எங்கே செல்கிறது ரூபாயின் மதிப்பு? 
நடுப்பக்கக் கட்டுரைகள்

எங்கே செல்கிறது ரூபாயின் மதிப்பு?

சமீபகாலமாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்யின் மதிப்பு கடுமையான அளவில் வலுவிழந்திருப்பதைப் பற்றி...

எஸ். ராமன்

மதிப்பு என்ற சொல்லின் பொருள், சூழ்நிலைக்கு ஏற்ப, பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன, அவை தனிப்பட்ட மதிப்புகள், சமூக மதிப்புகள், அறநெறி மதிப்புகள், ஆன்மிக மதிப்புகள், பொருளாதார மதிப்புகள் மற்றும் அரசியல் மதிப்புகள். ஒவ்வொரு வகை மதிப்பும் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அன்றாட வாழ்வியலில், மதிப்பும், மரியாதையும் ஒன்றையொன்று சார்ந்ததாகும். பொருளாதார உலகைப் பொருத்தவரை, சர்வதேச அரங்கில், ஒரு நாட்டின் மதிப்பும் அதன் மூலம் பெறப்படும் மரியாதையும், அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பைச் சார்ந்திருக்கிறது.

அதே சமயத்தில், நாணயத்தின் மதிப்பு, அது சுற்றிச் சுழலும் பல காரணிகளைச் சார்ந்துள்ளதாகும். உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட டாலர் நாணயம், அமெரிக்காவுக்கு மரியாதை சேர்க்கிறது எனலாம். அதனால்தான், மற்ற நாட்டு நாணயங்களின் மதிப்பீடுகளுக்கு, அமெரிக்க டாலர் அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நாட்டு நாணயத்தின் மதிப்பு, நம்மையும் அறியாமலேயே, ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்விலும் பின்னிப் பிணைந்து, பல பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதால், அந்த மதிப்பின் அசைவுகள் குறித்த அறிவியல் ஞானம் அவசியம் தேவை.

உலக மயமாக்கப்பட்ட பொருளாதார சூழ்நிலையில், நாணய மதிப்பு முள்ளின் அசைவுகளை, அந்தந்த நாட்டு மத்திய வங்கிகள் கட்டுப்படுத்தலாமே தவிர, நங்கூரம் பாய்ச்சி, குறிப்பிட்ட இடத்தில் நிலை கொள்ள வைக்க முடியாது என்பதுதான், நவீன பொருளாதார உலகில் நிலவும் உண்மை நிலவரமாகும். நாணயத்தின் மதிப்பு வலுப்பெற்றாலும் அல்லது வலு இழந்தாலும் ஏற்படும் வெவ்வேறு விதமான பக்க விளைவுகளை பொதுமக்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

கடந்த வாரத்தில், ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வலு இழந்து, 91.03 அளவு வரையிலான சரிவைச் சந்தித்ததுதான், இந்தியப் பொருளாதார சரித்திரத்தில், அண்மைக்கால முக்கிய நிகழ்வாகும்.

அதாவது, 2015-இல், சுமார் 61 இந்திய ரூபாயை கொண்டு, ஒரு அமெரிக்க டாலரை வாங்க முடிந்தது; ஆனால், 2025-இல், 91 ரூபாயை, அதற்கான விலையாகக் கொடுக்க வேண்டி உள்ளது என்பதுதான் இதற்கான எளிய விளக்கமாகும். இதை திடீரென ஏற்பட்ட ஒரு சரிவாகக் கருத முடியாது. ஆசிய நாட்டு நாணயங்களைப் பொருத்தவரை, அண்மைக் காலத்தில் இந்திய ரூபாய்தான் அதிக அளவில் வலுவை உதிர்த்த நாணயமாகக் கருதப்படுகிறது. அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

1947-இல், (அமெரிக்க டாலருக்கு எதிரான) 3.30 என்ற அளவிலிருந்து ரூபாயின் மதிப்பு, 2025-இல் 91.03-ஐ தொட்டு திரும்பியது. அந்த இலக்கு திரும்ப எட்டப்படாது அல்லது கடக்கப்படாது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 1993-ஆம் ஆண்டு கால கட்டத்தில்தான், மதிப்பீட்டு நடைமுறைகளை இறுகப் பற்றியிருந்த அரசு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, கேட்பு மற்றும் தேவை ஆகிய காரணிகளைச் சார்ந்த சந்தை முடிவு

களை நோக்கி, நாணய மதிப்பீடுகள் பயணிக்க ஆரம்பித்தன. இந்த காலகட்டத்திலிருந்து, 2013 வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை சரிவதற்கு எடுத்துக் கொண்ட கால அவகாசம் சுமார் இருபது ஆண்டுகளாகும். அதற்குப் பிறகு, பல ஏற்ற, இறக்கங்களுடன் பயணித்த ரூபாயின் மதிப்பு, 90-க்கும் கீழ் சரிவதற்கு எடுத்துக் கொண்ட கால அவகாசம் 12 ஆண்டுகள்தான்.

இந்த காலகட்டத்தில், இந்தியாவின் மக்கள்தொகை 129 கோடியிலிருந்து 145 கோடியாக, 12 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி, இறக்குமதி, அந்நிய முதலீடுகள், சர்வதேச புவி அரசியல் சூழ்நிலைகள், போர் அல்லது போர்ப் பதற்றம், இயற்கைச் சீற்றங்கள், உள்நாட்டு மொத்த உற்பத்தி மற்றும் உற்பத்தியில் சுய சார்புத் திறன், பணவீக்க நிலை ஆகியவைதான், நாணய மதிப்பை வழிநடத்தும் முக்கியக் காரணிகளாகும்.

இவற்றில் சில காரணிகள், அவ்வப்போது சீறி எழுந்து, நாட்டின் அந்நியச் செலாவணியை அதிக அளவில் வெளியேற்றம் செய்வதற்கு வழிவகுக்கும்; அந்நியச் செலாவணியின் வெளியேற்றம், நாணய மதிப்பை பாதிக்கும். ஏற்றுமதிகளைவிட, கூடுதலான இறக்குமதிகள், அதனால் விளையும் வர்த்தகப் பற்றாக்குறை, அந்நிய முதலீடுகளில் சுணக்க நிலை - பணவீக்க நிலை ஆகிய காரணிகள், நாணயத்தின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொதுவான பொருளாதார விதியாகும்.

அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது. பொதுவாக, மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க, நாட்டின் தேவைகளும் அதிகரிக்கவே செய்யும். அந்தத் தேவைகளின் பெரும் பகுதி, மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டால், அதற்கான அந்நியச் செலாவணியின் தேவையும் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் அந்நிய மூலதன வரவுகள் மூலம் அதற்கு இணையான உள்ளீடுகள் பெறப்படவில்லை என்றால், நாணய மதிப்பு பாதிக்கப்படும்.

உலக அளவில், நான்காவது பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி இருப்பதற்கான முக்கியக் காரணம் அதன் தொழில் வளர்ச்சிதான். தொழில் வளர்ச்சியால், உள்நாட்டு உற்பத்தித் திறன் (ஜி.டி.பி.) அதிகரித்துள்ள து. அதில், ஏற்றுமதி துறை சார்ந்த உற்பத்தி, 25 சதவீதத்துக்கும் மேல் பங்கு வகிக்கிறது. மென்பொருள், ஆபரணங்கள், தோல் பொருள்கள், ஆடைகள், மருந்து மற்றும் விவசாயப் பொருள்கள் ஆகியவை ஏற்றுமதிப் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றன.

இறக்குமதிக்காக செலவழிக்கப்படும் அந்நியச் செலாவணியில் சுமார் 60 சதவீதம் வரை ஆக்கிரமிக்கும் பட்டியலில், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் போன்ற உலோகங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்தால், அது நாணய மதிப்பைப் பாதிக்கும். இந்தப் பாதிப்பும், தற்போதைய மதிப்பிழப்புக்கு ஒரு காரணமாகும். பண வீக்கத்தை மதிப்பிழப்பு அதிகரித்து விலைவாசி உயர்வுக்குக் காரணமாக அமையும்.

சர்வதேச வர்த்தகத்தில், முக்கியப் பங்காளியாக அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கான வரியை 50 சதவீதம் வரை அண்மையில் உயர்த்தியதால், இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், சுமுகமான முடிவுக்கு வரும் வரை, இந்திய ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் இருந்துகொண்டுதான் இருக்கும். நாணய மதிப்பு குறைந்தால், சில வகைப்பட்ட அந்நிய முதலீடுகள் திரும்பப் பெறப்படும். 2025-இல் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து சுமார் 1,700 கோடி டாலர் அளவில் அந்நியச் செலாவணி திரும்பப் பெறப்பட்டிருப்பது இந்திய ரூபாயின் மீதான அழுத்தத்தின் வீரியத்தை அதிகப்படுத்தியுள்ளது எனலாம்.

நாட்டின் கச்சா எண்ணெய் மொத்த தேவையில், 88 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால், அதன் இறக்குமதியைக் குறைக்கலாம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் ராயல்டி விதிமுறைகள், அரசியல் சார்ந்த எதிர்ப்புகள் ஆகியவை, அதுபோன்ற முயற்சிகளுக்கு வேகத் தடையாக இருக்கின்றன.

2019-இல் 3.40 கோடி டன்னாக இருந்த கச்சா எண்ணெய் உற்பத்தி, 2024-இல் 2.90 கோடி டன்னாக குறைந்திருப்பது சற்று வருத்தம் அளிக்கும் செய்தியாகும். "வேகத் தடைகளை' அகற்ற, அண்மையில் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது சற்று ஆறுதலான விஷயமாகும். நாட்டின் பல பகுதிகளில் பரவிக் கிடக்கும் ஏற்றுமதி சாத்தியக் கூறுகள் முழுவதுமாக இன்னும் கண்டறியப்படவில்லை என்றுதான் கருதத் தோன்றுகிறது. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இந்தக் கண்டறியும் பணியை சிரமேற்கொண்டு செய்தால், நாட்டின் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், நம் நாட்டு ஏற்றுமதிகளை, சர்வதேச அளவில் விரிவுபடுத்தும் முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

கையிருப்பு அமெரிக்க டாலர்களை சந்தையில் விற்று, ரூபாயின் மதிப்புக்கு அவ்வப்போது ரிசர்வ் வங்கி முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மதிப்பை உயர்த்த இது நிரந்தரத் தீர்வு அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

அண்மையில் அமெரிக்கக் கூடுதல் வரிகளால் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் தற்காலிகமானதாகும். இதுபோன்ற நிகழ்வுகளால், 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் வளர்ச்சியின் வேகம் சற்று குறையுமே தவிர, அதைத் தடுத்த நிறுத்த முடியாது. இந்தியப் பொருளாதாரம் கர்ஜித்துக் கொண்டிருக்கும் ஒரு புலிதான். கூகுள், அமேசான் போன்ற அந்நிய நிறுவனங்கள், 2030-ஆம் ஆண்டுக்குள், 3,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கான முதலீட்டுக்குத் திட்டமிட்டுள்ளன என்ற அண்மைச் செய்தியே அதற்கு சாட்சி!

கட்டுரையாளர்: பொருளாதார நிபுணர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

SCROLL FOR NEXT