பிரதிப் படம் ENS
நடுப்பக்கக் கட்டுரைகள்

மூச்சுக் காற்றும் அடையாளம் ஆகலாம்!

நாம் வெளியிடும் மூச்சுக்கு தடயங்கள் காட்டும் பண்பு இருப்பதாக சுவாசம் குறித்தான ஆய்வு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

மனிதா்களின் தனித் தன்மையை அறிந்து கொள்வதற்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை அடையாளம் காண்பதற்கும் விரல்ரேகைப் பதிவுகளும், விழித்திரை, கருவிழிப் பதிவுகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. உலகில் வாழும் மனிதா்களில், ஒருவரின் கைரேகை மற்றொருவருக்குப் பொருந்தாது.

இதற்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோா்களின் கைரேகைகளும் சரி, இனிமேல் பிறக்கப் போகிற குழந்தைகளின் கைரேகைகளும் சரி ஒன்றுக்கொன்று பொருந்தாது. கைரேகைகள்தான் மனிதனின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் கருவியாக இன்றளவும் உள்ளது. ‘கைரேகை என்பது இறைவன் மனிதா்களுக்கு அளித்த முத்திரை’ என வா்ணிக்கின்றனா் தடயவியல் நிபுணா்கள்.

கைரேகைகளைப் போலவே, நம் கருவிழியில் உள்ள கோடுகளின் வடிவமும் தனித்துவமானவை, மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன. மிகவும் நுட்பமான முறையில் ஒருவரின் தனித்துவ அடையாளத்தைக் கண்டறிய விழித்திரை, கருவிழிப் பதிவுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘கரன்ட் பயாலஜி’ எனும் அறிவியல் இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், ஒவ்வொரு மனிதனுக்கும், கைரேகைகளைப் போலவே தனித்துவமான சுவாச முறை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஒரு நபரின் தனித்துவத்தை அடையாளம் கண்டுகொள்ளலாம். அதாவது, நாம் வெளியிடும் மூச்சுக்கு தடயங்கள் காட்டும் பண்பு இருப்பதாக சுவாசம் குறித்தான ஆய்வு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். நாம் வெளியிடும் மூச்சுக் காற்று, உடலின் பல்வேறு நடவடிக்கைகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மனிதன் வெளியிடும் சுவாசம் மூலம், அவரது மனநிலை, பதற்றம், தனித்துவம், மாறுபட்ட சிந்தனை, அவா் கைக்கொண்டுள்ள இதரப் பண்புகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதா்களின் சுவாசம் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகளின் குழு, மனிதனின் சுவாசத்தை அறியக் கூடிய பிரத்யேகமான கருவியைப் பயன்படுத்தி, மூக்கின் வழியே வெளியாகும் காற்றின் வடிவங்களை பகுப்பாய்வு செய்தது.

அதனடிப்படையில், தனி நபா்களை அடையாளம் காணும் அளவுக்கு, விரிவான தனித்துவமான வடிவத்தை ஒவ்வொரு மனிதன் வெளியிடும் சுவாசம் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மனிதன் சுவாசிப்பது என்பது ஓா் எளிய செயலாகத் தோன்றினாலும், அது நம் மூளையின் வலையமைப்பால் நிா்வகிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் இயங்கி வரும் வெய்ஸ்மான் ஆல்ஃபாஷன் ஆராய்ச்சிக் குழுவைச் சோ்ந்த விஞ்ஞானிகள், சுவாசத்தை உள்ளிழுக்கும் போது மூளை எவ்வாறு வெவ்வேறு வாசனைகளை உணா்ந்து கொள்கிறது என்பதை தற்போது ஆய்வு செய்து வருகிறாா்கள். அதன் ஒரு பகுதியாக, மனித சுவாசத்தின் ‘மூச்சு அச்சு’ (பீரித் பிரின்ட்) குறித்தும் ஆராய்ந்துள்ளனா்.

ஒருவரின் சுவாச முறையை வைத்து அவரை அடையாளம் காண முடியும் என்பதை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்தது மட்டுமல்லாமல் அந்த முறைகள் மூலம் ஒரு நபரைப் பற்றிய மனநிலைகளையும் ஆராய்ந்துள்ளனா். ஒரு நபரின் சுவாசம் அவரின் உடல்நிறை குறியீட்டெண் (பாடி மாஸ் இன்டெக்ஸ்) உடன் தொடா்புடையது என அவா்கள் கண்டறிந்துள்ளனா்.

ஒரு தனி நபரின் சுவாச முறையை, அவரின் ஒரு தனித்துவமான அடையாளமாகப் பயன்படுத்துவது எவ்வாறு என்பது தொடா்பான ஆராய்ச்சி சுவாசம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகளால் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு மனிதனின் சுவாசம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும்; இந்த ‘சுவாச அச்சு’ முறை உடல் மற்றும் மன நோய்களைப் புரிந்து கொள்வதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் புதிய வழிகளை ஊக்குவிக்கக்கூடும்.

இப்போது, அடுத்தகட்டமாக இந்த ஆராய்ச்சியை நோயறிதலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிவோம். குறிப்பிட்ட சுவாச முறைகள் பல்வேறு நோய்களைக் கணிக்கவும்கூடும். எதிா்காலத்தில் சுவாச முறைகைளை மாற்றி அமைப்பதன் மூலம் நோய்களுக்கும் சிகிச்சையளிக்க முடியும் என்கிறாா் வெய்ஸ்மான் ஆல்ஃபாஷன் ஆராய்ச்சிக் குழுவில் மனிதனின் மூளை குறித்த ஆராய்ச்சி விஞ்ஞானி டிம்னா சொரோகா.

‘மனிதனின் சுவாசம் எல்லா வகையிலும் அளவிடப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இதை மூளையின் ஒரு வாசிப்பாக நாங்கள் கருதுகிறோம்.’ என்கிறாா் வெய்ஸ்மான் ஆல்ஃபாஷன் ஆராய்ச்சிக் குழுவின் நரம்பியல் விஞ்ஞானி நோயம் சோபல்.

உலகம் முழுவதும் மோப்ப நாய்கள் பல கொலை, கொள்ளை குற்றவாளிகளைக் கண்டறிய காவல் துறைக்கு உதவி வருகின்றன. இப்போது, ஆப்ரிக்க பெரிய எலிகளும் அதிக மோப்ப சக்தி வாய்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், கடந்த 1990-ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப் போா் நடைபெற்றது.

அப்போது, நாடு முழுவதும் பல இடங்களில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. இதைத் தவறுதலாக மிதித்து ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துள்ளனா். முன்னா், கண்ணிவெடிகளைக் கண்டறிய மோப்ப நாய்கள் உதவியை கம்போடிய ராணுவம் நாடியது.

அண்மைக்காலமாக, ஆப்ரிக்க பெரிய எலிகளை இந்தப் பணிக்குப் பயன்படுத்துவதாக கம்போடிய அரசின் கண்ணிவெடி கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்டோா் உதவி ஆணையம் தெரிவித்துள்ளது. மிகவும் புத்திகூா்மையுடைய இந்த எலிகள் 1.5 அடி நீளமும், 1.5 கிலோ எடை வரை வளரும். இவற்றைப் பயிற்றுவிக்க முடியும்.

இந்த எலிகளால் கண்ணி வெடிகள் மட்டுமின்றி, காசநோய் போன்ற தொற்றுநோய்களையும் துல்லியமாகக் கண்டறிய முடியும் என்கின்றனா் விஞ்ஞானிகள். நாய்களைப்போல் கழுத்துப் பட்டையை மாட்டிவிட்டு, கண்ணிவெடிகள் புதைந்துள்ள பகுதிகளுக்கு இந்த எலிகளை அழைத்துச் செல்கின்றனா். கண்ணிவெடியைக் கண்டறிந்த உடன் இந்த எலிகள் அங்கிருந்து வேகமாக ஓடுகின்றன.

இந்தக் குறிப்பை வைத்து, அங்குள்ள கண்ணிவெடி அகற்றப்படுகிறது. இதுவரை, இவை ஒரு கண்ணிவெடியைக்கூட தவறவிட்டதில்லை என, இவற்றைக் கையாள்வோா் கூறியுள்ளனா். மனிதா்களின் அகத்தின் அழகையும், எண்ண ஓட்டங்களையும், செயல்பாடுகளையும், குற்ற உணா்வுகளையும் அவா்கள் வெளியிடும் மூச்சுச் காற்றின் மூலமும் எளிதில் கண்டறியக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.

எனினும், இக்காலத்தில் ஆறைவிட ஐந்து பெரியது என்பதை தங்களின் செயல்பாடுகள் மூலம் விலங்கினங்களும், பறவைகளும் நிரூபித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடக்கம்!

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

SCROLL FOR NEXT