மேற்குத் தொடா்ச்சி மலையின் இயற்கை அழகும், இயற்கையை அழித்து உருவாகி வரும் கட்டடங்களும். 
நடுப்பக்கக் கட்டுரைகள்

இயற்கையை பாதுகாப்போம்!

வன வளம் என்பது மரங்களின் அடர்த்தியான வளர்ச்சி, மற்ற தாவரங்களுடன் சேர்ந்து, ஒரு பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கியது.

பி.ஜெயச்சந்திரன்

"இயற்கையின் அழகை நன்கு உணர்ந்ததற்கும், அதன் அழகான பரிமாணங்களின் சமய உணர்வுகளைக் கண்டதற்கும் நம் முன்னோர்களை நான் மனதார தலை வணங்குகிறேன்'- என்று மகாத்மா காந்தி கூறியுள்ளனர்.

இயற்கை என்பது பொதுவாக இயற்கையாக நிகழும் எல்லாவற்றையும் குறிக்கும்.

இது உயிரினங்கள், உயிரற்ற பொருள்கள், அவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியது. சுருக்கமாக இயற்கையானது மனிதனால் உருவாக்கப்படாத அனைத்தும் ஆகும்.

இயற்கை நமக்குக் கிடைத்த வரம்; அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்; இயற்கைக்கு மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு, உணவு, உடை, உறைவிடத்துக்குத் தேவையான அத்தனை மூலப்பொருள்களையும் வழங்கி நம்மை வாழ்விக்கிறது.

பண்டைய இந்தியர்கள் இயற்கையோடு ஒத்திசைந்த வாழ்வையே மேற்கொண்டு இருந்தனர். இயற்கையையும், அதன் படைப்புகளையும் வழிபடுதல் என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிப்படையாக இருந்தது. காலம் மாற, மாற நாம் இயற்கை வளங்களை, அதன் நீடித்த இருப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சூறையாடி வருகிறோம்.

பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் இருந்தாலும் மனிதனும், மற்ற உயிரினங்களும் வாழ்வதற்குத் தேவையான இயற்கை வளங்கள் நிறைந்தது பூமி மட்டுமே.

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த நேரத்தில், நமது தேவைகளுக்காக இயற்கை வளங்களை அழிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த இனிய பூமி அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ உகந்த இயற்கையான சூழல் அமைப்பு கொண்டு விளங்குகிறது. தன்னைத் தானே சமநிலை செய்துகொள்ளும் இயற்கையின் ஒழுங்கமைவை மனித இனம் இப்போது குலைத்து புவியை வருங்காலங்களில் உயிர் வாழ்வதற்கு தகுதியற்றதாக செய்து வருகிறது; இது குறித்த விழிப்புணர்வைத் தோற்றுவித்து சூழலைக் காக்க வேண்டியது தற்போதைய அவசரத் தேவை.

உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கைத் தருகிறது. காடுகள், நுண்ணுயிரிகள், ஆறு, ஏரி, கடற்பகுதிகள், மண் வளம், மேகங்கள்; ஏன் ஒவ்வொரு மழைத்துளியும்கூட, இயற்கையின் கொடைதான். இதில் ஒன்றை இழந்துகூட மனிதர்கள் வாழவே முடியாது. சூறாவளி மற்றும் மழை நீரால் ஏற்படும் மண் அரிப்புகளைத் தடுப்பதில் மரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மரங்களை நட்டு பராமரிப்பதன்மூலம் மண் அரிப்பை முழுமையாக தடுத்து விடலாம்.

சுற்றுச்சூழலைப் பராமரிப்பதற்கும், மரங்கள் அவசியம். பறவைகள், பூச்சி இனங்கள் உள்ளிட்டவற்றுக்கு புகலிடமாக மரங்களும், செடிகளும்தான் விளங்குகின்றன. வன விலங்குகளின் வாழ்விடமாகவும், அவற்றின் பாதுகாப்பு இடமாகவும் காடுகள் விளங்குகின்றன.

மனித நினைவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே, மனித இனத்துக்கு காடுகளின் முக்கியத்துவம் குறித்த அங்கீகாரம் இருந்துவந்துள்ளது. மரக்கட்டை, உண்ணக்கூடிய பொருள்கள், எரிபொருளாக விறகு,

மூலிகைத் தாவரங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரமாக காடுகள் பார்க்கப்படுவதோடு, வனவிலங்குகளின் வசிப்பிடமாகவும் காடுகள் உள்ளன.

வன வளம் என்பது மரங்களின் அடர்த்தியான வளர்ச்சி, மற்ற தாவரங்களுடன் சேர்ந்து, ஒரு பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கியது. பசுமைப் போர்வைபோல, பூமியை மூடியிருக்கும் இந்தக் காடுகள் எண்ணற்ற பொருள்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல சுற்றுச்சூழல் சேவைகளையும் வழங்குகின்றன.

உலகளாவிய வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுதல் ஆகியவற்றால், தற்போது மனித வாழ்க்கைக்கு நிச்சயமான அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. உலகின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையும், இருப்பிடங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. சூழலியலைப் பாதுகாத்தல், பருவ நிலை மாற்றத்தைத் தடுத்தல் ஆகியவற்றுக்கான அபரிமிதமான சவால்கள் கடினமானவையாக உள்ளன. நமது நடத்தை முறையிலும், சிந்தனை முறையிலும் அவை மாற்றத்தைக் கோருகின்றன.

வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை அடைவதற்காக இந்தியா வேகமாகப் போட்டி போட்டது. இந்தப் போட்டியில், தன்னிறைவுக்கான வளர்ச்சியையும், ஆற்றல் பாதுகாப்பையும் கொண்டுவர வேண்டிய சூழலில் நாடு சிக்கிக் கொண்டது. அதே சமயம், நமது தேசிய மரபணுவிலேயே இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கள் பக்கம் நாடு நிற்கிறது.

தண்ணீரின் தரத்தை அளவிடும்போது, அதில் அனுமதிக்கப்படும் சில அளவுகளைத் தாண்டி மாசுக்களின் நிலை எவ்வளவு உள்ளது என்று பார்க்கப்படுகிறது. நமது தலைமுறையிலும், எதிர்காலத் தலைமுறையிலும் மிக முக்கியமான பிரச்னையாக தண்ணீர் பற்றாக்குறையானது உள்ளது. பருவ நிலை மாற்றம், மரங்கள் வெட்டப்படுவது, மாசு அடைதல், மற்றும் தண்ணீரைச் சரியான முறையில் பயன்படுத்தாமல் வீணாக்குதல் ஆகியவற்றின் விளைவுதான் தண்ணீர் பற்றாக்குறை.

மலை உச்சிகளிலும், மலை ஏற்றப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகள் போன்றவை தீவிரமான நிலச் சரிவுகளுக்கும், மண் அரிப்புக்கும் காரணமாக அமைகின்றன.

இன்றைய தலைமுறையினர் தங்களை இயற்கை வளங்களின் பாதுகாவலர்களாகக் கருத வேண்டும் என்ற நமது முன்னோர்களின் மூதுரையை நாம் மறந்து விட்டோம். நாம் இயற்கை வளங்களைச் சுரண்டாமல் அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்ற பொறுப்புடைமையை மறந்து விட்டோம்.

உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்த சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், 1948-ஆம் ஆண்டு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூலை 28-ஆம் தேதி "உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெறும் ஜி.வி. பிரகாஷ்!

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

SCROLL FOR NEXT