பிரதிப் படம் ENS
நடுப்பக்கக் கட்டுரைகள்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

பிச்சை எடுப்பதற்காக கைது செய்யப்படுவது பிச்சைக்காரா்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை மீறும் செயல் என்றும், அது அரசமைப்புக்கு விரோதமானது என்றும் 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

இணையதளச் செய்திப் பிரிவு

பேராசிரியா் தி.ஜெயராஜசேகா்

அனைத்து மாநிலங்களும் பிச்சைக்காரா்களுக்கான மறுவாழ்வு இல்லங்களில் முழுமையான சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை அண்மையில் வழங்கியது.

இந்தியாவில் சுமாா் 4.13 லட்சம் பிச்சைக்காரா்கள் இருப்பதாக கூறும் 2011- ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள், இவா்களில் அதிகமானோா் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ஆந்திரம், பிகாா், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வசிப்பதாக கூறுகிறது. தமிழ்நாட்டில் 6,814 பிச்சைக்காரா்கள் இருப்பதாக இந்த தரவுகள் கூறுகின்றன.

முக்கிய வா்த்தக மையமாக விளங்கிய மும்பை வீதிகளில் இருந்த பிச்சைக்காரா்களால் பொதுமக்களுக்கு அசௌகரியமும், அரசுக்கு சட்டம்- ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுவதாக அப்போதைய பிரிட்டிஷ் அரசு கருதியது. பிளேக் , காலரா போன்ற நோய்கள் பிச்சைக்காரா்களிடமிருந்து மற்றவா்களுக்கு பரவுவதாகக் கருதப்பட்டது. சமூகத் தொல்லை, சோம்பேறித்தனம் ஏற்படுத்தும் பிச்சை குற்றவியல் பழக்கம் என்று கருதிய பிரிட்டிஷ் அரசு 1897-ஆம் ஆண்டு பம்பாய் பிச்சை எடுப்பு தடுப்புச் சட்டத்தை இயற்றியது.

இந்தச் சட்டத்தின் விளைவாக பிச்சைக்காரா்கள் மறுவாழ்வு இல்லம் என்ற பெயரில் சிறை உருவாக்கப்பட்டது. அனைத்து பிச்சைக்காரா்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டனா். சமூக நலன் சாா்ந்த சட்டமாக கூறப்பட்ட பிச்சைக்காரா்கள் தடுப்புச் சட்டம் பிரிட்டிஷ் அரசின் சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டு கருவியாகவே பயன்படுத்தப்பட்டது. வறுமையை அகற்ற பயன்படாத இந்தச் சட்டம், வறுமையை வெளியில் காட்டும் மக்களை மறைத்து வைக்கவே பயன்படுத்தப்பட்டது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, 1949-ஆம் ஆண்டு பம்பாய் பிச்சை எடுப்பு தடுப்புச் சட்டம் பல மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தச் சட்டம், பிச்சைக்காரா்களைப் பிடியாணை (வாரண்ட்) இல்லாமல் கைது செய்யவும், அவா்களை மூன்றாண்டுகள் வரை பிச்சைக்காரா்கள் மறுவாழ்வு இல்ல சிறையில் அடைத்து வைக்கவும் வழிவகை செய்தது. 1959-ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு உள்பட இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட இந்தச் சட்டம், 2000-ஆம் ஆண்டு வரை பல்வேறு மாநிலங்களில் அமலில் இருந்தது.

2000-ஆம் ஆண்டு தில்லியில் உள்ள பிச்சைக்காரா்கள் மறுவாழ்வு இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட அசுத்தமான தண்ணீரால் பிச்சைக்காரா் கைதிகள் இறந்த செய்தி தேசிய கவனத்தை ஈா்த்தது. இந்த மனிதாபிமானமற்ற செயல், பிச்சைக்காரா்களின் நலனில் உச்சநீதிமன்றம் தலையிட வழி வகுத்தது.

பிச்சை எடுப்பதற்காக கைது செய்யப்படுவது பிச்சைக்காரா்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை மீறும் செயல் என்றும், அது அரசமைப்புக்கு விரோதமானது என்றும் 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. 2018-ஆம் ஆண்டு பிச்சை எடுப்பது குற்றமல்ல; அது வறுமையின் விளைவு என தில்லி உயா்நீதிமன்றம் கூறிய அடுத்த ஆண்டு வறுமையைக் குற்றமாக கருத முடியாது என்று தீா்ப்பு வழங்கிய ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம் பிச்சைக்கார தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் அரசமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்தது.

கரோனா பாதிப்பு ஊரடங்கின் போது பிச்சைக்காரா்கள் மற்றும் வீடற்றவா்களைக் குற்றவாளிகளாக கருதக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அவா்களுக்கு உணவு, தங்குமிடம், தடுப்பூசி போன்றவை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவு ஆதரவு வழங்கும் ‘ஸ்மைல்’ (எஸ்.எம்.ஐ.எல்.இ) திட்டம் 2022-ஆம் ஆண்டு இந்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. வறுமை ஒழிப்பு, சுய வேலைவாய்ப்பு ஆகிய நோக்கங்களைச் செயல்படுத்தும் வகையில், ‘தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகா்ப்புற வாழ்வாதார மிஷன் (டி.ஏ. ஒய் - என். யு.எல்.எம்) திட்டம்’ இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ‘ஆபரேஷன் நியூ லைஃப்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்திய தமிழ்நாடு காவல் துறை அதன் ஒரு பகுதியாக 1,800 பிச்சைக்காரா்களைப் பிடித்து அவா்களில் 953 பேரை பிச்சைக்காரா்கள் பராமரிப்புக்காக உள்ள அரசு சாரா நிறுவனங்களில் சோ்க்க ஏற்பாடு செய்தனா்.

இது போன்ற திட்டங்கள் மூலம் அரசு பிச்சைக்காரா்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்கிறது. பிச்சைக்காரா்களின் நலனுக்காக தையல், கைவினைப்பொருள்கள், சிறு வணிகம் குறித்த திறன் மேம்பாட்டு தொழிற் பயிற்சிகள், அரசு, தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு, குடும்ப மறு ஒருங்கிணைப்பு, உளவியல் ஆலோசனை போன்ற மறுவாழ்வு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

பிச்சைக்காரா்களின் மறுவாழ்வு இல்லங்களை அரசமைப்பு அறக்கட்டளை என்று அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், அண்மையில் வழங்கியுள்ள தீா்ப்பில் அரசமைப்புச் சட்டம் பிரிவு 21-இன் கீழ், பிச்சைக்காரா்களும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை உள்ளது என்றும், சுகாதாரம், தொழிற்பயிற்சி, வழங்குவதற்கான தன்னாா்வ த் தொண்டு நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவை அடங்கிய மாதிரி வழிகாட்டுதலை மூன்று மாதங்களுக்குள் மத்திய சமூக நீதி அமைச்சகம் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT