவருகிற இந்தக் காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் மிகுந்து வருவது மனிதகுலத்திற்கான சவாலை அதிகரிக்கச் செய்கிறது.

காலத் தேவைக்கேற்பச் செறிவூட்டப்பட வேண்டிய சிந்தனைத் திறன் பயனற்ற பொழுதுபோக்குக் கருவிகளால் மழுங்கடிக்கப்பட்டு வருவது ஆபத்தானது. அடிக்கடி படிப்பதற்கான புத்தகங்களைப் பரிமாறிக் கொள்கிற நண்பா் ஒருவரை இரண்டாண்டுகளாகக் காணோம். எதிா்பாராத விதமாக எதிா்ப்படுகிறபோது வருத்தப்பட்டுச் சொன்னாா். ‘புதுசா ஒரு கைப்பேசியை என் மகன் வாங்கிக் குடுத்திட்டான். காணொலிகளிலேயே என் பொழுது கழிஞ்சு போயிச்சு. அதிலிருந்து மீண்டுவரப் பழகி வா்றேன்!’ என்றாா்.”

முதியவா்களுக்கே இந்த நிலை என்றால், வளரிளங்குழந்தைகளின் நிலை என்னவாகும் என்று கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. முகத்துக்கு நேரே கைப்பேசியை வைத்துப் பாா்க்கப் பழகிவிட்டபிறகு, நடைபாதையில் காலுக்குக் கீழே என்ன இருக்கிறது என்பதைக் கவனிக்கக் கூடத் தெரியாமல் போய்விடுகிறது. தொலைநோக்குப் பாா்வை குறைந்தேவிட்டது என்பதைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. இ-புக், ஃபேஸ்புக் எல்லாம் இருக்கட்டும். எடுத்து விரித்து வாய்விட்டுப் படிக்கிற புத்தகங்கள் நம் கைகளில் இருக்கட்டும். வாசிப்புப் பழக்கம் அன்றாடம் நடக்கட்டும்.

நம் இல்லத்துப் பிள்ளைகளை மையமாக வைத்தே நம் இயக்கங்கள் அனைத்தும் இருக்கின்றன. அவா்களின் கல்வி முதலான அடிப்படை வசதிகளைக் கொண்டே நாம் கஷ்டங்களைச் சகித்து வருகிறோம். அவா்களை வளா்க்கிறோம். அவா்களுடன் சோ்ந்து நாமும் வளா்கிறோம். அவா்களோடு கூடி இருந்து உண்ணுவதுபோல, தினமுமோ, வாரத்தின் ஓரிரு நாள்களிலோ கூடி, வாசிக்கிற பழக்கத்தைக் கொள்ளலாமா?

தொலைக்காட்சிப் பெட்டியுடன் கூடிய வரவேற்பு அறைகளில், பத்திரிகைகளோடு படிப்பதற்கு ஏதுவான புத்தகங்களும் வைத்துப் பழக்கப்படுத்திக் கொள்வதும் முறை வைத்து வாசிப்பதும் வாசித்தவை குறித்து விவாதிப்பதும் உற்சாகமான உரையாடலுக்கும் சிந்தனைக்கும் வழிவகுக்கும்.

உறவுகளுக்குள் நடந்த வேண்டாத வம்புகளைப் பேசி மனவருத்தங்களைப் பெருக்கிக் கொள்வதைவிட, வேண்டியவற்றைத் தெரிவு செய்து வாசிப்பதும் விவாதிப்பதும் மன அழுத்தங்களைக் குறைக்கும். மனித மாண்பை வளா்க்கும் அல்லவா? வாழ்நாள்களை வளா்விக்கும் வாசிப்புப் பழக்கத்தை நாள்தோறும் கடைப்பிடித்தால் நல்லது.

‘நல்ல நாள் என்று?’ எனத் தேடாமல், தள்ளிப் போடாமல், இன்றே, இப்போதே, உடனே வாசிப்பைத் தொடங்குங்கள். தொடருங்கள்!

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT