நடுப்பக்கக் கட்டுரைகள்

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி.

தினமணி செய்திச் சேவை

குடியரசு துணைத் தலைவர்

சி.பி. ராதாகிருஷ்ணன்

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

இப்புண்ணியத் தலத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம், காசிக்கும் நமது தமிழ்நாட்டிற்கும் இடையேயான வரலாற்று பந்தத்தைக் கொண்டாடும் திருவிழாவாக மாறியிருக்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இங்கே காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது.

கடந்த 2022-இல் "ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' என்று நாம் கொண்டாடிய பாரத விடுதலையின் 75-ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது முதலாவது காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. அப்போதுமுதல், இந்நிகழ்வு தேசிய நல்லிணக்கத்துக்கான ஒரு முக்கிய நிகழ்வாக, கங்கையின் கலாசாரமும் காவிரியின் பண்பாடும் கைகோக்கும் விழாவாக, வடக்கும் தெற்கும் அதன் பொதுப் பாரம்பரியத்தின் வழி இணைந்து கொண்டாடும் நிகழ்வாக உருவெடுத்திருக்கிறது. இது மகாகவி பாரதியார் கண்ட கனவு.

"கங்கை நதிப் புரத்து கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'

என்ற ஒருங்கிணைந்த ஒற்றுமையான உறுதியான இந்தியாவை உருவாக்க வழிவகுக்கும் விழாவாக காசி தமிழ் சங்கமம் விழா அமைந்துள்ளது.

பாரதியார் கண்ட கனவு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இன்று நிஜமாகிக் கொண்டிருக்கிறது. காசி தமிழ்ச் சங்கமத்தை வடிவமைப்பது என்கிற உயர்ந்த நோக்கத்தின் பின்னணியில் இருந்தவர் அவர்தான். தமிழகம் குறித்து உத்தர பிரதேசமும், வட இந்தியா குறித்துத் தென்னிந்தியாவும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிகழ்வு.

அந்நியப் படையெடுப்பாலும், பிரிவினைவாத அரசியலாலும், குறுகிய கண்ணோட்டத்தாலும் பிரிந்து கிடந்த உணர்வுகளையும், உள்ளங்களையும் ஒருங்கிணைக்கும் காசி தமிழ் சங்கமம் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தின் விளைவுதான் இப்போது நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொண்டாட்டம்.

கடந்த ஞாயிறு, நவம்பர் 30-ஆம் தேதி ஒலிபரப்பான "மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர், "காசி-தமிழ் சங்கமம் உலகின் மிகத் தொன்மையான மொழியும் உலகின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்றும் சங்கமிப்பதாகும்'' என்று கூறினார்.

தமிழ் கலாசாரம் உயர்வானது, தமிழ் மொழி மேன்மையானது, தமிழ் இந்தியாவின் பெருமை என்று அவர் தமிழைப் போற்றிப் பேசுவது என்பது புதிதொன்றுமல்ல. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் உயர்த்தியும், போற்றியும் பேச அவர் எப்போதுமே தவறியதில்லை.

"வட மாநில மக்கள், குறிப்பாக ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தர பிரதேச மக்கள் அனைவரும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்று தமிழ் கற்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற உணர்வு மேலும் பலப்படும்' என்று அழைப்பு விடுத்திருப்பது, தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இதற்கு முன்னால் இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் வட இந்தியர்களுக்கு எடுத்துச் சொன்னதில்லை. தமிழகத்துக்கு வரும்போது, சம்பிரதாயமாக "வணக்கம்' என்று சொல்வார்களே தவிர, தமிழகத்துக்கு வெளியே தமிழின் அருமை-பெருமைகளைப் பேசியவர் பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர வேறு ஒருவருமில்லை.

தமிழ் அதன் தகுதிக்குரிய மிக உயரிய இடத்தில் வைத்துப் போற்றப்படுவது மகிழ்ச்சியையும் பெருமையையும் ஒருங்கே அளிக்கிறது. டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நான்காவது காசி தமிழ் சங்கமம் சிறப்புற நடைபெற மத்திய கல்வி அமைச்சகமும் உத்தர பிரதேச அரசும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸýம் இணைந்து மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

இச்சங்கமத்தில் தமிழ் மக்களும் காசி நகர மக்களும் ஆர்வமுடன் பங்கு பெற்று வருவதும், இதன் தாக்கம் முந்தைய ஆண்டைவிட ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதையும் பார்க்கும்போது, பிரதமரின் கனவு நனவாகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காசி நகர மக்கள் தமிழகம் குறித்துத் தெரிந்து கொள்கிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது.

காசி தமிழ் சங்கமத்தில் இந்த ஆண்டின் கருப்பொருள் "தமிழ் கற்கலாம், தமிழ் கற்போம்' என்பது. ஹிந்தி மொழி அறிந்த ஐம்பது தமிழாசிரியர்கள் சென்னை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு வாரணாசி வந்துள்ளனர். தமிழ் ஆசிரியர்கள் வாரணாசி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, ஐம்பது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பதினைந்து நாள்கள் அடிப்படைத் தமிழ் கற்பிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சி பெரும் போற்றுதலுக்கு உரியதாகும்.

இதுவரையில் தமிழின் பெயரால் வாக்கு வங்கி அரசியல் நடத்தப்பட்டதே தவிர, தமிழகத்துக்கு வெளியே தமிழின் அருமை-பெருமைகளை எடுத்தியம்ப யாரும் சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்பதை நாம் உணராமல் இருக்கிறோம். மகாகவி பாரதியார் பாடியதைப்போல, "நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை' என்பதை நாம் உணரவில்லை; பிரதமர் மோடி உணர்ந்து செயல்படுகிறார்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்.தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'' என்று மகாகவி பாரதி விரும்பிய வண்ணம் தேமதுரத் தமிழோசை காசி பெருநகரம் முழுவதும் ஒலிக்க இருப்பது உள்ளபடியே தமிழர் அனைவரும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வாகும். "காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்றார் பாரதி. இன்று நாம் காசியில் பேசுவது காஞ்சியில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கேட்கிறது.

காசி தமிழ் சங்கமத்தின் நான்காம் பதிப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடக வல்லுநர்கள், விவசாயிகள், தொழில் வல்லுநர்கள், கைவினை கலைஞர்கள், பெண்கள், செவ்வியல் இசைக் கலைஞர்கள், ஆன்மிக அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என தமிழ்நாட்டிலிருந்து 1,400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த 15 நாள்களும் பிரதிநிதிகள் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி வழியாகப் புனித யாத்திரையையும் ஆழமான அறிவுப் பரிமாற்றத்தையும் பரிமாற உள்ளனர்.

"தமிழ்ச் சிந்தனையில் காசி: மகாகவி சுப்ரமணிய பாரதி மற்றும் அவரது மரபுத் தொடர்ச்சி', "காசி மற்றும் தமிழகத்தின் ஆன்மிக மற்றும் தத்துவப் பாரம்பரியம்', "புனித நூல்கள்: காசி மற்றும் காஞ்சிபுரம் இடையிலான உரையாடல்' என முக்கியமான தலைப்புகளில் அடுத்த இரண்டு வாரங்களும் பல்வேறு கல்வி அமர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.

பாண்டிய மன்னர் அதிவீர பராக்கிரம பாண்டியன் வடகாசிக்கு சென்றதன் பின், தனது நாட்டில் ஒரு நகரத்திற்கு "தென்காசி' (தட்சிண காசி) என்று பெயரிட்டார். காசியை தெற்கில் பிரதிபலிக்கும் புனித நகரம் என்பதால்தான் "தென்காசி' என்ற பெயர் பிறந்தது. இந்த மரபை மீண்டும் ஒளிரச் செய்வதற்காக அகத்திய முனிவர் வாகனப் பயணம் டிசம்பர் 2 முதல் 10 வரை தென்காசியில் இருந்து காசி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயணம் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய மற்றும் விஜயநகர காலங்களின் காசி நாகரிகத் தொடர்புகளை எடுத்துக்காட்டும் அதே வேளையில், தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம் மற்றும் பாரம்பரிய தொடர்புகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும்.

மேலும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 300 கல்லூரி மாணவர்கள் 10 தொகுதிகளாக தமிழ் கற்றல் திட்டத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு வருகை தந்து இருவழி கலாசார இணைப்பை வலுப்படுத்த உள்ளனர் என்பது காசி தமிழ் சங்கமத்தின்மூலம் முன்னெடுக்கப்படும் முயற்சி.

காசி தமிழ் சங்கமம் நான்காம் பதிப்பின் நிறைவு விழா ராமேசுவரத்தில் நடப்பது இதற்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் மற்றும் ராமேசுவரம் ராமநாதசுவாமி ஆலயம் ஆகியவற்றின் பிணைப்பைப் பறை சாற்றும் வகையில் இது அமைந்துள்ளது.

கலாசார பரிமாற்றம் மற்றும் அறிவுப் பகிர்வுமூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை காசி தமிழ் சங்கமம் 4.0 உறுதிப்படுத்துகிறது. பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பதன் மூலம், இந்தச் சங்கமம் இந்தியாவின் நாகரிக தொடர்ச்சி மற்றும் கலாசார ஒற்றுமையின் சாரத்தைப் போற்றுகிறது.

காசியும் தமிழகமும் பாரதத்தின் ஒளி விளக்குகள். காசி தமிழ் சங்கமம் மூலம் வடக்கும் தெற்கும் கைகோக்கின்றன, இந்தியா ஒரே குடும்பமாக வலுப்பெறுகிறது.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ கண்காணிப்புக் குழுத் தலைவா் ஆய்வு - பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்களிடம் விசாரணை

டி20 தொடர்: இந்திய அணியில் கில், பாண்டியா

ஓட்டுநா்களுக்கான கூடுதல் பணிச்சுமையால் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்குகின்றன -அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்

சா்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள்களால் சுகாதாரக் கேடு -புகழூா் நகா்மன்றக் கூட்டத்தில் புகாா்

புகழூா் அரசு பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தின விழா

SCROLL FOR NEXT