வழக்கம்போல் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக புதன்கிழமை மாலை (3.12.2025) ஏவிஎம் சரவணனை கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சரி, ஏதோ வேலையில் மும்முரமாக இருப்பார் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர் நம்மிடம் இல்லை என்பது.
என் நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன. சரவணனின் தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வீட்டில் ஏதோ ஒரு வைபவம்.
அதற்காக குடும்பத்தினருக்கும், விருந்தினர்களுக்கும் பரிசாகக் கொடுப்பதற்காக டஜன் கணக்கில் சேலைகள் வாங்கிச்சென்றார்கள்.
வைபவத்துக்கு ஓரிரு நாள்கள் முன்னதாக இன்னும் ஐந்து, ஆறு சேலைகள் வேண்டும் என்று எங்கள் கடைக்குத் தகவல் அனுப்பினார்கள். அதை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பலாம் என்று தகவல் சொன்னார்கள். அந்த நேரம் கடைக்கு
வந்திருந்த பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸிடம் சேலைகளைத் தேர்தெடுத்துத் தரச் சொன்னேன். அப்போதுதான் ஏவிஎம் சரவணன் எனக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு, தூர்தர்ஷன் இயக்குநராக இருந்த ஏ.நடராஜன் மூலம் நட்பு நெருக்கமானது. நடராஜனுக்கும் ஏ.வி.எம். சரவணனுக்கும் தொழில் முறை நட்புணர்வு இருந்தது. நானும் இந்த இருவருக்கும் நெருக்கமானேன்.
என்ன வாழ்க்கை என்று பிறர் வியக்கும் அளவுக்கு வாழ்ந்தவர் ஏவிஎம் சரவணன். என்னைப் பொருத்தவரை அவர் ஒரு மூத்த சகோதரர். அவரை என் (கட்டுரையாளர்) வழிகாட்டியாகவே மதித்து வந்திருக்கிறேன். அதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன்; பொது மேடைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவரது "முயற்சி திருவினையாக்கும்' என்ற புத்தகம் எனக்கு வாழ்க்கையின் வழிகாட்டி நூல்.
2000}ஆம் ஆண்டு பிறப்பதற்கு பல மாதங்கள் முன்னதாக என் குடும்பத்தினரும், என் நண்பர்களும் "உங்களுக்குசஷ்டியப்த பூர்த்தி' (மணிவிழா) வருகிறதே; அதை எப்படி கொண்டாடுவீர்கள்? என்று கேட்டார்கள். நான் மணிவிழாவைக் கொண்டாடப் போவதில்லை என்றேன். இந்தப் பதிலை முன்பே சொல்லியிருக்கலாமே என்று சிலர் கேட்டார்கள்.
அதற்கு நான் சொன்ன பதில் பதில் இது- "என்னைவிட ஏறத்தாழ ஓராண்டு மூத்தவரான ஏவிஎம் சரவணன் எப்படிக் கொண்டாடப் போகிறார் என்று தெரிந்து கொள்ளக் காத்திருந்தேன். அவர் கொண்டாடவில்லை; அதனால் நானும் கொண்டாடவில்லை. அறுபதுக்கு என்ன கதியோ; அதுவே எண்பதுக்கும் என்றாயிற்று.
இருவருமே சதாபிஷேகத்தையும் கொண்டாடவில்லை. ஏவிஎம் சரவணன் ஒரு நல்ல வாசகர். படிப்பதையும், பிறர் சொல்லக் கேட்பதையும் தன் துறையில் பயன்படுத்திக் கொள்வார். நான் 1978}இல் குடும்பத்துடன் ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் நிறைவில் இரண்டு, மூன்று நாள்கள் தங்கியிருந்தேன். சிங்கப்பூரில். நான் பார்த்த ஓர் ஆங்கிலப் படத்தின் சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்ததை அவரிடம் சொன்னேன். அப்போது ரஜினிகாந்த், ஜெய்சங்கர் ஆகியோர் நடித்த "பாயும் புலி' என்ற திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் ஆங்கிலத் திரைப்படத்தில் கண்டதுபோன்ற சண்டைக் காட்சியை படமாக்கினார்.
என்னுடைய முதல் புத்தகமான "வெற்றி யின் வரலாறு' 1983-இல் அருணோதயம் பதிப்பகத்தில் முப்பதாண்டு நிறைவு விழா நூல்களில் ஒன்றாக வெளியானது. எனது வாசிப்புப் பழக்கம் தொய்வில்லாமல் தொடர்ந்தது. தமிழ்ப் புத்தகங்கள் தவிர சில வெளிநாட்டு பிரமுகர்கள் குறித்த ஆங்கில நூல்களையும் படித்து வந்தேன். அதில் இருந்த சில முக்கியமான வாக்கியங்களை அந்தந்தப் பக்கங்களில் குறித்து வைத்தேன். அப்போது ஒரு யோசனை தோன்றியது. அந்த வாக்கியங்களை எல்லாம் தமிழ்ப்
படுத்தி புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. புத்தகம் தயாரானதும் யாரை வைத்து வெளியிடலாம் என்று யோசித்த போது என் நினைவுக்கு வந்தவர் ஏவிஎம் சரவணன்தான்.
புத்தகத்தின் வண்ண மேலட்டை தயாராகாததால் வெள்ளை அட்டையுடன் புத்தகத்தை அவருக்கு அனுப்பியிருந்தேன். அப்போது, புத்தகத்தை உயர்த்திக் காட்டி சரவணன், "ஜாக்கெட் இல்லாத புத்தகத்தை செட்டியார் எனக்கு அனுப்பினார்' என்று சொன்னார். எல்லோரும் கைதட்டிச் சிரித்தார்கள். அவரது நகைச்சுவை உணர்வுக்கு அது ஒரு எடுத்துக்காட்டு.
ஏவிஎம் சரவணனின் புத்தகப் பதிப்பு முனைவு பற்றியும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அவரது தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் குறித்து ஒரு புத்தகம் எழுத சம்பந்தப்பட்ட பலரிடமிருந்து தகவல்களைக் கேட்டுப் பெற்றார். அந்தக் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து"அப்பச்சி' என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார்.
பல சமயங்களில் ஏவிஎம் சரவணன் தன் தந்தை தனக்குச் சொன்ன அறிவுரைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒருமுறை அவர் சொன்ன தகவல்
மெய்யப்ப செட்டியாரின் தொழில் மேன்மையை உணர்த்தியது. ஒவ்வொரு முறை படம் எடுக்கப் போகும்போதும் ஏவிஎம் சரவணன் தன் தந்தையிடம் இதற்கு 40 லட்சம் ரூபாய் செலவாகும், இதற்கு 30 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்வார். தந்தை சரி என்று சொல்வார்.
அப்படிப்பட்ட சமயங்களில் ஒருமுறை ஏவிஎம் சரவணன் கேட்டாராம், "அப்பா ஒவ்வொரு முறையும் நான் தொகையைப் பற்றிச் சொல்லும்போது சம்மதிக்கிறீர்களே, யார் யார் நடிகர்} நடிகை என கேட்க மாட்டீர்களா?'என்று. அப்போது தந்தை சொல்வாராம், "நீ சொல்லும் தொகையில் எனக்கு லாபம் வராவிட்டாலும் அந்தத் தொகையை நஷ்டமாக நான் தாங்க முடியுமா என்பது குறித்து மட்டும்தான் யோசிப்பேன்' என்றார். வியாபாரத்தில் ஏவிஎம் செட்டியாருக்கு இருந்த துணிவும், எதிர்பார்ப்பும் நம்மை வியக்க வைக்கின்றன.
மகனுக்குத் தனியாக எதையும் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் மெய்யப்ப செட்டியார், காரை எடு போகலாம்என்பார். அப்போது தந்தை-மகன் என்று இருவர் மட்டுமே இருந்ததால் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவைஎல்லாமே அவர் தொழிலில் முன்னேற வெகுவாக உதவின என்று என்னிடம் அடிக்கடி சொல்வார் சரவணன்.
பள்ளிப் படிப்பை முடித்ததும் தந்தை கல்லூரியில் சேர்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அப்போது சரவணன் சொல்லியிருக்கிறார், "கல்லூரி படித்த பிறகும் நான் இந்தத் தொழிலுக்குத்தான் வரப்போகிறேன். அதனால் இப்போதே வந்துவிடுகிறேன்' என்றாராம்; தந்தையும் அதற்குச் சம்மதித்தார்.
அந்த சமயத்தில் ஸ்டுடியோவில் அவருக்கென்று தனி மேஜை நாற்காலி வாங்கிப் போடப்பட்டது. அன்று, 1956 அந்தநாற்காலியில் உட்கார்ந்தவர்தான் அண்மையில் உடல் நலம் குன்றிய காலம் வரை அன்று ஏற்ற பணியிலேயே தொடர்ந்தார். தொழில் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு முன்னேறினார்.
எவ்வளவோ விஷயங்கள் தெரிந்திருந்தும், தனக்கு இது தெரியும், அது தெரியும் என்று காட்டிக் கொண்டதில்லை. திரை உலகப் பிரமுகர்; பொது வாழ்வில் பிரபலமானவர்; சென்னை நகரின் ஷெரீஃப்}ஆக இருந்தவர். ஆனாலும், எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் பொதுவானவராகவே வாழ்ந்து வந்தார். எந்த இடத்திலும் தன்னை அடக்கிக் கொள்ளவில்லை. ஏ.சி.திருலோகச்சந்தர் என்ற இயக்குநரை தன் குருவாகவே மதித்து வந்தார் சரவணன்.
இயக்குநர் எஸ்.பி முத்துராமனிடமும் அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர் சரவணன். தன் அலுவலகத்திலிருந்த அர்ஜுனன் என்ற உதவியாளர் எல்லாப் புகைப்படங்களின் பின்பக்கத்திலும் தேதியை எழுதி வைத்திருப்பார். புகைப்படங்கள் வரலாற்று ஆவணங்கள்
ஆவதற்கு தேதி பற்றிய குறிப்பு தேவைப்பட்டது. அவ்வளவு கவனமாக எல்லோரும் செயல்படுவார்கள் என்று சொல்லமுடியாது என்று அர்ஜுனன் குறித்து சரவணன் என்னிடம் ஒருமுறை குறிப்பிட்டார்.
கடைசி சில ஆண்டுகளுக்கு முன்பு அலமாரிகளிலிருந்து ஒரு சட்டையை எடுக்கும்போது வலது கை தோள் மூட்டில் வலி வந்தது. எலும்பு பிசகி இருக்கிறதோ என்று சந்தேகம் வந்தது. டாக்டர்கள் அவரை கரடு முரடான சாலையில் மயிலாப்பூரிலிருந்து கோடம்பாக்கம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் கோடம்பாக்கத்திலேயே நாகி ரெட்டி குடும்பத்தினர் கட்டிய ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார். அவரால் திரைப்பட உலகத்தை விட்டு விலகி இருக்க முடியவில்லை.
நாகி ரெட்டியின் புதல்வர்களில் ஒருவரான விஸ்வம் அவரை கோடம்பாக்கம் வீட்டில் வைத்து கவனித்துக் கொண்டார். அப்போது, நான் அவரைப் பார்த்து கேட்டேன், "இத்தனை ஆண்டுகள் பெரிய பாரம்பரிய வீட்டிலிருந்துவிட்டு இங்கே இரு சிறிய குடியிருப்புக்கு வந்திருக்கிறீர்களே, உங்களுக்கு இதில் மனக்கஷ்டம் இல்லையா?'.
அப்போது சரவணன் சொன்னார், "எனக்கு என் தொழிலே முக்கியம், ஸ்டுடியோவுக்கு அடுத்தபடித்தான் வீடு'. ஏவிஎம், வாகினி இரண்டும் திரைப்படத் தொழிலில் போட்டி நிறுவனம் என்றாலும் முதலாளிகளுக்கிடையே நட்புணர்வு இருந்தது என்பதை என்னுடன் படித்த விஸ்வத்தின் கவனிப்பு உணர்த்தியது.
திரைப்பட உலகிலேயே பிறந்துஅதிலேயே வாழ்ந்து மறைந்த ஏவிஎம் சரவணன், முன்பு ஒருமுறை தந்தையைப் பற்றிச் சொன்னது இப்போது என் நினைவில் நிழலாடுகிறது. மெய்யப்ப செட்டியார் தன் நிறைவு நாள்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்த மகனிடம், "அதோ பாத்ரூமில் லைட் எரிகிறது பார், அதை அணைத்து விடு' என்றாராம். தன்னால் பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன அந்தப் பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற விளக்கும் இப்போது அணைந்து விட்டது.
கட்டுரையாளர்:
தொழிலதிபர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.