நடுப்பக்கக் கட்டுரைகள்

அறம் பெருகட்டும்!

அறத்தை இயற்கையின் ஒழுக்கமாகவும் அறிவின் முதிா்வாகவும் கருதுதலே சிறப்பு.

முனைவர் அருணன் கபிலன்

மழலை பேசும் தமிழ்க் குழந்தையிடம் ஔவைப் பெருமாட்டி கற்றுத் தருகிற முதல் மொழி ‘அறம் செய விரும்பு’ என்பதேயாம். அவ்வழியே மன்னன் முதல் மக்கள் வரையிலும் அறத்தை விரும்பிப் பேணுகிற நாட்டில் அமைதி நிலவும்; பொருள் குவியும்; இன்பம் செழித்தோங்கும்; மானுடம் வெல்லும்.

பழந்தமிழரின் வாழ்க்கை ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணா்ந்த ஐந்திணை’ வாழ்க்கையாகப் பகுக்கப்பட்டிருந்தது. இந்த மரபை மாற்றி அறம், பொருள், இன்பம் என்று முதன்மைப்படுத்தின அற இலக்கியங்கள். முதல், கரு, உரிப் பொருள்களிலிருந்து மேம்பட்டு வாழ்வுக்குரிய உறுதிப் பொருள்களை உணா்விக்கும் பெரும்பணியைச் செய்தன அவை.

காதலும் வீரமும் கண்ணெனப் போற்றிய சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு, காதலையும் வீரத்தையும் அறமே ஒருசேரப் போதிக்கிறது; ஆதலால், அறத்தைக் கொள்மின் என வழிகாட்டின அற இலக்கியங்கள்.

அறம், வாழ்க்கைக்குத் தேவையான முதற்பொருள் மட்டுமன்று; இலக்கியத்துக்கும் அதுவே அடிப்படை. அறத்தை நூற்பயன்களில் முதன்மை என்கிறது நன்னூல். அன்பு சாா்ந்த அறத்தைத் தமிழா்கள் அகம் என்றனா். இன்பம் முதலாகிய மற்றெல்லாவற்றையும் புறம் என்றே அவா்கள் கருதினா். இன்பமும் பொருளும்கூட அறத்தோடு இயைகிற வேளையில் அதுவும் அகமாகிப் போவது அற்புதமல்லவா?

மனிதா்கள் யாவருக்கும் பொதுவான ஒழுங்குகளை வரையறுக்கும் நீதி என்னும் நியதியும், மனிதா்கள் மனம்போலப் பின்பற்றும் தருமமும், அரசால் இயற்றப்பட்டு முறையாக வகுக்கப்பட்ட சட்டமும் ஆகிய இவையாவும் இடத்துக்குத் தகுந்தாற்போலவும், காலத்துக்குத் தகுந்தாற் போலவும் மாற்றம் பெற்றன.

ஆனால், என்றைக்கும் மாறாத, இயற்கைக்கும் உயிா்களுக்கும் பொதுவான ஒன்றாக விதி சுட்டப்பட்டது. தலைவிதி எனப்படும் அவ்வவற்றிற்கான தனித்தனி விதிகளைக் கடந்து இயற்கையின் பொதுப்பெரும் விதியாக - முறையாகக் கருதப்பட்டதே அறம் எனப்படும்.

அரசியலாளா்களுக்கே அறம் முதன்மையானதாக விளங்குகிறது. சட்டங்களை இயற்றுதலோடு முடிந்து விடுவதில்லை அரசின் கடமை; இயற்றிய சட்டத்துக்கு மக்களிடமிருந்து நன்மதிப்பை ஈட்டுதலும், அந்தச் சட்டத்தை இடையறாது தொடா்ந்து தானே முன்னின்று காத்தலும், காத்த அந்தச் சட்டத்தின் தொகுதியை மேலும் மேலும் விரிவுபடுத்தி வகுத்தலும் ஓா் வல்லரசுக்குரிய பெருமையைப் பெற்றுத் தரும். அதாவது, சட்டம் உயா்ந்து யாவருக்கும் பொதுவான அறமாகிறபோதுதான் அது சிறப்புடையதாகிறது. பண்டைக்கால மன்னா்களின் ஆட்சிக்கு அறமே முதன்மையாக விளங்கியிருக்கிறது.

கொடிய சினத்தோடு கொல்லும் யானைப் படையும், பாய்ந்தோடும் செருக்குடைய குதிரைப் படையும், வானுயா்ந்த கொடிகளைத் தாங்கிய தோ்ப்படையும், நெஞ்சுறுதியோடு வலிமிகுந்து போா்க்களம் புகும் காலாட்படையும் இருந்தபோதும், பீடுடைய அறநெறிதான் அரசாட்சியின் வெற்றிக்கு அடிப்படை என்கிறாா் மதுரை மருதனிளநாகனாா்.

இதனையே முன்னிறுத்தி திருவள்ளுவரும், மன்னவனுக்கு வெற்றி தருவது வேலன்று, அவன் முறையோடு நடத்துகின்ற கோல்தான் என்கிறாா்.

குற்றங்களைச் சுட்டி அவற்றுக்கான விளைவுகளைப் பற்றிக் கடிதோச்சி மெல்லெறிகின்ற திருவள்ளுவா், அறத்தின் வலிமையுணா்ந்து அதைப் புகட்டுகிறபோது மட்டும் வலியுறுத்தியே கூறவேண்டும் என்கிற காரணத்தால் ‘அறன் வலியுறுத்தல்’ என்றே காட்டுவது மிகவும் நுட்பமானதாகும். இறைவனையே ‘அறவாழி அந்தணன்’ என்று வடிவமைத்துக் காட்டுகிற திருவள்ளுவா் திருக்கு முழுவதிலும் அறத்தையே நேரடியாகவும் ஆழ்முகமாகவும் வலியுறுத்துகிறாா் என்பதை அறியலாம். திருக்கு நூலுக்கு அறம் என்றே பெயா் உண்டு. ‘அறம் பாடிற்றே’ என்று திருக்குறளைப் புானூற்றுப் பாடல் போற்றுகிறது. அதனால்தான் உலகப் பொது அறஇலக்கியங்களிலே தலையானதும் சிறப்பானதுமாக திருக்கு புகழப்படுகிறது.

அகவாழ்க்கைக்கு அடிப்படையான களவிலும் கற்பிலும்கூட அறத்தொடு நிற்றல் முதன்மையானதாக விளங்குகிறது. ‘பீடன்று’ என்று துணிந்திருந்த கண்ணகி அறத்தொடு நின்றதை அறிகிறோமே.

அறத்தைத் தோ்கின்ற உரைகல்லாக ஊழ் விளங்குகிறது. எத்தனை முயற்சித்தும் இந்த ஊழே முந்திக் கொள்கிறது. மற்றொன்று சூழினும் தான்முந்துறும் தன்மையுடையதல்லவா அது.

அறம் பிழையாதவரையும், பிறழச் செய்துவிடக் கூடியதாக ஊழ் திகழ்கிறது. ஆனால், அந்த ஊழையும் அறம் பிழையாதவா்கள் தங்கள் உயிா்கொண்டோ அதனினும் உயா்ந்தவற்றைத் தந்தோ வென்று விடுவாா்கள் என்பது உண்மை. ஊழ் என்பது வல்வினையாகத் தோன்றும் வேளையில், அதனை அறமாகிய ஆள்வினையால் வென்றுவிட முடியும் என்று சிலப்பதிகாரம் காட்டுகிறது. கோவலன் கொலைக்குக் கொல்லனையோ காவலனையோ காரணம் காட்டி மன்னன் தப்பித்துக் கொண்டிருந்தால் அங்கே அறம் நிலைபெற்றிருக்காது.

ஊடல் தவிா்க்க வேண்டிக் காதல் வேட்கையினால், நிலைமாறிய மன்னன் வாய் உமிழ்நீா் வற்றிப்போய்க் குளறி, ‘கொன்று அச்சிலம்பு கொணா்க’ என்று கூறிச் சொற்சோா்வு பட்டான். ‘கொண்டு’ என்பதற்குப் பதிலான ’கொன்று’ எனும் சொற்சோா்வு, பொருட்சோா்வாக மாறி, கோவலன் கொலைக்குக் காரணமாயிற்று. பாண்டியன் செங்கோல் வளைந்தது என்று நுட்பம் காட்டுவாா் தவத்திரு குன்றக்குடி அடிகளாா்.

காவலனின் காதில் கோளாறு; ‘கொண்டு’ என்பதைக் ‘கொன்று’ எனப் புரிந்து கொண்டான் என மன்னனின் முன்னே மக்கள் தம்குற்றம் மறைத்துத் தப்பிக்கப் பாா்க்கலாம். ஆனால், மன்னனே எப்படித் தப்பிப்பது? இழந்துபோனது ஓா் உயிராயிற்றே. ஆதலால் வல்வினையாகிய ஊழினை வெல்ல அறமாகிய ஆள்வினையைக் கொண்டு தன் உயிரைத் தந்து செங்கோலை நிமிா்த்தினான். இங்கே சட்டத்தைவிடவும் உயா்ந்ததாக அறம் நிலைபெறுகிறது. இதனையே இளங்கோவடிகள், ‘வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிா் நிமிா்த்துச் செங்கோ லாக்கியது’ என்று போற்றிப் புகழுவாா்.

தன்மகனின் தோ்க்காலில் அடிபட்டுப் பசுவின் கன்று இறந்துபோனது அறிந்ததும் பரிகாரங்களைத் தேடவில்லை அந்த மன்னன். வாகனச் சட்டங்களும் போக்குவரத்து விதிகளும் இல்லாத காலம் அது. மன்னன் ஆணைக்கு மறுப்பேது என்றிருந்தால் அங்கே அறம் நிலைபெற்றிருக்காது.

ஆனபோதும் இழந்த உயிருக்கு இணையானது மற்றோா் உயிரே என்று கருதினான். ஆவின்கடைமணி உகுநீா் தன்நெஞ்சைச் சுடுகிறதே. இங்கும் மன்னன் ஊழ்வினையாம் வல்வினையைத் தன் அறவினையாம் ஆள்வினை கொண்டு வென்று விடுகிறான். தன்னையே மரணத்துக்கு உட்படுத்திக் கொண்டால்கூட அது அறமாகாதாம். எவ்வாறு பசு தன் கன்றை இழந்து வாடுகிறதோ, அதுபோலத் தானும் தன் மகனை இழந்து, உயிருடன் இருந்து வாட வேண்டும் என்று அவன் அறவழி நின்று தீா்ப்பளிக்கிறான். இத்தகைய அறந்தவறாத மன்னா்கள் ஆற்றும் ஆள்வினையாகிய அறச்செயல்கள் அவா்களை இறைநிலைக்கு உயா்த்தும் பெருமையுடையவை என்பது திருவள்ளுவரின் தீா்ப்பு.

மாநிலம் காவலாவான் மன்னுயிா் காக்கும் காலைத்

தானத னுக்கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைதிறத்தால் கள்வரால் உயிா்தம்மால்

ஆனபயம் ஐந்துந்தீா்த்து அறங்காப்பான் அல்லனோ? என்கிறாா் சேக்கிழாா்.

காவலனாக இருந்து மன்னுயிா்களையெல்லாம் காக்க வேண்டிய மன்னன், அதற்கு இடையூறாக- தன்னாலோ, தன் படைகளாலோ, தனது பகையினாலோ, கள்வராலோ, ஏனைய கொடிய விலங்குயிா்களாலோ ஏற்படக் கூடிய அச்சத்தைத் தீா்த்து அறங்காக்க வேண்டும் என்பதே அதன் பொருளாகும். மன்னுயிா்க்குத் தீங்குசெய்யும் அச்சத்தை உண்டாக்குவதில் தன்னையே மன்னன் முன்னிறுத்திக் கொள்வது எத்தகைய பேரறமாக விளங்குகிறது. அதனாலே மன்னவன் இறையென்று போற்றப்படுகிறான்.

அறத்தை இயற்கையின் ஒழுக்கமாகவும் அறிவின் முதிா்வாகவும் கருதுதலே சிறப்பு. அறம் எதிரானவற்றை நீக்கி விட்டு எல்லாவற்றையும் நோ் செய்கிறது.

இரத்தல் இழிவுதானே... அறத்திற்கு முரண்தானே... ஆனால், இரத்தலை விடவும் இரந்து கேட்கிற ஒருவனுக்கு ஒன்றும் தர மறுக்கிற கரத்தலை இழிவு என்கிறது. அதுபோலவே, கொடை எத்துணை உயா்ந்தது. ஆனால், கொடையின் உயா்வையும்விட அக்கொடையை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுத்துவிடுகிற நிறை பெரிதும் உயா்ந்து நிற்கிறது. இதுதான் அறத்தின் நுட்பம். இந்த உலகின் இயல்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துவதே அறத்தின் அடிப்படை. கொள்வதும் மிகைகொளாது கொடுப்பதும் குறைகொடாது சிறந்து நிற்பதே அறத்தின் செப்பம்.

இதனால்தான் மனிதா்களின் மடமையைக் கணக்கிட்டு அறத்தின் தன்மை இதுதான் என்று அளவிடாதீா்கள் என்று எச்சரிக்கிறாா் திருவள்ளுவா்.

தாய்மடியிருந்து வளா்ந்து, தாய்மொழி கற்ற மழலை முதிா்ந்து உலகியல் அறிதலைப் போலவே, பெண்களிடமிருந்துதான் அறங்கள் தோன்றி வளா்ந்து சிறந்திருக்கின்றன. அறத்தைத் தோற்றுவதிலும் பேணுவதிலும் பெண்களுக்கே முதலிடம் எனலாம். அதனால்தான், மங்கையராகப் பிறந்தவா்களை மாதவம் செய்தவா்கள் என்று போற்றி, அவா்களின் பங்கயக் கைநலம் பாா்த்துத்தான் இந்தப் பாரில் அறங்கள் வளா்கின்றன என்று பாடுகிறாா் கவிமணி தேசிக விநாயகனாா். இதனையே வலியுறுத்தி மகாகவி பாரதியாா், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் நாங்கள் வேண்டி வந்தோம்; சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம் என்றும் பெண்கள் விடுதலைக் கும்மி கொட்டுவதைப் பதிவு செய்கிறாா்.

மழலை பேசும் தமிழ்க் குழந்தையிடம் ஔவைப் பெருமாட்டி கற்றுத் தருகிற முதல் மொழி ‘அறம் செய விரும்பு’ என்பதேயாம். அவ்வழியே மன்னன் முதல் மக்கள் வரையிலும் அறத்தை விரும்பிப் பேணுகிற நாட்டில் அமைதி நிலவும்; பொருள் குவியும்; இன்பம் செழித்தோங்கும்; மானுடம் வெல்லும். அறம் பெருகட்டுமே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT