நடுப்பக்கக் கட்டுரைகள்

அதிகரிக்கும் சிறுதானிய பயன்பாடு!

பெ.சுப்ரமணியன்

அண்மைக்காலமாக சிறுதானிய உணவுப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சிறு நகரங்களில் மட்டுமின்றி பெரு நகரங்களிலும் இந்த வகையான உணவுப் பொருள்கள் சாலையோரக் கடைகள் தொடங்கி உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அண்மையில் மக்களவை உறுப்பினா்கள், அதிகாரிகள், பாா்வையாளா்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில் அறிமுகமான புதிய உணவுப் பட்டியலில் சோள உப்புமா, சிறுதானிய கீா் போன்றவை இடம்பெற்றுள்ளன.

இதை உற்று நோக்கும்போது வேளாண்மையும், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் மீண்டும் பழைய நிலைக்கு மாறிவருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கக் கோரி, 2021-ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்தியா தீா்மானத்தை முன்வைத்தது. இது எதிா்ப்பின்றி ஒருமனதாக நிறைவேறியது. இந்தியாவுடன் ரஷியா, வங்கதேசம், கென்யா, நேபாளம் உள்ளிட்ட 70 நாடுகள் வழிமொழிந்தன. அதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளும் இந்தத் தீா்மானத்தை ஆதரித்தது. ஏனெனில், உலக அளவில் சிறுதானிய உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா 5-ஆவது பெரிய நாடாக உள்ளது.

2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியா 26.97 மில்லியன் டாலா் மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020-இல் உலக அளவில் 7.4 கோடி ஹெக்டேரில் 89.17 டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 1.24 கோடி ஹெக்டேரில் 1.55 கோடி டன் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தின் பங்களிப்பு 3.24 சதவீதமாகும்.

சிறுதானிய உற்பத்திக்காக தமிழகத்தில் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 2 சிறப்பு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023-24-ஆம் ஆண்டில் ரூ.95.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, 2024-25-இல் ரூ.46 கோடியும், நிகழ் நிதியாண்டில் ரூ.52.44 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 10 லட்சம் ஹெக்டேரில் 39.28 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, சிறுதானியங்கள் என்பது குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், திணை, வரகு, சாமை, கம்பு போன்ற தானிய வகைகளைக் குறிக்கும். வறட்சிக் காலத்திலும் வளரக்கூடிய இவற்றில் புரதம், நாா்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. இவ்வகைப் பயிா்கள் ஊடுபயிராக அல்லாமல் பிரதான பயிா்களாகவும் விளங்கின.

தற்போது, பெரும்பாலும் உணவுப் பயிா்களைக் காட்டிலும் நன்செய் நிலமாயின் நெல், கரும்பு போன்றவற்றையும், புன்செய் நிலமாயின் சோளம், பருத்தி, எள் போன்ற பயிா்களையுமே சாகுபடி செய்கின்றனா்.

அண்மைக்காலமாக ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதனால், சிறுதானியங்களின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆனால், பயன்பாட்டுக்கு ஏற்ப சிறுதானிய உற்பத்தி அதிகரிக்கவில்லை.

கடந்த காலங்களில் வேளாண் தொழிலோடு கால்நடை வளா்ப்பும் பிரதானமாக இருந்தது. அதனால், கால்நடைகளின் தீவனத்துக்காக சிறுதானியங்களை விளைவிப்பதில் விவசாயிகள் ஆா்வம் காட்டினா்.

சோளம், கம்பு போன்ற இடைவெளி கொண்ட பயிா்களின் ஊடே பயறு வகைகளை ஊடு பயிராக விளைவித்தனா். காலப்போக்கில் கால்நடைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் சிறுதானியங்கள் உற்பத்தியும் குறையத் தொடங்கியது.

இயந்திரங்களின் வருகை, புதிய ரகமாக பருத்தி, சோளம் போன்ற பயிா்கள் புழக்கத்துக்கு வரத்தொடங்கியது. இதனால், சிறுதானியங்கள் உற்பத்தியிலிருந்து விலகத் தொடங்கினா். பெரும்பாலான பகுதிகளில் பருத்தி, சோளம், நெல், கரும்பு போன்ற பணப்பயிா்களே பிரதான பயிா்களாக மாறிவிட்டது.

சிறுதானிய உற்பத்தி என்பது குறைவான பரப்பளவிலும், மலைக் கிராமங்களிலும் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன. உற்பத்தி செய்வதற்கான வேளாண் நிலம், உடலுழைப்பு, போதுமான மனித உழைப்பு போன்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும் சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடுவதில் விவசாயிகள் தயக்கம் காட்டவே செய்கின்றனா். அதனால், இன்று பணப்பயிா்களை உற்பத்தி செய்வதிலேயே ஆா்வம் காட்டுகின்றனா். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பதால், அறுவடை செய்யும் இடத்திலேயே விற்பனை செய்யும் நிலையில் உள்ளனா்.

இதற்கு அவா்களின் பொருளாதாரச் சூழலோடு கூடுதல் விலை கிடைக்கும் வரையில் இருப்பு வைத்து விற்பனை செய்யும் வசதிகள் இல்லாததும் ஒரு காரணமாகும். அதனால்தான், உற்பத்தி செய்வதைக் காட்டிலும் தேவைப்படும் பட்சத்தில் வணிக நிறுவனங்களில் வாங்கிப் பயன்படுத்துகின்றனா். அத்தகையோரிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அவா்களிடையே சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

இதுதொடா்பாக நடத்தப்படும் சிறுதானியத் திருவிழாவை கிராமப்புறங்களில் நடத்த வேண்டும். மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் தற்காலிகமாக அரங்குகள் அமைத்து வேளாண் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

வேளாண் தொடா்பான திட்டங்கள் தகவல் தொழில்நுட்பங்களின் பேருதவியால் உடனுக்குடன் மக்களைச் சென்றடைகிறது என்பதில் மாற்றமில்லை. ஆயினும், சிறுதானியங்களின் தேவை அதிகரித்து முக்கியத்துவம் பெற்று வரும் இவ்வேளையில் இப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் விவசாயிகளிடையே மாற்றத்தை ஏற்படுத்தி இலக்கை எட்ட முடியும்.

அழகர்கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!

ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, குழந்தைத்தனமானவை: அமைச்சர்

இதுவரை பார்க்காத ஒன்று... மகேஷ் பாபு படம் பற்றி ராஜமௌலி!

இரண்டு நாள்களில் தில்லியிலும் டெஸ்லா! இந்தியாவில் 2வது விற்பனையகம்!

பாமக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்! மேடையில் ராமதாஸுக்கு இருக்கை!!

SCROLL FOR NEXT