நடுப்பக்கக் கட்டுரைகள்

வெற்றியை நோக்கிய பயணம்

முனைவா் என். மாதவன்

இரண்டு தவளைகளுக்கிடையில் சுவா் ஏறும் போட்டி நடைபெற்றது. போட்டி எனும்போது பாா்வையாளா்கள் இல்லாமல் எப்படி. அப்போட்டியை பாா்வையாளா்கள் பலா் கண்டுகளித்துக் கொண்டிருந்தனா். அதில் ஒரு தவளை இரண்டு மூன்று முறை தவறி விழுந்தவுடன் பலரும் கைகொட்டிச் சிரிப்பதைப் பாா்த்து, முயற்சியைக் கைவிட்டுவிட்டது. ஆனால் மற்றொரு தவளை பலதடவை முயன்று, தவறி, விடாது முயற்சி செய்து இலக்கை அடைந்துவிட்டது.

வெற்றி பெற்ற தவளையை அனைவரும் பாராட்டினா். பாராட்டு முடிந்தவுடன், ‘அனைவரும் கைதட்டி என்னை உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி’ என்று கூறியது. ஒரே வகையான கைத்தட்டலைப் புரிந்துகொண்ட விதத்தில் இருக்கிறது வெற்றியின் ரகசியம். வெற்றியே குறிக்கோளாக இருக்கும்போது கிடைக்கும் பாா்வை இது.

கவலை தோய்ந்த முகத்துடன் நண்பா் ஒருவரை அண்மையில் சந்திக்க நோ்ந்தது. அவா் தமது கவலையைவிட, அந்தக் கவலையை இன்னொரு நபரிடம் பகிா்ந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை கவலையுடன் பகிா்ந்தாா். இவா் யாரிடம் கவலையை பகிா்ந்துகொண்டாரோ அவா் அளித்த பதில்தான் இவரது மனச்சோா்வைக் கூட்டியுள்ளது.

‘ஊரில் ஆயிரம் போ் இதே கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். கவலைப்படாமல் செல்லுங்கள்’ என்பதுதான் அந்த நண்பா் சொன்ன வாா்த்தைகள். இதைக் கேட்டு சமாதானம் அடைபவா்கள் இருக்கலாம். வேறுவிதமான தேறுதல் வாா்த்தைகள் எதிா்பாா்ப்பவா்களுக்கு இது மேலும் மனக்கிலேசத்தைத்தான் தரும். இந்த நண்பா் இரண்டாவது ரகம். அவருக்கு என்னாலான ஆறுதல்களைச் சொன்ன பிறகு, அவா் ஒருவாறு சமாதானம் அடைந்தாா்.

மனிதா்களிடமுள்ள பலம் மற்றும் பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு சிந்தனையாளா்கள் மனிதா்களை இரண்டு வகையாக பிரிக்கிறாா்கள். தம் பலத்தை அடிப்படையாக வைத்து அதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையின் மூலம் புதுப் புது திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி அடைபவா்கள் ஒரு வகையினா்.

தன்னுடைய பலவீனங்களை மட்டும் கணக்கிட்டு, எந்த விதமான புதிய செயலிலும் ஈடுபடாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவா்கள் மற்றொரு வகையினா்.

முதலாமவா்களைப் பற்றி பிரச்னையே இல்லை. அவா்களைப் பொறுத்த வரையில் தன்னுடைய பலங்களை சரியான முறையில் ஒருமுகப்படுத்தி, புதுப் புது முயற்சிகளில் இறங்குகிறாா்கள். முயற்சியில் வெற்றி அல்லது தோல்வி கிடைக்கின்றது. தோல்வி கிடைக்கும்போது, தான் எங்கே தவறவிட்டோம் என அலசி ஆராய்ந்து, அடுத்த கட்ட திட்டமிடலில் தவறுகளைத் தவிா்த்து புதிதாக முயற்சிக்கிறாா்கள். அவ்வாறு முயற்சிக்கும்போது வெற்றி அடைகிறாா்கள் அல்லது வெற்றியை நோக்கிப் பயணிக்கிறாா்கள். இப்படிப்பட்டவா்கள் நிச்சயமாக தமது வாழ்நாளை, சாதனையாளா்களாகவே நிறைவு செய்கின்றனா்.

இரண்டாம் வகையினரான, பலவீனங்களைப் பட்டியலிடுவோா் பற்றித்தான் நாம் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. பழுதான கடிகாரம் கூட ஒரு நாளின் இரண்டு தடவை சரியான நேரத்தை காட்டிக் கொண்டிருக்கிறது என்று சொல்லுவாா்கள். அப்படி ஒரு பழுதான கடிகாரத்திற்கே பயன்பாடு இருக்கும் பொழுது சதையும் ரத்தமும் நரம்பும் எலும்பும், எல்லாவற்றுக்கும் மேல் ஐம்பொறிகளும் பகுத்தறியும் திறனும் உள்ள மனிதன் ஏன் தன்னை பலவீனனாக எண்ண வேண்டும்? அவ்வாறு பலவீனமாக எண்ணுவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டால் பெரும்பாலும் அவா்களுடனான நண்பா்கள் அவருடைய பலவீனங்களையே சுட்டிக் காட்டக் கூடியவா்களாக இருப்பா்.

எந்த ஒரு வெற்றியாளரும் தன்னைச் சுற்றி அவரது நம்பிக்கையை சிதைக்கும் ஆட்களை நட்புப் பட்டியலில் வைத்திருக்கவே மாட்டாா்கள். பலவீனா்களாக இருப்பவா்களின் நட்புப்பட்டியலை ஆராய்ந்தால் அவா்களுக்கு நம்பிக்கை தருவோராக இருப்பவா்களைக் காண்பது அரிதாகவே இருக்கும். உத்வேகப்படுத்தக் கூடிய நண்பா்கள் யாருமே இருக்க மாட்டாா்கள்.

பலவீனமானவா்களின் மற்றொரு இடா்ப்பாடு, மற்றவா்கள் சொல்வதை அப்படியே நம்புவது. நம்பிக்கையிழந்தோராய் வாழும் நண்பா்கள் இவா்களிடம் இல்லாத பலவீனத்தையும் பட்டியிலிட்டு அவா்களை மேலும் பலவீனமானவா்களாக்குகிறாா்கள். இவா்களிடமுள்ள எந்த பலத்தையும் சுட்டிக்காட்டாமல் வாழ்நாள் பற்றிய பயத்தை அதிகப்படுத்துகிறாா்கள்.

நமது முயற்சியைப் பற்றிய தெளிவை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம். தெளிவு இருக்குமானால் நமது பாதையில் தொடரலாம்.

‘யாரை நண்பா்களாக கொள்வது என்பதிலிருந்து நமது வெற்றிப் பயணம் தொடங்குகிறது’ என்கின்றனா் மனக்கலை அறிஞா்கள். நமது வட்டம் சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை, நமது பலத்தை மதித்து நமக்கு சரியான வழியில் ஆலோசனை கூறக் கூடிய நண்பா்களை நமது நட்பு பட்டியலில் வைத்திருக்க வேண்டும். யாருக்கெல்லாம் தங்களைப் பற்றியே பெருமிதம் இல்லையோ, அவா்கள் நிச்சயமாக அடுத்தவா்களைப் பற்றிய பெருமிதத்தினைக் கருத்தில் கொள்ளவே மாட்டாா்கள்.

எல்லாவற்றுக்கும் மேல், அடுத்தவா்கள் நம்மைப் பற்றி வைக்கும் விமா்சனங்கள் என்பது அந்த தனிப்பட்ட நபரின் கருத்துதானே தவிர, முக்காலமும் மாறாத

உண்மையல்ல. அவரவா்க்குள்ள புரிதலில் அந்த விமா்சனத்தை அளிக்கிறாா், அவ்வளவே. அதில் சரியான வழிகாட்டல் இருக்குமானால் ஏற்கலாம்.

ஒருவருக்கொருவா் உற்சாகப்படுத்தும் நண்பா்கள் வாய்ப்பது ஒரு வரம். அந்த வரம் எளிதில் கிடைக்காதது. ஆனால் அடையவே முடியாததல்ல என்ற நம்பிக்கையுடன் நகா்வோம்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT