"உங்கள் பணம், உங்கள் அதிகாரம்' என்பது மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் தலைப்பு. இதன் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாத காலத்துக்கு வங்கிகள்,
காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி, பங்கு முதலீடு, பங்குகளுக்கான ஈவுத் தொகை என உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.1.84 லட்சம் கோடியை அதற்கு உரிமையுள்ள நபர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால், உண்மையில் மக்கள் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டிய கோரப்பட்டாத நிதி இதைவிட அதிமானது. 9.22 கோடி கணக்குகளில் உள்ள ரூ.3.5 லட்சம் கோடி உரிமைகோரப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இவை அனைத்தையும் உண்மையான
உரிமையாளர்களிடம் சேர்க்க முயற்சித்திருந்தால் நிதியமைச்சருக்கு மேலும் பாராட்டுகள் கிடைத்திருக்கும். ஆனால், நாம் எதிர்பார்க்கும் நடவடிக்கை இப்போதைக்கு எடுக்கப்படாது என்றே தெரிகிறது.
உரிமைகோராத நிதியை திரும்ப ஒப்படைக்க இப்போது எடுக்கப்படும் நடவடிக்கையைப் பார்த்தால், மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான பிரார்த்தனைப் பாடலான "வைஷ்ணவ ஜனதோ' பாடலில் வரும் "ஒருவர் அடுத்தவரின் செல்வத்தைக் கண்டிப்பாகத் தொடக்கூடாது' என்ற கருத்தையோ, "திருடாமை' என்ற தர்மத்தையோ முழுமையாக கடைப்பிடிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் பல ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடக்கும் இந்தப் பெரும் தொகையை அரசு பல ஆண்டுகளாக பராமரித்து வருகின்றன. அதை உரியவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, தாம் விரும்பும்பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது. அந்தப் பணத்தை பொதுநலனுக்காக செலவிடலாம் என்பது அரசின் நோக்கமாக இருந்தாலும், அது அரசின் வருவாய் அல்ல, பலர் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் என்பதே உண்மை. எனவே, அரசு இந்தப் பணத்தை தனது எண்ணப்படி செலவிட முடியாது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டெபாசிட்தாரர்கள் விழிப்புணர்வு நிதியத்தை உருவாக்கியது. இதன் மூலம் வங்கிகள் தங்களிடம் உள்ள உரிமைகோரப்படாத நிதியை இந்த நிதியத்துக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டது. 10 ஆண்டுகளாக எவ்வித பரிமாற்றமும் இல்லாத வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இந்த நிதியத்துக்கு மாற்ற
அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணத்தில் கைவைக்கும் அரசின் நோக்கமும் வெளிப்பட்டது. இதேபோல முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு, பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்பட்டது. உரிமைகோரப்படாத பங்குகள், பங்கு ஈவுத்தொகை, ஓய்வூதியதாரர்கள் நல நிதி, உரிமை கோரப்படாத காப்பீட்டு நிதி, சிறு சேமிப்புத் திட்ட நிதி ஆகியவை இந்த நிதியத்துக்கு மாற்றப்பட்டது.
இதற்கு எதிராக மக்கள் குரல் எழுந்தபோது, உரியவர்களிடம் பணத்தை திருப்பி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக அரசு அறிவித்தது. இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் 100 நாள்களில் உரியவர்களுக்கு பணத்தை கொண்டு சேர்க்கும் திட்டத்தை அறிவித்தது. இதன்படி, ரூ.1,433 கோடி உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், மொத்த தொகையுடன் ஒப்பிடும்போது இது வெறும் துளிதான்.
இப்போது புதிதாக "உங்கள் பணம் - உங்கள் உரிமை' திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் கூறுகையில், "இந்த பாக்கித் தொகைகள் கணக்கில் உள்ள எண்கள் அல்ல; சாமானிய மக்கள் கடுமையாக உழைத்து சேர்த்த பணம்' என்று தெரிவித்தார்.
இதன் மூலம் பணத்தை உரிமையானவர்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சி மீண்டும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக மாறிவிடக் கூடாது என்று விரும்புவதாகத் தெரிகிறது. விழிப்புணர்வு, சிறப்பான அணுகுமுறை, சீரிய நடைமுறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மக்கள் தங்களுக்கு உரிமையான பணம் கையில் வந்து சேராமல் எங்கேனும் சிக்கியுள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக அரசு இயந்திரம் முனைப்பாக செயல்படும் என்றும் தெரிகிறது. இந்த திட்டம் டிசம்பர் வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற எல்லா அமைப்புகளிலும் உரிமைகோர நிதி விவரங்களை ஒரே தளத்தில் கொண்டு வருவதற்கான பொறுப்பு நிதிச் சேவைத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் உரிமை கோரப்படாமல் உள்ள டெபாசிட் பணம், பங்கு முதலீடுகள், ஓய்வூதிய சேமிப்புத் திட்டம், பங்கு ஈவுத்தொகை, காப்பீட்டு நிதி ஆகியவற்றை உரிய நபர்களிடம் கொண்டுசேர்க்க உதவும் வகையில் ஒருங்கிணைந்த தனி தளத்தை உருவாக்கவும் நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தனி வலைதளமும் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்காக இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நிதி ஆணையம் ஆகியவை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளன.
இதற்கு முன்பும் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஆண்டுதோறும் உரிமை கோரப்படாத பணம் குவிந்தே வருகிறது. அதே நேரத்தில் "இது மக்கள் பணம், நாங்கள் அதன் அறங்காவலர்கள்' என்று அரசு தொடர்ந்து கூறுகிறது. ஆனால், நடைமுறை முற்றிலும் வேறாக உள்ளது.
பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து மறந்துபோனவர்கள் தொடங்கி பணத்தை டெபாசிட் செய்து அதுபற்றி குடும்பத்தினர் யாருக்கும் தெரிவிக்காமல் இறந்துபோனவர்கள் வரை பல பிரச்னைகள் இதில் உள்ளன. சட்டபூர்வ வாரிசுகளுக்கு தங்களுக்கு உரிமையான பணம் வங்கிகளில் உள்ளது என்பது எப்படித் தெரியவரும்?
9 கோடி வங்கிக் கணக்குகள் உரிமைகோராமல் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்த வங்கிக் கணக்கு பற்றி அறியாமல் எப்படி உரியவர்கள் தங்கள் பணத்தை உரிமைகோர முடியும். 146 கோடி மக்களில் 9 கோடி செயலற்ற கணக்குகளை யார் எங்கே எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? சில ஆண்டுகளுக்கு முன்பு உரிமைகோரப்படாத வங்கிக் கணக்குகளுக்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு வலைதளத்தைத் தொடங்கியது. இது உரிமைகோரப்படாத வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை பொதுமக்கள் ஒரே இடத்தில் தேட உதவுகிறது என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு.
ஆனால், மக்களின் கருத்து வேறாக உள்ளது. அந்த வலைதளம் கோரும் தகவல்களை வழங்குவது, தனிநபருக்கு நிலுவைத் தொகை உள்ளதா என்பதை சரிபார்க்க வலைதளத்தில் பதிவு செய்வது எளிதானது அல்ல, அதற்காகக் கோரப்படும் விவரங்கள் சிக்கலானது என்றே மக்கள் கூறுகிறார்கள்.
வங்கிக் கணக்கு விவரத்தை ஒரு நபரின் பெயர் அல்லது குடும்பப் பெயரை வைத்து தேட அனுமதிப்பதாக இருக்க வேண்டும். முக்கியமாக வலைதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக இல்லாமல் அனைவரையும் குடும்பப் பெயரைக் கொண்டு தேட அனுமதிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், வலைதளத்தில் அதற்கு வழியில்லை. இதுபோன்ற நடைமுறைச்
சிக்கல்களை மாற்றி அமைக்காவிட்டால் இந்த முயற்சிகள் பயனற்றதாகவே இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வங்கிக் கணக்குத் தொடங்கும்போதே டெபாசிட்தாரர்கள் குறித்து கூடுதல் விவரங்களை வங்கிகள் ஏன் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகள் வங்கிக் கணக்குகள் செயல்படாமல் இருந்தால் வங்கிகள் தாங்களாகவே உரியவர்களை அணுக முன்வர வேண்டும்.
தங்களிடம் கடன் பெற்றவர்கள் விஷயத்தில் வங்கிகள் எப்படி முழுவிவரங்களை வைத்திருக்கிறார்கள்? எத்தனை விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு கடன் கொடுக்கிறார்கள்? கடனாகக் கொடுத்த பணத்தை திரும்ப வசூலிக்க அவர்கள் கடைசியாக வசித்த முகவரி வரை தேடிச் செல்கிறார்கள். பல வழி
களில் நோட்டீஸ்களை அனுப்புகிறார்கள். பல வழிகளில் அவர்களைத் தொடர்பு கொண்டு கடன் கொடுத்த பணத்தை திரும்ப வசூலிக்க முயற்சிக்கிறார்கள். கடன் வசூலின்போது மட்டும் இவ்வளவு விஷயங்கள் சாத்தியமாக இருக்கும்போது, பணத்தை தங்களிடம் டெபாசிட் செய்தவர்களை மட்டும் தேடிச் செல்ல முடியாதது ஏன்? இந்த விஷயத்தில் வங்கிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் இதற்குப் பதிலாக உள்ளது.
டெபாசிட் பணம் உங்களுடையது, நீங்கள்தான் அதன் உரிமையாளர்கள், நாங்கள் அதை நிர்வகிப்பவர்கள் மட்டுமே என்று வங்கிகள் கூறுகின்றன. எப்போதும் அவர்கள் நமது பணத்தை நிர்வகிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
கட்டுரையாளர்: பொருளாதார நிபுணர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.