பொ.ஜெயச்சந்திரன்
மனித வரலாற்றின் தொடக்கம்முதல் புலம்பெயர்வு வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இயற்கை, பஞ்சம், பேரழிவுகள், அரசியல் அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பின்னடைவு இதுபோன்ற பல காரணங்களால், மனிதர்கள் தங்களுடைய சொந்த மண்ணையும், நிலத்தையும் விட்டு புலம்பெயர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தங்கள் தாய் நாட்டையும், உரிமைகளையும் விட்டு வெளியேறும் மனிதர்கள் அங்கே சந்திக்கும் வாழ்க்கைச் சூழல் மிகவும் வேதனையும் கொடுமையுமானது. புலம்பெயர்வு என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது மனிதர்களின் அடையாளம், உரிமை, மரியாதை, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் இழக்கக்கூடிய கடினமான அனுபவமாகும்.
மொழி, இனம், ஜாதி எனப் பல்வேறு அடையாளங்களுடன் கூடி வாழும் ஒரு தேசத்தில், ஒருவர் ராஜ்ஜியத்துடன் ஆள்வதும், மற்றொருவரை நாட்டை விட்டு விரட்டுவதும் சில நாடுகளில் தொடர்கதையாக உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரம் இல்லாமல், போர் ஏற்பட்டால் பயத்துடன் சொந்த நாட்டை விட்டு மக்கள் புலம்பெயர்ந்து விடுகின்றனர். இவ்வாறு சென்றவர்கள் "அகதிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி அமர்த்தப்பட்ட இடங்கள் "முகாம்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
தாய் நாடு, தாய் மொழி, குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், கலாசாரம் ஆகிய அனைத்திலிருந்தும் பிரிந்து வாழ வேண்டிய நிலை மனிதனைத் தனிமைப்படுத்துகிறது. இதனால் மனதில் பயம், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும், மிகுந்த மன அழுத்தம் நிறைந்ததாகவும் பல்வேறு சிரமங்களுடன் வாழ வேண்டி உள்ளது.
ஒருசில இடங்களில் குறைந்த ஊதியம், பாதுகாப்பாற்ற நீண்டநேர வேலை அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. அந்த வேலையை இழந்ததால், அடுத்த வேலைக்குச் செல்ல முடியாததால் மனச்சோர்வுக்கும் உள்ளாகின்றனர். இதனால், வறுமையின் சுழலில் சிக்கித் தவிக்கின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் இல்லாததால், அவர்களின் எதிர்காலம் இருண்டதாக மாறுகிறது. சமூகத்தின் தூண்களாக இருக்க வேண்டிய குழந்தைகளில் சிலர் கல்வி வாய்ப்பை இழந்து, சிறார் தொழிலாளராக மாறி விடுகின்றனர்.
சொந்த நாட்டில் குடிமகனாக இருந்த ஒருவர் புலம்பெயர்ந்த பிறகு அயலவர், அகதி, சட்டவிரோத குடியிருப்பாளர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார். இந்த அடையாள மாற்றம்தான் அவரது மனதில் ஆழமான வலியையும், சுமையையும் ஏற்படுத்துகிறது. மனிதனின் மரியாதையை மறுக்கும் இந்தச் சூழல் புலம்பெயர்வின் மிகக் கொடுமையான முகமாகும்.
அகதிகள், புலம்பெயர்ந்தவர்களை எதிர்கொள்ளும் விதத்தில் பல நாடுகள் மனிதாபிமானமற்ற அணுகுமுறையைக் கையாளுகின்றன. அதாவது, எல்லைகளில் தடுத்து வைத்தல், முகாம்களில் சரியான முறையில் நலத் திட்ட உதவிகள் மறுத்தல், சட்ட உதவி மறுப்பு போன்றவை அவர்களின் நிலையை மேலும் மோசமாக்குகின்றன. சில நாடுகளில் உள்ள பல அகதிகள் முகாம் சிறைகளாகவே இருக்கின்றன.
கடந்த 1960-70-ஆம் ஆண்டு காலகட்டத்தில் பெரும்பாலான இந்தியர்கள் பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றனர். பின்னர், படிப்படியாக ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். அதிக எண்ணிக்கையிலான சர்வதேச புலம்பெயர்ந்தோரை அதாவது 5.1கோடியை அமெரிக்கா நாடு தற்போது கொண்டுள்ளது. அடுத்ததாக ஜெர்மனி, சவூதி அரேபியாவில் தலா 1.3 கோடியும், ரஷியா 1.2 கோடி, பிரிட்டன் ஒரு கோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 90 லட்சம், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா தலா 80 லட்சம், இத்தாலி 60 லட்சம் பேர் என மேற்கண்ட 10 நாடுகளில் அதிக அளவில் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.
உலக அளவில் 2020-ஆம் ஆண்டில் 14.6 கோடிஆண்களும், 13.5 கோடி பெண்களும் என சுமார் 28.1 கோடி பேர் சர்வதேச புலம்பெயர்தோர் எண்ணிக்கையாக இருந்தது. இது 1990-ஆம் ஆண்டைவிட 12.8 கோடி அதிகமாகவும், 1970-இல் மதிப்பீடு செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமாகும். இதில் கிறிஸ்தவர்கள் 47 %, முஸ்லிம்கள் 29 %, ஹிந்துகள் 5 %, பெளத்தர்கள் 4 %, யூதர்கள் 1%, 13 முதல் 14 % பேர் மதம் சாராதவர்கள்.
மொத்த மக்கள்தொகையில் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் பங்கு புவியியல் பகுதி வாரியாக கணிசமாக வேறுபடுகிறது. ஓசியானியாவில் (நியூசிலாந்து-ஆஸ்திரேலியா) 21.2 %, வட அமெரிக்கா 16 %. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் 1.8 %, மத்திய மற்றும் தெற்கு ஆசியா 1 %, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா 0.8 சதவீதமாக உள்ளது.
சர்வதேச புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 1.75 கோடி, மெக்சிகோ 1.15 கோடி, சீனா 1.07 கோடி, ரஷியா 1.05 கோடி, சிரியா 82 லட்சம், வங்கதேசம் 78 லட்சம், பாகிஸ்தான் 63 லட்சம், உக்ரைன் 59 லட்சம், பிலிப்பின்ஸ் 54 லட்சம், ஆப்கானிஸ்தான் 51 லட்சமாக உள்ளது.
வயது அடிப்படையில், சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தவர்களில் 7 பேரில் ஒருவர் 20 வயதுக்குக் குறைவானவர். இளைஞர்கள் எண்ணிக்கையில் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 27 %, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா ஆகியவற்றில் தலா 22 சதவீதமாகவும் உள்ளனர்.
புலம்பெயர்ந்தவர்கள் குற்றவாளிகள் அல்லர்; அவர்களை மனிதர்களாகப் பார்க்கும் பார்வை மிக அவசியம். புலம்பெயர்வு ஒரு தனிநபரின் பிரச்னை அல்ல; அது உலகளாவிய மனிதாபிமானப் பிரச்னை. இதற்கு மனிதநேய அடிப்படையிலான தீர்வுகள் மிகவும் அவசியம். மனிதாபிமானம், சமத்துவம், நீதி ஆகிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர்வு பிரச்னையை அணுகினால் மட்டுமே நியாயமான உலகத்தை உருவாக்க முடியும்.
(இன்று டிச-18
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.