முகப்பு
இந்தியா

மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்! பிரதமர் நரேந்திர மோடி

வரும் நாள்களில், இந்தியா முழுவதும் பண்டிகை காலம் களைகட்டும்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:16 PM
பிரதமர் மோடி - IANS
பகிர்:

வரும் நாள்களில், இந்தியா முழுவதும் பண்டிகை காலம் களைகட்டும். அஸ்ஸாம் மக்கள் ரோங்காலி பிஹுவையும், ஒடிஸா மக்கள் மகா பிஷுபா பானா சங்கராந்தியையும் கொண்டாடுவார்கள். மேற்கு வங்கம் பொய்லா போயிஷாக் என்ற வங்காளப் புத்தாண்டை வரவேற்கும். கேரளத்தில் விஷு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். பஞ்சாபிலும் வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் பைசாகி கொண்டாடப்படும். இது நம்பிக்கையையும் ஆக்கபூர்வ சிந்தனையையும் கொண்டுவரும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா மரியாதை: ஏப். 11-ஆம் தேதி மகாத்மா பூலேவின் 200-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடங்கும்; ஏப்.14 -ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு இந்தியா மரியாதை செலுத்தும். இந்தச் சிறப்புத் தருணங்களுக்கும் கூடுதலாக, புதுப்பித்தல் உணர்வு நம் உள்ளங்களையும், மனங்களையும் நிரப்பும் வேளையில், நமது தேசம் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் வாயிலில் நிற்கிறது.

பெண் முன்னேற்றம்: மகளிர் இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் ஒரு முக்கிய மசோதாவை விவாதித்து நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் ஏப்.16-ஆம் தேதி கூடவுள்ளது. இதை வெறுமனே சட்டமியற்றும் ஒரு செயல்பாடு என்று கூறுவது குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும். இது இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களின் விருப்பங்களின் பிரதிபலிப்பாகும்.

Advertisement

இந்திய மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி பேர் பெண்கள். நமது தேசத்துக்கு அவர்களின் பங்களிப்புகள் மகத்தானவை; ஈடு இணையற்றவை. அறிவியல், தொழில்நுட்பம் முதல் தொழில்முனைவு வரை, விளையாட்டு முதல் ஆயுதப் படைகள் வரை, இசை முதல் கலைகள் வரை, இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்கள் முன்னிலையில் உள்ளனர்.

இருப்பினும், அரசியலிலும் சட்டமியற்றும் அமைப்புகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம், சமூகத்தில் அவர்களின் பங்குக்கு ஏற்ற அளவு எப்போதும் இருந்ததில்லை. இது துரதிர்ஷ்டவசமானது.

மகளிர் இடஒதுக்கீடு: 2029 மக்களவைத் தேர்தலும், வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களும் மகளிர் இட ஒதுக்கீட்டை உள்ளடக்கி நடத்தப்படுவது கட்டாயமாகும். பல பத்தாண்டுகளாக, முந்தைய அரசுகளால் ஜனநாயக நிறுவனங்களில் பெண்களுக்கு உரிய இடத்தை வழங்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழுக்கள் அமைக்கப்பட்டன, வரைவு மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், அவை நடைமுறைக்கு வரவில்லை. சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்பதில் பரவலான, ஒருமித்த கருத்து உள்ளது. இந்த ஒருமித்த கருத்துடன் செப்டம்பர் 2023-இல் நாடாளுமன்றம் "மகளிர் இடஒதுக்கீடு' சட்டத்தை நிறைவேற்றியது. அதை எனது வாழ்வின் மிகச் சிறப்பான தருணங்களில் ஒன்றாக கருதுகிறேன்.

இனியும் ஒத்திவைக்க முடியாது: மகளிர் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான இந்த வாய்ப்பு, நமது அரசியல் சட்டத்தின் சாராம்சத்தை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. இனிமேலும் ஒத்திவைக்க முடியாத ஒரு தருணம் இது.

இந்தியா நம்பிக்கையுடனும் ஒரு குறிக்கோளுடனும் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நமது அமைப்புகள் அனைத்துக் குடிமக்களின், குறிப்பாக நமது மக்கள்தொகையில் பாதியாக உள்ளவர்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பது அவசியமாகும். நமது ஜனநாயகத்தை மேலும் பிரதிநிதித்துவம் உள்ளதாகவும், பொறுப்புமிக்கதாகவும், எதிர்காலத்துக்குத் தயாரானதாகவும் மாற்றுவதற்கு இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகும்.

ஜனநாயக வலிமை: இது நமது மகளிர் சக்திக்கு நாம் செலுத்த வேண்டிய கடமையாகும். அதனால்தான், மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான ஒரு மசோதா நிறைவேற்றப்படும்போது, அது பரந்த அளவிலான ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்க வேண்டும்; பரந்த தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும். ஒரு ஜனநாயகத்தின் உண்மையான வலிமை, காலப்போக்கில் தன்னை மேம்படுத்திக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கியதாக மாறும் அதன் திறனில்தான் உள்ளது என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நாம் அணுகும் வேளையில், கட்சி வேறுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, இந்தியப் பெண்களுக்கான இந்த முக்கிய முன்னெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வாய்ப்பை நாம் பொறுப்புணர்வுடனும் குறிக்கோளுடனும் பயன்படுத்திக்கொள்வோம். நமது ஜனநாயகத்தின் உன்னத மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் நாம் செயல்படுவோம்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாகச் செயல்பட முடியும் என்பதை இந்தியா எப்போதுமே நிரூபித்துள்ளது. இதுவும் அத்தகைய ஒரு தருணம்தான். நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் சென்று, அரசியல் சட்ட விழுமியங்களை வலுப்படுத்தி, தேச முன்னேற்றத்துக்காக நமது மகளிர் சக்தியை வலுப்படுத்துவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments