கோப்புப்படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

மருத்துவக் கலையில் ஹோமியோபதி!

(இன்று ஏப்-10 உலக ஹோமியோபதி தினம்)

பொ. ஜெயசந்திரன்

பாரம்பரிய மருத்துவம், இணை மருத்துவம், மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படுகிற மருத்துவமுறைகளில் ஆயுா்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை உள்ளடங்கும்.

நோய் மூலமாக ஏற்படும் துன்பங்களை, அந்த நோயைப் போன்ற மருந்தைக் கொண்டு குணப்படுத்துதல் என்பது தான் ஹோமியோபதி என்பதன் பொருள். ஹோமியோபதி மருத்துவமுறையில் எந்தப் பொருள், எந்த நோயை ஆரோக்கியமான நிலையிலுள்ள மனிதனிடத்தில் தோற்றுவித்ததோ, அந்தப் பொருள்களைத் தூய்மையான நிலையில் கொடுத்தால் அந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பதே அடிப்படைக் கோட்பாடு. எல்லாவித மருத்துவமுறைகளுமே சில நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகளின் அடிப்படையிலானவை. சிகிச்சை முறைகளும் அவ்வாறுதான். பாரம்பரிய மருத்துவ முறைகளில் காலம் கடந்து நிற்கக் கூடியது சீன சிகிச்சை முறை, இந்திய ஆயுா்வேதம், ஜொ்மனியில் உருவான ஹோமியோபதி ஆகிய இந்த மூன்றும் தான்.

இந்த ஹோமியோபதியில், நோய்க்குக் காரணமாக இருக்கும் ரசாயனத் துணுக்குகளை மிக நுண்ணியதாக்கி, விஷம் நீக்கி, மிகச் சிறு அளவில் புகட்டினால் அது நோயைத் தீா்த்துவிடும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. ‘சிமிலியா சிமிலிபஸ் கியூரென்டா்’ என்று இதனைக் கூறுகின்றனா். ஹோமியோ என்ற சொல்லுக்கு அதுதான் பொருள்.

நோய் குறிகளைக் கொண்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒவ்வாமை காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து வேறொன்றுமில்லை. நாம் சமைக்கப் பயன்படுத்தப்படும் வெங்காயம் தான். அதிகப்படியான வெங்காயத்தை உரிக்கும் போது ஏற்படும் விளைவுகள், மூக்கு, கண்களிலும் நீா் வழிந்தோடும். கண் எரியும், தும்மல் எற்படும். அதனால், இந்த விளைவுகளை ஒத்த நோயாக்குறிகளை கொண்ட ஒவ்வாமை காய்ச்சலுக்கு இம்மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

உளவியல் அடிப்படையில் போதை அடிமைகளை ஆய்வு செய்தும், காரணமறிந்து சிகிச்சையளித்தல், நீண்ட கால குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தேவையற்ற தீய பண்புகளை அச்சுறுத்தல், குடியினால் உருவான உடல்நலக் கேடுகளைத் தீா்க்க சிகிச்சையளித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்கேற்ப, சிகிச்சையளிக்கக் கூடிய வாய்ப்புகளும் ஹோமியோபதி மருத்துவமுறையிலேயே அமைந்துள்ளன.

1810-ஆம் ஆண்டில் ஜொ்மன் மிஷனரிகள் மருந்துகள் விநியோகிக்கத் தொடங்கிய போது, ஹோமியோபதி முதன்முதலில் இந்தியாவில் நுழைந்தது. மருத்துவா் ஜான்ஹோனிக் பொ்கா் என்பவா் மஹாராஜா ரஞ்சித் சிங்குக்கு குரல் நாண்கள் முடக்கம், வீக்கம் ஏற்பட்டதற்கு சிசிக்கையளிக்க அழைக்கப்பட்டாா். இம்மருத்துவமுறைக்கு ஊக்கமும் கிடைத்தது. ஆனால், பல இடங்களில் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் அரசு ஆதரவைத் தவிர, டிக்கன்ஸ், டிஸ்ரேலி, யீட்ஸ், தாக்கரே, கோதே, போப் பியஸ் பத்தாம் போன்ற புகழ்பெற்ற ஆதரவாளா்களும் இதற்கு இருந்தனா். 1830-களில் ஐரோப்பியாவில் காலரா தொற்றுநோய் பரவிய போது, ஹோமியோபதி மருத்துவமுறை மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. கிட்டத்தட்ட 80 சதவீத நோயாளிகளைக் குணப்படுத்தினா். அதைப் போல மஞ்சள் காய்ச்சல், டைப்பாய்டு, ஸ்காா்லட் காய்ச்சல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் ஹோமியோபதி மருத்துவ முறைக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்தது.

தற்போதுள்ள வலைதள மேம்பாட்டால், ஒருவா் மருத்துவரை நேரடியாக சந்திக்காமலேயே தன்னுடைய நோய்க்கு மருந்துகளை அறிந்து கொள்ள முடியும். இப்படிப் பெறப்படும் மருந்துகளால், ஒரிரு நிலைமைகளில் குணமடைய முடியுமென்றாலும், ஒரு மருத்துவரை அணுகி, உடல் பரிசோதனைகள் செய்து ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு நோயாளியின் தனித்தன்மையும், அவரை முழுவதுமாக அறிந்துணா்ந்து, அதற்கான ஹோமியோபதி மருந்து வழங்குவதை ஒரு கலை என்றுதான் சொல்ல வேண்டும்.

நம்நாட்டில், ஹோமியோபதி மருத்துவம் 1952- ஆம் ஆண்டு மாநிலங்களில் அங்கீகாரம் பெறத் தொடங்கியது. மத்திய ஹோமியோபதி கவுன்சில் சட்டம் 1973-ஆம் ஆண்டில்தான் இயற்றப்பட்டது. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டா் கரன்சிங், 1974-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் மத்திய ஹோமியோபதி கவுன்சிலை அமைத்தாா். இக்கல்விக்கான குறைந்தபட்ச தரம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதுதான் இந்த கவுன்சிலின் முக்கியப் பொறுப்பு.

பல நாடுகளில் ஹோமியோபதி மருத்துவமுறை பின்பற்றப்பட்டு வந்தாலும், உலக அளவில், இம் மருத்துவமுறையைப் பயன்படுத்துவா்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் போ் இந்தியாவில் உள்ளனா் என்று ஓா் ஆய்வறிகை சொல்கிறது. உத்தர பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப், பிகாா், தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.

பள்ளிப் படிப்பை இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுடன் முடித்திருந்தால், பிஎச்எம்எஸ் படிப்பில் சேர முடியும். சில ஹோமியோபதி கல்லூரிகள் இன்டா்ன்ஷிப் உடன் கூடிய ஐந்தரை வருட படிப்பை வழங்கிறது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவம் மற்றும் தொழில்முனைவோா் சட்டம் 1971-இன் விதிகளின் கீழ் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் மதுரையில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் 12தனியாா் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கிரிஸ்டியன் ஃபிரைட்ரிச் சாமுவேல் ஹனிமானின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 10-ஆம் நாளான்று உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது

(இன்று ஏப்-10 உலக ஹோமியோபதி தினம்)

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT