கங்கைகொண்டசோழபுரத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி. 
நடுப்பக்கக் கட்டுரைகள்

ராஜேந்திரனின் பெருமையும் , மோடியின் வருகையும்!

கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது பற்றி...

தருண் விஜய்

கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.

ராஜேந்திர சோழன் வீரம் மிக்கவர்; புதுமையானவர்; படைப்பாற்றல் கொண்டவர்; மக்கள் மீது இரக்கம் கொண்டவர்; எதிரிகளுக்கு நெருப்புப் பந்து போன்றவர். மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே ஒரு பத்தியிலும், இந்தியாவைச் சூறையாடிய எதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளை இந்தியக் குழந்தைகள் ஏராளமான பக்கங்களிலும் பல்வேறு வகுப்புகளிலும் கற்பிப்பது பரிதாபமானது.

ஊடுருவல்காரர்களின் பெயர்களையும், இந்தியர்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட பிரிட்டிஷ் ராணிகள், வைஸ்ராய்கள், அவர்களின் ஜெனரல்களின் பெயர்களையும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், தாய்நாட்டுக்குப் பெருமையை ஏற்படுத்திய, தர்மத்தைக் காத்த சிறந்த இந்தியப் பேரரசர்களைப் பற்றி வடக்கிலோ, தெற்கிலோ, மேற்கிலோ, கிழக்கிலோ ஒரு பள்ளிக்கூடத்தில்கூட கற்பிக்கப்படவில்லை.

ஒரு வரலாற்றுத் தவறை பிரதமர் நரேந்திர மோடி தனது கங்கைகொண்டசோழபுரம் வருகையின் மூலம் சரிசெய்திருக்கிறார். ராஜேந்திர சோழனை அவரது சொந்த மண்ணில், தலைநகரில் பெருமைப்படுத்திய முதல் இந்திய பிரதமர் அவர்.

திருவள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலமும், தமிழில் சில வார்த்தைகளை அடிக்கடி குறிப்படுவதன் மூலமும் பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்கிறார். இப்போது அவர் தமிழ்ப் பேரரசரின் மகிமையை உலக அளவில் எதிரொலிக்கும் வகையில் மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறார்.

இது ராஜேந்திர சோழனின் வரலாற்றை பிற மாநிலங்களின் பள்ளிப் பாடத்திட்டங்களில் சேர்ப்பதற்கு உத்வேகம் அளிக்கும். ராஜேந்திர சோழனைப் போன்று சிறந்த தொலைநோக்குத் திட்டங்கள், மக்கள் நலன்களுக்கான மாபெரும் யோசனைகளைக் கொண்டிருந்த ஒரு மன்னரோ, பேரரசரோ ஒட்டுமொத்த உலகிலும் இருந்ததில்லை.

ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் (1014 - 1044) இந்திய வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த, செல்வாக்குமிக்க அரசர்களில் ஒருவர், தனது அதிகாரத்தைப் பலப்படுத்தி, சோழப் பேரரசை விரிவுபடுத்திய பின்னர், ராஜேந்திர சோழன் ஒரு புதிய தலைநகரை நிர்மாணிக்க முடிவு செய்தார். அந்த நகரம் அவரது வெற்றிகளுக்கு மதிப்புடையதாக இருக்க வேண்டும்; கங்கை நதியிலிருந்து எடுக்கப்படும் நீரால் புனிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் விரும்பினார்.

அந்த விருப்பம் படையெடுப்புக்கு வழிகோலியது. ராஜேந்திர சோழனின் படை முந்தைய சோழத் தலைநகர் தஞ்சாவூரிலிருந்து வடக்கே பயணம் மேற்கொண்டது. அந்தப் பயணம் இப்போதைய ஒடிஸா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிகார், உத்தர பிரதேசம் வழியாக ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவைக் கடந்து கங்கை நதி வரை சென்றது.

அந்தப் படையெடுப்பு புனித நீரை சேகரிப்பதற்கான பயணமாக மட்டுமே இருக்கவில்லை. தனது இலக்குகளை அடைய, ராஜேந்திரனின் படைகள் வழியெங்கும் ராஜியங்களை வெற்றி கொண்டன.

கலிங்காவில் இருந்த சோமவம்சி வம்சம் (இப்போதைய ஒடிஸா), வங்காளத்தில் இருந்த மன்னர் மகிபாலன் ஆகியோரையும் அவர் வெற்றி கொண்டார். ராஜேந்திரனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சோழப் படை தங்கக் குடங்களில் கங்கை நீரைக் கொண்டு வந்தது. வடக்கின் கங்கையையும், தெற்கின் காவிரியையும் இணைக்கும் யோசனையை உருவாக்கியவர் ராஜேந்திர சோழன் என்றுதான் கூற வேண்டும்.

ராஜேந்திர சோழன் இந்தியப் பெருங்கடல் முதல் தென்கிழக்கு ஆசியா வரை 1025-இல் தனது கடல் படையெடுப்பை விரிவுபடுத்தினார். சுமத்ரா, கடாரம் உள்பட இப்போதைய இந்தோனேசியா, மலாய் தீபகற்பத்தின் மலையூர் பிராந்தியங்களை அவர் வெற்றி கொண்டார்.

நவீன மலேசியாவின் தாம்பிரலிங்கா, தெற்கு தாய்லாந்தின் லங்கசுகா ராஜியத்துக்கும் அவரது படை சென்றது. இந்த வெற்றிகள் முக்கியமான கடல் வர்த்தக வழித்தடங்களில் சோழர்களின் செல்வாக்கையும், கட்டுப்பாட்டையும் விரிவுபடுத்தியது. லட்சத்தீவு மற்றும் மாலத்தீவையும் அவர் அடக்கினார்.

சோழ கடற்படையை வலுப்படுத்தியதன் மூலம் இந்திய பெருங்கடலில் ராஜேந்திர சோழன் அதிகாரத்தை செலுத்த முடிந்தது. வர்த்தக கடல் வழித்தடங்களில் அவர் பெற்ற வெற்றி சோழப் பேரரசின் பொருளாதார வளத்தை அதிகரித்தது.

ராஜேந்திர சோழன் கலை, இலக்கியம், கட்டடக் கலைக்கு மிகவும் ஆதரவளித்தவர். சோழப் பெருமைக்குச் சான்றாகத் திகழும் பிரகதீஸ்வரர் கோயிலை கங்கைகொண்டசோழபுரத்தில் கட்டினார்.

கங்கைகொண்ட சோழபுரமும், தஞ்சாவூரில் உள்ள "பெரிய கோயில்' என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலும் சோழ வம்சத்துக்கும், திராவிட கட்டடக் கலைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. இந்த இரண்டு கோயில்களுமே பொறியியல் சாதனைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

ராஜேந்திர சோழன் ஓர் உண்மையான வேதாந்த ஹிந்து, இதயபூர்வமாக சைவர். வைணவத்தையும், பௌத்தத்தையும் சமமான மதிப்புடன் அவர் வரவேற்றார். ராஜேந்திர சோழனின் சரித்திரமானது துணிச்சலான இலக்கு, படைத் தந்திரம், கலாசார ஆதரவு உள்ளிட்டவற்றைக் கொண்டவை. ஆசியாவில் சோழப் பேரரசை வலிமையானதாக மாற்றியது அவரது ஆட்சி. அது பிராந்தியத்தின் சரித்திரம்; கலாசாரத்தில் நீடித்த மரபையும் விட்டுச் சென்றிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி

SCROLL FOR NEXT