முகப்பு
தமிழ்நாடு

இதுதான் என் ஸ்டைல்; இதுதான் என் வெற்றியின் ரகசியம்! - மு.க. ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது பற்றி..

Updated On : 6 மார்ச், 2026 at 10:32 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும் அதை தன்வசப்படுத்தி வெல்வதுதான் தன்னுடைய ஸ்டைல் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'தமிழ்நாடு 2030, கனவுகள் மெய்ப்படும்' என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்தார்.

அறிவிப்பிற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சிதான், நான் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம். சொன்னதை மட்டுமல்ல. சொல்லாத பல முத்திரை திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம். ஆட்சிக்கு வரும்போது, இவ்வளவு திட்டங்களை நம்மால் நிறைவேற்ற முடியுமா? என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஆனாலும், அத்தனைத் திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்ற கனவும் எனக்கு இருந்தது. 

கடந்த 5 ஆண்டுகளுக்கான என்னுடைய கனவுகளில் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது என்று இந்த நிகழ்ச்சி மூலமாக அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  

நாங்கள் ஆட்சியில் செய்த திட்டங்களில் எந்த திட்டம் சிறப்பானது என்று என்னைக் கேட்டால், அனைத்துத் திட்டங்களும் சிறப்பானதுதான் என்று சொல்வேன். ஏனென்றால், ஒவ்வொரு திட்டத்தையும் தேவைக்கேற்ப மக்களுக்காக யோசித்து, திட்டம் தீட்டி, அவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு எவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறோம், அதில் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறோம் – அதனால்தான், நான் அடிக்கடி சொல்வேன். நம்முடைய திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு தரப்புக்கும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறோம். 

நம்முடைய திட்டங்களால் பயனடைந்தவர்களின் பட்டியல் பெரிய புத்தகமே என்னிடம் இருக்கிறது. அதையெல்லாம் சொன்னால், இந்த ஒரு நாள் போதாது. இந்தத் திட்டங்கள் எல்லாம் போதுமா என்று என்னிடம் கேட்டால், போதாது! இன்னும் நிறைய சாதனைகளை செய்திருக்க வேண்டும். செய்திருக்கலாம்!

அரசியல் ரீதியாக சில நெருக்கடிகள்! நிதி நெருக்கடிகள்!  இப்படி நிறைய முட்டுக்கட்டைகள்! அதற்காக, இந்தக் காரணங்களைச் சொல்லி, தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைப்பவன் இல்லை இந்த ஸ்டாலின்! காரணம் சொல்பவன் காரியம் செய்ய மாட்டான் என்று ஊர் பக்கம் சொல்வார்கள். சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும், அதை தன்வசப்படுத்தி வெல்வதுதான் என்னுடைய ஸ்டைல்.

“பெரிதினும் பெரிது கேள்” என்ற அடிப்படையில்,
எதிர்மறைகளையும், நேர்மறையாக மாற்றி, இந்தச் சாதனைகளை செய்திருக்கிறோம்! இதுதான் திராவிட மாடலின் ஸ்டைல்.

அதற்காக, இதுவே போதும் என்று திருப்தியடைய மாட்டோம்!  "உழைக்கும் வரை உதிக்கும் ஞாயிறு" என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொல்வார். நான் தினந்தோறும் உழைக்கிறேன், உழைத்துக்கொண்டே இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். இது மட்டும்தான் என்னுடைய வெற்றியின் ரகசியம்.

என்னுடைய அரசு செய்திருக்கும் சாதனைகளை நம்பி நான் உறுதியாக சொல்கிறேன். அடுத்து, அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். எங்களுடைய சாதனைகளின் அடுத்தகட்டமாக, திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்! அதற்கான டிரைலர்தான் இந்த நிகழ்ச்சி! 

நாங்கள்தான் மீண்டும் வருவோம். நாங்கள்தான் மீண்டும் வெல்வோம். மீண்டும் மீண்டும் வெல்வோம். தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்." என்று பேசினார்.

summary

This is my style and my secret of success: MK stalin

முழு கட்டுரையைப் படிக்க →