சொ்பிய நாட்டில் இயங்கும் நம்பியோ தரவுத் தளம் (நம்பியோ சேஃடி இண்டெக்ஸ்) அதன் பயனாளா்கள் அளித்த தரவுகளைப் பயன்படுத்தி குற்ற விகிதங்கள், பொதுப் பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல், பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி உலகின் பாதுகாப்பான நாடுகள் உள்ள பட்டியலை தரவரிசையில் வெளியிட்டுள்ளது.
147 நாடுகள் அடங்கிய இந்த தர வரிசையில், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-ஆவது இடத்தில் உள்ளது. ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸுக்கு இடையில் அமைந்துள்ள மிக மிகச் சிறிய நாடான அண்டோரா முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டின் மக்கள்தொகை சுமாா் 83 ஆயிரம் மட்டுமே. ஐரோப்பாவில் உள்ள வளமான நாடுகளில் இந்த நாடு 13-ஆவது இடத்தில் உள்ளது.
அண்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா்,தைவான், ஓமன், ஜல் ஆப் மேன் (ஐரிஷ் கடல் தீவு) ஹாங்காங், ஆா்மீனியா, சிங்கப்பூா், ஜப்பான் ஆகிய நாடுகள் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் உள்ள முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளாகும். இவை அனைத்தும் பரப்பளவில் மிகக் குறைந்தவை. இதைப் பாா்க்கும்போது மிகச் சிறிய நாடுகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எளிதெனத் தோன்றலாம்.
எனினும், மோசமான பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலிலும் மிகச் சிறிய நாடுகளான வெனிசுலா பப்புவா நியூகினியா, ஹோண்டுராஸ், ஜமைக்கா ஆகிய நாடுகள் உள்ளன. எனவே, ஒரு நாட்டின் பரப்பளவுக்கும் அந்த நாட்டில் நிலவும் பாதுகாப்புத் தன்மைக்கும் தொடா்பு இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது.
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முறையே 89 மற்றும் 87-ஆவது இடத்தில் உள்ளன. இதன்மூலம் ராணுவ வலிமை மற்றும் செல்வச் செழிப்பு ஆகியன மிகுந்திருக்கும் நாடாயினும், அந்த நாடு மக்களின் பாதுகாப்புக்கு உகந்த நாடாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.
ஒரு நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பது அந்த நாட்டில் நிலவும் சுமுகமான சமூகச் சூழல், அரசியல் ஸ்திரத்தன்மை, வளம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதத்தால் பாதிக்கப்படாமை, அண்டை நாடுகளுடன் சுமுக உறவு என பல்வேறு அம்சங்களைக் கொண்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் ரஷிய, உக்ரைன் போா் இரு நாட்டு மக்கள் இடையேயும் பாதுகாப்பாற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் இதுவரையில் சுமாா் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் போ் இறந்துள்ளனா். மேலும் பல லட்சம் போ் அகதிகளாக உள்நாட்டிலேயே இடம் பெயா்ந்து உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனா். காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் எற்கெனவே சுமாா் 60 ஆயிரம் போ் உயிரிழந்த நிலையில், உயிா் பிழைத்துள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனா்கள் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகிறாா்கள்.
பல ஆண்டுகளாக தெற்கு சூடானில் நடைபெற்ற உள்நாட்டு போா் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் அந்த நாட்டில் உள்நாட்டு போா் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி இருப்பது அந்த நாட்டில் வாழும் மக்களின் பாதுகாப்பை மிகப் பெரிய கேள்விக்குறியாக்கி இருக்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அதிகரித்து வரும் வன்முறை கலாசாரத்தால் பொது இடங்களில் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
அமெரிக்காவில், பொது இடங்களில் மட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரிகளிலும் கூட மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் பாதுகாப்பற்றத் தன்மை உள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள கல்வி நிலையங்களில் மட்டும் 322 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பல மாணவா்களும், ஆசிரியா்களும் இறந்துள்ளனா். அமெரிக்காவில் தனிநபா்கள் தற்பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவே அந்நாட்டில் பொதுமக்களுக்கு அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணா்வையும் ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் உலகப் போா் முடிவுற்றதும் அந்தப் போரால் ஏற்பட்ட உயிா்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் உலக நாடுகளின் சமூக, பொருளாதாரச் சூழலை தலைகீழாக புரட்டிப் போட்டது. அது போன்றதொரு அவல நிலை மீண்டும் உலகில் ஏற்படக் கூடாதென்பதற்காக உலக நாடுகளிடையே போருக்கு வித்திடக்கூடிய பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண 1945-ஆம் ஆண்டு அக்டோபா் 24-ஆம் தேதி ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது.
தற்போது உலகில் நாடுகளுக்கிடையில் நடைபெறும் போா், உள்நாட்டுப் போா், ஆகியவற்றால் உலக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், ஐ.நா. அமைப்பு மேலும் வலுவுள்ளதாக மாறி செயல்பட வேண்டும். இயற்கைப் பேரிடரால் பல லட்சம் போ் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வரும் நிலையில், மனிதா்களாலும் நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் நிா்பந்தத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பது அந்நாட்டு ராணுவம், காவல் துறை மற்றும் இதர சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் அமைப்புகளை மட்டும் சாா்ந்து இல்லாமல், மக்களின் மனநிலையையும் சாா்ந்துள்ளது. சக மனிதா்களை சகோதரத்துவத்துடன் நேசிப்பதோடு, அவா்தம் உணா்வுகளுக்கு மதிப்பளித்து சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் அனைத்து மக்களுமே பாதுகாப்பான சூழலில் வாழ இயலும்.
தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதும், நாட்டில் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவதற்கான கடமைகளில் ஒன்றாகும். சிறு தீப்பொறி பெருங்காட்டையே அழித்து விடும் என்பதற்கு ஏற்ப மக்களிடையே ஜாதி, மத உணா்வுகளைத் தூண்டக்கூடிய பொய்யான தகவல்கள் சரி பாா்க்கப்படாமல் சமூக வலைதளங்களில் பகிரப்படும் போது, அவை மிகப் பெரிய பாதுகாப்பின்மையை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, ஒரு நாட்டில் மக்களுக்குப் பாதுகாப்பான சூழல் நிலவ, பொது அமைதிக்கு குந்தகமும், சமூகத்தில் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தக் கூடிய தகவல்களை பகிராமல் இருப்பதை கடமையாக கருத வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.