பினக் ரஞ்சன் சக்கரவர்த்தி
உலகின் கண்கள் அனைத்தும் காஸா மீது படிந்திருக்க, நூற்றாண்டு கடந்த கம்போடியா-தாய்லாந்து எல்லைப் பிரச்னை திடீரென ராணுவ மோதலாக அண்மையில் வெடித்தது. பொருளாதார விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த ஆசியான் அமைப்பை இந்த மோதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டு பெளத்த நாடுகள் எல்லையில் மாறிமாறி குண்டு மழை பொழிந்ததற்கு, ஒரு மலை உச்சியில் அமைந்துள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "ப்ரே விஹார்' என்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னம் அந்தஸ்து பெற்ற ஹிந்து கோயிலின் உரிமைப் பிரச்னைதான் முக்கியக் காரணம் என்பது பலரை வியப்பில் ஆழ்த்தும் செய்தி.
மலேசிய பிரதமரின் தலையீட்டில், தாய்லாந்து-கம்போடிய பிரதமர்களுக்கு இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தையால் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. முன்னதாக, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை தாய்லாந்து மறுத்திருந்தது. மலேசியாவின் சண்டை நிறுத்தத் திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தாய்லாந்து, பின்னர் தங்கள் ராணுவத்தின் அழுத்தம் காரணமாகவே அதிலிருந்து பின்வாங்கியதாக கம்போடியா குற்றஞ்சாட்டியது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் கம்போடியா உண்மையாக ஆர்வம் காட்டினால்
பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பிறகே, சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாயின.
இந்த மோதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தைக் கூட்டியது. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளும் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தன. அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்துக்கு உடன்படவில்லையெனில் வர்த்தக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என இரு நாடுகளுக்கும் தன் பாணியில் மிரட்டல் விடுத்தார்.
மேலும், "இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் நான் ஆற்றிய பங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது' என்று குறிப்பிட்டு, தமது சமாதானத் தூதர் பாத்திரத்தை நிலைநாட்ட முயன்றார். எனினும், உக்ரைன் மற்றும் காஸா விவகாரங்களில் டிரம்ப் விடுத்த கெடுபிடிகள் தோல்வியைச் சந்தித்த நிலையில், அந்தப் பின்னடைவுகளை ஈடுசெய்யும் நோக்கில் அவர் எடுத்த முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.
இந்தக் குறுகியகால மோதலில், இரு நாட்டுப் படைகளும் தற்காப்பு என்ற பெயரில் பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. நேட்டோ அமைப்பில் கூட்டாளி அல்லாத அமெரிக்காவின் நட்பு நாடான தாய்லாந்து, நவீன அமெரிக்க ஆயுதங்களுடன் களமிறங்கியது; கம்போடியாவின் ராணுவத் தளங்கள் மீது ட்ரோன்களை பயன்படுத்தியது. ஆனால், கம்போடியாவின் சிறிய படைகளோ பழைய சீன மற்றும் ரஷிய ஆயுதங்களையே நம்பியிருந்தன. இந்த மோதலில் 45 வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் எல்லையோர கிராமங்களைவிட்டு வெளியேறி, அகதிகளாகினர்.
மூன்று மாதங்களுக்குள் ஏற்பட்ட இரண்டாவது மோதல் இது. முன்னதாக, கண்ணிவெடி விபத்தில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்த பிறகு, ஒரு கம்போடிய வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து, இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களின் தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டன. மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற பொது இடங்களை கம்போடியா சேதப்படுத்தியதாக தாய்லாந்து முறையிட்டது. இதற்குப் பதிலடியாக, தடை செய்யப்பட்ட கொடிய வெடிகுண்டுகளை தாய்லாந்து பயன்படுத்தியதாக கம்போடியா குற்றஞ்சாட்டியது.
"ப்ரே விஹார்' கோயிலுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கோரியபோது, 2008-ஆம் ஆண்டிலும் பதற்றம் ஏற்பட்டு, 28 பேர் இறந்தனர். ஆனால், இம்முறை மோதல் வெவ்வேறு வடிவங்களில் பரிணாமம் அடைந்தது. தாய்லாந்து ராணுவச் சட்டத்தை அறிவித்து, அனைத்து எல்லைகளையும் மூடியது. இதனால், கோபமடைந்த கம்போடியா, தாய்லாந்திலிருந்து வரும் எரிபொருள், பழங்கள், காய்கறிகள் என எல்லாவற்றையும் நிறுத்தியது. அதுமட்டுமின்றி, அந்நாட்டுத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வலைதளங்கள் என அனைத்துக்கும் தடை விதித்தது.
தாய்லாந்து இந்தியாவின் கடல்வழி அண்டை நாடாக இருந்தாலும், இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணும் இந்தியா, மோதலை நிறுத்தி அமைதியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியது. இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணும் இந்தியா, மோதலை நிறுத்தி அமைதியை ஏற்படுத்துமாறு ஓர் அறிக்கையில் வலியுறுத்தியது. மேலும், இரு நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்திய குடிமக்கள் எல்லையோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்தன.
1907-லிருந்து நீடிக்கும் இந்த எல்லைப் பிரச்னைக்கு, கம்போடியாவை ஆட்சி செய்த பிரான்ஸ் காலனி அரசை இரு நாடுகளும் குறைகூறுகின்றன. ஏனெனில், பழைய கோயில்களின் இடிபாடுகள் நிறைந்த அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்லும் எல்லை சரியாகக் குறிக்கப்படவில்லை. பிரான்ஸ் நில வரைபட வல்லுநர்கள் வரைந்த வரைபடங்களில் முரண்பாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, கோயில்களுக்கு அருகிலுள்ள நிலங்களை தாய்லாந்து உரிமை கோருகிறது. அதேபோல், இப்போது தாய்லாந்து கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகள் தங்கள் எல்லைக்கு உட்பட்டவை என கம்போடியா கூறுகிறது.
சர்வதேச நீதிமன்றம் 1962-இல் "ப்ரே விஹார்' கோயிலை கம்போடியாவுக்கு வழங்கினாலும், அதன் சுற்றுப்புறப் பகுதி இன்னும் தாய்லாந்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எனவே, பக்தர்களின் வருகை குறித்த சிக்கல்கள் தொடர் பதற்றத்துக்கு வழிவகுக்கின்றன. சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான எந்தவொரு சவாலையும் தங்கள் இறையாண்மையின் மீதான தாக்குதலாக கம்போடியா கருதுகிறது. இவ்வாறு, பிரபலமான ப்ரே விஹார் மற்றும் சிறிய தா முவான் தோம் கோயில்களின் உரிமை குறித்த பிரச்னை முடிவின்றித் தொடர்கிறது.
இந்தப் பகை எவ்வளவு ஆழமானது என்றால், அது தாய்லாந்தின் உள்நாட்டு அரசியலிலேயே பெரும் புயலைக் கிளப்பியது. கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென் கசியவிட்ட ஒரு தொலைபேசி உரையாடல் பதிவு, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் பேதோங்தர்ன் ஷினவத்ராவின் பதவியைப் பறித்தது. அந்த உரையாடலில், பேதோங்தர்ன் ஹுன் சென்-னை உறவுமுறை கொண்டு அழைப்பதுடன், மோதலுக்கு தாய்லாந்து ராணுவமே காரணம் என்று வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இதனால், நாட்டின் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக பேதோங்தர்ன் உள்நாட்டில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கம்போடிய முன்னாள் பிரதமர் போல்போட்டின் தளபதிகளில் ஒருவரான ஹுன் சென், 38 ஆண்டுகள் கம்போடியாவை ஆட்சி செய்தார். பின்னர், 2023-இல் தனது மகன் ஹுன் மானெட்டிடம் ஆட்சியை ஒப்படைத்தார். பேதோங்தர்னின் தந்தையும், தாய்லாந்தின் முன்னாள் பிரதமருமான தக்சின் ஷினவத்ராவும், ஹுன் சென்னும் நீண்டகால நண்பர்கள். ஆனால், இந்த நட்பு பேதோங்தர்னின் அரசியல் வாழ்க்கைக்குப் பெரும் பின்னடைவாக முடிந்தது.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகள், அரச விசுவாசிகள் மற்றும் ராணுவத்துடன் கைகோத்து பேதோங்தர்ன் பலவீனமானவர் என்றும், ராணுவத்துக்கு எதிராகப் பேசுபவர் என்றும் முத்திரை குத்தினர்.
38 வயதான பேதோங்தர்ன், தனது தந்தை தக்சினின் கைப்பாவை என்ற விமர்சனமும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதன்விளைவாக, ஆளும் கூட்டணியிலிருந்து முக்கியக் கட்சியான பியூ தாய் விலகியது. மன்னிப்புக் கோரிய பிறகும், தாய்லாந்து அரசமைப்பு நீதிமன்றம் பேதோங்தர்னை பிரதமர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது. பாதுகாப்பு அமைச்சர் இடைக்கால பிரதமரானார். எனினும், பதவிநீக்கத்துக்கு முன்பு பேதோங்தர்ன் கலாசார அமைச்சராக புதிய நியமனம் பெற்றார்.
தாய்லாந்தில் ராணுவமும், அரசமைப்பு நீதிமன்றமும் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கும் வழக்கமான நாடகத்தை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றினது. இந்த நீதிமன்றம் இதற்கு முன்பும் மூன்று பிரதமர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும் இருவரை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தடை செய்தது. 2000-களின் தொடக்கத்திலிருந்து, அரசக் குடும்பத்தின் விசுவாசிகளும் ராணுவமும் சேர்ந்து, தங்களுக்குக் கட்டுப்பட்ட அரசமைப்பு நீதிமன்றம் மூலம் ஜனநாயக அரசுகளை எளிதாகக் கவிழ்த்து வருகின்றன.
கம்போடியா-தாய்லாந்து மோதல் சீனாவுக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஏனெனில், சீன முதலீடுகள் இரு நாடுகளிலும் பரவலாக உள்ளன. குறிப்பாக, கம்போடியாவில் சீனாவுக்கு ஒரு பெரிய கடற்படைத் தளம் உள்ளதால், ஆசியானில் சீனாவின் முக்கியத்துவம் மேலும் வலுப்பெறுகிறது. எனவே, சீனா அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து, நடுநிலை வகிப்பதாகக் கூறியதில் வியப்பில்லை.
மறுபுறம், இந்த மோதலின் பின்னணியில் அமெரிக்காவின் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல காய் நகர்த்தல்களை அமெரிக்கா செய்து வருகிறது. இதுவும் அதில் ஒன்றாக இருக்கலாம் என்று ஊகங்கள் உலவுகின்றன.
கட்டுரையாளர்:
முன்னாள் இந்தியத் தூதர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.